Press "Enter" to skip to content

அமெரிக்காவில் எஃப்-16 ரக விமானம் கிடங்கிற்குள் பாய்ந்து விபத்து மற்றும் பிற செய்திகள்

அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான எஃப்-16 ரக விமானம் லாஸ் ஏஞ்சலீஸிலுள்ள விமானப்படை தளத்திலிருந்து கிளம்பிய சிறிது நேரத்தில் அருகிலுள்ள கிடங்கில் விழுந்து விபத்துக்குள்ளானது.

விமானக் கிடங்கு ஒன்றின் மேற்பகுதியை உடைத்துக்கொண்டு கீழே விழுவதற்கு முன்னதாகவே அதன் விமானி தனியே வெளியேறிவிட்டார். கிடங்கிற்குள் விழுந்த விமானம் ஏற்படுத்திய தீயை அங்கிருந்த தானியங்கி தீயணைப்பு அமைப்புமுறை அணைத்துவிட்டது.

தகவல் இல்லை

இந்த விபத்தில் கிடங்கிற்குள் இருந்த ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக அமெரிக்க விமானப்படை தெரிவித்துள்ளது. ஆனால், விமானியின் உடல்நிலை குறித்து எவ்வித தகவலும் வெளியிடப்படவில்லை.

விபத்து நேர்ந்த கிடங்கில் பணிபுரியும் ஒருவர் இதுதொடர்பான புகைப்படங்களை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

5 ஆண்டுகளில் முதன்முறையாக நரேந்திர மோதி செய்தியாளர்கள் சந்திப்பு

கடந்த ஐந்து ஆண்டுகளில் முதல் முறையாக பிரதமர் நரேந்திர மோதி இன்று (வெள்ளிக்கிழமை) டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இரண்டாவது முறையாக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம் என்று தெரிவித்தார்.

இந்திய மக்களவை தேர்தலுக்கான பிரசாரம் நேற்று (வெள்ளிக்கிழமை) நிறைவடைந்தது. இந்நிலையில், பிரதமர் நரேந்திரமோதி மற்றும் பாஜக தலைவர் அமித் ஷா இருவரும் நேற்று கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

மேலும், கடந்த இரு மக்களவை தேர்தல்களின்போது (2009, 2014), ஐபிஎல் போட்டிகளைக்கூட நடத்த முடியவில்லை. அரசாங்கம் வலுவாக இருந்தால், ஐபிஎல், ரம்சான், பள்ளித் தேர்வுகள் என அனைத்தும் அமைதியாக நடக்கும் என்று பிரதமர் மோதி கூறினார்.

விரிவாக படிக்க:ஐந்து ஆண்டுகளில் முதன்முறையாக செய்தியாளர்களை சந்தித்த நரேந்திர மோதி

”பாஜகவுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் பாரபட்சமாக நடந்து கொண்டது”

“இந்திய தேர்தல் ஆணையம் பாரபட்சத்துடன் நடந்து கொண்டது. நரேந்திர மோதி கூறிய பொய்களை மக்களின் பார்வைக்கு நாங்கள் கொண்டு சேர்த்தோம்” என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இந்திய மக்களவைத் தேர்தலின் 7-வது கட்ட வாக்குப்பதிவு மே 19ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணியோடு பிரசாரம் நிறைவடைந்துள்ளது.

அதற்கு முன்னர், காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை ராகுல் காந்தி சந்தித்தபோது இந்த கருத்துக்களை அவர் தெரிவித்தார்.

”நரேந்திர மோதி என்ன பேசினாலும் தேர்தல் ஆணையம் கண்டுகொள்வதில்லை. தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளை மக்கள் கவனித்து கொண்டிருக்கிறார்கள். அது பாரபட்சமாக நடந்து கொள்கிறது” என்று அவர் கூறினார்.

விரிவாக படிக்க:’பாஜகவுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் பாரபட்சமாக நடந்து கொண்டது”

குழந்தைகளுக்கான பால் புட்டிகளில் புற்றுநோய் ஏற்படுத்தும் வேதிப்பொருள்

குழந்தைகளுக்கு பாலூட்டுவதற்கு பயன்படுத்தும் புட்டிகளில், தடை செய்யப்பட்ட, புற்றுநோயை ஏற்படுத்தும் அபாயம் உடைய பிஸ்பினால்-ஏ என்ற மூலப்பொருள் பயன்படுத்தப்படுவது ஆய்வின் வழியாக கண்டறியப்பட்டுள்ளதாக டாக்சிக் லிங்க் அமைப்பு தெரிவித்துள்ளது.

பிஸ்பினால்-ஏ என்பது, நெகிழி (பிளாஸ்டிக்) புட்டிகள் தயாரிப்பதற்காக பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களில் ஒன்று. உணவு பொருட்கள் அடைத்து வைக்கப்படும் நெகிழி (பிளாஸ்டிக்) புட்டிகள் தயாரிக்க இது அதிகம் பயன்படுத்தப்படுகின்றது.

குழந்தைகளுக்கு பாலூட்டுவதற்காக தயாரிக்கப்படும் பால் புட்டிகளில் இந்த வேதிப்பொருளை பயன்படுத்துவதை முற்றிலுமாக நிறுத்த வேண்டும் என இந்திய தர நிர்ணய துறை, 2015ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது.

விரிவாக படிக்க:குழந்தைகளுக்கான பால் புட்டிகளில் புற்றுநோய் ஏற்படுத்தும் வேதிப்பொருள்

இலங்கையில் இஸ்லாமியவாத தீவிரவாதம்: எங்கே செல்லும் இந்தப் பாதை?

இலங்கையில், உயிர்ப்பு ஞாயிறு தாக்குதலில் 250-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டமை உள்ளூர் ரீதியாகவும், சர்வதேச ரீதியாகவும் பாரிய எதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. இத்தாக்குதலில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது, தாக்குதலின் பிரமாண்டமும், கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையுமே அன்றி தாக்குதல்கள் அல்ல.

இதுவரை வந்துள்ள தகவல்களின் அடிப்படையில், தாக்குதலாளிகள் அனைவரும் இலங்கையின் இரண்டாவது சிறுபான்மைக் குழுவாகிய முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது உறுதியாகி உள்ளது.

கடந்த சில காலங்களில் இலங்கை முஸ்லிம்களுக்கும் பெரும்பான்மை சிங்களவர்களுக்கும் இடையில் பிளவும் பதற்றமும் அதிகரித்து வந்துள்ளது.

விரிவாக படிக்க:இலங்கையில் இஸ்லாமியவாத தீவிரவாதம்: எங்கே செல்லும் இந்தப் பாதை?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »
Mission News Theme by Compete Themes.