கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): சீனாவுக்கு வெளியே முதல் மரணம்

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): சீனாவுக்கு வெளியே முதல் மரணம்

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளான ஒருவர் பிலிப்பைன்ஸில் பலியாகி உள்ளார். சீனாவுக்கு வெளியே பதிவாகும் முதல் மரணம் இது.

கொரோனா வைரஸ் பாதிப்பின் மையப்புள்ளியாக விளங்கும் ஹூபே மாகாணத்தில் உள்ள வுஹான் நகரத்தை சேர்ந்த 44 வயதுடைய நபர் அண்மையில் பிலிப்பைன்ஸ் வந்தார்.

பிலிப்பைன்ஸ் வருவதற்கு முன்பே அவர் கொரோனா வைரஸால் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கலாம் என்கிறது உலக சுகாதார அமைப்பு.

அந்த சீனருக்கு நிமோனியா காய்ச்சல் இருந்திருக்கிறது. இதனை அடுத்து அவர் மணீலாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

கொரோனா வைரஸால் பாதிப்புக்கு உள்ளான நபருடன் ஒரு சீனப் பெண் வந்தார். அவரும் கொரோனா வைரஸால் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பது தெரிய வந்துள்ளது.

உலக சுகாதார அமைப்பு

சீனாவுக்கு வெளியே பதிவாகி உள்ள முதல் மரணம் இது என்கிறார் உலக சுகாதார அமைப்பின் பிலிப்பைன்ஸ் பிரதிநிதி ரபிண்ட்ரா.

மேலும் அவர், “இது உள்ளூரில் ஏற்பட்ட பாதிப்பு அல்ல. அந்த நபர் கொரோனா வைரஸ் பாதிப்பின் மையப்புள்ளியாக விளங்கும் வுஹான் நகரத்திலிருந்து வந்திருக்கிறார்” என்றார்.

சீனாவிலிருந்து வரும் சுற்றுலா பணிகளுக்கு பிலிப்பைன்ஸ் தடை விதித்த சில மணி நேரங்களில் இந்த மரணம் பதிவாகி உள்ளது.

இதுவரை என்ன நடந்தது? – சமீபத்திய தகவல்கள்

  • சீனாவிற்கு சமீபத்தில் சென்று திரும்பிய வெளிநாட்டவர்களுக்கு தங்கள் எல்லையை மூடியுள்ள அமெரிக்கா, ஹூபே மாகாணத்திற்கு சென்று திரும்பிய அமெரிக்கர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது.
  • அவ்வாறு தனிமைப்படுத்தப்படும் நபர்கள் தங்குவதற்கான வசதியை ஏற்பாடு செய்துத்தர அமெரிக்க பாதுகாப்பு அலுவலகமான பெண்டகன் முன்வந்துள்ளது.
  • அமெரிக்காவில் இதுவரை எட்டு பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • சீனாவில் இருந்து 300 இந்தியர்கள் மற்றும் 100 ஜெர்மனியர்கள் தங்கள் நாடுகளுக்கு திரும்பியுள்ளனர்.
  • வரும் நாட்களில் தங்கள் நாட்டினரை சீனாவில் இருந்து வெளியேற்ற தாய்லாந்து அரசு நடவடிக்கை எடுக்க உள்ளது.
  • சீன குடிமக்கள் விசா இல்லாமல் சுற்றுலாவுக்காக உள்நுழையும் வசதியை ரஷ்யா நிறுத்தியுள்ளது.
  • மருந்துகள் மற்றும் மருத்துவ வசதிகளை அனுப்புமாறு ஐரோப்பிய ஒன்றியத்தை சீனா கேட்டுக் கொண்டுள்ளது.
  • சீனாவின் அதிபரிடம் வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
  • சீனாவில் ஆப்பிள் தனது ஷோரூம்களை தற்காலிகமாக மூடுவதாக அறிவித்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

Author Image
Nila Raghuraman