Press "Enter" to skip to content

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 21 வயது இளைஞர் சுட்டதில் 20 பேர் பலி; 26 பேர் காயம் மற்றும் பிற செய்திகள்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணதிலுள்ள எல் பசோ எனும் நகரில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 20 பேர் கொல்லப்பட்டனர்; 26 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

“டெக்சாஸின் வரலாற்றில் இது மிகவும் மோசமான தினங்களில் ஒன்று” என்று இந்த தாக்குதல் குறித்து அம்மாகாண ஆளுநர் கிரெக் அபாட் கருத்துத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா – மெக்ஸிகோ எல்லைக்கு அருகே உள்ள ‘சியில்லோ விஸ்டா மால்’ எனும் வணிக வளாகத்தை ஒட்டியுள்ள வால்மார்ட் கடையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலை நடத்திய ஒரே தாக்குதலாளியாக கருதப்படும் 21 வயதான ஒருவரை காவல்துறையினர் சம்பவ இடத்திலேயே கைது செய்துள்ளனர். காவல்துறையினரின் இந்த உடனடி நடவடிக்கைக்கு அம்மாகாண ஆளுநர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

பிடிபட்டுள்ள துப்பாக்கித்தாரியின் பெயர் பேட்ரிக் கிருசிஸ் என்றும் தாக்குதல் நடத்தப்பட்ட இடத்திலிருந்து சுமார் 1,046 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள டல்லாஸ் நகரை சேர்ந்தவர் என்றும் அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

கண்காணிப்பு ஒளிப்பட கருவியில் பதிவான சில புகைப்படங்கள் வெளிவந்துள்ளன. அதில் அடர் நிற மேலாடையை உடுத்தியுள்ள நபர், கையில் துப்பாக்கியுடன் காணப்படுகிறார்.

காஷ்மீர்: ‘அப்பாவி மக்கள் மீது கொத்து குண்டுகள்’

இந்தியா – பாகிஸ்தான் இடையிலான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே கொத்து எறி குண்டுகளை வைத்து இந்தியா தாக்குதல் நடத்தியுள்ளதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது.

இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதாகவும், பாகிஸ்தான் எல்லைக்குள் இருக்கும் தீவிரவாத மற்றும் ராணுவ இலக்குகள் மீது மட்டுமே தாங்கள் தாக்குதல் நடத்தியதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

ஜூலை 30 மற்றும் 31 தேதிகளுக்கு இடையிலான இரவில் இந்தியா நீலம் பள்ளத்தாக்கில் நடத்திய தாக்குதலில் ஒரு நான்கு வயது சிறுவன் உள்பட இரண்டு குடிமக்கள் இறந்துள்ளதாகவும் 11 பேர் காயமடைந்துள்ளதாகவும் பாகிஸ்தான் காவல் படைகளின் செய்தி வெளியீட்டு அமைப்பான இன்டர் சர்வீசஸ் பப்ளிக் ரிலேஷன்ஸ் இன்று, சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கட்டுள்ளது.

விரிவாக படிக்க:‘அப்பாவி மக்கள் மீது கொத்து குண்டுகள்’ – பாகிஸ்தான், இந்தியா இடையே அதிகரிக்கும் மோதல்

‘இலங்கையில் மீண்டும் தாக்குதல் நடக்கலாம்’ – அமெரிக்கா எச்சரிக்கை

இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் தங்கள் நாட்டினர் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு அறிவுறுத்தி கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

எதிர்வரும் விடுமுறை நாட்களில் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் தமது குடிமக்களுக்கு இரண்டாம் நிலை எச்சரிக்கையை அமெரிக்கா விடுத்துள்ளது.

தீவிரவாதிகள் எதிர்வரும் தினங்களில் சிறிய அளவிலான தாக்குதல்களை நடத்தலாம் என அமெரிக்காவினால் விடுக்கப்பட்டுள்ள இந்த அறிவுறுத்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் தமது குடிமக்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விரிவாக படிக்க:‘இலங்கையில் மீண்டும் தாக்குதல் நடக்கலாம்’ – அமெரிக்கா எச்சரிக்கை

தஞ்சம் கோரிய மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் – திருப்பி அனுப்பிய இந்தியா

சட்டவிரோதமாக இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் அகமது அதீப் இன்று, சனிக்கிழமை, காலை மாலத்தீவு அதிகாரிகளிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டார்.

தமது சொந்த நாட்டில் தமது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் இந்தியாவில் அரசியல் தஞ்சம் வேண்டும் என்று அவர் விடுத்த கோரிக்கையை இந்திய அரசு நிராகரித்துவிட்டதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

விரிவாக படிக்க:நடுக்கடலில் வைத்து திருப்பி அனுப்பிய இந்தியா – அகமது அதீபுக்கு தஞ்சம் தர மறுப்பு

பாலிவுட் நடிகை சன்னி லியோனால் தொலைபேசி அழைப்பு தொல்லையில் சிக்கிக் கொண்ட இளைஞர்

சமீபத்தில் வெளியான பாலிவுட் திரைப்படம் ஒன்றில், சன்னி லியோன் தவறுதலாக கூறிய தொலைபேசி எண்ணால், 26 வயதான புனீத் அகர்வால் பெரும் விரக்தியில் உள்ளார். காரணம், பலரும் சன்னி லியோனின் உண்மையான எண் என்று நினைத்து புனீத்துக்கு தொடர்பு அழைப்புகளால் தொல்லை கொடுத்து வருகின்றனர்.

‘அர்ஜூன் பாட்டியாலா’ என்ற திரைப்படத்தில், சன்னி லியோன் புனீத்தின் தொலைபேசி எண்ணை திரைப்படத்தில் சொல்வதாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

விரிவாக படிக்க:பாலிவுட் நடிகை சன்னி லியோனால் தொல்லையில் சிக்கிக் கொண்ட இளைஞர்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »