Press "Enter" to skip to content

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை: தென்கொரிய – அமெரிக்க ராணுவப் பயிற்சிக்கு பதிலடி மற்றும் பிற செய்திகள்

அடையாளம் தெரியாத இரண்டு ஏவுகணைகளை ஏவி மீண்டும் சோதனை செய்துள்ளது வட கொரியா. இரு வாரங்களில் வட கொரியா நான்காவது முறையாக இவ்வாறு செய்துள்ளது என தென் கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது.

தென் ஹ்வாங்ஹே மாகாணத்தில் இருந்து, கிழக்கில் உள்ள கடல் பகுதிக்கு இந்த ஏவுகணை ஏவப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையை கண்காணித்து வருவதாகவும், தென் கொரியா மற்றும் ஜப்பான் நாடுகளுடன் இது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருவதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் தென் கொரியா திங்கள் கிழமை மேற்கொண்ட கூட்டு ராணுவப் பயிற்சி குறித்த தனது கோபத்தை இதன் மூலம் வெளிப்படுத்தியுள்ளது வட கொரியா.

இந்த வருடாந்திர கூட்டு ராணுவ பயிற்சிகள் ஆடம்பரமாக நடைபெறவில்லை. எனினும், இது அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் தென் கொரிய தலைவர் மூன் ஜே-இன் ஆகியோருடன் எட்டப்பட்ட ஒப்பந்தங்களை மீறுவதாக அமைந்துள்ளதாக வட கொரியா தெரிவித்துள்ளது.

அணு ஆயுதங்களை தயாரிப்பதாகவும், ஏவுகணை சோதனைகள் செய்வதாகவும் கூறி அமெரிக்காவும் மற்றும் உலக நாடுகளும் வட கொரியா மீது பொருளாதாரத் தடைகள் விதித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

காஷ்மீர்: பாஜகவின் சட்டத்திருத்தத்தை உச்ச நீதிமன்றத்தால் உடைக்க முடியுமா?

இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சி பொறுப்பேற்றுள்ள நரேந்திர மோதி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி, ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் அரசியல் சட்டப்பிரிவு 370ல் மாற்றம் கொண்டு வந்துள்ளது.

முன்னாள் கூடுதல் சொலிஸிட்டர் ஜெனரல் மற்றும் உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங், “உச்சநீதிமன்றத்தில் இதனை எதிர்த்து வழக்கு தொடுக்க முடியாது” என்றார்.

“சட்டப்பிரிவு 370 மற்றும் 35ஏ- வில் மாற்றம் கொண்டு வரும் அரசின் முடிவானது நிர்வாகத் துறையின் வரையரையின்கீழ் வருகிறது. இதனை எதிர்த்து வழக்கு தொடுக்க முடியுமென நான் நினைக்கவில்லை. நீதிமன்றம் இதுகுறித்து விசாரிக்க முடியாது” என்றார்.

இந்த கருத்தில் முரண்படும் முன்னாள் கூடுதல் சொலிஸிட்டர் ஜெனரல் மற்றும் உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் கே.சி. கெளசிக், “நிச்சயம் இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியும்,” என்கிறார்.

மேலும் படிக்க:பாஜக கொண்டு வந்த சட்டத்திருத்தம் – உச்ச நீதிமன்றத்தால் உடைக்க முடியுமா?

கருணாநிதி கோபாலபுரம் இல்லம்: இப்போது எப்படி இருக்கிறது?

கோபாலபுரம் நான்காவது தெருவின் கடைசியில் இடதுபுறத்தில் அமைந்திருக்கிறது முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வீடு. ஓடு பாவிய போர்டிகோவுடன்கூடிய பழங்கால வீடு. வாயிலில் இப்போதும் இரு காவலர்கள் இருக்கிறார்கள். ஆனால், பழைய பரபரப்பும் களையும் இல்லை.

பராசக்தி, பணம், திரும்பிப் பார், மனோகரா, மலைக்கள்ளன் என மு. கருணாநிதி தமிழ் திரைப்படத்தில் வசனகர்த்தாவாக கொடிகட்டிப் பறக்க ஆரம்பித்த ஐம்பதுகளின் மத்தியில் – 1955ல் – இந்த வீட்டை சரபேஸ்வரய்யர் என்பவரிடமிருந்து வாங்கினார் மு. கருணாநிதி.

அப்போதிலிருந்து கடந்த ஆண்டு ஜூலை 26ஆம் தேதி கடைசியாக மருத்துவமனையில் சேர்க்கப்படும்வரை, அங்கிருந்துதான் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியல் களத்தை இயக்கிவந்தார் அவர்.

தற்போது இந்த வீட்டில், உடல்நலம் குன்றியுள்ள கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் வசித்துவருகிறார்.

மேலும் படிக்க: கருணாநிதியின் கோபாலபுரம் இல்லம் இப்போது எப்படி இருக்கிறது?

காஷ்மீரில் இனி வரக்கூடிய நாட்களில் வன்முறை வெடிக்கலாம்

ஜம்மு மற்றும் காஷ்மீரில் அமலில் இருந்த அரசியல் சட்டப்பிரிவுகள் 370 மற்றும் 35ஏ ஆகியவற்றை எதிர்த்து மத்திய அமைச்சர் அமித் ஷா மாநிலங்களவையில் தாக்கல் செய்த மசோதா நேற்று நிறைவேற்றப்பட்டது.

இச்சூழலில், ஜம்மு மற்றும் காஷ்மீரில் பதற்றம் அதிகரித்து வருவதாகவும், வரும் நாட்களின் வன்முறை சம்பவங்கள் நிகழலாம் என்றும் காஷ்மீரில் இருக்கும் பிபிசி செய்தியாளர் ஆமிர் பீர்ஸாடா தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் தெருக்களில் இந்திய துணை ராணுவ படையினர் அதிகளவில் நடமாடுவதாகவும், இன்னும் அதிக எண்ணிக்கையில் படைகள் குவிக்கப்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது காஷ்மீரில் ஏற்பட்டிருக்கும் பதற்றநிலை நாளுக்குநாள் அதிகரிக்கும் என்றும், இனி வரக்கூடிய நாட்களில் வன்முறை சம்பவங்கள் நிகழலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க: காஷ்மீரில் இனி வரக்கூடிய நாட்களில் வன்முறை வெடிக்கலாம் – களத்திலிருந்து பிபிசி செய்தியாளர்

வேலூரில் நாடாளுமன்றத் தொகுதி தேர்தல்: 72.62% வாக்குப் பதிவு

வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு நடந்து முடிந்த தேர்தலில் 72.62 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. பொதுவாக அமைதியான சூழலில் வாக்குப் பதிவு நடந்து முடிந்துள்ளது.

வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா நடந்ததாகக் கூறப்பட்டு தேர்தல் தள்ளிவைக்கப்பட்ட வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் நேற்று வாக்குப் பதிவு நடைபெற்றது.

இந்தத் தேர்தலில் 72.62 சதவீத வாக்குகள் பதிவானதாக மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார். அதிகபட்சமாக கே.வி. குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் 82.62 சதவீத வாக்குகளும் குறைந்தபட்சமாக ஆம்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் 70.51 சதவீத வாக்குகளும் பதிவாகியிருந்தன.

மேலும் படிக்க: வேலூரில் நாடாளுமன்றத் தொகுதி தேர்தல்: 72.62% வாக்குப் பதிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »