Press "Enter" to skip to content

செளதி அரேபியாவில் முதல்முறையாக பெண்கள் கால்பந்து போட்டி மற்றும் பிற செய்திகள்

செளதி அரேபியாவில் முதல்முறையாக பெண்கள் கால்பந்து லீக் போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த லீக் போட்டிகள் தலைநகர் ரியாத்திலும் மற்றும் இரு பிற நகரங்களிலும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் மிக கடுமையான விதிகள் கொண்ட நாடாக கருதப்படும் செளதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் சமீபத்தில் அந்நாட்டில் சில மாற்றங்களை அறிமுகப்படுத்தினார். அதன் ஒரு பகுதியாக இந்த லீக் போட்டிகள் நடைபெறுகின்றன.

பெண்களை விளையாட்டில் ஊக்குவிப்பதே இந்த லீக் போட்டிகளின் நோக்கம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கடந்த 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் செளதியில் பெண்கள் காலபந்து அரங்கத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.

அதே வருடம் செளதியில் பல தசாப்தக்காலங்களாக நிலவி வந்த பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கான தடை நீக்கப்பட்டது.

அதேபோன்று கடந்த வருடம் ஆண் துணையில்லாமல் பெண்கள் வெளிநாடுகளுக்கு செல்வதற்கான தடையும் நீக்கப்பட்டது. உணவகங்களில் ஆண் பெண் தனித்தனியாக அமர வேண்டும் என்னும் விதியும் நீக்கப்பட்டது.

இருப்பினும் பல முக்கிய பெண்கள் நல ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். பெண் உரிமைக்காக மேலும் பல நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட வேண்டும் என ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

டெல்லி வன்முறை: 13 பேர் பலி, போராட்டக்காரர்கள் அகற்றம், பள்ளிகளுக்கு விடுமுறை

குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராக வடகிழக்கு டெல்லியில் நடந்துவரும் போராட்டங்களின்போது ஏற்பட்ட வன்முறைகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.

குரு தேஜ் பகதூர் மருத்துவமனை அலுவலர்கள், திங்கள்கிழமை முதல் 13 மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக கூறியதை மேற்கோள்காட்டி ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் ட்வீட் செய்துள்ளது.

இந்த வன்முறைகளில் 150 பேர் காயமடைந்துள்ளனர். இந்த போராட்டங்களுக்குப் பிறகு டெல்லியின் சாந்த் பாக், பஜன்புரா, பிரிஜ்புரி, கோகுல்புரி மற்றும் ஜாஃப்ராபாத் ஆகிய பகுதிகளில் பதற்றச் சூழல் காணப்படுகிறது.

ஜாஃபராபாத் பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுவந்தவர்கள் அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளனர். “ஜாஃபராபாத் சாலை கிளியர் செய்யப்பட்டுள்ளதாகவும், வட கிழக்கு டெல்லியில் கண்டதும் சுட உத்தரவு ஏதும் பிறப்பிக்கப்படவில்லை என்றும் டெல்லி போலீஸ் தெரிவித்துள்ளது” என்கிறது ஏ.என்.ஐ. செய்தி முகமை.

விரிவாக படிக்க:டெல்லி வன்முறை: 13 பேர் பலி, போராட்டக்காரர்கள் அகற்றம், பள்ளிகளுக்கு விடுமுறை

“பிரதமர் மோதி மிகுந்த மத நம்பிக்கையுள்ள தலைவர்”

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், டெல்லி வன்முறைகள் குறித்த கேள்விக்கு அது பற்றி இந்தியாதான் முடிவு செய்யவேண்டும் என்று குறிப்பிட்டார்.

அவர் தமது பேட்டியின்போது ஓரிடத்தில் பிரதமர் நரேந்திர மோதி மிகுந்த மத நம்பிக்கையுள்ள தலைவர் என்று தெரிவித்தார்.

மத சுதந்திரம் குறித்து தாம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியுடன் பேசியதாகவும் அவர் கூறினார்.

அது குறித்து அவர்கள் கடுமையாக முயற்சி எடுத்து வருவதாக குறிப்பிட்ட அவர், “தனிப்பட்ட வன்முறை சம்பவங்கள் பற்றி கேள்விப்பட்டேன். ஆனால், அது குறித்து இந்தியாவுடன் நான் பேசவில்லை. அது இந்தியா தொடர்புடையது, அது குறித்து இந்தியாவே முடிவெடுக்க முடியும்” என்றும் அவர் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் குறித்து சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் பேசியதாகவும், அது தொடர்பாக சீனா கடுமையாக முயற்சிகள் எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

காஷ்மீர் பிரச்சனை பல முனைகளிலும் முள்ளாக இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், தாம் இதில் மத்தியஸ்தம் செய்யத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

விரிவாக படிக்க: டெல்லியில் டிரம்ப்: “பிரதமர் மோதி மிகுந்த மத நம்பிக்கையுள்ள தலைவர்”

கொரோனா வைரஸ்: தென் கொரியாவில் விரைவாகப் பரவுவது ஏன் ?

சீனாவை தவிர அதிகமான கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ளும் நாடாக தற்போது தென் கொரியா விளங்குகிறது. ஒரே வாரத்தில் தென் கொரியாவில் 900க்கும் மேற்பட்டவர்களுக்கு தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆனால் விரைவாக பரவிய இந்த வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ள தென் கொரியா தயார் நிலையில் இருந்தது. சீனாவுக்கு அடுத்தபடியாக, தென் கொரியாவில் மட்டும் இவ்வளவு விரைவாக கொரோனா வைரஸ் பரவியதன் காரணம் என்ன என்ற சந்தேகம் பலருக்கு எழுந்துள்ளது.

கோவிட் – 19 வைரஸ் பாதிப்பு தென்கொரியாவின் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் இடையேதான் அதிகம் பரவியுள்ளது. எதையும் வெளிப்படுத்தாமல் பிரச்சனைகளை தங்கள் சமூகத்திற்குள்ளேயே ரகசியமாக காக்கும் தன்மை கொண்ட பிரிவினராக இவர்கள் கருதப்படுகிறார்கள். இதனால் வைரஸ் பாதிப்பு இருப்பது வெளியில் தெரிய நாள் ஆனது என சிலர் விமர்சிக்கின்றனர்.

விரிவாக படிக்க:கொரோனா வைரஸ்: தென் கொரியாவில் விரைவாகப் பரவுவது ஏன் ?

சென்னையில் அச்சத்தால் பிறப்புச் சான்றிதழ் வாங்கும் இஸ்லாமியர்கள்

இந்தியா முழுவதும் குடியுரிமை திருத்த சட்டம் அமலுக்கு வந்துள்ள நிலையில், தேசிய குடிமக்கள் பதிவேடு அமலுக்கு வந்தால் பிறப்புச் சான்றிதழ் இல்லாதவர்கள், குடிமக்களாக அங்கீகரிக்கப்படமாட்டார்கள் என்ற அச்சம் நிலவுவதால், நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள், சென்னை மாநகராட்சியில் பிறப்புச் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்து வருகின்றனர்.

குடியுரிமைக்கான ஆதாரங்களில் முக்கியமான ஆதாரமாக பிறப்புச் சான்றிதழ் கேட்கப்படும் என்றும் அந்தச் சான்றிதழ் இல்லாதவர்கள், சட்டவிரோத குடியேறிகள் என்று சந்தேகிக்கப்படும் நபர்களாக அறிவிக்கப்படுவார்கள் என்றும் வாட்ஸ்-ஆப் மற்றும் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவுகின்றன.

இதுவரை பிறப்புச் சான்றிதழ் வாங்காதவர்கள் மற்றும் சான்றிதழில் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களை திருத்த வேண்டிய பலர், சென்னை மாநகராட்சி அலுவலகத்திற்கு வருகின்றனர் என்பதை நேரில் பார்க்க முடிந்தது.

விரிவாக படிக்க:குடியுரிமை குறித்த அச்சம்: சென்னையில் பிறப்பு சான்றிதழ் வாங்க குவியும் இஸ்லாமியர்கள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »