Press "Enter" to skip to content

அமெரிக்காவில் தகவல் தொழில்நுட்ப அச்சுறுத்தல் – அவசர நிலை பிரகடனம் செய்த டிரம்ப் மற்றும் பிற செய்திகள்

வெளிநாட்டு எதிரிகளிடம் இருந்து அமெரிக்காவின் கணினி நெட்வர்க்குகளை பாதுகாக்க, அந்நாட்டில் அவசர நிலையை அதிபர் டொனால்டு டிரம்ப் பிரகடனப்படுத்தியுள்ளார்.

அவசர நிலைக்கு டிரம்ப் கையெழுத்திட்டதை தொடர்ந்து, அமெரிக்க நிறுவனங்கள், வெளிநாட்டு தொலைதொடர்புகளை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்படுகிறது. அவை அமெரிக்காவின் பாதுகாப்புக்கு அபாயம் விளைவிப்பதாக கருதப்படுகிறது.

எந்த நிறுவனம் என்று அதிபர் டிரம்ப் குறிப்பிடவில்லை என்றாலும், சீனாவின் மிகப்பெரிய தொலைதொடர்பு நிறுவனமான ஹுவாவேயை நோக்கியே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அந்நிறுவனத்தின் சாதனங்கள், சீனா வேவுபார்க்க பயன்படுத்தப்படலாம் என்று அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் கவலை தெரிவித்திருந்தன. ஆனால், அதனை ஹுவாவே மறுத்துள்ளது.

எல்லா மொழி விக்கிபீடியாவும் சீனாவில் முடக்கம்

சீன பெருநிலப்பரப்பில், கணினிமய என்சைக்லோபீடியாவான வீக்கிபீடியா தளம் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது என அந்த வலைதளத்தை நடத்திவரும் விக்கிமீடியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் மாத இறுதியில் இருந்து விக்கிபீடியாவின் அனைத்து மொழித்தளங்களையும் சீனாவில் அணுக முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது என்று விக்கிபீடியா நிறுவனம் கூறியுள்ளது.

இது தொடர்பாக தங்களுக்கு அறிவிப்பு எதுவும் வழங்கப்படவில்லை என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது.

விரிவாக படிக்க: எல்லா மொழி விக்கிபீடியாவும் சீனாவில் முடக்கம்

மேற்கு வங்கத்தில் ஒரு நாள் முன்னதாகவே பிரசாரத் தடை

நடைபெற்றுவரும் மக்களவைத் தேர்தலில் கடைசி மற்றும் 7-வது கட்ட வாக்குப் பதிவு மே 19-ம் தேதி நடக்கிறது. அப்போது மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள 9 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்கவுள்ளது. வழக்கப்படி இந்த தொகுதிகளில் மே 17-ம் தேதி மாலை 5 மணியுடன் பிரசாரம் முடிவடையவேண்டும்.

ஆனால் முன்னெப்போதும் இல்லாத நடவடிக்கையாக, தேர்தல் ஆணையம் இந்த 9 தொகுதிகளின் பிரசாரத்தை ஒரு நாள் முன்னதாகவே முடிக்கவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சி தலைவர் அமித் ஷாவின் கொல்கொத்தா பேரணியில் நிகழ்ந்த வன்முறையை தொடர்ந்து இரண்டு கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

விரிவாக படிக்க: கடைசி கட்ட வாக்குப் பதிவு: மேற்கு வங்கத்தில் ஒரு நாள் முன்னதாகவே பிரசாரத் தடை

செவ்வாய் கிரகத்தில் வாழும் திறனுள்ள பூமியின் பழங்கால உயிரிகள்

சில தாவரங்கள் மிக கடுமையான சூழலிலும் வாழக் கூடியவை. ஆக்சிஜனே இல்லாத நிலையிலோ அல்லது மிகவும் அதிக வெப்ப நிலையிலோ உயிர்வாழக் கூடியவையாக அவை உள்ளன.

தாவரங்களின் தாக்குபிடிக்கும் தன்மையானது, பருவநிலை மாற்ற சூழ்நிலை நமது உணவு உற்பத்தியை எந்த அளவுக்குப் பாதிக்கும் என்பது பற்றியும், மாறிவரும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப பயிர்கள் எப்படி தகவமைப்பு செய்து கொள்ளும் என்பது பற்றிய ஆராய்ச்சியில் விஞ்ஞானிகளுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் ஒன்றைவிட மற்றொரு தாவரம் அதிக தாக்குபிடிக்கும் தன்மை கொண்டது என எப்படி அமைகிறது?

இதற்கான பதிலை கண்டறிவதற்கு தாவரவியலாளரும் பிபிசி நிகழ்ச்சித் தொகுப்பாளருமான ஜேம்ஸ் வோங் முயற்சி மேற்கொண்டார். அப்போது நமது பூமியின் கடினமான தாவரங்களின் வினோதமான மற்றும் ஆச்சர்யத்துக்குரிய உண்மைகளை அவர் கண்டறிந்தார்.

விரிவாக படிக்க: செவ்வாய் கிரகத்தில் வாழும் திறனுள்ள பூமியின் பழங்கால உயிரிகள்

2019 உலகக் கோப்பையில் தோனியின் பங்கு என்ன?

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் கிரிக்கெட் உலகக்கோப்பை, இந்த விளையாட்டின் ரசிகர்களுக்கு ஒரு திருவிழா போன்றது. தற்காலத்தில் கிரிக்கெட்டின் வடிவம் வெகுவாக மாறியுள்ளது. 20-20 கிரிக்கெட் போட்டிகள் கிரிக்கெட் பற்றிய பார்வை மற்றும் அணுகுமுறையை மாற்றியுள்ளன. இவையனைத்தும் இருந்த போதும் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலகக்கோப்பையை பார்க்க இந்தியாவில் ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கும்.

இதற்கு காரணம் 1983-ல் நடந்த உலகக்கோப்பை. 1983ல் நடந்த உலகக்கோப்பையின்போது இந்திய அணி முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு சென்றது. யாரும் நினைக்காத வண்ணம் கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி வலிமையான மேற்கிந்திய அணியை வென்றது. இது இந்தியாவில் கிரிக்கெட்டின் வளர்ச்சி மற்றும் பிரபலத்துக்கு ஒரு தொடக்கமாக இருந்தது.

கபில்தேவ் ஒரே இரவில் இளம் கிரிக்கெட் வீரர்களின் சூப்பர் ஸ்டாராக மாறினார். இதையடுத்து கிரிக்கெட் உலகில் சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், சவுரவ் கங்குலி, அனில் கும்ப்ளே போன்ற வீரர்கள் மற்றும் இவர்களை தொடர்ந்து மகேந்திர சிங் தோனி, விராட் கோலி போன்ற வீரர்கள் உருவாயினர்

விரிவாக படிக்க: 2019 உலகக் கோப்பையில் தோனியின் பங்கு என்ன?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »
Mission News Theme by Compete Themes.