Press "Enter" to skip to content

அல்ஜீரியா அதிபர் அப்தலசீஸ் பூத்தஃபீலிகா எடுத்த புதிய முடிவு மற்றும் பிற செய்திகள்

அல்ஜீரிய அதிபர் அப்தலசீஸ் பூத்தஃபீலிகா ஏப்ரல் 18-ம் தேதி நடக்கவிருந்த அதிபர் தேர்தலை தள்ளி வைத்திருக்கிறார் மேலும் ஐந்தாவது முறையாக போட்டியிடமாட்டேன் என தெரிவித்திருக்கிறார்.

முன்னதாக அதிபர் பூத்தஃபீலிகா அதிபர் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவித்ததையடுத்து கடந்த சில வாரங்களாக அல்ஜீரியாவில் போராட்டம் வெடித்தது.

அவர் கடந்த 20 ஆண்டுகளாக அல்ஜீரியாவுக்கு தலைமை தாங்கிவருகிறார். ஆனால் 2013-ல் பக்கவாதம் வந்தபிறகு அரிதாகவே பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.

பூத்தஃபிலிக்கா பெயரில் வெளியிடப்பட்ட அறிக்கையில், புது தேர்தலுக்கான தேதிகள் இதுவரை முடிவு செய்யப்படவில்லை ஆனால் அமைச்சரவை மாற்றம் மிக விரைவில் நடக்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தேர்தல் தள்ளி வைக்கப்படும் சூழலில் அதிபர் பதவியை விட்டு இறங்குவாரா என்பது குறித்த கேள்விகளுக்கு அவரது அறிக்கையில் எந்த விளக்கமும் இல்லை.

இதற்கிடையில் அல்ஜீரியாவில் பிரதமர் அஹமத் ஓயாஹியா ராஜினாமா அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதையடுத்து உள்துறை அமைச்சர் நூறுடீன் பெடோய் புதிய அரசை அமைக்கும் பொறுப்பை ஏற்றுள்ளார் என ஏ பி எஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதையும் நீங்கள் படிக்கலாம் – இருபது ஆண்டுகளாக ஒரே அதிபர் – போராடும் மக்கள்; முரண்டு பிடிக்கும் அதிபர்

உண்மையில் இந்தியா கோப்பையை வெல்லும் பலமான அணியா?

ஒருநாள் கிரிக்கெட் ஐசிசி தரவரிசையில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது. முதலிடத்தில் இருப்பது இங்கிலாந்து. உலக கோப்பை நெருங்கும் வேளையில் கடந்த இரண்டு மாதங்களாக இந்தியா வெற்றி, தோல்விகளை மாறி மாறி சந்தித்து வருகிறது.

2019 உலக கோப்பை இங்கிலாந்தில் நடக்கவுள்ளது. கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்தில், உலக கோப்பையை வெல்லும் வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக இந்தியாவும் உள்ளது. அதற்குச் சான்றாக கடந்த இரு ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்றுள்ளது இந்திய அணி.

ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்திய அணி பரீட்சார்த்த முறையில் அணியில் சில மாற்றங்களை செய்துள்ளது. இது இந்திய அணிக்கு எவ்வளவு தூரம் பயன்தரும் என்பது இப்போதைக்கு உடனடியாகச் சொல்ல முடியாது. ஆனால், உண்மையில் இந்திய அணி அசைக்க முடியாத பலத்தோடு இருக்கிறது என்ற தோற்றத்தை கடந்த இரு மாதங்களில் ஆஸ்திரேலியாவும் நியூசிலாந்தும் அசைத்துப் பார்த்திருப்பதை மறுக்க முடியாது.

விரிவாக படிக்க – உலககோப்பையை வெல்லும் பலமான அணியாக உள்ளதா இந்திய அணி?

ராகுலை முந்தி சொல்கிறாரா மோதி

தொலைகாட்சியைப் பாருங்கள் மீண்டும் ஒருமுறை 2013ஆம் ஆண்டு நிலையை ஒப்பிட்டுப் பாருங்கள். தொலைகாட்சி சேனல்களில் நேரடி ஒளிபரப்பில் நரேந்திர மோதி இருப்பார், அல்லது அவருக்கு ஆதரவு திரட்டும் அமித் ஷா இருப்பார்.

எப்போதாவது தொலைகாட்சியில் ராகுல் காந்தி காண்பிக்கப்பட்டால், அந்த நிகழ்ச்சியே சுரத்தில்லாமல் காணப்படும். பிரியங்கா காந்தி தேர்தல் களத்தில் இறங்குகிறார் என்று வெளியானதுமே, காங்கிரசுக்கு கைகொடுக்குப்பதற்காக அவர் இறங்கியிருக்கிறார் என்ற நிலை உருவாகியிருக்கிறது.

அரசியல் சூழலை மாற்றுவதற்கான துருப்புச் சீட்டை பயன்படுத்தும் நேரம் மீண்டும் வந்திருக்கிறது. சில மாதங்களுக்கு முன்னதாக ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநில சட்டமன்ற தேர்தல்களில் நரேந்திர மோதி, அமித் ஷாவின் கடும் முயற்சிகளுக்கு பிறகும் பாஜகவின் நிலைமை கேள்விக்குள்ளானது. மோதியின் இறங்குமுகம் தொடங்கிவிட்டதாக அப்போது தோன்றியது. வாக்காளர்களை கவர்வதற்காக அவரிடம் எந்த அஸ்திரமும் இல்லை என்றே தோன்றியது.

தொலைகாட்சி தொகுப்பாளர்களில் பலர் மோதிக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கும் ‘சியர் லீடர்ஸ்” ஆக மாறிவிட்டார்கள். இந்தியாவின் விமான தாக்குதலில் பாலாகோட்டில் 300 முதல் 400 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக முதலில் தொலைகாட்சிகள் தெரிவித்தன.

நரேந்திர மோதி தனது அம்பறாத்துணியில் இருந்து ஒன்றன்பின் ஒன்றாக பிரம்மாஸ்திரங்களை வெளியில் எடுத்து குறிபார்த்து விடுவதை பார்த்து, எதிர்கட்சிகள் திகைத்துப் போய் நிற்கின்றன.

விரிவாக படிக்க – ராகுலை முந்தி செல்லும் மோதி – எவ்வாறு?

தமிழகத்தில் 18 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் நடத்தப்படுவதேன்?

தமிழகத்தில் மக்களவை தேர்தலோடு, 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடத்துவதால், தேர்தல் ஆணையத்திற்கும், வாக்காளர்களுக்கும் எந்தவித சிரமமும் இருக்காது என ஓய்வு பெற்ற தேர்தல் ஆணையர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர், பல மக்களவை தேர்தல்களின்போது சட்டமன்ற தேர்தல்கள் மற்றும் இடைத்தேர்தல்கள் நடந்துள்ளன என்பதால், தமிழகத்தில் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடத்துவதில் சிக்கல்கள் இருக்காது என்கிறார்கள் தேர்தல்களில் பணியாற்றிய அதிகாரிகள்.

மிழகத்தில் 21 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ள நிலையில் 18 தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் நடத்துவது குறித்து கேட்டபோது, ”அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் மற்றும் ஒட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளில் நடந்த தேர்தலில் முறைகேடு நடந்ததாக கூறி வழக்கு நடந்து வருவதால், 18 தொகுதிகளில் மட்டும் தேர்தல் நடத்தப்படுகிறது. வழக்கின் முடிவில் தேர்தல் முடிவு சரி என்றோ, வழக்கு போட்ட நபருக்கு சாதகமாக தீர்ப்பு வந்தால், தற்போது தேர்தல் நடத்துவதால் எந்த பயனும் இல்லை என்பதால், மூன்று தொகுதிகளில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது,”என்றார் நரேஷ் குப்தா.

விரிவாக படிக்க – ”மக்களவை தேர்தலின் போது இடைத்தேர்தல் நடத்துவதால் சிக்கல் இல்லை”

இலங்கையில் இந்து ஆலயம் புத்தமயமாகிறது

இந்து சமயம் இலங்கையின் ஆதி காலம் முதலே காணப்பட்டது என்பதற்கான சாட்சியங்கள் இன்றும் காணப்படுகின்றன.

நாட்டை ஆட்சி செய்த பல மன்னர்கள், பல இந்து ஆலயங்களை நிர்மாணித்து, வழிபாடுகளை நடத்தியமைக்கான சாட்சியங்கள் இன்றும் காணப்படுகின்றன.

குறிப்பாக மன்னர்கள் சிவ வழிபாட்டிலேயே ஈடுபட்டிருந்ததாக வரலாற்று சான்றுகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், முதலாம் இராஜசிங்க மன்னனால் நிர்மாணிக்கப்பட்டதாக கூறப்படும் இந்து ஆலயமொன்று சிதைவடைந்த நிலையில், இலங்கை தொல்பொருள் திணைக்களத்தினால் பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றது.

வரலாற்று சிறப்பு மிக்க இந்த பெரண்டி ஆலயம், இன்று முழுமையாக சிதைவடைந்துள்ள நிலையில், அதனை இலங்கையின் பெரும்பான்மை சமுகமான சிங்கள சமூகம் ஆக்கிரமித்துள்ளதைக் காண முடிகிறது.

விரிவாக படிக்க – இலங்கையில் புத்தமயமாகும் இராஜசிங்க மன்னனின் இந்து ஆலயம்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »