Press "Enter" to skip to content

டிரம்ப் உரையாற்றும்போதே தூங்கிவிட்ட சிறுவனுக்கு ரசிகர்களான ட்விட்டர்வாசிகள்

செவ்வாய்க்கிழமையன்று அதிபர் டிரம்ப் ஸ்டேட் ஆஃப் யூனியன் உரையாற்றும் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க முதல் பெண்மணி மெலானியா மற்றும் அதிபர் டிரம்பின் அழைப்பில் பேரில் அழைக்கப்பட்டிருந்த 11 வயது சிறுவன், அதிபர் உரையாற்றும் நிகழ்வில் கலந்து கொண்டபோது தூங்கிவிட்டார்.

அந்த 11 வயது சிறுவனின் பெயர் ஜோஷ்வா டிரம்ப். அதிபர் டொனால்டு டிரம்புக்கும் இந்த சிறுவனுக்கும் எந்த தொடர்பும் இல்லை.

ஆனால் ஜோஷ்வாவுக்கு கடைசி பெயராக டிரம்ப் இருப்பதால் பள்ளியில் பெரும் கேலிக்குள்ளாகியுள்ளார். ஒரு கட்டத்தில் பள்ளியில் இருந்து நிறுத்திவிட்டனர் அவரது பெற்றோர்கள். அந்த அளவுக்கு கேலி கிண்டலால் கடும் மன உளைச்சலுக்குள்ளானார் ஜோஷ்வா டிரம்ப்.

ஸ்டேட் ஆஃப் யூனியன் எனும் அமெரிக்க அதிபரின் உரையில் கலந்துகொள்வதற்காக 13 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதில் இந்த சிறுவனும் அழைக்கப்பட்டிருந்தார்.

நிகழ்வில் கலந்து கொண்டு அதிபரின் நீண்ட உரையை முழுமையாக கேட்பதற்குள் இந்த சிறுவன் தூங்கி விட்ட புகைப்படங்கள் வெளியான நிலையில், ட்விட்டரில் இச்சிறுவனுக்கு சில ரசிகர்கள் உருவாயினர்.

ஜோஷ்வாவுக்கு அருகில் அமர்ந்திருக்கும் சிறுமி மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர். அவருக்கு செவ்வாய் மாலை உற்சாகமாக போனதுபோல தெரிகிறது.

டிரம்ப் என பெயர் இருந்ததால் ஜோஷ்வா தனது வாழ்க்கையை வெறுக்கும் நிலைக்குச் சென்றதேன்? விரிவாக படிக்க – தனது பெயரில் ‘டிரம்ப்`: கேலிக்குள்ளாகி வாழ்க்கையை வெறுத்த சிறுவன்

சின்னத்தம்பி தங்கியுள்ள பகுதிக்கு கள ஆய்வுக்காக சென்ற பிபிசி தமிழ் குழு

சின்னத்தம்பியை வனத்திற்குள் விரட்டுவதற்காக , டாப்ஸ்லிப் கோழி கமுத்தி யானைகள் முகாமில் இருந்து கலீம், மாரியப்பன் என இரண்டு கும்கி யானைகளை அப்பகுதிக்கு கொண்டு வந்துள்ளனர் வனத்துறையினர். சின்னத்தம்பி கும்கி யானைகளை நண்பர்களாக்கி கொண்டது. கும்கி கலீம் யானையோடு, சின்னத்தம்பி விளையாடிய காணொளி சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது.

பெருமளவிலான பொதுமக்கள், சின்னத்தம்பியை காண்பதற்காக அங்கு கூடி இருக்கின்றனர். யாருக்கும் எந்த இடையூறும் தராமல் – பாகன்கள் கும்கி யானைகளுக்கு தரும் உணவை பகிர்ந்து உண்பது, பக்கத்தில் உள்ள குட்டையில் உறங்குவது, கலீமோடு விளையாடுவது என நேரத்தைப் போக்குகின்றது சின்னத்தம்பி.

வழக்கமாக காட்டு யானைகள் வெளிச்சத்தை பார்த்தால் எதிர் திசையில் செல்லும். சின்னத்தம்பி வெளிச்சத்தைப் பார்த்தால் ஒளி வரும் திசையை நோக்கி செல்கிறது. ஒரு காட்டு யானைக்குரிய குணநலன்களை இழந்தும், குழப்பமான மனநிலையோடும் சுற்றி வருகிறது அந்த யானை.

வனத்துறையினர், யானை ஆய்வாளர்கள் அங்கு முகாமிட்டு தொடர்ந்து சின்னத்தம்பியை கண்காணித்து வருகின்றனர். காடுகளை தொடர்ந்து அழித்து வருவதால் உருவான மனித விலங்கு முரண்பாட்டில், யானையா, மனிதனா என்ற சிக்கலின் நடுவே சிக்கித்தவிக்கிறான் சின்னத்தம்பி.

விரிவாக படிக்க – சின்னத்தம்பி: சிக்கலுக்கு தீர்வு காண முடியாமல் அதிகாரிகள் தவிப்பு

சபரிமலை விவகாரம் – நீதிமன்றத்தில் முக்கிய திருப்பம்

சபரிமலையில் மாதவிடாய் வயதுள்ள பெண்கள் நுழைய அனுமதி வழங்கி உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மாற்ற வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மறு சீராய்வு மனுக்கள் மற்றும் ரிட் மனுக்கள் மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன்னர், அந்த தேதி அறிவிக்கப்படும்.

தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மொத்தமுள்ள 65 மனுக்களையும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

இந்த விசாரணையின் முக்கிய திருப்பமாக, சபரிமலை ஐயப்பன் கடவுள் திருமணமாகாதவர் என்பது, அரசியல் சாசனத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட தனிச்சிறப்புமிக்க மத அம்சம் என்று கூறி வந்த, இந்த கோயிலை நிர்வகித்து வருகின்ற திருவிதாங்கூர் தேவசம் போர்டு, உயிரியல் கூறுகளின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட வகுப்பினருக்கு பாகுபாடு காட்டக்கூடாது என்று அந்த அமர்விடம் தெரிவித்துள்ளது.

விரிவாக படிக்க – ‘சபரிமலையில் பெண்கள் நுழைய ஆட்சேபம் இல்லை’ – மாற்றிக் கூறிய தேவசம் போர்டு

மகனின் விடுதலைக்காக மக்களிடம் ஆதரவு தேடும் அற்புதம்மாள்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளனின் விடுதலைக்காக, அவரது தாய் அற்புதம் அம்மாள், பொதுமக்களிடம் ஆதரவு கோரி, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்துவருகிறார்.

கடந்த ஜனவரி 24ம் தேதி தொடங்கி பல்வேறு கிராமம் மற்றும் நகரங்களுக்குச் செல்லும் அற்புதம் அம்மாள், செப்டம்பர் 2018ல் தமிழக சட்டமன்றம் கூடி பேரறிவாளனின் விடுதலையை உறுதிசெய்யும் வகையில் ஆளுநருக்கு பரிந்துரை செய்தபோதிலும், ஆளுநர் நடவடிக்கை எடுப்பதில் தாமதம் செய்வது ஏன் என்ற கேள்வியை முன்வைத்து பேசிவருகிறார்.

விரிவாக படிக்க – மகனின் விடுதலைக்காக மக்களிடம் ஆதரவு தேடும் ‘அற்புதம்’ அம்மாள்

பெண் பிறப்புறுப்பு சிதைவென்றால் என்ன?

இந்த சடங்கு ‘காஃப்டா’ என்றும் அழைக்கப்படுகிறது. இச்சடங்கின்போது சிறுமிகளின் பெண் உறுப்பின் வெளிப்புறம் வெட்டப்படும் அல்லது வெளித்தோல் அகற்றப்படும் என ஐ.நா-வின் விளக்கம் கூறுகிறது.

இதையும் ஒரு மனித உரிமை மீறல் என்று ஐ.நா கூறுகிறது. இந்நடைமுறையை நிறுத்தக் கோரி டிசம்பர் 2012இல் ஐ.நா பொதுச்சபை தீர்மானம் நிறைவேற்றியது.

இது பெண்களை உடல்நல ரீதியாகவும், மனநல ரீதியாகவும் பாதிக்கும். இது பெரும்பாலும் பெண்களின் விருப்பத்திற்கு மாறாகவே செய்யப்படுகிறது.

விரிவாக படிக்க –பெண் பிறப்புறுப்பு சிதைப்பு என்றால் என்ன? இது ஏன் நடக்கிறது?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »
Mission News Theme by Compete Themes.