Press "Enter" to skip to content

எம்எச்17 விமானத் தாக்குதல்: சுட்டு வீழ்த்த ரஷ்யா கட்டளையிட்டதா? மற்றும் பிற செய்திகள்

மலேசிய விமான சேவை நிறுவனத்துக்கு சொந்தமான எம்எச்17 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது குறித்த சர்வதேச விசாரணையில், இந்த சம்பவத்துக்கும் ரஷ்யாவுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.

எம்எச்17 விமானம் சுட்டு வீழ்த்தியவர்களாக கருதப்படும் கிழக்கு உக்ரைன் பிரிவினைவாதிகளை ரஷ்யாவின் உயர் அதிகாரிகள் வழிநடத்தியதாக புலனாய்வாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் மூத்த உதவியாளர் ஒருவர் கிழக்கு உக்ரேனிலுள்ள பிரிவினைவாதிகளுடன் தொடர்பில் இருந்ததாக புலனாய்வாளர்கள் கூறுகின்றனர்.

உக்ரேனில் பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியில், 2014ஆம் ஆண்டு ஜூலை 17ஆம் தேதி பறந்துகொண்டிருந்த எம்எச்17 விமானத்தை ஏவுகணை கொண்டு தாக்கியதில் அதில் பயணித்த 298 பேரும் உயிரிழந்தனர்.

எனினும், இந்த புதிய குற்றச்சாட்டுகளுக்கு ரஷ்யாவின் வெளியுறவுத்துறை மறுப்புத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கருத்துத் தெரிவித்த ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா, சர்வதேச புலனாய்வாளர்கள் முன்னரே தீர்மானிக்கப்பட்ட முடிவுக்கு ஏற்ப விசாரணையை கையாண்டதாக கூறினார்.

நெதர்லாந்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த சர்வதேச விசாரணை குழு, இந்த விவகாரத்தில் ரஷ்யாவுக்கு தொடர்பு இருப்பதாக நேரடியாக குறிப்பிடவில்லை. எனினும், இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களாக கருதப்படும் நான்கு நபர்களில் இருவருடன் ரஷ்யா தொலைபேசி வழியாக தொடர்பில் இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளதாக அந்த குழுவின் அறிக்கை தெரிவிக்கிறது.

அயோத்தி விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி எவ்வாறு சறுக்கியது?

இது எதேச்சையாக அமைந்த ஒன்றாகக்கூட இருக்கலாம். அயோத்தி சர்ச்சையை காங்கிரஸ் கட்சி அளவுக்கு பழமையானது என்று கூறலாம்.

ஆங்கிலேய ஆட்சியின்போது 1885ஆம் ஆண்டு முதன்முதலாக அயோத்தியில் கோயில் கட்ட ஃபைசாபாத் நீதிமன்றத்தில் இந்து அமைப்புகள் வழக்கு தொடுத்தன.

அதே கால கட்டத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் என்ற கட்சி தனது தொடக்கக் கூட்டத்தை நடத்தியது.

சுதந்திரத்திற்கு பிறகு காங்கிரஸின் நிலைப்பாடு, இரண்டு தரப்பாக இருந்தது. முதலில் பழமைவாத காங்கிரஸ் தலைவர்கள். இந்த வகையினர் பெருமளவில் இருந்தனர்.

விரிவாக படிக்க:அயோத்தி விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி எவ்வாறு சறுக்கியது?

“ஆண் யானைகள் கும்கி ஆக்கப்படுவதால், இனப்பெருக்கம் பாதிக்கப்படும்”

கோவை மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மனித – மிருக மோதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

குறிப்பாக, ஆனைகட்டி, வால்பாறை, மதுக்கரை ஆகிய பகுதிகளில் யானைகள் காட்டிலிருந்து மனிதர்களின் வாழ்விடத்திற்குள் வருவதால் உயிரிழப்புகளும், விபத்துகளும், விவசாய நிலங்களில் சேதமும் ஏற்படுகின்றன.

இந்த ஆண்டு ‘சின்னத் தம்பி’ என்ற பெயர் சூட்டப்பட்ட யானை மிகுந்த சிரமங்களுக்கு பின்னர் வனத்துறையால் பிடிக்கப்பட்டு தற்போது கும்கி யானையாக மாற்ற பயிற்சி பெற்று வருகிறது.

விரிவாக படிக்க:“ஆண் யானைகள் கும்கி ஆக்கப்படுவதால், இனப்பெருக்கம் பாதிக்கப்படும்”

இலங்கை ஜனாதிபதி தேர்தல்: ‘குறைவான வன்முறை, அதிகமான ஊடக விதிமீறல்’

இலங்கை வரலாற்றில் தேர்தல் வன்முறைகள் குறைவாக பதிவான தேர்தலாக இந்த ஜனாதிபதி தேர்தல் வரலாற்றில் இடம்பிடித்துள்ளது.

செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி முதல் நவம்பர் மாதம் 13ஆம் தேதி வரை ‘பெப்ரல்’ (People’s Action For Free and Fair Elections – PAFFREL) அமைப்பினால் நடத்தப்பட்ட கணிப்பின்படி, இந்த தேர்தல் காலப் பகுதியில் தேர்தல் வன்முறைகளுடன் தொடர்புப்பட்டு உயிரிழப்பு ஒன்று கூட பதிவாகவில்லை.

அத்துடன், பெரிய வன்முறைகள் மற்றும் சட்ட மீறல்கள் தொடர்பில் 68 சம்பவங்களே பதிவாகியுள்ளதாக அந்த அமைப்பு கூறுகின்றது.

கடந்த கால ஜனாதிபதி தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் தேர்தல் காலப் பகுதியில் இடம்பெற்ற வன்முறைகள் பாரிய அளவில் குறைவடைந்துள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரொஹண ஹெட்டியாராட்ச்சி தெரிவிக்கின்றார்.

விரிவாக படிக்க:இலங்கை ஜனாதிபதி தேர்தல்: ‘குறைவான வன்முறை, அதிகமான ஊடக விதிமீறல்’

சபரி மலையில் பெண்கள் வழிபடும் உரிமை: விசாரணை 7 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம்

சபரிமலையில் பெண்கள் வயது வித்தியாசமில்லாமல் வழிபட அனுமதிக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் மீதான மறு ஆய்வு மனு குறித்து பெரிய அரசமைப்புச் சட்ட அமர்வு விசாரித்து முடிவு செய்யும் என்று உச்சநீதிமன்ற அமர்வு வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு வியாழக்கிழமை மறு ஆய்வு மனு மீதான வழக்கில் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

மாதவிடாய் ஏற்படும் வயதினர் என்பதால், சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் வயது வேறுபாடு இல்லாமல் எல்லா வயதுப் பெண்களும் இந்தக் கோயிலுக்கு செல்லலாம் என்று உச்சநீதிமன்றம் 2018ம் ஆண்டு செப்டம்பரில் தீர்ப்பளித்தது.

விரிவாக படிக்க:சபரி மலையில் பெண்கள் வழிபடும் உரிமை: விசாரணை 7 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com