Press "Enter" to skip to content

முதலில் பூச்சி இனம், அடுத்து மனித குலமா? – எச்சரிக்கும் ஓர் ஆய்வு மற்றும் பிற செய்திகள்

மனித செயல்பாடுகளால் ஒரு நூற்றாண்டு காலக்கட்டத்திற்குள் உலகில் உள்ள பூச்சி இனங்கள் முழுவதுமாக அழியலாம் என்கிறது ஓர் ஆய்வு முடிவு.

பயாலஜிகல் கன்மேலாய்வுஷன் எனும் சஞ்சிகையில் வெளியான ஆய்வு, இந்த அழிவு தடுத்து நிறுத்தப்படவில்லை என்றால், இது மோசமான விளைவுக்கு வித்திடும். மனிதர்கள் வாழ்வதே கேள்விகுறியாகும் என்கிறது.

தீவிர விவசாயம்தான் இதற்கு முதன்மை காரணம் என்று கூறும் ஆய்வு, பருவநிலை மாற்றமும், நகரமயமாக்கலும் பிற காரணிகள் என்கிறது. 

ஒரு ஆண்டுக்கு 2.5 சதவீதத்தில் பூச்சிகள் மறைவதாகவும், பிரிட்டன்தான் மோசமாக பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறுகிறார்கள் அவர்கள்.

போலிச் செய்திகளுக்கு எதிராக ஃபேஸ்புக்

போலிச் செய்திகளை எதிர்கொள்வதற்காக இந்தியாவில் உண்மை பரிசோதிக்கும் குழுவை விரிவாக்க போவதாக கூறி உள்ளது ஃபேஸ்புக் நிறுவனம்.

இந்தியாவில் அரசியல் சார்ந்த விளம்பரங்களுக்கு கடுமையான விதிகளை அண்மையில் அறிவித்தது ஃபேஸ்புக் நிறுவனம். இதனை அடுத்து இவ்வாறான அறிவிப்பு வந்துள்ளது.

இன்னும் சில மாதங்களில் இந்தியாவில் நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலில் போட்டி கடினமாக இருக்கும் என கூறப்படுகிறது.

ஃபேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ் ஆப் செயலியை 200 மில்லியனுக்கும் அதிகமானோர் பயன்படுத்துகிறார்கள். அதில் பரவிய போலிச் செய்திகளால் கும்பல் கொலைகள் நடந்தன. இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு பல கட்டுபாடுகள் விதிக்கப்பட்டன.

ரஃபேல் ஒப்பந்தம்

ஃபிரான்ஸ் நாட்டின் தஸால் நிறுவனத்திடமிருந்து இந்திய விமானப் படைக்கு ரஃபேல் விமானங்களை வாங்குவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடந்தபோது, பிரதமர் அலுவலகமும் மற்றொரு பக்கம் பேச்சுவார்த்தைகளை நடத்தியதில் பாதுகாப்புத் துறை அமைச்சக அதிகாரிகள் அதிருப்தி அடைந்தது தொடர்பாக தி ஹிந்து நாளிதழ் சமீபத்தில் சில ஆவணங்களை வெளியிட்டது.

தற்போது, இந்த ஒப்பந்தம் தொடர்பாக மேலும் சில தகவல்களையும் தி ஹிந்து வெளியிட்டுள்ளது.

தி ஹிந்து குழுமத்தின் தலைவரும் இந்தக் கட்டுரைகளை எழுதியவருமான என். ராமிடம் இந்த விவகாரம் குறித்து விரிவாகப் பேசினார் பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதன்.

அந்த பேட்டியை விரிவாக படிக்க:ரஃபேல் ஒப்பந்தம்: இன்னும் பல ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன – என்.ராம்

காட்டுக்குள் சின்னத்தம்பி?

சின்னத்தம்பியை முகாமில் வைத்து பராமரிப்பதே தற்போதைய தீர்வு என தமிழக வனத்துறை தெரிவித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் சின்னத்தம்பியை பிடித்து கும்கியாக மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடுக்கப்பட்ட வழக்கு இன்று திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

விசாரணையின்போது, “சின்னத்தம்பியை பிடித்து முகாமில் வைத்து பராமரிப்பதுதான் தற்போதைய தீர்வாக அமையும்.” என தமிழக வனத்துறை தெரிவித்துள்ளது.

விரிவாக படிக்க:சின்னத்தம்பியை காட்டுக்குள் விட இயலாது – தமிழக வனத்துறை

தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார் பிரியங்கா காந்தி

பிரியங்கா காந்தி உத்தர பிரதேசத்தில் தனது தேர்தல் பிரசாரத்தை இன்று தொடங்கியுள்ளார்.

கடந்த மாதம் கிழக்கு உத்தர பிரதசேத்தின் பொறுப்பாளராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டார்.

உத்தர பிரதேச தலைநகர் லக்னவில் அவர் `மிஷன் உபி` என்ற பிரசாரத்தை இன்று தொடங்கி வைத்தார். இந்த பிரசாரத்தில் அவர் மூன்று நாட்கள் உத்தர பிரதேச மாநிலத்தின் கிழக்கு பகுதியில் முகாமிட்டு அங்குள்ள முக்கிய தலைவர்களையும், மக்களையும் சந்திக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது.

விரிவாக படிக்க: பிரியங்கா காந்தி தனது முதல் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »
Mission News Theme by Compete Themes.