Press "Enter" to skip to content

நீரவ் மோதி பிணை மனு: இந்திய வழக்கறிஞர்கள் ஆட்சேபனை – லண்டன் நீதிமன்றம் தள்ளுபடி

நீரவ் மோதி பிணை மனுவை லண்டன் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்திய வழக்கறிஞர்கள் இந்த பிணை மனுவுக்கு ஆட்சேபனை தெரிவித்து இருந்தனர்.

பிணை கிடைத்தால் நீரவ் மோதி சாட்சியங்களை களைப்பார் என்றும் இந்திய வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.

2 மில்லியன் பவுண்டுகள் பிணை தொகை செலுத்தவும், வீட்டு காவலில் இருக்கவும் நீரவ் மோதி தயாராக இருப்பதாக மோதியின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். மேலும், “பிரிட்டனைவிட பாதுகாப்பான இடம் தமக்கு இல்லை என நீரவ் மோதி கருதுகிறார்” என்றார் அவரது வழக்கறிஞர்.

ஆனால், அவரது பிணை மனு நிராகரிக்கப்பட்டது.

பின்னணி

இந்தியாவில் கடன் வாங்கிவிட்டு இங்கிலாந்து தப்பிச்சென்றுள்ளதாக குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள தொழில் அதிபர் நீரவ் மோதி லண்டனில் கைது செய்யப்பட்டார்.

மத்திய லண்டனில் ஹால்பன் பகுதியில் அவர் கைது செய்யப்பட்டார்.

இதனிடையே அவருக்குச் சொந்தமான கார்கள் மற்றும் ஓவியங்களை ஏலத்தில் விட இந்திய வருமான வரித்துறைக்கு மும்பையிலுள்ள சிறப்பு நீதிமன்றம் ஒன்று அனுமதி வழங்கியது.

அவரை இந்தியாவுக்கு நாடுகடத்த வேண்டும் என இந்திய அரசு பிரிட்டன் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தது.

பஞ்சாப் நேஷனல் வங்கி கூறிய குற்றச்சாட்டுகள்

சுமார் 11 ஆயிரத்து 360 கோடி ரூபாய் அளவுக்கு தங்கள் வங்கியில் நிதி மோசடி மற்றும் அங்கீகரிக்கப்படாத நிதி பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளதை கண்டுபிடித்துள்ளதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு, கடந்த ஆண்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது பஞ்சாப் நேஷனல் வங்கி.

மும்பை பிராடி ஹவுஸில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கிக் கிளை சட்ட விரோதமாக ஹாங்காங்கில் உள்ள இரு இந்திய வங்கிகளான ஆக்சிஸ் மற்றும் அலகாபாத் வங்கிகள் மூலம் குறிப்பிட்ட சில நபர்கள் நடத்தி வந்த நிறுவனங்களுக்கு அதிகளவில் கடன் வழங்க அதிகாரம் கொடுத்துள்ளது.

நிறுவனங்களின் பங்குதாரர்களான நீரவ் மோதி, நிஷால் மோதி, அமி நீரவ் மோதி மற்றும் மெகுல் சோக்ஸி ஆகியோர் மீது வழக்கு பதிய வேண்டும் என்றும், மோசடிக்கு உதவியதாக வங்கி ஊழியர்கள் கோகுல்நாத் ஷெட்டி மற்றும் மனோஜ் ஹணுமந்த் காரத் ஆகியோர் மீதும் வழக்கு பதிய வேண்டும் என்றும் சிபிஐயிடம் பஞ்சாப் நேஷனல் வங்கி கேட்டு கொண்டுள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கியின் மோசடி குறித்த செய்தி வெளியான நிலையில் பங்குச்சந்தையில் வங்கி சார்ந்த பங்குகள் பெரும் சரிவை சந்தித்தன. பஞ்சாப் நேஷனல் வங்கியின் பங்கு மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தைகளில் சரிவை சந்தித்தது.

இந்த மோசடியில் தொடர்புடைய 10 வங்கி ஊழியர்களை பஞ்சாப் நேஷனல் வங்கி இடைநீக்கம் செய்துள்ளது. நீரவ் மோதி மற்றும் பிற குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக அமலாக்கத்துறை நிதி மோசடி வழக்கு பதிந்துள்ளது. நிரவ் மோதியின் அலுவலகம் மற்றும் கடைகளில் அமலாக்கத்துறை சோதனைகள் நடத்தப்பட்டது.

சதி மற்றும் மோசடி பிரிவுகளின் கீழ் வழக்கு

நீரவ் மோதி, எமி, நிஷால் மற்றும் மெஹுல் சோக்ஸி ஆகியோர் பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு 280 கோடி இழப்பு நேரிட காரணமாக இருந்ததாக மத்திய புலனாய்வு முகமை சி.பி.ஐ கூறுவதாக, பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கி அளித்த புகாரின் அடிப்படையில் சி.பி.ஐ நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த நால்வரும் சதி திட்டம் தீட்டி வங்கி அதிகாரிகளிடம் மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டதாக புகாரில் கூறப்பட்டுள்ளது. டயமண்ட் ஆர்.யூ.எஸ், சோலார் எக்விளையாட்டு, ஸ்டெல்லர் டைமண்ட்ஸ் ஆகிய நிறுவனங்களில் இந்த நால்வரும் பங்குதாரர்கள்.

இவர்கள் நால்வருக்கும் எதிராக இந்திய குற்றவியல் சட்டத்தின் குற்றச் சதி மற்றும் மோசடி பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதைத் தவிர, ஊழல் தடுப்புச் சட்ட விதிகளின் கீழும் இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

டெல்லி, சூரத் மற்றும் ஜெய்ப்பூரில் உள்ள அலுவலகங்கள் ஏற்கனவே வருமான வரித்துறையின் கண்காணிப்பில் இருந்து வந்தன. 2.3 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஃபயர்ஸ்டர் டைமண்ட் என்ற நகை வடிவமைக்கும் நிறுவனத்தின் நிறுவனர் நீரவ். சர்வதேச பிரபலங்கள் இந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள்.

நீரவ் மோதியின் நவீன வைர நகை கடைகள் (Designer jewelry boutique) லண்டன், நியூயார்க், லாஸ் வேகாஸ், ஹவாய், சிங்கப்பூர், பெய்ஜிங் மற்றும் மக்காவ் ஆகிய இடங்களிலும், இந்தியாவில், மும்பை மற்றும் டெல்லியிலும் உள்ளன.

‘குளோபல் டைமண்ட் ஜூவல்லரி ஹவுஸ்’ என்ற நிறுவனத்தை 2010 ஆம் ஆண்டில் உருவாக்கிய நீரவ் மோதி அதற்கு பின் ராக்கெட் வேகத்தில் முன்னேறினார். அவரது நிறுவனத்தின் தலைமையகம் மும்பையில் உள்ளது.

நீரவ் மோதியின் குடும்பம் பரம்பரையாக வைர வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளது. பெல்ஜியம் நாட்டின் ஆண்ட்வெர்ப் நகரில் வளர்ந்தவர் நீரவ்.

குடும்ப பின்னணி

இளம் வயதிலிருந்தே கலை ஆர்வமும், வடிவமைப்பில் தாகமும் கொண்ட நீரவ், ஐரோப்பாவில் உள்ள பல்வேறு அருங்காட்சியகங்களுக்கு செல்வதில் விருப்பம் கொண்டவர்.

இந்தியாவில் குடியேறிய நீரவ், வைர வர்த்தகத்தின் அனைத்து அம்சங்களிலும் நுணுக்கமான பயிற்சியை எடுத்துக் கொண்டு 1999ஆம் ஆண்டில் ஃபயர்ஸ்டர் டைமண்ட் என்ற நகை வடிவமைக்கும் நிறுவனத்தை தொடங்கினார். வைரம் தொடர்பான அனைத்து தொழில்களிலும் ஃபயர்ஸ்டர் நிறுவனம் ஈடுபட்டது.

நிறுவனம் தொடங்கியது எப்படி?

2008ஆம் ஆண்டில், நீரவின் நெருங்கிய நண்பர் ஒருவர் காதணி செய்து தருமாறு கேட்டுக்கொண்டார். அந்த காதணியை உருவாக்க நீரவ் மிகுந்த கவனம் எடுத்துக் கொண்டார்.

வைரம் தேர்ந்தெடுக்க, நுணுக்கமாக வடிவமைக்க என பல மாத கால உழைப்புக்கு பிறகு காதணியை உருவாக்கினார். உருவான காதணியோ காலத்திற்கும் நீரவின் திறமையை பேசும்படி அமைந்திருந்தது.

அப்போதுதான் இந்தத் தொழில் தனது கலைத்திறமைக்கும், அடிப்படை இயல்புக்கும் மிகவும் ஏற்றது என்று உணர்ந்தார் நீரவ். தனது பேரார்வத்தை தொழிலாகவே மாற்றிக்கொள்ளலாம் என்று முனைந்த நீரவ், ‘பிராண்ட்’ என்ற நவீன தொழில் வடிவத்துடன் களம் இறங்கினார்.

கிறிஸ்டி மற்றும் சோத்பே ஆகியவற்றின் தர வரிசை அட்டவணையில் இடம் பெறும் முதல் இந்திய நகை வடிவமைப்பாளர் என்ற பெருமையை 2010ஆம் ஆண்டு பெற்றார் நீரவ். 2013 ஆம் ஆண்டில், ஃபோர்ப்ஸின் இந்திய பில்லியனர் பட்டியலில் இடம்பிடித்த அவர் அந்த இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார்.

நீரவ்மோதியின் கடைகளின் பட்டியல்

2014 ஆம் ஆண்டில், டெல்லி டிஃபென்ஸ் காலனியில் தனது முதல் கடையை நீரவ் மோதி திறந்தார். 2015இல் மும்பையின் காலா கோடாவில் ஆடம்பரமான தனது கடையைத் திறந்தார்.

2015ஆம் ஆண்டில், நியூயார்க் நகரத்திலும் ஹாங்காங்கிலும் தனது நவீன விற்பனையகங்களை நிரவ் மோதி நிர்மாணித்தார். லண்டனின் பாண்ட் ஸ்ட்ரீட் மற்றும் எம்.ஜி.எம் மக்காவிலும் கடைகளைத் திறந்தார்.

niravmodi.com வலைதளத்தில் குறிப்பிட்டுள்ள கருத்துகளின்படி, நீரவின் வெற்றிக்கு பின் இருப்பது அவரது குடும்பமே. ஏனெனில் இரவு உணவின் போதும், குடும்பத்தினர் தொழில் பற்றியே பேசுவார்கள். உள்ளரங்க வடிவமைப்பாளரான தனது தாயிடம் இருந்து நீரவ் உத்வேகம் பெற்றார்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »