Go to ...
RSS Feed

கொலம்பியா விமான விபத்தில் பயணித்த அனைவரும் பலி மற்றும் பிற செய்திகள்


கொலம்பியாவில் விமான விபத்து

தென்னமெரிக்க நாடான கொலம்பியாவின் மத்தியப் பகுதியில் நிகழ்ந்த விமான விபத்தில், விமானி உள்பட, அதில் பயணித்த 12 பேரும் பலியாகியுள்ளனர்.

1930களில் இருந்து தயாரிக்கப்படும் டக்ளஸ் டி.சி-3 எனும் ரகத்தைச் சேர்ந்த இந்த விமானத்தில் அதிகபட்சம் 30பேர் பயணிக்க முடியும்.

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தரைக்கட்டுப்பாட்டு அமைப்புடனான தொடர்பை இழந்த அந்த விமானம், வில்லாவிசென்சியோ எனும் நகரத்தின் தென்கிழக்கே 89 கிலோமீட்டர் தொலைவில் விபத்துக்கு உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

விபத்துக்கான காரணம் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. இறந்தவர்களை அடையாளம்காணும் பணிகள் நடந்து வருகின்றன.

“ரஃபேல் ஆவணங்களை நாங்கள் திருடவில்லை” – என். ராம்

“ரஃபேல் தொடர்பான ஆவணங்களை நாங்கள் திருடவில்லை; விலை கொடுத்து வாங்கவில்லை. அதனால் எதையும் சந்திக்கத் தயாராக இருக்கிறோம்” என்கிறார் தி ஹிந்து குழுமத்தின் தலைவரான என். ராம்.

பிரான்ஸ் நாட்டின் தஸால் நிறுவனத்திடமிருந்து இந்திய ராணுவம் ரஃபேல் விமானங்களை வாங்குவது தொடர்பாக நிகழ்ந்த பல்வேறு விதிமுறை மீறல்களை, தொடர்ந்து அம்பலப்படுத்தி வரும் என். ராம், இந்த ஆவணங்கள் திருடப்பட்டு, வெளியிடப்பட்டதாக நீதிமன்றத்தில் மத்திய அரசு கூறியிருப்பது குறித்தும் ரஃபேல் விவகாரத்தில் வங்கி உத்தரவாதம் அளிக்கப்படாதது குறித்தும் பிபிசியிடம் விரிவாகப் பேசினார்.

“ரஃபேல் விவகாரம் தொடர்பாக இதுவரை நாங்கள் ஐந்து புலனாய்வுக் கட்டுரைகளை வெளியிட்டிருக்கிறோம். முதலில், ரஃபேல் விமானத்தின் விலை குறித்த கட்டுரை. அதாவது போருக்குத் தயாராக இருக்கும் ஒரு ரஃபேல் விமானத்தின் விலை என்ன என்பதைச் சொல்ல முதலில் அரசு மறுத்துவிட்டது. அதை நாங்கள் வெளியிட்டோம். தற்போது நாம் வாங்கியிருக்கும் விலையை 2007ஆம் ஆண்டின் விலையோடு ஒப்பிட்டால் 40 சதவீதம் அதிகம். 2012ஆம் ஆண்டின் விலையோடு ஒப்பிட்டால் 14 சதவீதம் அதிகம் என்பதை தெரிவித்தோம். பேரம்பேசி விலையைக் குறைத்திருக்கலாம் என்பதை அந்தக் கட்டுரையில் நாங்கள் சொல்லியிருந்தோம்.”

விரிவாக படிக்க: “ரஃபேல் ஆவணங்களை நாங்கள் திருடவில்லை” – என். ராம்

ஐஎஸ் அமைப்பில் சேர சென்ற ஷமிமாவின் மூன்றாவது குழந்தை உயிரிழப்பு

பிரிட்டனில் இருந்து ஐஎஸ் குழுவில் சேர சென்ற ஷமிமா பேகமின் குழந்தை உயிரிழந்ததை தொடர்ந்து பிரிட்டன் உள்துறை அமைச்சர் சஜித் ஜாவித் மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் ஐ.எஸ் குழுவில் சேர்வதற்காக 2015-ஆம் ஆண்டு கிழக்கு லண்டனை விட்டு கிளம்பிய மூன்று பள்ளி மாணவிகளில் ஒருவர் ஷமிமா பேகம்.

அவர் சமீபத்தில் லண்டன் திரும்ப விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால் அவரின் பிரிட்டன் குடியுரிமையை ரத்து செய்தார் பிரிட்டனின் உள்துறை அமைச்சர் சயித் ஜாவித்.

ஷமிமாவின் குடும்ப நண்பர் ஒருவர், “பிரிட்டன் அந்த குழந்தையின் உயிரை காப்பாற்ற தவறிவிட்டது” என்று தெரிவித்துள்ளார்.

விரிவாக படிக்க: ஐஎஸ் அமைப்பில் சேர சென்ற ஷமிமாவின் மூன்றாவது குழந்தை உயிரிழப்பு

தேமுதிகவுடன் அமையவுள்ள கூட்டணியில் எந்த இழுபறியும் இல்லை: முதல்வர் பழனிசாமி

தற்போதைய பிரதமர் நரேந்திர மோதி, மீண்டும் பிரதமராக வந்தால்தான் நாடு பாதுகாப்பாக இருக்கும் என்பதால் அதிமுக பாஜகவுடன் நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணியை அமைத்துள்ளது என தமிழக முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி தொடர்பாக சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி, அதிமுக கூட்டணியில் இதுவரை பாமக, பாஜக, புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் இணைந்துள்ளன, மேலும் புதிதாக கட்சிகள் கூட்டணியில் இணையவுள்ளன என்று குறிப்பிட்டார்.

”அதிமுக சிறப்பான முறையில் கூட்டணியை அமைத்துள்ளது. நாட்டின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அதிமுக பாஜகவுடன் கூட்டணியை அமைத்துள்ளது. இந்தியா ஒரு ஜனநாயக நாடு. இந்த நாட்டின் பிரதமராக இருப்பவர் தகுதியான, அனுபவம் மிக்கவராக இருக்கவேண்டும் என்பது முக்கியம். மோதி மீண்டும் பிரதமராக வந்தால்தான் நாடு பாதுகாப்பாக இருக்கும் என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டு பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளோம்,” என்றார் பழனிசாமி.

விரிவாக படிக்க: தேமுதிகவுடன் அமையவுள்ள கூட்டணியில் எந்த இழுபறியும் இல்லை: முதல்வர் பழனிசாமி

இந்தியா – பாகிஸ்தான் போரின்போது இந்தியாவில் இருந்து தப்பிச் சென்றாரா ராஜீவ் காந்தி? #BBCFactCheck

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி குறித்த தவறான செய்தி ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது என்னவென்றால், “1971ஆம் ஆண்டு இந்தியா – பாகிஸ்தான் போரின்போது, நாட்டிற்கு அவர் தேவைப்பட்டபோது, இந்திய விமானப்படையின் விமானியான ராஜீவ் காந்தி இங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்” என்பதாகும்.

தாங்கள் பிடித்து வைத்திருந்த விங் கமாண்டர் அபிநந்தன் இந்தியா திரும்பிய பிறகு, இந்த பகிர்வு வைரலாகியிருப்பது தெரிய வந்துள்ளது. கடந்த பிப்ரவரி 27ம் தேதி பாகிஸ்தானிடம் பிடிப்பட்டார் அபிநந்தன்.

இந்நிலையில், ராஜீவ் காந்தி குறித்த இந்த செய்தி வலதுசாரிகள் இடையே பரப்பப்பட்டு ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸப் குழுக்களிலும் பகிரப்பட்டு வருகிறது.

அதில் கூறியிருப்பதாவது: “இந்தியாவின் விமானத் தாக்குதலுக்காக ராகுல் காந்தி ஆதாரம் தேடிக் கொண்டிருக்கிறார். ஆனால், நாட்டின் மிகவும் இக்கட்டான சூழலில் அவரது தந்தை நாட்டுக்காக நிற்கவில்லை.”

விரிவாக படிக்க: இந்தியா – பாகிஸ்தான் போரின்போது இந்தியாவில் இருந்து தப்பிச் சென்றாரா ராஜீவ் காந்தி?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com