Press "Enter" to skip to content

மலேசியாவில் 3 லட்சம் இந்திய வம்சாவளியினருக்கு குடியுரிமை இல்லையா?

சதீஷ் பார்த்திபன்
பிபிசி தமிழுக்காக, மலேசியாவிலிருந்து

இந்திய அரசு அறிவித்த குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து மலேசிய பிரதமர் மகாதீர் மொஹமத் முன்னதாக கண்டனம் தெரிவித்த நிலையில், மறுபுறம் மலேசியாவில் சுமார் மூன்று லட்சம் இந்திய வம்சாவளியினர் குடியுரிமை இன்றித் தவிப்பதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது. அஙகு இந்தியர்களுக்கு பாரபட்சம் காட்டப்படுவதாக சமூக வலைத்தளங்களில் சிலர் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.

சில ஆண்டுகளுக்கு முன்பே இந்தத் தகவல் வெளியானது. அச்சமயம் மலேசிய நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியேயும் எதிர்க்கட்சியினர் இந்தப் புள்ளிவிவரத்தை வெளியிட்டனர்.

மூன்று லட்சம் இந்தியர்களுக்கு குடியுரிமை வழங்கப்படவில்லை என்றால், அதற்கு என்ன காரணம், இந்தியர்களைப் பிரதிநிதிக்கும் அரசியல் கட்சிகள், அதன் தலைவர்கள் இப்பிரச்சனையைத் தீர்க்க மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் என்ன என்பன போன்ற கேள்விகளும் எழுகின்றன.

இந்தியாவில் குடியுரிமை வழங்குவதில் இஸ்லாமியர்களுக்கு மட்டும் பாரபட்சம் காட்டப்படுவதாக மலேசியப் பிரதமர் மகாதீர் முகமது அண்மையில் தெரிவித்திருந்தார். குடியுரிமை திருத்தச் சட்டம் இந்தியாவில் சில உயிர்களை பலிவாங்கியுள்ளது என்றும் கூறியிருந்தார்.

இது தொடர்பாக பிபிசி தமிழ் பல்வேறு தரப்பினரைத் தொடர்பு கொண்டு பேசியது.

பல தலைமுறைகளாக நீடிக்கும் பிரச்சனை

எந்த நாட்டின் கடவுசீட்டும் (பாஸ்போர்ட்) இல்லாமல், மலேசியர் என்பதை நிரூபிக்கும் எந்த ஆவணமும் இல்லாதவர்கள் மலேசியாவில் நாடற்றவர்கள் என்று குறிப்பிடப்படுகின்றனர்.

எனினும், மலேசியாவில் நாடற்றவர்களாகக் கருதப்படும் பெரும்பாலானோர் வெளிநாட்டவர்களோ, அகதிகளோ, அல்லது சட்ட விரோத குடியேறிகளோ அல்ல.

வேறு எந்த நாட்டுடனும் எந்த வகையிலும் தொடர்பு இல்லாத அம்மக்கள், மலேசியாவிலேயே பிறந்து வளர்ந்தவர்கள்தான் என்று சமூக செயல்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.

மலேசியாவில் நாடற்றவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பது குறித்து பல்வேறு விதமான தகவல்கள் கிடைக்கின்றன. சபா என்ற ஒரு மாநிலத்தில் மட்டுமே ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் நாடற்றவர்களாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இப்படி நாடு முழுவதும் லட்சக்கணக்கானோர் குடியுரிமை இன்றி, நாடற்றவர்களாக உள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

“எழுபது வயதைக் கடந்த சிலருக்கு மலேசிய அரசு இப்போதுதான் குடியுரிமை வழங்கியுள்ளது. இந்த தாமதம் காரணமாக அந்த நபரின் பிள்ளைகள், பேரக் குழந்தைகள் ஆகியோரும் திருமணத்தை சட்டப்படி பதிவு செய்ய முடியாமல், பிறப்பு பத்திரம் பெற முடியாமல், அடுத்த தலைமுறை நாடற்றவர்களாக உருப்பெறுகிறார்கள்,” என்கிறார்கள் சமூக செயல்பாட்டாளர்கள்.

மலேசியாவுக்கு கூலித்தொழிலாளர்களாகச் சென்ற தமிழர்கள்

கடந்த 150 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் இருந்து ஆயிரக்கணக்கான தமிழர்கள், மலேசியாவில் உள்ள செம்பனை மற்றும் ரப்பர் தோட்டங்களில் வேலை பார்க்க ஆங்கிலேயர்களால் சஞ்சிக் கூலிகளாக அழைத்துச் செல்லப்பட்டனர். அதன் பின் பல தலைமுறைகளாக அங்கேயே வசித்து வருகின்றனர்.

மலேசியா சுதந்திரம் பெற்ற பிறகு பெரும்பாலான தமிழர்கள் குடியுரிமை பெற்று அங்கேயே வாழத் தொடங்கினர். ஒரு பகுதியினர் தமிழகம் திரும்பினர்.

தமிழகம் சென்றுவிட்டு மீண்டும் மலேசியா திரும்பியவர்களில் கணிசமானோருக்கு குடியுரிமை கிடைத்த போதிலும், மற்றவர்களுக்குக் கிடைக்கவில்லை.

தவிர அரசாங்கம் கேட்கும் ஆவணங்கள் இல்லாதது, மலாய் மொழியில் பேசத் தெரியாதது எனப் பல்வேறு காரணங்களால் பல ஆண்டுகளாக கணிசமான இந்தியர்கள் குடியுரிமையைப் பெற முடியவில்லை.

மலாய்க்காரர்கள், சீனர்கள், பூர்வ குடியினரும் கூட குடியுரிமைப் பிரச்சனையில் சிக்கியுள்ளனர். எனினும் எண்ணிக்கை அடிப்படையில் வம்சாவளியினர்தான் முதல் இடத்தில் உள்ளனர்.

எதனால் குடியுரிமை மறுக்கப்படுகிறது?

தற்போது மலேசிய மக்கள் தொகையில் இந்தியர்கள் 7 விழுக்காடு உள்ளனர். சற்றேறக்குறைய 22 லட்சம் இந்தியர்கள் குடியுரிமை பெற்றுள்ளனர்.

மலேசியா சுதந்திரம் பெற்ற கையோடு விண்ணப்பித்தவர்களுக்கு உடனுக்குடன் குடியுரிமை கிடைத்தது. அச்சமயம் லட்சக்கணக்கான சீனர்கள், இந்தியர்கள் குடியுரிமை பெற்றனர். அவர்கள் நீண்ட காலம் மலேசியாவில் வசித்ததற்கான ஆவணங்கள் இதற்கு உதவின.

அதே சமயம், தோட்டப்புறங்களில் வசித்த பலர் குடியுரிமையின் முக்கியத்துவம் குறித்து அறிந்திருக்கவில்லை. அதனால் தங்கள் பெயரை பதிவு செய்ய தவறிவிட்டனர். எனினும் அத்தகைய நபர்களின் அடுத்தடுத்த தலைமுறையைச் சேர்ந்தவர்கள் இதனால் பாதிக்கப்பட்டனர்.

பெற்றோருக்கு குடியுரிமை இல்லாததால், பிள்ளைகளுக்கு அந்த உரிமை கிடைக்கவில்லை. தகுந்த ஆவணங்கள் இல்லாதது, வறுமை, வீட்டிலேயே பிரசவமாவது, பதிவு செய்யாத திருமணங்கள், கைவிடப்பட்ட குழந்தைகள், அறியாமை, ஆதரவற்ற குழந்தைகளை உரிய ஆவணங்கள் இன்றி தத்தெடுப்பது போன்ற பல்வேறு காரணங்களால் பலருக்கு குடியுரிமை கிடைப்பதில்லை.

குடியுரிமை பெறுவதற்கு மலேசிய அரசு விதிக்கும் நிபந்தனைகளில் சில:

  • விண்ணப்பதாரர்கள் மலேசியாவில் பிறந்திருக்க வேண்டும்
  • விண்ணப்பதாரரின் தாய் அல்லது தந்தையரில் ஒருவர் மலேசியக் குடியுரிமை பெற்றவராக இருக்க வேண்டும்.
  • கடந்த 12 ஆண்டுகளில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் மலேசியாவில் தங்கியிருந்திருக்க வேண்டும்.
  • மலாய் மொழியில் போதிய ஆற்றல் பெற்றிருக்க வேண்டும்.

வாக்குரிமையும் கிடையாது

மலேசியாவைப் பொறுத்தவரை அந்நாட்டு அரசு வழங்கும் அடையாள அட்டையை ‘மை கார்டு’ என்று குறிப்பிடுகின்றனர். அந்த அட்டை அல்லாதவர் நாடற்றவராகவே கருதப்படுவர்.

அவருக்கு மலேசியக் குடிமகன்கள் பெற்றிருக்கும் அடிப்படை உரிமைகள் எதுவும் கிடைக்காது. அடிப்படைக் கல்வி, இலவச மருத்துவம், வங்கிக் கணக்குத் திறப்பது, காப்பீடு, திருமணத்தைப் பதிவு செய்தல் என்று அனைத்து விஷயங்களிலும் ஏதேனும் பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

நாடு சுதந்திரமடைந்து சுமார் 60 ஆண்டுகள் ஆன பிறகும் மலேசியாவிலேயே பிறந்துவளர்ந்த போதிலும் ஆயிரக்கணக்கான இந்தியர்களால் தேர்தலில் வாக்களிக்க முடியாத நிலை காணப்படுகிறது.

செனட்டர் டி.மோகன்: 20 ஆயிரம் இந்தியர்கள்தான் பாதிக்கப்பட்டுள்ளனர்

இத்தகைய சூழ்நிலையில் மலேசிய இந்தியக் காங்கிரஸ் கட்சியின் தேசிய உதவித் தலைவரும் செனட்டருமான டத்தோ டி. மோகனிடம் பிபிசி தமிழ் தொடர்பு கொண்டு பேசியது. கடந்த 2017ஆம் ஆண்டு வரை மலேசியாவில் ஆட்சியில் இருந்த தேசிய முன்னணியின் (பாரிசான் நேஷனல் கூட்டணி) உறுப்புக் கட்சிகளில் மஇகாவும் ஒன்று.

மலேசியாவில் மூன்று லட்சம் இந்தியர்கள் குடியுரிமை இல்லாமல் நாடற்றவர்களாக உள்ளனரா என்று கேட்டால், இந்தப் புள்ளிவிவரத்தை வெளியிட்டவர்களே இதை ஏற்கமாட்டார்கள் என்கிறார் செனட்டர் மோகன். தங்களது ஆட்சிக் காலத்தில் மேற்கொண்ட நடவடிக்கைகளின் மூலம் சுமார் 20 ஆயிரம் இந்தியர்களே அடையாள அட்டையின்றி இருப்பது தெரியவந்ததாகவும் சொல்கிறார்.

“இன்று ஆட்சியாளர்களாக இருப்பவர்கள் முன்னர் எதிர்க்கட்சியினராக இருந்தனர். அப்போது 3 லட்சம் இந்தியர்கள் அடையாள அட்டையின்றி தவிப்பதாகக் கூறியவர்கள் இப்போது வாய்மூடிக் கிடப்பது ஏன்? இவர்கள் ஆட்சிக்கு வந்து ஓராண்டைக் கடந்துவிட்ட பிறகும் இந்தப் பிரச்சனையைத் தீர்க்க எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர் என்பது தெரியவில்லை.”

“குடியுரிமை இல்லாத இந்தியர்களைப் பற்றிய விவரங்களைப் பதிவு செய்ய நடத்தப்பட்ட My Daftar திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் குடியுரிமை இல்லாத இந்தியர்கள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அச்சமயம் நாடு முழுவதும் நகர்ப்புறத்திலும் தோட்டப்புறத்திலும் குடியுரிமை இன்றித் தவிக்கும் இந்திய வம்சாவளியினரை கண்டறிய முயன்றோம். இதன்மூலம் சுமார் 15 முதல் 20 ஆயிரம் பேரை மட்டுமே அடையாளம் காண முடிந்தது.”

“அவர்களில் சுமார் 9 ஆயிரம் பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. தேவையான ஆவணங்கள் இல்லாத சுமார் 3,800 பேரின் விண்ணப்பங்கள் பரிசீலனையில் இருந்தன. அதற்குள் ஆட்சி மாற்றம் நிகழ்ந்ததால் அந்த விண்ணப்பங்களின் நிலை என்னவானது எனத் தெரியவில்லை,” என்றார் செனட்டர் டி. மோகன்.

“குறைந்தபட்சம் 50 ஆயிரம் இந்தியர்களிடம் அடையாள அட்டை இருக்காது”

ஆனால், மலேசியாவில் ஆளும் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியில் அங்கத்துவம் பெற்றுள்ள ஜனநாயக செயல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான சார்லஸ் சந்தியாகு அடையாள அட்டை இல்லாத இந்தியர்களின் எண்ணிக்கை சுமார் 50 முதல் 60 ஆயிரம் வரை இருக்கும் என்கிறார். பாதிக்கப்பட்ட இந்தியர்களுக்கு குடியுரிமை பெற்றுத்தரும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபடுபவர் இவர்.

“அடையாள அட்டைக்காக விண்ணப்பிக்கும்போது அரசாங்கம் கேட்கக்கூடிய பல்வேறு ஆவணங்களை ஒப்படைக்கவேண்டி உள்ளது. அத்தகைய ஆவணங்கள் இல்லாதவர்கள்தான் இன்று குடியுரிமை இன்றி அவதிப்படுகிறார்கள். ஆவணங்கள் இல்லாதபட்சத்தில் அந்நபர் இந்தியாவில் இருந்து வந்தவர் என்றோ அல்லது குறுக்கு வழியில் மலேசியக் குடியுரிமையைப் பெற முயற்சிப்பதாகவோ சந்தேகப்பட வாய்ப்புள்ளது.

“இதற்கு அஞ்சியே பலர் அடையாள அட்டை கேட்டு விண்ணப்பிப்பதில்லை. தாங்கள் கைதாகிவிடுவோம் என்ற பயம் அவர்களுக்கு இருக்கிறது. இவ்வாறு பதிவு செய்யாததுதான் எத்தனை இந்தியர்கள் அடையாள அட்டை விவகாரத்தில் சிக்கியுள்ளனர் என்பதைக் கண்டறிய முடியாததற்கான காரணம்,” என்கிறார் சார்லஸ் சந்தியாகு.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஏராளமான குழந்தைகள் நாடற்றவர்களின் பட்டியலில் இடம்பெற்றிருப்பது வருந்தத்தக்க விஷயம் என்று குறிப்பிடுபவர், தற்போதுள்ள அரசாங்கம் குழந்தைகளுக்கு, குறிப்பாக அவர்களின் தாய் மலேசியர் என்றால், உடனடியாக குடியுரிமை வழங்கப்படும் என அறிவித்துள்ளது என்கிறார்.

“அதேசமயம் மலேசிய அரசு இவ்விவகாரத்தில் எதிர்கொள்ளும் சில பிரச்சனைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்,” என்கிறார் சார்லஸ் சந்தியாகு.

குறுக்கு வழியில் குடியுரிமை பெற முயற்சிப்பவர்களால் சிக்கல்

அண்மையில் குடியுரிமை கேட்டு விண்ணப்பித்த ஒரு 40 வயது பெண்மணியிடம் அரசு அதிகாரி விசாரணை நடத்தியபோது அவருக்கு மலாய் மொழி தெரிந்திருக்கவில்லை என்பதுடன் மலேசிய தேசிய கீதமும் பாடத் தெரியவில்லை. தீவிர விசாரணையின்போது அவர் தமிழகத்தில் இருந்து வந்தது .தெரிந்தது

“வீட்டுப் பணிப்பெண் வேலைக்காக வந்த அவரைக் குடியுரிமை கேட்டு விண்ணப்பிக்க வைத்திருக்கிறார்கள். நாட்டின் பிரதமர் யார் என்பது கூட தெரியாமல் நின்ற அவரிடம் மேலும் விசாரணை நடத்தி அவர் ஏமாற்றப் பார்க்கிறார் என்பதைக் கண்டுபிடித்து விட்டனர். இதுபோன்று பலரும் முறைகேடாக குடியுரிமை பெற முயற்சிப்பதாலேயே அரசாங்கம் தகுந்த ஆவணங்களைக் கேட்கிறது. எனவே அரசாங்கத்தை நாம் தேவையின்றிக் குறை கூற முடியாது,” என்று சொல்லும் சார்லஸ் சந்தியாகு குடியுரிமைப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காகவே தனது அலுவலகத்தில் ஒரு குழுவை அமைத்துள்ளார்.

“அடையாள அட்டை இல்லாத நாடற்றவர்கள் எங்களது அலுவலகத்தில் வந்து பெயரைப் பதிவு செய்யலாம் என்று அறிவித்தோம். அந்த வகையில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் எங்கள் உதவி நாடி வந்தனர். அதில் சரிபாதி இந்தியர்கள். அதை வைத்துக் கணக்கிடும்போது இந்நாட்டில் சற்றேறக்குறைய 50 முதல் 60 ஆயிரம் எண்ணிக்கையிலான இந்தியர்கள் அடையாள அட்டையின்றித் தவிப்பதாக நான் கணக்கிடுகிறேன்,” என்கிறார் சார்லஸ் சந்தியாகு.

3 லட்சம் பேர் குடியுரிமை இன்றி வாழ்வதாகக் கூறப்படுவது அபத்தம்

இந்திய குடியுரிமைச் சட்டம் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சையைப் போன்று மலேசியாவிலும் நீண்ட காலமாக குடியுரிமை தொடர்பான சர்ச்சை நிலவுகிறது என்கிறார் அரசியல் விமர்சகர் இரா.முத்தரசன்.

அதேசமயம் மூன்று லட்சம் இந்தியர்கள் குடியுரிமை இன்றி மலேசியாவில் வாழ்வதாகக் கூறப்படுவது அபத்தம் என்று அவர் கூறுகிறார்.

“நீண்ட காலமாகவே சுமார் மூன்று லட்சம் இந்தியர்களுக்கு குடியுரிமை வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. முன்பு இவ்வாறு கூறிய எதிர்க்கட்சிகளே தற்போது ஆட்சி அமைத்துள்ளன. அந்த மூன்று லட்சம் பேர் எங்கே உள்ளனர் என்று புதிய ஆட்சியாளர்கள் தெளிவுபடுத்த வேண்டும்.”

“இது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. காரணம், ஒரு நபர் குறிப்பிட்ட ஒரு நாட்டில் பத்து ஆண்டுகளோ, இருபது ஆண்டுகளோ தங்கி இருக்க முடியும் என்றால், ஏதேனும் ஓர் ஆவணமாவது இருக்கும். எந்தவொரு ஆவணமும் இன்றி ஒரு நாட்டில் பல ஆண்டுகள் இருக்க முடியும் என்பதை ஒப்புக்கொள்ள இயலாது.”

“மலேசிய அரசாங்கம் ஒரு சலுகையை அளித்துள்ளது. இங்கு நாடு முழுவதும் கிராமத் தலைவர்கள் இருக்கிறார்கள். ஒருவர் கிராமத் தலைவரை அணுகி, தாம் அங்கு பிறந்த விவரத்தை தெரிவித்தால், அதை உறுதி செய்த பிறகு கிராமத் தலைவர் ஒரு கடிதத்தை அளிப்பார். மலேசியாவில் பிறந்தவர்களுக்கு குறைந்தபட்சம் இந்த ஆவணமாவது கிடைக்கும்.”

“அதே போல் பள்ளியில் படித்திருந்தால் அதற்கான ஆவணங்கள் கிடைக்கும். இல்லையெனில் குடியுரிமை பெற்ற தங்கள் உறவினர்களை அணுகி உதவக் கேட்கலாம். உறவினர் அளிக்கும் சத்தியப் பிரமாணமும் அரசாங்கத்தால் பரிசீலிக்கப்படும். குடியுரிமை பெற முடியாவிட்டாலும், இந்நாட்டில் வசிக்க முடியும்.

“எனவே எந்த ஆவணமும் இல்லாததால் குடியுரிமைக்கு பதிவு செய்யவில்லை என்று சொல்வதும், ஆவணங்களைப் பெற முயற்சி செய்யாததும் தவறு. அத்தகையவர்கள் குடியுரிமை கோருவதற்கு உரிமை இல்லை என்றே கருத வேண்டியுள்ளது,” என்கிறார் முத்தரசன்.

இந்தியர்கள் திட்டமிட்டு ஓரங்கட்டப்பட்டனர்:

குடியுரிமை வழங்குவதில் இந்தியர்கள் திட்டமிட்டு ஓரங்கட்டப்பட்டு இருப்பதாகச் சொல்கிறார் மலேசிய மனித உரிமை ஆணையத்தின் முன்னாள் உறுப்பினர் டத்தோ சிவசுப்ரமணியம். சில ஆண்டுகளுக்கு முன்பு நடத்தப்பட்ட ‘மை டஃப்டார் ‘ (MYDAFTAR) ‘என் பதிவு’ இயக்கத்துக்கு இவர் பொறுப்பேற்றிருந்தார். அச்சமயம் பலருக்கு குடியுரிமை வாங்கித் தந்ததாகச் சொல்கிறார்.

“உரிய ஆவணங்கள் இல்லாததே இந்தியர்கள் குடியுரிமை பெற முடியாமல் போவதற்கு முக்கிய காரணம். தவிர, அரசுத் துறையில் 95 விழுக்காட்டுக்கும் மேல் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள்தான் பணிபுரிகிறார்கள். இதனால் தமிழர்கள் தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை இவர்களிடம் விவரிக்க இயலாமல் தடுமாற நேரிடுகிறது.”

“அப்போதைய மலேசியப் பிரதமர் அப்துல்லா படாவிதான் ‘மை டஃப்டார்’ இயக்கத்துக்கு பொறுப்பேற்று இந்தியர்களின் குடியுரிமை பிரச்சனைக்கு தீர்வு காணுமாறு கூறினார். இதன் மூலம் சுமார் மூவாயிரம் பேருக்கு குடியுரிமை பெற்றுத்தர முடிந்தது.”

“அதே சமயம் குடியுரிமை கேட்டு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை பத்தாயிரம் இருக்கும். மற்றவர்களுக்கு குடியுரிமை கிடைத்ததா என்பது தெரியவில்லை. என்னுடைய கணக்கின்படி, மலேசியாவிலேயே பிறந்து வளர்ந்தும், குடியுரிமை இல்லாத இந்திய வம்சாவளியினரின் எண்ணிக்கை குறைந்த பட்சம் 35 ஆயிரமாக இருக்கும்.”

“சீனர்கள் குடியுரிமை கேட்டு விண்ணப்பித்த போது ஒற்றுமையாகச் செயல்பட்டனர். தங்கள் அண்டை வீட்டில் உள்ள, தங்களுக்குத் தெரிந்த மற்ற சீனக் குடும்பங்கள் குடியுரிமைக்கு விண்ணப்பித்துள்ளனரா என்பதை அக்கறையுடன் கேட்டறிந்து, அவ்வாறு விண்ணப்பிக்கவில்லை என்றால் அவர்களுக்கு இயன்ற உதவிகளைச் செய்தனர். ஆனால் தமிழர்கள் மத்தியில் இத்தகைய ஒற்றுமை இல்லை,” என்கிறார் சிவசுப்ரமணியம்.

இப்படி மாறுபட்ட தகவல்கள், உறுதி செய்யப்படாத புள்ளி விவரங்கள் கிடைத்ததையடுத்து, மலேசிய அரசில் இடம்பெற்றுள்ள இந்திய அமைச்சர்கள் இருவரிடம் கருத்து கேட்க பிபிசி தமிழ் மேற்கொண்ட முயற்சி பலனளிக்கவில்லை.

மூன்று லட்சம் இந்தியர்கள் என்ற கணக்கு தவறானது – மலேசிய அரசு

இதற்கிடையே, மலேசியாவில் மூன்று லட்சம் இந்தியர்கள் நாடற்றவர்களாக உள்ளனர் என்பது தவறான தகவல் என மலேசிய உள்துறை துணை அமைச்சர் மொஹமத் அஜீஸ் ஜம்மான் தெரிவித்துள்ளார்.

கடந்த 2018 மே மாத இறுதி வரை குடியுரிமை கேட்டு 3,853 இந்தியர்கள் விண்ணப்பம் அளித்ததாகவும், அவற்றுள் 1,638 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டதாகவும் அவர் நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு பதிலளித்தபோது குறிப்பிட்டுள்ளார்.

இதே போல் அறுபது வயதைக் கடந்த 1,641 இந்தியர்களுக்கு குடியுரிமை அளிக்கப்பட்டிருப்பதாக உள்துறை அமைச்சர் மொஹிதின் யாசின் கடந்த ஆண்டு அறிவித்திருந்தார்.

மேலும் குடியுரிமை கோரி அளிக்கப்பட்ட விண்ணப்பங்கள் நீண்ட காலம் பரிசீலனையில் இருப்பின், அவை குறித்து ஆராய்வதற்கு தனிக்குழு அமைக்கப்படும் என்றும் அரசுத் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 60 வயதுக்கு மேற்பட்டு சிவப்பு அடையாள அட்டை வைத்திருக்கும் மலேசியர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும் எனப் பிரதமர் மகாதீர் அறிவித்துள்ளார்.

கடந்த காலத்தில் இந்திய சமுதாயத்திற்கு தாம் செய்யாமல் விட்ட சில பணிகளை நடப்பு ஆட்சிக் காலத்தில் செய்யப் போவதாக பிரதமர் மகாதீர் அறிவித்துள்ளார்.

புதிய பிரதமர் பொறுப்பேற்பதற்குள் அவர் தாம் சொன்னதைச் செய்து முடிக்க வேண்டும் என்பதே மலேசிய இந்தியா வம்சாவளியினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »