வெள்ளிப் புதையலை தேடி 22 ஆண்டுகளாக அலைந்து திரிபவரின் கதை

வெள்ளிப் புதையலை தேடி 22 ஆண்டுகளாக அலைந்து திரிபவரின் கதை

கலிஃபோர்னிய பேய் நகரமான செரோ கோர்டோவில் ராபர்ட் லூயிஸ் டெஸ்மரைஸ் மட்டுமே வசிக்கிறார். அங்கு அவர் கடந்த 22 ஆண்டுகளாக வெள்ளிப் புதையலை தேடி வருகிறார்.

70 வயதாகும் முன்னாள் உயர்நிலைப் பள்ளி ஆசிரியரான டெஸ்மரைஸ், பள்ளியில் பணிபுரிந்துக் கொண்டிருந்த காலத்தில், விடுமுறையின்போது யாருமில்லா இடங்களுக்கு சென்று உலோகத்தாதுக்களை தேடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். ஆனால், ஒருகட்டத்தில் பரபரப்பு நிறைந்த நகர வாழ்க்கையை விடுத்து, அதையே தனது முழுநேர வேலையாக மாற்றிக்கொண்டு, “மலைப்பகுதியில் நட்சத்திரங்களுக்கு கீழே வாழத் தொடங்கினார்.”

அமெரிக்காவின் கலிஃபோர்னியா வட்டாரத்தில் வெள்ளி அதிகளவில் வெட்டி எடுக்கப்பட்ட இடங்களில் ஒன்றாக ஒருகாலத்தில் செர்ரோ கோர்டோ விளங்கியது.

“இங்கு கிடைத்த வெள்ளிகளே லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை நிர்மாணிக்க உதவியது” என்று கூறும் டெஸ்மரைஸ், இங்குள்ள மலைப்பகுதியில் மென்மேலும் வெள்ளி மீதமிருப்பதாகவும், அதை தான் கண்டுபிடிப்பேன் என்றும் கூறிக்கொண்டு, கையில் உளி மற்றும் சுத்தியலுடன் பாறைகளை குடைந்து வருகிறார்.

அந்த காலத்தில் வெள்ளி வெட்டி எடுக்கப்பட்ட சில சுரகங்களின் தடயலை தான் கண்டறிந்துவிட்டதாக இவர் நம்புகிறார்.

“இந்த பகுதியில் எஞ்சியுள்ள வெள்ளியை கண்டறிவேன் என்ற எண்ணத்தில்தான் நான் இங்கு இன்னமும் வாழ்கிறேன். கடந்த 22 ஆண்டுகளில் நான் ஒற்றை சக்கர தள்ளுவண்டியில் கொள்ளும் அளவுக்கு வெள்ளியை கண்டறிந்துள்ளேன்” என்று அவர் கூறுகிறார்.

தான் சேர்த்து வைத்திருக்கும் உலோகத்தாதுக்களை இப்பகுதிக்கு வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு ஐந்து முதல் இருபது டாலர்களுக்கு விற்பனை செய்து வருகிறார்.

இந்த மலைப்பகுதிக்கு வந்த சில ஆண்டுகளுக்கு தற்காலிக முகாமில் வசித்து வந்த டெஸ்மரைஸுக்கு, முன்னாள் சுரங்க ஊழியர் ஒருவரின் தங்குமிடம் இலவசமாக கிடைத்தது. சுமார் 8,200 அடி உயரத்தில் இருக்கும் அந்த தங்குமிடத்தில்தான் டெஸ்மரைஸ் தற்போது வசித்து வருகிறார். மலைகள் சூழ்ந்து காணப்படும் தனது தங்குமிடத்தில் இருந்தபடியே, சுற்றுலாப்பயணிகளின் வருகையை அவர் கவனித்து வருகிறார்.

தனது இலக்கை நோக்கிய டெஸ்மரைஸின் வாழ்க்கை அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. இவரது மனைவியால் இவ்வளவு உயரத்தில் வாழ்வதற்கு முடியவில்லை என்பதால், அவர் தனியே மற்றொரு நகரில் வாழ்ந்து வருகிறார்.

இவர் வாழும் மலைப்பகுதியில் மின்சார வசதி இருக்கிறது; ஆனால், தண்ணீர் இல்லை என்பதால் அருகிலுள்ள நகரத்திலிருந்து அவ்வப்போது பார வண்டியில் தண்ணீர் பிடித்து வந்து சேமித்து கொள்கிறார்

1865ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட செர்ரோ கோர்டோ மலைப்பகுதிக்கு வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு இதன் வரலாற்றை மகிழ்ச்சியுடன் விளக்கி வருகிறார் டெஸ்மரைஸ்.

இந்த மலைப்பகுதியில் இருக்கும் சுரங்கங்களுக்கு சுற்றுலாப்பயணிகளை அழைத்து சென்று காண்பிப்பதற்கு விருப்புகிறார் டெஸ்மரைஸ். ஆனால், அவரது யோசனைக்கு இதன் உரிமையாளர்கள் மறுப்புத் தெரிவிக்கிறார்கள்.

அதாவது, சுற்றுலாப்பயணிகளை இந்த பழமையான சுரங்கங்களுக்குள் அழைத்துச் செல்வது ஆபத்தை உண்டாக்கலாம் என்று அவர்கள் அச்சம் தெரிவிக்கிறார்கள்.

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை சேர்ந்த தொழில் முனைவோர்களான ப்ரெண்ட் அண்டர்வுட் மற்றும் ஜான் பீர் ஆகியோர் செர்ரோ கோர்டோவை கடந்தாண்டு ஜூலையில் 1.4 மில்லியன் டாலர்களுக்கு வாங்கினார்கள்.

டெஸ்மரைஸை போன்று இந்த இடத்தில் இன்னமும் வெள்ளிப் புதையல் இருக்கிறது என்ற நம்பிக்கையின் பேரில் அவர்கள் இந்த இடத்தை வாங்கி இருக்கிறார்கள்.

“இதுவரை சுமார் 500 மில்லியன் டாலர்கள் மதிப்புமிக்க வெள்ளிக்கட்டிகள் இங்கிருந்து வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், அதே அளவுக்கு இங்கு இன்னமும் வெள்ளி இருப்பதாக நம்பப்படுகிறது” என்று அவர்கள் நம்புகிறார்கள்.

இந்த மலையில் இன்னமும் வெள்ளி புதைந்திருக்கிறதோ இல்லையோ, இதை பயன்படுத்தி சுற்றுலாவை மேம்படுத்தும் முயற்சியில் இதன் உரிமையாளர்கள் இறங்கியுள்ளனர்.

இந்த மலைப்பகுதியில் சுரங்கங்கள் செயல்பட்டு கொண்டிருந்த காலத்தில் சுமார் ஐந்தாயிரம் பேர் வாழ்ந்து வந்தனர். இந்நிலையில், தற்போது கிட்டதட்ட யாருமில்லா இந்த மலையின், இரவுநேர அழகை சுற்றுலாப்பயணிகள் ரசிப்பதற்காக விடுதிகளை அமைப்பதற்கு இவர்கள் திட்டமிட்டு வருகின்றனர்.

மேலும், இங்கு ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள பெரிய திரையின் வாயிலாக திரைப்படங்களை ஒளிபரப்பி வருகின்றனர்.

மேலும், ரெட்டிட், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களின் வாயிலாக இந்த பகுதியில் மேம்படுத்த வேண்டிய விடயங்கள் குறித்து மக்களிடம் கருத்து கேட்டு வருகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

Author Image
Nila Raghuraman