Press "Enter" to skip to content

இந்தியா – பாகிஸ்தான் மோதல்: கொத்து குண்டுகள் என்றால் என்ன? அவை எவ்வளவு ஆபத்தானவை?

காஷ்மீரின் நீலம் பள்ளத்தாக்கில், இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டுக்கு அப்பால் கொத்து எறி குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியதில் ஒரு குழந்தை உள்பட இருவர் கொல்லப்பட்டதாகவும், பலர் காயமடைந்ததாகவும் பாகிஸ்தான் அரசு குற்றம்சாட்டியது.

இது சர்வதேச சட்டங்களுக்கும் பிராந்திய அமைதிக்கும் எதிரானது என்று பாகிஸ்தான் கூறுகிறது.

இந்திய எல்லைக்குள் தீவிரவாதிகளை ஊடுருவ வைக்க பாகிஸ்தான் முயல்வதாவும், தங்கள் எல்லைக்குள் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியதாகவும் கூறும் இந்தியா, இந்தச் சூழ்நிலைகளில் பதில் தாக்குதல் நடத்த தங்களுக்கு உரிமை உள்ளது என்றும் கூறியுள்ளது.

காஷ்மீரில் படைகள் குவிக்கப்பட்டு வருவதாலும், அங்கு தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் அமர்நாத் புனிதப் பயணம் மேற்கொண்டவர்கள் ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தை விட்டு உடனடியாக வெளியேறுமாறு அந்த மாநில அரசு கூறியுள்ளதால் பதற்றம் நிலவுகிறது.

இந்தப் பதற்றத்துக்கு மத்தியில், எல்லைப் பகுதியில் இந்தியா – பாகிஸ்தான் இடையே உண்டாகியுள்ள மோதல் மேலும் காஷ்மீர் மக்களின் அச்சத்தைத் தீவிரமாக்கும் வகையில் உள்ளது.

கொத்து எறி குண்டு என்றால் என்ன?

ஒரு பெரிய குண்டின் உள் பல சிறிய குண்டுகளை வைத்து தாக்குதல் நடத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளவையே கொத்து எறி குண்டுகள் ஆகும்.

தாக்கும் இலக்கை நோக்கி ஒரு குண்டுதான் எறியப்படும் என்றாலும், அந்தப் பெரிய குண்டு வெடித்தபின், அதிலிருந்து வெளியாகும் பல சிறிய குண்டுகள் தாக்குதலுக்கு உள்ளாகும் ஒரே இலக்கின் பல இடங்களைத் தாக்கும் தன்மை உடையவை இந்தக் குண்டுகள்.

ஆட்களைத் தாக்கக் கூடியவை, டாங்கிகள் மற்றும் ராணுவ வாகனங்களைத் தாக்கக் கூடியவை, கண்ணி வெடிகளைப் போன்று மண்ணுக்குள் புதைத்து வைக்கப்பட்டு பின்னர் வெடிக்கும் தன்மையுடையவை என இந்தக் கொத்துக் குண்டுகளிலும் பல வகைகள் உள்ளன.

இந்த குண்டுகளை விமானங்களில் இருந்தும் வீச முடியும்; தரையில் இருந்தும் இலக்கை நோக்கி ஏவவும் முடியும்.

சர்வதேச சட்டம் என்ன சொல்கிறது?

அந்த சிறிய குண்டுகள் சிதறும் வேகத்தால், சில நேரங்களில் தாக்குதல் இலக்குக்கு வெளியில் சென்று அருகில் இருக்கும் பகுதிகளையும் இவை தாக்குகின்றன.

இது போன்ற சூழல்களின்போதே இலக்கு வைக்கப்படாத பொதுமக்களும் இவற்றால் தாக்கப்பட்டு உயிரிழக்கவும் காயமடையவும் நேர்கிறது.

பெரிய குண்டு வெடித்தபின் அதிலிருந்து வெளியாகும் சிறிய குண்டுகள் வெடிக்காமல் மண்ணுக்குள்ளேயே புதைந்து, பிற்காலங்களில் வெடித்து சேதத்தை உண்டாக்கவும் வாய்ப்புண்டு.

கொத்து எறி குண்டுகளுக்குள் ரசாயன ஆயுதங்களையும் பயன்படுத்த முடியும்.

மேற்கண்ட காரணங்களால் கொத்து எறி குண்டுகளை போரின்போதோ, தாக்குதலின்போதோ பயன்படுத்துவது சர்வதேச சட்டங்களின்படி தடை செய்யப்பட்டுள்ளது.

இதற்காக 2008ஆம் ஆண்டு மே 30ஆம் தேதி ‘கன்வென்ஷன் ஆஃப் க்ளஸ்டர் ம்யுனிஷன்ஸ்’ (Convention on Cluster Munitions) எனப்படும் சர்வதேச உடன்படிக்கை ஒன்று கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தத்தின்படி, கொத்து குண்டுகளை உற்பத்தி செய்வது, சேமித்து வைப்பது, விநியோகம் செய்வது, பயன்படுத்துவது ஆகியன தடை செய்யப்பட்டுள்ளது.

அயர்லாந்து தலைநகர் டப்லினில் நடந்த இந்த கொத்து எறி குண்டுகள் தொடர்பான சர்வதேச ராஜீயப் பிரதிநிதிகள் கலந்துகொண்ட மாநாட்டில் கையெழுத்தான இந்த ஒப்பந்தத்தில் 108 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. எனினும், இதுவரை 106 நாடுகள் இதை அமலாக்கியுள்ளன.

இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுமே இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சீனா, அமெரிக்கா, இஸ்ரேல், ரஷ்யா போன்ற ஆயுதத் தயாரிப்பு மற்றும் ஆயுத வர்த்தகத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் பிற நாடுகளும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »
Mission News Theme by Compete Themes.