Press "Enter" to skip to content

225 கிலோமீட்டர் வேகத்தில் ஆப்பிரிக்காவில் கரையை கடக்கும் அதிதீவிர புயல் மற்றும் பிற செய்திகள்

ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக் அருகே கடலில் உருவான பலம் வாய்ந்த புயல் ஒன்று, கரையை கடக்கும்போது ‘கடுமையான அழிவை’ ஏற்படுத்துமென்று கருதப்படுவதால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இடாய் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் கரையை கடக்கும்போது மணிக்கு சுமார் 225 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும்.

நாட்டின் நான்காவது மிகப் பெரிய நகரமும், சுமார் ஐந்து லட்சம் மக்கள் தொகையையும் கொண்ட துறைமுக நகரான பெய்ராவில் இந்த புயல் கரையை கடக்குமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புயலால் ஏற்பட்ட அதிதீவிர மழை காரணமாக மொசாம்பிக் மற்றும் மலாவியில் இதுவரை கிட்டத்தட்ட 100 பேர் உயிரிழந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

மும்பையில் நடைமேம்பாலம் இடிந்து விபத்து: 5 பேர் உயிரிழப்பு

மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி தொடர் வண்டிநிலையம் அருகே நேற்று (வியாழக்கிழமை) மாலை 7.30 மணிக்கு தொடர்வண்டித் துறை நடைமேம்பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், இந்த விபத்தில் 36 பேர் காயமடைந்துள்ளதாக ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

இறந்தவர்களில் அபூர்வா பிரபு, ரஞ்சனா டாம்பே மற்றும் சிராஜ் கான் ஆகியோரை காவல் துறையினர் அடையாளம் கண்டுள்ளனர்.

இந்நிலையில் இடிபாடுகள் முழுவதும் அகற்றப்படாத நிலையில், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

விபத்தில் காயமடைந்தவர்கள் செயிண்ட் ஜார்ஜ், ஜிடி மற்றும் சியான் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விரிவாக படிக்க: மும்பையில் நடைமேம்பாலம் இடிந்து விபத்து: 5 பேர் உயிரிழப்பு

விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி வாழ்வாதாரத்துக்கு போராடும் அவலம்

புதிய ஊன்றுகோல் ஒன்றினை வாங்குவதற்கு வசதியற்றிருக்கும் ஜெகன், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளி.

நந்திக் கடல் பகுதியில் நடந்த இறுதி யுத்தத்தில், இலங்கைப் படையினருக்கு எதிராக ஆயுதமேந்திப் போரிட்ட போது, தமது இடது காலினை அவர் இழந்தார். தன் 15ஆவது வயதில் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து 7 ஆண்டுகள் ஆயுதம் ஏந்திப் போராடிய அந்த இளைஞன், இப்போது அன்றாட உணவுக்கான வருமானத்தைத் தேடிக் கொள்வதற்கே மிகவும் போராடுகிறார்.

இலங்கை அம்பாறை மாவட்டம் – விநாயகபுரத்தில் மனைவி மற்றும் இரண்டு வயது பெண் குழந்தையுடன், ஜெகன் வசிக்கிறார். அவருக்கு இப்போது 32 வயதாகிறது. கூலி வேலைக்காக, 20 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரம் ஒற்றைக் காலால், சைக்கிள் மிதித்து பயணிக்கிறார். “ஆனால், ஒவ்வொரு நாளும் தொழில் கிடைப்பதில்லை. கிடைக்கும் வருமானத்தில் பாதிக்கும் மேல் குழந்தைக்கான பால்மாவு உள்ளிட்ட செலவுகளுக்கே போய்விடுகிறது” என்கிறார் ஜெகன்.

விரிவாக படிக்க: விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி வாழ்வாதாரத்துக்கு போராடும் அவலம்

பொள்ளாச்சி பாலியல் துன்புறுத்தல் விவகாரம்: நடந்தது என்ன?

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் இளம் பெண்களை ஏமாற்றி வல்லுறவு செய்து, அதனை காணொளி எடுத்து சில இளைஞர்கள் பணம் பறித்த விவகாரம் தற்போது தமிழகத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

நூற்றுக்கணக்கான பெண்களை அந்த இளைஞர்கள் மிரட்டி பணம் பறித்ததாகவும் ஆயிரக்கணக்கான காணொளிக்கள் அவ்வாறு வலம் வருவதாகவும் ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் செய்திகள் பரவி வருகின்றன. உண்மை நிலை என்ன?

பிப்ரவரி மாதம் 24ஆம் தேதியன்று பொள்ளாச்சி நகர கிழக்கு காவல் நிலையத்தில் கல்லூரி மாணவி ஒருவர் புகார் ஒன்றை அளித்தார். அந்தப் புகாரின்படி, கடந்த பிப்ரவரி 12ஆம் தேதியன்று அந்த மாணவியின் நண்பரான சபரிராஜன் என்ற ரிஸ்வந்த் தன்னை பொள்ளாச்சியில் உள்ள பேருந்து நிறுத்தம் ஒன்றில் வந்து சந்திக்கும்படி அழைத்திருக்கிறார்.

அன்று மதியம் அந்தப் பெண் அங்கு சென்றபோது காருடன் நின்றிருந்த சபரிராஜன், அதில் ஏறும்படி கூறினார். தேரை (காரை) திருநாவுக்கரசு என்பவர் ஓட்டிச் செல்ல, பின் இருக்கையில் அந்தப் பெண்ணும் சபரிராஜனும் அமர்ந்துகொண்டனர். நடுவழியில் வசந்தகுமார், சதீஷ் ஆகிய இருவரும் ஏறிக்கொண்டனர்.

விரிவாக படிக்க: பொள்ளாச்சி பாலியல் துன்புறுத்தல் விவகாரம்: நடந்தது என்ன?

ராகுல் காந்தி வட இந்தியப் பெண்களை அவமதித்தாரா? உண்மை என்ன?

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தென் இந்தியாவில் வாக்குகளை பெற வட இந்தியர்களை அவமானப்படுத்தியதாக சமூக வலைதளங்களில் பலர் கூறிவருகின்றனர்.

இந்த கூற்றை நிரூபிக்க வலதுசாரி சமூக ஊடக பயன்பாட்டாளர்கள் 20 நொடி காணொளி ஒன்றை பயன்படுத்தி வருகின்றனர்.

மிகுதியாக பகிரப்பட்ட அந்த விடியோவில், “இந்த விஷயத்தில் வட இந்தியாவைக் காட்டிலும் தென் இந்தியா சிறந்து விளங்குகிறது. நீங்கள் உத்தரப்பிரதேசம், பிஹார் ஆகிய மாநிலங்களுக்கு சென்று பெண்களை எவ்வாறு நடத்துகிறார்கள் என்று பார்க்க வேண்டும். நீங்கள் அதிர்ச்சி அடைந்து விடுவீர்கள்” என்று கூறுகிறார் ராகுல் காந்தி.

ராகுல் காந்தி இந்தியாவை பிராந்திய ரீதியாக பிரிக்க நினைக்கிறார் என்று சிலர் கூறுகின்றனர்.

விரிவாக படிக்க:வட இந்தியப் பெண்களை அவமதித்தாரா ராகுல்? உண்மை என்ன?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »