Press "Enter" to skip to content

டி.என்.சேஷன் மறைந்தார்: இந்தியத் தேர்தல் சீர்திருத்தங்களுக்கு வித்திட்ட முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற செய்திகள்

இந்திய தேர்தல் நடைமுறைகளில் பல்வேறு சீர்திருத்தங்களுக்கு வித்திட்ட முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் சென்னையில் காலமானார்.

சுதந்திர இந்தியாவின் 10வது தலைமை தேர்தல் ஆணையராக செயல்பட்ட சேஷன் தனது கராறான அணுகுமுறையால் பிரபலமடைந்தார். சேஷன் தேர்தல் ஆணையராக ஆன பிறகே தேர்தல் ஆணையத்தின் வலிமையும், இருப்பும் பெரிதாக உணரப்பட்டது.

தேர்தலில் வாக்களிக்க வாக்காளரின் புகைப்படம் கொண்ட அடையாள அட்டை முறையை 1993ல் கொண்டுவந்தவர் சேஷன். 1990 முதல் 1996 வரை தலைமை தேர்தல் ஆணையராக இருந்த சேஷன் தேர்தல் நடைபெறுவதற்கு முன்னர், பிரசாரங்கள் நிறுத்தப்படவேண்டும், தேர்தல் அன்று, வாக்குச் சாவடிக்கு அருகில் பிரச்சாரம் நடத்தக்கூடாது போன்ற விதிகளை கடுமையாக அமல்படுத்தினார்.

தேர்தல் காலத்தில் நடைபெறும் வன்முறைகளை தனது கராறான நடவடிக்கைகள் மூலம் வெகுவாகக் குறைத்தவர் சேஷன். 1996ல் ரமோன் மகசேசே விருது பெற்றார்.

சேஷனின் மறைவுக்கு பல தலைவர்களும் சமூகவலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்துவருகின்றனர். டின்.சேஷன் கொண்டுவந்த பல சீர்திருத்தங்களால் இந்திய ஜனநாயகம் வலுவடைந்தது என்றும், பலரும் பங்கேற்கும் விதமாக அமைந்தது என ட்விட்டரில் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். அதேபோல முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய். குரேய்ஷி, சேஷன் ஒரு ஆளுமைமிக்க நபர் என்றும் பல தேர்தல் ஆணையர்களுக்கு வழிகாட்டியாக இருந்தவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக ஊரகவளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி,முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்ததாக தெரிவித்துள்ளார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் நீடிக்கும் அரசியல் குழப்பம்

மகாராஷ்டிர தேர்தலில் அதிக இடங்களைப் பெற்ற பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைக்க விரும்பவில்லை என்று தெரிவித்துவிட்டதால், இரண்டாவது பெரிய கட்சியான சிவ சேனையை ஆட்சியமைப்பது குறித்த தங்கள் விருப்பத்தைத் தெரிவிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார் அந்த மாநிலத்தின் ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி.

பாஜக – சிவசேனை கூட்டணியில் முதல்வர் பதவியை பகிர்ந்து கொள்வது தொடர்பாக மோதல் உள்ள சூழலில், ஆட்சியமைக்க தங்கள் ஆதரவு தேவை என்றால் சிவசேனை, பாஜக உடனான கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என்று தேசியவாத காங்கிரசின் நவாப் மாலிக் தெரிவித்துள்ளார்.

சிவசேனையின் அமைச்சர்கள் மத்திய அமைச்சரவையில் இருந்து விலக வேண்டும் என்றும் தேசியவாத காங்கிரஸ் கூறுகிறது.

விரிவாகப் படிக்க: பாஜக – சிவசேனை மோதலால் மகாராஷ்டிராவில் நீடிக்கும் அரசியல் குழப்பம்

கோட்டாபய ராஜபக்ஷவின் அமெரிக்க குடியுரிமை

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் அமெரிக்க குடியுரிமை சர்ச்சை மீண்டும் இலங்கையின் வலுப் பெற்றுள்ளது.

அமெரிக்க குடியுரிமையிலிருந்து நீக்கப்பட்டவர்கள் தொடர்பான விவரங்கள் அடங்கிய ஆவணமொன்று நேற்றைய தினம் அமெரிக்காவினால் வெளியிடப்பட்டது.

விரிவாகப் படிக்க: கோட்டாபய ராஜபக்ஷவின் அமெரிக்க குடியுரிமை – மீண்டும் வெடித்த சர்ச்சை

ஐரோப்பா குடியேறிகளுக்கு தடைகள் போடுவது ஏன்?

மேற்கத்திய நாடு ஒன்றில் குடியேறுவது உங்கள் பலரின் கனவாக இருக்கலாம். ஆனால், முன்பைப் போல குடியேறிகள் ஏன் வரவேற்கப்படுவதில்லை?

ஐரோப்பாவில் நாடுகளுக்கு இடையிலான தற்போதைய கடினமான உறவின் மையமாக இருப்பது குடியேற்றப் பிரச்சனைதான்.

விரிவாகப் படிக்க: வந்தாரை வாழவைத்த ஐரோப்பாவில் வெளிநாட்டவர் குடியேற அதிகமாகும் எதிர்ப்பு

அயோத்தி தீர்ப்பால் பாஜக பெறப்போகும் ஆதாயம் என்ன?

அப்போது பிப்ரவரி 2012. உத்தரப் பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்த சமயம். பகுஜன் சமாஜ் கட்சி அரசு தோல்வி முகத்தில் இருந்தது. அரசமைக்கும் அளவுக்கு சமாஜ்வாதி கட்சி முன்னிலை பெற்றுக் கொண்டிருந்தது.

ஒரு காலத்தில் தன் கோட்டையாக இருந்த இந்த மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி பரிதாபகரமான நிலையில் இருந்தது. ஆனால், பாரதிய ஜனதா கட்சி மிகவும் உத்வேகமின்றி இருந்தது கவனத்துக்கு உரியதாக இருந்தது.

விரிவாகப் படிக்க: அயோத்தி தீர்ப்பால் நரேந்திர மோதியின் பாஜக பெறப்போகும் ஆதாயம் என்ன?

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

Mission News Theme by Compete Themes.