Go to ...
RSS Feed

பருவநிலை மாற்றத்தின் தாக்கம்: நகருக்குள் நுழைந்த பனிக் கரடிகள் – அவசரநிலை அறிவிப்பு


ரஷ்யாவின் உள்ளடங்கிய தொலைதூர பகுதியில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

குடியிருப்பு பகுதிக்குள் டஜன் கணக்கான பனிக்கரடிகள் நுழைந்ததே இதற்கு காரணம். இந்த சம்பவமானது நொவாயா ஜெம்லியா தீவுப் பகுதியில் நடந்துள்ளது. இந்த தீவில் சில ஆயிரம் மக்களே வசிக்கிறார்கள். அங்குள்ள குடியிருப்பு பகுதிகள், பொது கட்டடங்கள் ஆகியவற்றுக்குள் நுழைந்த பனிக்கரடி அங்குள்ள மக்களை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதற்கு பருவநிலை மாற்றமும் ஒரு காரணம். பருவநிலை மாற்றத்தின் காரணமாக, பனிக்கரடிகளுக்கு போதிய உணவு கிடைக்காத காரணத்தினால், அவை உணவை தேடி நகரங்களுக்கு வருகின்றன.

ஆசியா பீபி: பாகிஸ்தானில் மதத்தையும் கடவுளையும் பழித்தால் இதுதான் நடக்கும்

ஆசியா பீபி வீட்டுக்கு வெளியே இழுத்து வரப்பட்டு, கோபமாக இருந்த கும்பலால் தாக்கப்பட்டு, கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர் தன்னுடைய சொந்த கிராமத்துக்கு ஒருபோதும் திரும்பிச் செல்ல முடியாது.

தெய்வ நிந்தனை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட அவர், பத்தாண்டுகளுக்கும் மேல் துன்பங்களை அனுபவித்த பிறகு, கடைசியில் விடுதலை ஆகியிருக்கிறார்.

ஆசியா பீபி வாழ்க்கையில் என்னவெல்லாம் நடந்தது என்பதை தெரிந்துகொள்ள, அதன் மூலமாக பாகிஸ்தான் அரசியலை புரிந்துகொள்ள இந்த இணைப்பை சொடுக்குங்கள்.

இலங்கை வட மாகாணத்தில் முதல் முறையாக பௌத்த மாநாடு

வட மாகாணத்தில் பௌத்த மாநாடொன்றை முதற்தடவையாக நடத்துவதற்கான ஏற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன்படி, வவுனியாவில் எதிர்வரும் மார்ச் மாதம் 22ஆம் தேதி இந்த பௌத்த மாநாடு நடத்தப்படவுள்ளதாக வட மாகாண ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் வட மாகாண ஆளுநர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

வவுனியாவிலுள்ள ஶ்ரீ போதிதக்‌ஷணாராமய விஹாரையில் இந்த மாநாட்டை நடத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

விரிவாக படிக்க:இலங்கை வட மாகாணத்தில் முதல் முறையாக பௌத்த மாநாடு

ஆண்கள் தங்கள் ஆண்குறியின் மேல்தோலை நீக்க வலியுறுத்திய பெண் எம்.பி

தங்கள் ஆண்குறியின் நுனித்தோலை ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அகற்றியுள்ளார்களா இல்லையா என்று சோதனை செய்யப்பட வேண்டும் என்று தான்சானியாவில் உள்ள பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார்.

ஆண்குறியின் நுனித் தோல் நீக்கப்பட்டால் (விருத்த சேதனம்) எச்.ஐ.வி நோய்த்தொற்று பரவுவது குறையும்.

ஆண்கள் தங்கள் ஆண்குறியின் மேல் தோலை நீக்குவது எச்.ஐ.வி பரவும் வாய்ப்பை சுமார் 60% அளவுக்கு குறைக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.

ஆண்குறியின் நுனித்தோலை அகற்றாத ஆண் உறுப்பினர்கள் உடனடியாக அந்த செய்முறைக்கு உள்ளாக வேண்டும் என்று ஜேக்லைன் நோங்யானி எனும் பெண் உறுப்பினர் வலியுறுத்தியுள்ளது, ஒரு சேர ஆதரவு மற்றும் எதிர்ப்பை சந்தித்துள்ளது.

விரிவாக படிக்க:ஆண்கள் தங்கள் ஆண்குறியின் மேல்தோலை நீக்க வலியுறுத்திய பெண் எம்.பி

தாய்லாந்து இளவரசியின் பிரதமர் ஆசை; மன்னரின் கோபத்தால் பின்வாங்கும் கட்சி

தாய்லாந்து அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசி உபான்ராட் மகிதூன் அரசியலில் ஈடுபடுவதை எதிர்த்து அந்நாட்டு மன்னர் கருத்து தெரிவித்திருந்த நிலையில், அவரை எதிர்வரும் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக களமிறக்கப்போவதாக அறிவித்திருந்த கட்சி தற்போது பின்வாங்கியுள்ளது.

அவரை வேட்பாளராக அறிவித்திருந்த தாய் ரக்சா சார்ட் கட்சி, “மன்னருக்கும் மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கும் விஸ்வாசத்துடன் இருந்து, மன்னரின் கட்டளைக்கு கட்டுப்படுவதாக” அறிவித்துள்ளது.

இது குறித்து இளவரசி இன்னும் வெளிப்படையாக கருத்து எதையும் தெரிவிக்கவில்லை.

விரிவாக படிக்க:பிரதமராக விரும்பும் இளவரசி; தடைபோடும் மன்னர் – என்ன நடக்கிறது தாய்லாந்தில்?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com