Press "Enter" to skip to content

ரஷ்ய விமான விபத்து: அவசரமாக தரையிறங்கி தீப்பிடித்ததில் 41 பேர் உயிரிழந்தனர் மற்றும் பிற செய்திகள்

ரஷ்யாவின் மாஸ்கோவில் உள்ள ஷெர்மெட்யவோ விமான நிலையத்தில், விமானம் ஒன்று அவசரமாக தரை இறங்கி, தீப்பிடித்துக் கொண்டதில் குறைந்தது 41 பேர் உயிரிழந்தனர்.

சமூக வலைதளங்களில் காணப்படும் காணொளிக்களில், எரிந்து கொண்டிருக்கும் அந்த விமானத்தில் இருந்து தப்பிக்க பயணிகள் அவசரகால வழியை பயன்படுத்துவது தெரிகிறது

இந்த விபத்தில், இரண்டு குழந்தைகள், விமானப் பணியாளர் ஒருவர் உள்ளிட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக ரஷ்ய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

78 பயணிகள் மற்றும் 5 விமானப் பணியாளர்கள் அந்த விமானத்தில் இருந்தனர். தீப்பிடித்த இந்த விமானத்தில் யாரும் தப்பித்திருந்தால் அது ஒரு “பேரதிசயம்” என சம்பவத்தை நேரில் பார்த்தவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

புறப்பட்டவுடனேயே “தொழில்நுட்பக் காரணங்களுக்காக” அந்த விமானம், விமான நிலையத்துக்கு திரும்ப வேண்டிய சூழல் இருந்ததாக ரஷ்ய அரசின் ஏரோஃபிளாட் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

விமானம் புறப்பட்டவுடன் ஏதோ “கோளாறு” தெரிந்ததால் விமானக் குழுவினர் உடனடியாக எச்சரிக்கை சமிக்ஞை விடுத்தனர்

விமான நிலையத்தில் அவசரமாக தரை இறங்கியதும், ஓடுபாதையில் அதன் இஞ்சின் தீப்பிடித்துவிட்டதாக ஏரோஃபிளாட் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

“பயணிகளை காப்பாற்ற விமானக் குழு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டது. பயணிகள் 55 நொடிகளில் வெளியேற்றப்பட்டனர்”. என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

காஸாவில் தீவிரமாகும் வன்முறை

காஸா பகுதியில் உள்ள ஆயுத குழுவினருக்கும் இஸ்ரேல் ராணுவத்தினருக்கும் நடைபெற்று வரும் தாக்குதல், சமீபத்திய ஆண்டுகளில் நிகழ்ந்த வலுவான தாக்குல்களில் ஒன்றாக இருக்கிறது.

இஸ்ரேலிய பிராந்தியத்திற்குள் 450க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை பாலத்தீன போராளிகள் ஏவியுள்ளனர். இதில் ஒருவர் உயிரிழந்ததாக இஸ்ரேல் கூறுகிறது.

அவர்கள் தாக்கியதால், நாங்கள் ஏவுகணைகள் மற்றும் டாங்கிகள் கொண்டு பாலத்தீனத்தை தாக்கினோம் என்கிறார்கள் இஸ்ரேல் ராணுவத்தினர். இத்தாக்குதலில் நான்கு பேர் உயிரிழந்ததாக பாலத்தீனம் கூறியுள்ளது.

“காஸா பகுதியில் உள்ள தீவிரவாத சக்திகள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்துமாறு” ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக, இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெத்தன்யாஹு ஞாயிறன்று தெரிவித்தார்.

விரிவாக படிக்க:காஸாவில் தீவிரமாகும் வன்முறை: வான்வழி தாக்குதல் நடத்தும் இஸ்ரேல்

இலங்கை நீர்கொழும்பு பகுதியில் இரு குழுக்கள் இடையே மோதல்

நீர்கொழும்பு பகுதியில் இரு குழுக்கள் இடையே ஏற்பட்ட பெரும் மோதல் அப்பகுதியில் அமைதியின்மையை ஏற்படுத்தியது. தற்போது நிலைமை முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

நீர்கொழும்பு – போருதொட்டை முஸ்லிம்கள் வசிக்கும் பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்த மோதலால் வாகனங்கள் உள்ளிட்ட சொத்துக்கள் மற்றும் வர்த்தக நிலையங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக காவல் துறையினர் குறிப்பிட்டனர்.

இலங்கை தற்கொலை குண்டுதாரி ஆஸாத்தின் மனைவியும் குண்டு வெடிப்பில் உயிரிழந்தார்..

இதனைத் தொடர்ந்து காவல் துறை ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இது நாளை காலை ஏழு மணி வரை நீடிக்கும் என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

விரிவாக படிக்க:நீர்கொழும்பு பகுதியில் இரு குழுக்கள் இடையே மோதல் – காவல் துறை ஊரடங்கு சட்டம் அமல்

இலங்கை தாக்குதல்: தற்கொலை குண்டுதாரி ஆஸாத்தின் மனைவியும் குண்டு வெடிப்பில் உயிரிழந்தார்

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்திய நபரின் பெயர் ஆஸாத். காத்தான்குடியில் பிறந்தவர். இவர் பற்றிய தகவல்களைத் திரட்டிக் கொள்ளும் பொருட்டு, சில நாட்களுக்கு முன்னர் காத்தான்குடிக்கு பிபிசி சென்றிருந்த போதும், குறித்த நபரின் தாயாரை சந்திக்க முடியவில்லை. அவரை காவல் துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றிருந்தார்கள்.

இந்த நிலையில், கல்முனை – இஸ்லாமாபாத் எனும் பகுதியில்தான், ஆஸாத் திருமணம் முடித்துள்ளார் என்கிற தகவல் கிடைத்தது. ஆஸாத் பற்றிய தகவல்களை சேகரிக்க இஸ்லாமாபாத் பகுதிக்குச் சென்றோம்.

நாம் தேடிச் சென்ற வீட்டை கண்டுபிடிப்பதற்கு உள்ளூர்வாசிகள் உதவினார்கள். ஆஸாத்தின் மனைவியினுடைய தாயாரை (மாமியார்) அந்த வீட்டில் சந்தித்தோம்.

ஆஸாத்தின் மாமியாரின் பெயர் சித்தி. அவர் எங்களை பயத்துடனேயே எதிர்கொண்டார். போலீஸாரும் படையினரும் அடிக்கடி வந்து விசாரணை செய்வதால் மனதளவில் தான் நொந்து போயுள்ளதாக அழுதார்.

விரிவாக படிக்க:“தற்கொலை குண்டுதாரி ஆஸாத்தின் மனைவியும் குண்டு வெடிப்பில் இறந்தார்”

மார்க் சக்கர்பெர்க் பதவிக்கு அதிகரிக்கும் அச்சுறுத்தல்

உலகிலுள்ள தொழில்நுட்ப நிறுவனங்களிலேயே உட்சபட்ச அதிகாரத்தை கொண்டவராக ஃபேஸ்புக்கின் மார்க் சக்கர்பெர்க் திகழ்கிறார்.

அதாவது, ஃபேஸ்புக் இணை-நிறுவனரான மார்க் சக்கர்பெர்க் அதன் தலைமை செயலதிகாரியாகவும், நிறுவன இயக்குநர்கள் குழுவின் தலைவராகவும் மட்டுமின்றி, அந்நிறுவனத்தின் அதிகபட்ச பங்குகளை கொண்டுள்ளவராகவும் திகழ்கிறார்.

ஒரு நிறுவனத்தில் ஒரே நபர் இத்தனை பதவிகளையும் வகிப்பது குறித்து ஆரம்பக்காலத்திலிருந்தே சலசலப்புகள் இருந்து வரும் நிலையில், அது சமீப காலமாக மோசமான நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

“வெளிப்படையாக சொல்ல வேண்டுமென்றால், தற்போதைக்கு நாங்கள் மிகுந்த வலிமைமிக்க தனியுரிமை கொள்கையை கொண்டிருக்கவில்லை என்பது எனக்கு தெரியும்” என்று சில தினங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் சான்ஜோஸ் நகரில் நடந்த ஃபேஸ்புக் நிறுவனத்தின் தொழில்நுட்பவியலாளர்கள் மாநாட்டில் சக்கர்பெர்க் தெரிவித்திருந்தார்.

விரிவாக படிக்க: மார்க் சக்கர்பெர்க் பதவிக்கு அதிகரிக்கும் அச்சுறுத்தல் – காரணம் என்ன தெரியுமா?

‘காற்றாலை மின்கம்பங்களால் பறவைகளுக்கு பாதிப்பு’

மேற்குதொடர்ச்சிமலைப் பகுதியில் காற்றாலை மின்கம்பங்கள் உள்ள இடங்களில் பறவைகள் விலகிச்செல்வதால், பல்லிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு அங்கு உயிரினங்களின் உணவுச்சங்கிலியில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஆய்வாளர் மரியா தாகூர் மற்றும் இரண்டு ஆய்வு மாணவர்கள் சேர்ந்து மூன்று ஆண்டுகள் நடத்திய ஆய்வில், காற்றாலை மின்கம்பங்கள் இருக்கும் இடங்களில், பல்லிகளை பறவைகள் உண்பதில்லை என்பதால் பல்லிகள் வெகு எளிதாக நடமாடுகின்றன என்றும் அங்கு உணவுச்சங்கிலியில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்று பதிவு செய்துள்ளனர்.

விரிவாக படிக்க:‘காற்றாலை மின்கம்பங்களால் பறவைகளுக்கு பாதிப்பு’ – ஆய்வு முடிவுக்கு எதிர்ப்பு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »
Mission News Theme by Compete Themes.