Press "Enter" to skip to content

இஸ்ரேல் எல்லையில் விஷம் வைத்து கொல்லப்பட்ட கழுகுகள் மற்றும் பிற செய்திகள்

இஸ்ரேல் ஆக்கிரமிப்பு பகுதியான கோலன் ஹைட்ஸில் எட்டு கழுகுகள் விஷம் வைத்து கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது அந்த பகுதியிலுள்ள மொத்த கழுகுகளின் எண்ணிக்கையில் பாதி என்றும் தெரியவந்துள்ளது.

கிரிஃபான் எனும் வகையை சேர்ந்த இந்த கழுகுகள், நேற்று (வெள்ளிக்கிழமை) காலை இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக இஸ்ரேலின் இயற்கை மற்றும் பூங்காக்கள் ஆணையம் தெரிவித்துள்ளது.

எந்த விதமான விஷம் கொடுத்து, எப்படி கழுகுகள் கொல்லப்பட்டன என்பது குறித்தும், இந்த தாக்குதலுக்கான காரணம் குறித்தும் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேலின் எல்லையோர பகுதிகளில் கடுமையாக வீழ்ச்சியடைந்து வரும் கழுகுகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு அந்நாட்டு அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில், விஷம் கொடுக்கப்பட்டு உயிருக்கு போராடி கொண்டிருந்த மேலும் இரண்டு கழுகுகள் கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை இஸ்லாமியர்கள்: அமைதியை நோக்கி செல்லும் புதிய பயணம்

2017 மார்ச் பத்தாம் தேதி. காத்தான்குடியின் அலியார் சந்திப்பில் உள்ள அப்துல் ரவூஃபின் பதுரியா ஜும்மா மசூதி. ‘கடவுளுக்கு உருவமுண்டு’, ‘அல்லாவும் முஹம்மது நபியும் ஒருவரே’ போன்ற சர்ச்சைக்குரிய கருத்துக்கள் குறித்து விவாதிக்க வருமாறு கோரிய, ஷஹ்ரான் மிகப் பெரிய பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார்.

ஆனால், அந்தக் கூட்டம் வன்முறையில் முடிவடைந்தது. அப்துல் ரவூஃபின் ஆட்களும் ஷஹ்ரானின் ஆட்களும் அடித்துக்கொண்டார்கள்; வாள் வீச்சும் நடந்தது. ஷஹ்ரான் தனது கூட்டத்திற்கு கத்தி, கல்லெண்ணெய் (பெட்ரோல்) குண்டுகளுடன் ஆட்களை வரவழைத்தார் என அப்துல் ரவூஃப் குற்றம் சாட்டினார்.

காவல்துறை மொத்தம் 9 பேரை கைதுசெய்தது. இதில் ஷஹ்ரானின் தந்தை காசிமியும் சகோதரன் ஜைனியும் அடக்கம். இவர்கள் ஏழு மாதங்களுக்கு சிறையில் அடைக்கப்பட்டு, பிறகு பிணையில் விடுவிக்கப்பட்டனர். ஷஹ்ரான் நேரடியாக சம்பந்தப்பட்டதாக பதிவான முதல் வன்முறை நிகழ்வு இதுதான்.

இலங்கையில் உயிர்ப்பு திருவிழா ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்ற வெடிகுண்டுத் தாக்குதல் சம்பவத்தில் பங்கேற்றவர்கள் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த இஸ்லாமியர்களாக அடையாளம் காணப்பட்டிருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. வட – கிழக்கில் உள்ள இஸ்லாமியர்களிடம் இம்மாதிரியான செயல்கள் எவ்விதமான எதிர்வினையை ஏற்படுத்தியிருக்கின்றன, கடும்போக்குவாத எழுச்சியை முன்கூட்டியே கண்டிக்கத் தவறிவிட்டதா இந்தச் சமூகம் என்பது குறித்து விவரிக்கும் கட்டுரைத் தொடரின் நான்காவது மற்றும் இறுதிப் பகுதியை விரிவாக படிக்க: அமைதியை நோக்கி செல்லும் இலங்கை இஸ்லாமியர்களின் வாழ்க்கை

நொடிக்கு 7ஜிபி வேகம்; 5ஜி தொழில்நுட்பம் உங்களுக்கு தேவையா?

ஒவ்வொரு ஆண்டும் புதிய சிறப்பம்சங்களுடன் வெளியிடப்படும் திறன்பேசிகளுக்காக காத்திருப்பவர்களில் நீங்களும் ஒருவராக இருக்கலாம்; ஆனால், திறன்பேசி பயன்பாட்டாளர்கள் மட்டுமின்றி அதன் தயாரிப்பாளர்கள், தொலைத்தொடர்பு நிறுவனங்கள், அரசாங்கங்கள் என ஒட்டுமொத்த உலகமே தற்போது ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருப்பது 5ஜி தொழில்நுட்பம்.

ஆம், சந்தையை பெருக்குவதற்கு திறன்பேசி தயாரிப்பாளர்களும், வாடிக்கையாளர்களை கவருவதற்கு தொலைத்தொடர்பு நிறுவனங்களும், நகரங்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு அரசாங்கங்களும், குறிப்பாக அதிவேக இணைய வேகத்தை பெறுவதற்காக பயன்பாட்டாளர்களும் காத்து கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில், 5ஜி தொழில்நுட்பத்தின் அடிப்படையிலிருந்து அவசியம் வரை பல்வேறு விடயங்கள் குறித்து இந்த கட்டுரையில் காண்போம்.

விரிவாக படிக்க: நொடிக்கு 7ஜிபி வேகம்; 5ஜி தொழில்நுட்பம் உங்களுக்கு தேவையா?

பாகிஸ்தானிலிருந்து இந்தியாவின் அனுமதியற்ற பகுதிகளில் நுழைந்த விமானம்

இந்திய எல்லைக்குள் அனுமதியில்லாத வான்வெளியில் பறந்த ஆண்டனோவ் ஏ.என்-12 வகை பாகிஸ்தான் சரக்கு விமானம் ஒன்றை இந்திய விமானப்படை நேற்று (வெள்ளிக்கிழமை) இடைமறித்து, ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள விமான நிலையத்தில் தரையிறங்க வைத்தது என்று ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.

நேற்று மாலை 4.55 மணிக்கு தரையிறங்கிய அந்த விமானத்தின் குழுவினரிடம் இந்திய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர் என்று மூத்த அரசு அதிகாரிகள் ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளனர்.

பயணிகள் விமானப் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ள, கட்ச் பாலைவனத்தின் வான்வெளியில் இந்த விமானம் இந்திய எல்லைக்குள் நுழைந்துள்ளது.

விரிவாக படிக்க: பாகிஸ்தானிலிருந்து இந்தியாவின் அனுமதியற்ற பகுதிகளில் நுழைந்த விமானம்

கீ – திரைப்பட விமர்சனம்

சங்கிலி புங்கிலி கதவைத் திற படத்திற்குப் பிறகு ஜீவா நடித்திருக்கும் படம். கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு முன்பே விளம்பரம் வெளியிட்டுவிட்டாலும், படம் தற்போதுதான் திரைக்கு வந்திருக்கிறது.

கதாநாயகன் ஜீவா ஒரு கல்லூரி மாணவர் (?). ஆனால், எல்லோருடைய கைபேசியையும் ஹாக் செய்யும் வைரஸைக் கண்டுபிடித்திருக்கிறார்.

அதே நேரத்தில் நகரில் சிலரது செல்போனிற்கு மர்மமான அழைப்புகள் வருகின்றன. அந்த அழைப்புகளை எடுத்துப் பேசினால், குறிப்பிட்ட ஆட்களை வாகனம் ஏற்றி கொலைசெய்யச் சொல்கிறான் ஒரு மர்ம மனிதன்.

இதற்கிடையில் ‘பப்’பில் ஜீவா, அனைகாவைச் சந்திக்கிறார். ஆனால், திடீரென அனைகா இறந்துபோகிறார். இதற்கிடையில் கல்லூரியில் தன்னுடன் படிக்கும் நிக்கி கல்ராணியை காதலிக்கிறார் ஜீவா.

விரிவாக படிக்க: திரைப்பட விமர்சனம்: கீ

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »
Mission News Theme by Compete Themes.