Press "Enter" to skip to content

காபூல் திருமணத்தில் குண்டுவெடிப்பு: ‘’வாழ்க்கையில் நம்பிக்கை இழந்துவிட்டேன்’’ – மணமகன் வருத்தம்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ஒரு திருமண நிகழ்வின்போது நடந்த மிக மோசமான தாக்குதலில் 63 பேர் கொல்லப்பட்ட நிலையில், தான் வாழ்க்கையில் பெரிதும் நம்பிக்கை இழந்துவிட்டதாக வருத்தத்துடன் அந்த மணமகன் கூறியுள்ளார்.

தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ஞாயிற்றுக்கிழமை நடந்த மிக மோசமான தாக்குதலில் தனது சகோதரர் உள்பட பல உறவினர்கள் இறந்துவிட்டதாக மிர்வாஸ் எல்மி என்ற அந்த மணமகன் தெரிவித்தார்.

180க்கும் மேற்பட்டோர் காயமடைந்த இந்த தாக்குதலை தாங்கள் நடத்தியதாக இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் அமைப்பு பொறுப்பேற்றது.

திருமண நிகழ்வின்போது நடந்த இந்த தாக்குதலை ‘காட்டுமிராண்டி தனமான செயல்’ என்று ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரஃப் கனி விவரித்தார்.

பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளித்து பயங்கரவாத செயல்களை ஊக்குவிக்கின்றனர் என்று தாலிபன் அமைப்பு மீது அவர் குற்றம்சாட்டினார். அமெரிக்காவுடன் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள தாலிபான் அமைப்பு இந்த தாக்குதல் தொடர்பாக தனது கண்டனங்களை தெரிவித்துள்ளது.

டோலோ நியூஸ் என்ற செய்தி முகமைக்கு அளித்த பேட்டியில், உறவினர் நிரம்பிய திருமண கூடத்தில் தான் புன்னகையுடன் உறவினர்களை வரவேற்றதாகவும், பின்னர் திருமண மண்டபத்தில் இறந்த உடல்களை கண்டு மனம் வருந்தியதையும் மிர்வாஸ் எல்மி நினைவுகூர்ந்தார்.

”எனது குடும்பம் மற்றும் எனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண் என அனைவரும் தற்போது பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். அவர்களால் பேசக்கூட முடியவில்லை. இதனால் நான் திருமணம் செய்துகொள்ளவேண்டிய பெண் அடிக்கடி மயக்கமடைகிறார்” என்று கூறினார்.

”வாழ்க்கையில் நான் நம்பிக்கை இழந்துவிட்டேன். என் சகோதரன் மற்றும் நண்பர்களை இழந்துவிட்டேன். இனி என் வாழ்க்கையில் மறுபடி மகிழ்ச்சியை பார்க்கமுடியாது” என்றார்.

“என்னால் இறுதிச்சடங்கிற்கு செல்ல முடியாது, இது ஆப்கானிஸ்தானில் நடக்கும் கடைசி விபத்து இல்லை என்பதும் இது தொடரும் என்பதும் தெரியும்” என கூறினார்

மணப்பெண்ணின் தந்தை, தங்களுடைய குடும்பத்தில் 14 பேர் இறந்ததாக கூறியிருக்கிறார்.

“குண்டு வெடிப்பு நடந்த போது எல்லோரும் திருமணத்தில் ஆடி பாடிக் கொண்டிருந்தனர். குண்டு வெடித்தவுடன் அங்கே கலவரமாக இருந்தது. தங்கள் அன்புக்குரியவரைத் தேடி அனைவரும் அழுது கதறியபடி இருந்தார்கள்” என மணவிழாவில் கலந்து கொண்ட விருந்தினரான முனிர் அஹமது ஏஎஃப்பி செய்தி முகைமையிடம் கூறியிருந்தார்.

ஆப்கானிஸ்தான் திருமணங்களில் பொதுவாக ஆண்கள் தனியாகவும் பெண்கள் தனியாகவும் இருப்பர்.

திருமண நிகழ்வின்போது தற்கொலை குண்டுதாரி குண்டுகளை வெடிக்கச் செய்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பாதுகாப்பு குறித்து அறியவும் இதுபோல் இனி நடக்காமல் தடுக்கவும் ராணுவ அதிகாரிகளுடன் சந்திப்பு நடத்த இருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தார் ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரஃப் கனி ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தார்

தொடரும் தாக்குதல்கள்

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் உள்ள ஷியா பிரிவைச் சேர்ந்த ஹசாரா சிறுபான்மை இன மக்களை தாலிபன் மற்றும் இஸ்லாமிய அரசு அமைப்பின் தீவிரவாதிகள் தொடர்ந்து இலக்கு வைத்துத் தாக்கி வருகின்றனர்.

10 நாட்களுக்கு முன் காபூலில் காவல் நிலையம் ஒன்றின் முன்பு நடந்த குண்டுவெடிப்புக்கு தாலிபன் பொறுப்பேற்றது. அதில் 14 பேர் இறந்தனர்; 150 பேர் காயமடைந்தனர்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »
Mission News Theme by Compete Themes.