Press "Enter" to skip to content

”முஸ்லீம்கள் பலதார மணம் புரிவது பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி” – எகிப்து இமாம் மற்றும் பிற செய்திகள்

ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட இணையோடு வாழும் வகையில் பலதார மணம் புரிவது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு இழைக்கப்படும் அநீதி என எகிப்தின் உயர் இஸ்லாமிய அமைப்பான அல்-அசாரின் இமாம் தெரிவித்துள்ளார்.

சன்னி இஸ்லாமியர்களின் உயர் தலைமையிலுள்ள ஷேக் அகமத் அல்-தயீப் இது குறித்து பேசுகையில், ”குரான் பற்றிய சரியான புரிதலின்மை காரணமாகவே பலதார மணம் புரியும் பழக்கம் வந்திருக்கிறது” என்றார்.

தொலைக்காட்சியில் வார நிகழ்ச்சி ஒன்றில் அவர் இக்கருத்துகளை தெரிவித்திருக்கிறார்.

இமாமின் கருத்து பெரும் விவாதத்துக்குள்ளான நிலையில், அல்-அசார் தனது விளக்கத்தில், ”இமாம் பலதார மணத்துக்கு தடை கோரவில்லை” என்கிறது.

ஒருவனுக்கு ஒருத்தி தான் விதி, பலதார மணம் என்பது விதிவிலக்கு என அவர் வலியுறுத்தினார்.

”சமூகத்தின் பாதியை பெண்களே பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். அவர்கள் மீது கவனம் கொள்ளாமலிருப்பது ஒரு பாதத்தை மட்டும் வைத்துக்கொண்டு நடந்து செல்வது போன்றது” என ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளார்.

இமாமின் கருத்துக்கு எகிப்தின் தேசிய பெண்கள் கவுன்சில் நேர்மறையான எதிர்வினையாற்றியுள்ளது.

முன்னெப்போதும் இல்லாத வகையில் இஸ்லாமிய மதம் பெண்களுக்கு நீதியையும் குறிப்பிடத்தக்க உரிமைகளையும் பெற்றுத்தருகிறது என கவுன்சிலின் தலைவர் மாயா மோர்சி தெரிவித்துள்ளார்.

ஜமாத் மற்றும் பிரிவினைவாதிகளின் கருத்துக்கும் மெஹ்பூபா முஃப்தி கருத்துக்கும் வித்தியாசமே இல்லை

ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பை தடை செய்திருப்பதால், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் அரசியல் நிலைமை கொந்தளிப்பாகவே இருக்கிறது. பிப்ரவரி 14ஆம் தேதியன்று புல்வாமாவில் நடைபெற்ற தாக்குதலுக்குப் பிறகு, பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாத அமைப்புகளுக்கும் இடையே மோதல் நிகழ்வது தினசரி வாடிக்கையாகிவிட்டது. எல்லைக்கு அருகில் காஷ்மீரின் வடக்கு பகுதியில் வெள்ளிக்கிழமையன்று தொடங்கிய என்கவுண்டர் 72 மணி நேரத்திற்கு பிறகே முடிவுக்கு வந்தது. அதில் ஐந்து பாதுகாப்புப் படையினர் உயிரிழந்தனர்.

புல்வாமா தற்கொலை தாக்குதலில் பாதுகாப்புப் படையினர் 40 பேர் கொல்லப்பட்டதால் இரு நாடுகளுக்கும் இடையிலான மனக்கசப்பும், அழுத்தங்களும் அதிகரித்தன. இந்தியாவில் பொதுத்தேர்தல் விரைவில் நடைபெறவிருக்கும் நிலையில் தற்போதைய நிலைமை பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. பிபிசி செய்தியாளர் ஜுபைர் அஹமத், ஜம்மு காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மலிக்கிடம் தொலைபேசியில் தொடர்புக் கொண்டார். நாட்டில் பொதுத் தேர்தல் நடைபெறும் நிலையில், காஷ்மீரில் மக்களவைத் தேர்தல்கள் நடைபெறுமா என்று கேள்வி எழுப்பினார்.

முழு பேட்டியை படிக்க – நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவது எங்கள் கையில் இல்லை – காஷ்மீர் ஆளுநர்

இலங்கையில் இந்து கோயிலின் அலங்கார பலகை சேதம்

மன்னார் – மாந்தை சந்தியிலுள்ள திருகேதீஸ்வரம் ஆலயத்தின் அலங்கார பலகை சேதப்படுத்தப்பட்டுள்ளதாக திருகேதீஸ்வர ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது.

மாந்தை சந்தியில் பல வருட காலமாக தற்காலிக அலங்கார பலகையொன்று காணப்பட்டதாக ஆலய நிர்வாகத்தின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

சிவராத்திரி தினத்தை முன்னிட்டு, அந்த அலங்கார பலகையை தாம் புதுப்பிக்க சென்ற வேளையில், கிறிஸ்தவ பாதிரியார்களின் தலைமையிலான சில குழுவினர் வருகைத் தந்த அதற்கு இடையூறு விளைவித்ததாக அவர் குறிப்பிட்டார்.

இந்த விடயம் தொடர்பில் மன்னார் மறை மாவட்ட ஆயர் இல்லத்தை தொடர்புக் கொண்டு வினவினோம்.

இவ்வாறான சம்பவங்களுக்கும், கிறிஸ்தவ பாதிரியார்களுக்கும் இடையில் எந்தவித தொடர்பும் கிடையாது என மன்னார் மறை மாவட்ட ஆயர் இல்லம் குறிப்பிட்டது.

பாதிரியார்கள் இவ்வாறான செயற்பாடுகளில் ஒருபோதும் ஈடுபட மாட்டார்கள் எனவும் ஆயர் இல்லம் சுட்டிக்காட்டியது.

மேலும் படிக்க – இலங்கை திருகேதீஸ்வரம் ஆலயத்தின் அலங்கார பலகை சேதம்

வெட்கமாக இல்லையா? ரஃபேல் போர் விமானம் குறித்து மோதியை சாடிய ராகுல் காந்தி

இந்தியாவிடம் ரஃபேல் போர் விமானங்கள் இருந்திருந்தால் இன்னும் நிறைய சாதித்து இருக்கலாம் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி அண்மையில் கூறி இருந்தார்.

இன்று உத்தர பிரதேசத்தில் ராகுல் காந்தியின் தொகுதியான அமேதியில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய போதும் மோதி இவ்வாறே கூறினார்.

மோதி, “பல ஆண்டுகளாக ரஃபேல் விவகாரத்தில் பெரும் தடையாக அவர்கள் இருந்தனர். சிலர் அதனை வாங்குவதற்கு முட்டுக்கட்டையாக உள்ளனர். ரஃபேல் விவகாரத்தில் உச்சநீதிமன்றமும் நமது முடிவுக்கு ஆதரவாகவே உள்ளது” என்றார்.

இந்த சூழலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தமது ட்விட்டர் பக்கத்தில் ரஃபேல் தொடர்பாக ஒரு ட்வீட்டை பகிர்ந்துள்ளார்.

அதில் கடுமையான வார்த்தைகளை கொண்டு பிரதமரை குற்றஞ்சாட்டி உள்ளார்.

“உங்களுக்கு வெட்கமாக இல்லையா? நீங்கள் 30,000 கோடி ரூபாயை திருடி அனில் அம்பானியிடம் கொடுத்துவிட்டீர்கள். நீங்கள்தான் ரஃபேல் விமான இந்தியா வர தாமதம் ஆனதற்கு காரணம். பழைய விமானங்களை ஓட்டி அபிநந்தன் போன்ற விமானிகளின் வாழ்வு ஆபத்தில் இருக்க நீங்கள்தான் காரணம்” என்கிறது அந்த ட்வீட்.

மேலும் படிக்க – வெட்கமாக இல்லையா? ரஃபேல் போர் விமானம் குறித்து மோதியை சாடிய ராகுல் காந்தி

”பாதுகாப்பு படையின் நம்பிக்கையை சிதைக்கும் வேலையை எதிர்க்கட்சிகள் செய்கின்றன”- நரேந்திர மோதி

உத்தர பிரதேசத்தில் ராகுல் காந்தியின் தொகுதியான அமேதியில் நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்ட மோதி நவீன துப்பாக்கிகள் இல்லாதது நமது பாதுகாப்பு படைக்கு பெரும் தடையாக உள்ளது என்றார்.

இந்த கூட்டத்தில் பேசிய மோதி, “2009 -2014 இடையிலான காலக்கட்டத்தில் குண்டுகள் துளைக்காத ஜாக்கெட்டுகள் வாங்கப்படவில்லை. ஆனால், இந்த ஆட்சியில் 230,000 குண்டு துளைக்காத ஜாக்கெட்டுகள் வாங்கப்பட்டுள்ளன” என்றார்.

ரபேல் தொடர்பாக எதிர்க்கட்சிகளை குற்றஞ்சாட்டிய அவர், “பல ஆண்டுகளாக ரபேல் விவகாரத்தில் பெரும் தடையாக அவர்கள் இருந்தனர். சிலர் அதனை வாங்குவதற்கு முட்டுக்கட்டையாக உள்ளனர். ரபேல் விவகாரத்தில் உச்சநீதிமன்றமும் நமது முடிவுக்கு ஆதரவாகவே உள்ளது” என்றார் மோதி பேசினார்.

”இந்திய விமானப் படையின் வெற்றிகரமான பாலகோட் தாக்குதலை நாடே கொண்டாடிக் கொண்டிருக்கும் போது நம்மவர்கள் சிலரே இந்த தாக்குதல் குறித்து சந்தேகிக்கின்றனர்” என பாட்னாவில் நடந்த பிரசார கூட்டத்தில் எதிர்க்கட்சிகளை விமர்சித்தார்.

மேலும் படிக்க – “உங்கள் காவல்காரர் விழிப்புடன் இருக்கிறார் ” – நரேந்திர மோதி

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »