Press "Enter" to skip to content

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): மலேசியா – குறையும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை, அச்சத்தில் மக்கள் #GroundReport

சதீஷ் பார்த்திபன்
பிபிசி தமிழுக்காக, மலேசியாவிலிருந்து

மலேசியாவில் மெல்ல ஊடுருவிய கொரோனா கிருமி தற்போது தனது வேகத்தையும் வீச்சையும் காட்டத் துவங்கியுள்ளது. அங்கு ஒரே நாளில் மூன்று பேர் அக்கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து கொரோனா கிருமித் தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 7ஆக உயர்ந்தது.

நாடு முழுவதும் கிருமி பரவலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மலேசிய அரசு முடுக்கி விட்டுள்ள நிலையில், ஜனவரி 29ஆம் தேதி காலை 10 மணி நிலவரப்படி மலேசியாவில் 7 பேருக்கு கொரோனா கிருமித் தொற்று இருப்பது மருத்துவப் பரிசோதனைகள் வழி உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், அவர்கள் அனைவருமே சீன குடிமக்கள் என்றும் அந்நாட்டின் சுகாதாரத் துறை பொதுச் செயலர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார். இவர்களுள் 4 வயதுச் சிறுமியும் அடங்குவார்.

“அண்மைய பரிசோதனையின்போது ஒரு பெண்ணுக்கு கொரோனா கிருமி பாதிப்பு இருப்பது உறுதியானது. 60 வயதைக் கடந்த முதியவரான இவரது மாமனாருக்கும் கிருமித் தொற்று உள்ளது. சிங்கப்பூரில் கொரோனா கிருமித் தொற்று இருப்பது முதன்முதலாக இந்த முதியவரிடம் தான் கண்டறியப்பட்டது. இந்தப் பெண்மணியின் இரு குழந்தைகளும்கூட பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ஜோகூர்பாரு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது,” என்று டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்துள்ளார்.

கடந்த 10ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை மலேசியாவில் 78 பேருக்கு கிருமித் தொற்று இருக்கலாம் என்று அடையாளம் காணப்பட்டு, சந்தேகத்தின் அடிப்படையில் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். இவர்களில் 39 பேர் மலேசியர்கள். சீனாவைச் சேர்ந்த 36 பேர், ஜோர்டான், பிரேசில், தாய்லாந்தைச் சேர்ந்த தலா ஒருவர் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

இவர்களில் 74 பேருக்குக் கிருமித் தொற்று இல்லை என்பது மருத்துவப் பரிசோதனைகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும் கிருமித் தொற்று உள்ளவர்களுடன் நெருக்கமாக இருந்ததால் தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாக மலேசிய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

வேகமாகக் குறைந்து வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை

இதற்கிடையே கொரோனா கிருமித் தொற்று அச்சம் காரணமாக மலேசியாவுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வேகமாகக் குறைந்து வருகிறது. முன்பதிவு செய்யப்பட்ட அறைகளை ஏராளமானோர் ரத்து செய்து வருவதாக மலேசிய தங்கு விடுதி சங்கம் தெரிவித்துள்ளது.

சீனக் குடிமக்கள் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளவும், விமானப் பயணம் மேற்கொள்ளவும் அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளதே இதற்குக் காரணம் என்றும் அச்சங்கம் கூறியுள்ளது. மேலும், சீனச் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமுள்ள பகுதிகளில்தான் அதிகளவில் தங்கு விடுதி அறைகளின் முன்பதிவு ரத்தாகி வருவதாக மலேசிய தங்கு விடுதி சங்கம் சுட்டிக் காட்டியுள்ளது.

லங்காவி, கோத்தசினபாலு ஆகிய பகுதிகளுக்கு ஆண்டு முழுவதும் சீனச் சுற்றுப்பயணிகள் அதிகளவில் வருகை புரிவர். அங்குள்ள தங்கு விடுதிகளில் சுமார் 30 முதல் 60 விழுக்காடு வரையிலான தங்கு விடுதி அறை முன்பதிவுகள் ரத்தாகியுள்ளன. அதேபோல் மலாக்கா, ஈப்போ, போர்ட்டிக்சன், பினாங்கு உள்ளிட்ட பகுதிகளில் குறைந்தபட்சம் 10 முதல் 50 விழுக்காடு வரையிலான அறை முன்பதிவுகள் வீழ்ச்சி கண்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

மலேசிய சுற்றுலாத் துறைக்கு கடும் பாதிப்பு

மலேசிய சுற்றுலாத் துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக பயண முகவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

நடப்பு 2020ஆம் ஆண்டு சுற்றுலாப் பயணிகளுக்கானது என மலேசிய அரசு அறிவித்துள்ளது. இதையொட்டி சீனா, இந்தியாவிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு 14 நாட்களுக்கு இலவச விசா திட்டத்தையும் அறிவித்துள்ளது.

தீவிர விளம்பர நடவடிக்கைகளின் மூலம் இந்தாண்டு 30 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கமுடியும் என்று மலேசிய அரசு கருதுகிறது. இவர்களுள் 3.48 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் சீனாவிலிருந்து வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் கொரோனா கிருமித் தாக்கம் காரணமாக இந்த இலக்கை அடையமுடியுமா எனும் சந்தேகம் தற்போது எழுந்துள்ளது. இதையடுத்து சீனாவில் இருந்து மலேசியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்பவர்களுக்கு சிறப்புச் சலுகைகளை அளிப்பது குறித்து மலேசியப் பயண முகவர்கள் ஆலோசித்து வருகின்றனர்.

இதற்கிடையே சீனாவில் கொரோனா கிருமித் தொற்று பாதிப்புள்ள பகுதிகளைச் சேர்ந்த சீனக் குடிமக்கள் மலேசியாவில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஏற்கெனவே சீனாவிலிருந்து ஏராளமானோர் மலேசியா வந்தடைந்துள்ளனர். அந்தச் சுற்றுலாப் பயணிகள் மலேசியாவில் உள்ள சுற்றுலாத் தலங்களைப் பார்வையிட தடை விதிக்கக்கூடாது என சுற்றுலாத் துறை, மலேசிய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஆனால், இதற்கு ஒருதரப்பினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். நிலைமை கட்டுக்குள் வரும்வரை அனைத்துச் சுற்றுலாத் தலங்களுக்கும் சீல் வைக்க வேண்டும் எனும் கோரிக்கையும் வலுத்து வருகிறது. மேலும் சீனாவின் எந்தப் பகுதியிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் மலேசியாவுக்குள் வருவதை அனுமதிக்கக் கூடாது என்று ஒருதரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

பொய் தகவல்: நடிகரை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்; ஒருவர் கைது

இதற்கிடையே சமூக வலைத்தளம் வழி கொரோனா கிருமித் தொற்று குறித்துப் பொய்யான தகவலைப் பரப்பியதாக மலேசிய நடிகர் செட் சைட்டை (Zed Zaide) நெட்டிசன்கள் சாடியுள்ளனர்.

39 வயதான அவர் தாம் முகக்கவச உறை அணிந்திருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, அதன் அருகில் மலேசியா தவிர மற்ற அனைத்து உலக நாடுகளுமே சீனச் சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதித்திருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.

“மலேசியா பாதுகாப்பற்ற ஒரு நாடு. இங்கு ஒரு நாளின் 24 மணி நேரமும் முகக்கவச உறையை அணிந்திருக்க வேண்டியுள்ளது. இன்னும் வேறெந்த வகைகளில் நாம் தண்டிக்கப்படுவோம் என்பது தெரியவில்லை,” என்று தமது பதிவில் குறிப்பிட்டிருந்தார் செட் சைட்.

இவ்வாறு தவறான தகவலை வெளியிட்ட அவர் மீது அரசு நடவடிக்கை எடுக்கவேண்டுமென பலர் வலியுறுத்தி உள்ளனர். கடந்த இரு தினங்களுக்கு முன்புதான் கொரோனா கிருமித் தொற்றுப் பரவல் குறித்துத் தவறான தகவல்களைப் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மலேசிய அரச காவல்துறையும், அந்நாட்டின் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதற்கிடையே கிருமித் தொற்று குறித்து பொய் தகவல்களைப் பரப்பிய குற்றச்சாட்டின் பேரில் 34 வயது ஆடவர் ஒருவரை மலேசிய போலிசார் கைது செய்துள்ளனர்.

சீனா, மலேசியா உறவு பாதிக்கப்படாது என சிறப்புத்தூதர் நம்பிக்கை

இதற்கிடையே சீனக் குடிமக்கள் மலேசியாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதால் இருதரப்பு உறவில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என சீனாவுக்கான மலேசியாவின் சிறப்புத் தூதர் டான் கோக் வாய் தெரிவித்துள்ளார். இருநாடுகளுக்கும் இடையே நட்பும் இணக்கமான உறவும் பல்லாண்டுகளாக நீடித்து வருவதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

“சீனக் குடிமக்களுக்கு விதிக்கப்பட்டுள்ள இந்தத் தடை தற்காலிகமானதுதான். சீனாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் தங்கள் வசிப்பிடத்தை விட்டு வெளியேற அந்நாட்டு அரசாங்கமே தடை விதித்துள்ளது. 2020ஆம் ஆண்டில் சுற்றுலாத் துறையை மேம்படுத்த இரு நாடுகளுமே திட்டமிட்டிருந்தன. தற்போது அதற்குப் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தக் கிருமித் தொற்று இல்லாமல் போயிருந்தால் சீனாவிலிருந்து ஏராளமானோர் மலேசியாவுக்கு வருகை தந்திருப்பர். சீனாவுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த உலகச் சமூகத்துக்கும் இது சவாலான காலகட்டம். இதிலிருந்து மீண்டுவர சீனாவுக்கு அனைவரும் கைகொடுக்க வேண்டும்,” என்று டான் கோக் வாய் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே நடப்பாண்டுக்கான சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்பிலான இலக்கில் எந்த மாற்றமும் இல்லையென மலேசிய சுற்றுலாத் துறை தெரிவித்துள்ளது. கொரோனா கிருமித் தொற்றுக் காரணமாக சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை சற்றே குறையலாமே தவிர, சுற்றுலா சார்ந்த மற்ற இலக்குகளில் எந்தப் பாதிப்பும் இருக்காது என நம்புவதாக சுற்றுலாத் துறை அமைச்சர் முகமதின் கெடாபி நம்பிக்கை தெரிவித்துள்ளார். மலேசியாவுக்கு அதிகளவு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் பட்டியலில் சீனா 3ஆம் இடத்தில் உள்ளது.

சீனாவில் கொரோனா கிருமித் தொற்றின் பிறப்பிடமாகக் கருதப்படும் வுஹான் பகுதியில் இருந்து லட்சக்கணக்கானோர் வெளியேறி விட்டதாக அந்நகர மேயர் தெரிவித்துள்ளார்.

கிருமித் தொற்றுப் பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக அந்நகரில் இருந்து யாரும் வெளியேறக் கூடாது என சீன அரசு அறிவித்துள்ளது. எனினும் இந்தத் தடை அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே 11 மில்லியன் மக்கள் தொகை கொண்ட வுஹான் நகரிலிருந்து சரி பாதி பேர் வெளியேறி விட்டதாக அம்மேயர் கூறியுள்ளார்.

அவ்வாறு வெளியேறியவர்கள் ஹாங்காங், பேங்காக், சிங்கப்பூர் அல்லது டோக்கியோவுக்குச் சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது. மேலும் சிலர் மலேசியாவுக்கு வந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

மலேசிய கையுறை உற்பத்தியாளர்களுக்கு சீனா கோரிக்கை

இதற்கிடையே சீனாவில் மருத்துவக் கையுறைகளின் தேவை அதிகரித்துள்ளது.

அங்கு கிருமித் தொற்று பரவலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரத் துறை பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இந்தக் கையுறைகள் தேவைப்படுகின்றன.

இதையடுத்து மலேசியாவில் உள்ள மருத்துவக் கையுறை உற்பத்தியாளர்களிடம் அதிக எண்ணிக்கையிலான கையுறைகளை உடனடியாக அனுப்பி வைக்குமாறு சீனா கோரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் அவசரநிலையைக் கருத்தில் கொண்டு உடனடியாக சீனாவுக்கு அதிக எண்ணிக்கையிலான கையுறைகள் அனுப்பி வைக்கப்படும் என மலேசிய கையுறை உற்பத்தியாளர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.

இதற்கிடையே மலேசியாவின் பல்வேறு பகுதிகளில் முகக்கவச உறைகள் படுவேகமாக விற்றுத் தீர்ந்தன. மேலும் கைகளைச் சுத்தப்படுத்தும் திரவ பாட்டில்களும் விற்றுத் தீர்ந்துவிட்டதால், பல கடைகள், மருந்தகங்களில் அவை இல்லை என்பதற்கான அறிவிப்பு அட்டைகளை வெளியே தொங்கவிட்டுள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »