கிரேட்டா துன்பெர்க்: 2019 ஆம் ஆண்டின் சிறந்த நபராக தேர்வு மற்றும் பிற செய்திகள்

கிரேட்டா துன்பெர்க்: 2019 ஆம் ஆண்டின் சிறந்த நபராக தேர்வு மற்றும் பிற செய்திகள்

பருவநிலை மாற்றம் தொடர்பான போராட்டங்களில் முன்னிலை வகித்த போராடிய ஸ்வீடன் நாட்டு பள்ளி மாணவியான கிரெட்டா துன்பெர்க் 2019 ஆம் ஆண்டிற்கான சிறந்த நபராக ‘டைம்’ பத்திரிகையால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

1927ம் ஆண்டில் இருந்து டைம் பத்திரிக்கையின் வரலாற்றில் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவட்டர்களில் 16 வயதுடைய கிரேட்டா துன்பெர்க் தான் மிகவும் இளையவர்.

கடந்த ஆண்டு ஸ்வீடன் நாட்டு நாடாளுமன்றத்திற்கு வெளியே வகுப்புகளை புறக்கணித்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பருவநிலை மாற்றத்திற்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அப்போது தான் உலகளவில் #FridaysForFuture என்ற ஹாஷ்டெக் மிகவும் பிரபலமானது.

அந்த போராட்டத்தில் மில்லியன் கணக்கான மாணவர்கள் பங்கேற்பதற்கு கிரேட்டா முக்கிய உந்துதலாக திகழ்ந்தார். இந்த ஆண்டின் துவக்கத்தில் அமைதிக்கான நோபல் பரிசுக்கும் கிரேட்டா பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

கடந்த செப்டம்பர் மாதம், நியூயார்க்கில் நடந்த ஐ.நா வின் பருவநிலை மாற்றத்திற்கான மாநாட்டில், தேசிய அளவிலான அரசியல் தலைவர்களை குற்றம் சாட்டி பேசினார்.

டைம் பத்திரிகையின் இந்த கவுரவத்தை, #FridaysForFuture இயக்கத்தினருடனும் பருவநிலை மாற்றத்திற்கு எதிராக குரல் கொடுக்கும் செயல்பாட்டாளர்களுடனும் பகிர்ந்துகொள்வதாக கிரேட்டா துன்பெர்க் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிடம் பருவநிலை மாற்றம் தொடர்பாக அறிவியல் பூர்வமான கேள்விகளை எழுப்பியுள்ளார் கிரேட்டா.

”இந்த ஆண்டு கிரகம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனையின் வலிமையான குரலாக கிரேட்டா மாறினார், உலகளாவிய அளவில் பருவநிலை மாற்றத்திற்கான இயக்கத்தை அவர் வழி நடத்துகிறார். ” என்று டைம் பத்திரிக்கையின் இந்த பரிந்துரையை அறிவித்த அதன் தலைமை ஆசிரியர் எட்வர்ட் ஃபெல்செந்தல் தெரிவித்தார்.

குடியுரிமை சட்டத் திருத்த மசோதா: மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு ஆதரவாக 125 உறுப்பினர்களும், எதிராக 105 உறுப்பினர்களும் வாக்களித்துள்ளனர்.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து மத துன்புறுத்தல் காரணமாக இந்தியாவுக்கு வந்த முஸ்லிம் அல்லாதவர்களுக்கு இந்திய குடியுரிமை கிடைக்க வழி செய்யும் இந்திய குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மக்களவையில் திங்கள்கிழமை இரவு நிறைவேறியது.

காங்கிரஸ் மற்றும் திமுகவை சேர்ந்த உறுப்பினர்கள் எதிர்த்தும், அதிமுக உறுப்பினர்கள் ஆதரவாகவும் பேசியிருந்தனர்.

“இந்த மசோதா நிறைவேறியது குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்த அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்,” என பிரதமர் நரேந்திர மோதி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

“மாநிலங்களவையில் இன்று பேசிய அமித் ஷா, இலங்கை தமிழர்கள் மீது எந்த பாரபட்சமும் காட்டவில்லை. இதுவரை 9 லட்சம் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது,” என்று தெரிவித்தார்.

விரிவாகப் படிக்க: குடியுரிமை சட்டத் திருத்த மசோதா: மாநிலங்களவையில் நிறைவேற்றம்

144 தடை, இணைய சேவை துண்டிப்பு – அசாமில் நடப்பது என்ன?

இந்திய அரசின் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக அசாமில் தொடரும் போராட்டங்களால் அங்கு பல இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் வேளையில், மற்றொருபுறம் அசாம் மாநில மக்கள், குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

கெளகாத்தியில் போராட்டக்காரர்களை கலைக்க கண்ணீர் புகை குண்டுகளும் பயன்படுத்தப்பட்டன.இதுகுறித்து ஏஎன்ஐ செய்தி முகமையிடம் பேசிய கெளகாத்தி காவல்துறை ஆணையர் தீபக் குமார், கெளகாத்தியில் இயல்பு நிலை திரும்பும் வரை தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்நிலையில், வடகிழக்கு மாநிலங்களில் தீவிரமடைந்து வரும், குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிரான போராட்டத்தை தடுக்கும் வகையில், மத்திய அரசு ஜம்மு, காஷ்மீரில் முகாமிட்டுள்ள துணை ராணுவப்படையினரை அசாமுக்கு அனுப்பியுள்ளதாக ஏ.என்.ஐ. முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

விரிவாகப் படிக்க: இணைய சேவை துண்டிப்பு, 144 தடை உத்தரவு – அசாமில் நடப்பது என்ன?

ரஜினிகாந்த்: காலத்தை கடந்த நாயகன் அரசியலில் சாதிப்பது சாத்தியமா?

ரஜினிகாந்த் கடந்த நாற்பதாண்டுகளுக்கும் மேலாக ஒரு சிறந்த, வெற்றிகரமான கலைஞராக நிலைத்து நிற்கிறார். சிறிய சிறிய மாற்றங்களோடு தன்னைப் புதுப்பித்தும் வருகிறார். அவர் வெற்றிகரமான நடிகராகத் தொடரப் போகிறாரா அல்லது போட்டி மிகுந்த அரசியல் களத்தில் எதிர்நீச்சல் போடப்போகிறாரா?

70 வயதை நெருங்கும் நடிகர் ரஜினிகாந்த், ஆசியாவின் அதிக ஊதியம் பெறும் நடிகர்களில் ஒருவர். 1975ல் துவங்கி விரைவில் வெளியாகவிருக்கும் தர்பார்வரை 167 திரைப்படங்களில் நடித்து முடித்திருக்கும் ரஜினிகாந்த், மூன்று தசாப்தங்களுக்கு மேலாக தமிழ் திரைப்படம் உலகின் மீது பெரும் ஆதிக்கம் செலுத்தியவர்.

தமிழ் திரையுலகில் இப்போதும் வசூல் ரீதியாக ஒரு முக்கியமான நடிகர்தான் ரஜினி. ஆனால், ரஜினி இனிமேலும் இதுபோலவே எவ்வளவு படங்களை நடிப்பார் என்பது ஒரு முக்கியமான கேள்வி.

திரைப்படத்தில் ரஜினி கோலோச்சிய காலம் முடிந்துவிட்டது எனக் கருதுபவர்கள் இருக்கிறார்கள். “திரைப்படத்தின் வியாபாரத்தில் ஒரு மாற்றம் இருக்கிறது. ஒரு பெரிய படம் வெளியாகும்போது, ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான திரைகளில் அந்தப் படம் வெளியாகி, சில நாட்களிலேயே வசூல் அள்ளப்படுகிறது. ரஜினியின் படங்களில்தான் இந்தப் போக்கு துவங்கியது என்றாலும், இந்தச் சூழலில் ரஜினியால் நீடிக்க முடியாது” என்கிறார் ஆய்வாளர் ராஜன் குறை.

விரிவாகப் படிக்க: ரஜினிகாந்த் அரசியலில் சாதிப்பது சாத்தியமா?

சௌதி அரம்கோ நிறுவனம்: பங்குச்சந்தை வரலாற்றில் சாதனை படைத்தது

சௌதி அரம்கோ நிறுவனம் பங்குச்சந்தை வணிகத்தில் ஈடுபட தொடங்கிய முதல் நாளிலேயே அதன் பங்குகளின் மதிப்பு புதிய உச்சத்தை அடைந்துள்ளது.

சௌதி அரேபிய அரசுக்கு சொந்தமான உலகின் மிகப் பெரிய எண்ணெய் உற்பத்தி நிறுவனமான சௌதி அரம்கோ, சமீபத்தில் தனது நிறுவனத்தின் பங்குகளை முதல் முறையாக விற்பனை செய்தது. சௌதி அரம்கோ நிறுவனத்தின் பங்குகள் இன்று (புதன்கிழமை) அந்நாட்டு பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு வணிகத்துக்கு வந்தபோது, 25.6 பில்லியன் டாலர்களை திரட்டி அந்நிறுவனம் பெரும் சாதனை படைத்துள்ளது.

வெறும் எண்ணெய் வளத்தை மட்டுமே சார்ந்திராமல், புதிய வணிக முன்னெடுப்புகளை எடுக்கும் முயற்சியில் சௌதி அரேபிய அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.

விரிவாகப் படிக்க: பங்குச்சந்தை வரலாற்றில் சாதனை படைத்த சௌதி அரம்கோ

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

Author Image
Nila Raghuraman