சிரியா மீது துருக்கி போர்: வடக்கு சிரியாவில் தாக்குதலை தொடங்கிவிட்டோம் – எர்துவான்

வடக்கு சிரியாவின் மீது துருக்கி தாக்குதலைத் தொடங்கிவிட்டதாக அறிவித்துள்ளார் துருக்கி அதிபர் அதிபர் ரிசெப் தாயிப் எர்துவான்.

இதன் மூலம் வடக்கு சிரியாவை கட்டுப்பாட்டில் வைத்துள்ள அமெரிக்க ஆதரவு பெற்ற குர்து படைகளோடு துருக்கி நேரடியாக மோதலைத் தொடங்கியுள்ளது.

குர்து படையினரை அகற்றப்பட்ட ஒரு பாதுகாப்பு மண்டலத்தை உருவாக்கி அந்த இடத்தில் துருக்கியில் உள்ள 36 லட்சம் துருக்கி அகதிகளை குடியமர்த்த வேண்டும் என்று துருக்கி நினைக்கிறது.

இந்த தாக்குதல் தொடங்குவதற்கு முன்பாக சிரியாவில் இருந்த அமெரிக்கத் துருப்புகளை சர்ச்சைக்குரிய முறையில் திரும்பப் பெற்றார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப். ஆனால், துருக்கி பின் விளைவுகளை சந்திக்கும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

சிரியாவில் உள்ள ஜிகாதி குழுவான ஐ.எஸ். படைகளை முறியடிப்பதில் அங்குள்ள குர்து ஆயுதப் படையான சிரியா ஜனநாயகப் படை அமெரிக்காவின் கூட்டாளியாக செயல்பட்டது. ஆனால், சிக்கலான நேரத்தில் எல்லைப் புறத்தில் இருந்து அமெரிக்கத் துருப்புகளைப் பின்வாங்கியதை முதுகில் குத்தும் செயலாக கருதுகிறது சிரியா ஜனநாயகப் படை.

அவரது சொந்தக் கட்சியான குடியரசுக் கட்சியிலும் இந்த அணுகு முறைக்கு கண்டனங்கள் எழுந்தன.

ஆனால், மனிதத் தன்மையற்ற எதையாவது துருக்கி செய்தால், எல்லை மீறி சிரியாவுக்குள் நுழைந்தால், அதன் பொருளாதாரம் அழிக்கப்படும் என்று கூறி விமர்சகர்களுக்குப் பதில் அளித்தார் டிரம்ப்.

ஐ.எஸ். படையினர் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் ஆயிரக் கணக்கில் சிரியாவின் சிறைகளில் உள்ளனர். அந்த சிறைகளை குர்து ஆயுதப் படையான சிரியா ஜனநாயகப் படை காத்து வருகிறது. தாக்குதல் தொடங்கிவிட்டதாக துருக்கி அறிவித்துள்ள நிலையில் அந்த சிறைவாசிகளின் நிலை என்ன என்பது தெரியவில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com