Press "Enter" to skip to content

மலேசியா அரசியல்: பிரதமர் பதவிக்கான போட்டியில்களமிறங்கிய மகாதீர் – ஆதரவு தெரிவிக்கிறாரா அன்வார்?

மலேசிய பிரதமர் பதவிக்கான போட்டியில் தானும் நீடிப்பதாக தெரிவித்துள்ளார் மகாதீர் மொஹம்மத். தமக்கு அன்வார் இப்ராகிம் தலைமையிலான பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் ஆதரவு கிடைத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

மலேசிய அரசியல் களத்தில் தினந்தோறும் நிகழ்ந்து வரும் அதிரடித் திருப்பங்களும், புதுப்புதுக் காட்சிகளும் அந்நாட்டு மக்களை மலைக்கவும் குழம்பவும் வைத்திருக்கிறது.

பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக மகாதீர் சில தினங்களுக்கு முன்பு திடீர் அறிவிப்பை வெளியிட்டார். இதையடுத்து மலேசியாவின் அடுத்த பிரதமர் யார் எனும் கேள்வி எழுந்தது.

நேற்று இரவு வரை நடைபெற்ற தொடர் ஆலோசனைக் கூட்டங்கள், பல்வேறு கட்சித் தலைவர்கள் மத்தியிலான ரகசிய சந்திப்புகள், அணி மாறிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்று பல நிகழ்வுகளின் முடிவில், பிரதமர் பதவிக்கான போட்டியில் அன்வார் இப்ராகிம், மொகிதின் யாசின் ஆகிய இருவருக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுவதாகக் கூறப்பட்டது.

மகாதீரைப் புறக்கணித்த பாரிசான் நேசனல் கூட்டணி

பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி சார்பில் அன்வாரும், எதிர்க்கட்சிக் கூட்டணியான பாரிசான் நேசனல் சார்பில் மொகிதின் யாசினும் பிரதமர் பதவிக்கான வேட்பாளர்களாக முன்மொழியப்பட்டனர். இடைக்காலப் பிரதமராக பொறுப்பு வகிக்கும் மகாதீர் மொஹம்மத் குறித்து யாரும் எதுவும் பேசவில்லை. குறைந்தபட்சம் அவரே கூட தமது நிலைப்பாடு குறித்து ஏதும் அறிவிக்கவில்லை.

“நான் பிரதமராக வர வேண்டும் என்று விரும்பும் தனி நபர்கள், அரசியல் கட்சிகளின் ஆதரவை ஏற்றுக் கொள்வேன். எனினும் பாரிசான் நேசனல் கூட்டணியில் இடம்பெற்றுள்ள அம்னோ கட்சியின் ஆதரவை ஏற்க மாட்டேன்.

“ஊழல்வாதிகள், ஊழலுக்கு ஆட்பட்ட கட்சிகளின் ஆதரவை ஏற்க முடியாது. அதே சமயம் அம்னோ கட்சியில் இருந்து பிரிந்து வரக் கூடியவர்களின் ஆதரவு கிடைத்தால் ஏற்பேன்,” என்று தெளிவாக அறிவித்திருந்தார் மகாதீர்.

இதனால் பாரிசான் நேசனல் கூட்டணி அவரைப் புறக்கணித்தது.

இன்று காலை நிகழ்ந்த திடீர் திருப்பம்

இந்நிலையில் திடீர் திருப்பமாக பிரதமர் பதவிக்கான போட்டியில் தானும் இருப்பதாக இன்று காலை அறிவித்துள்ளார் மகாதீர். மேலும் அன்வார் தலைமையிலான பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி தம்மை ஆதரிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இதை அன்வார் தரப்பும் உறுதி செய்துள்ளது.

“இன்று காலை பக்காத்தான் ஹராப்பான் கூட்டணித் தலைவர்கள் என்னைச் சந்தித்துப் பேசினர். அதன் பிறகு எனக்கு நம்பிக்கை வந்துள்ளது. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்கும் அளவுக்கு எனக்கு ஆதரவு இருப்பதாக உறுதியாக நம்புகிறேன்.

“எனவே பிரதமர் பதவிக்கான வேட்பாளராக என்னை முன்னிறுத்த தயாராக உள்ளேன். எனது இந்த முடிவு குறித்து மாமன்னருக்கு உரிய வகையில் தெரியப்படுத்தப்படும்,” என மகாதீர் தெரிவித்துள்ளார்.

“பிரதமர் பதவிக்காக அன்வாருக்கும், மொகிதின் யாசினுக்கும் இடையே தான் நேரடிப் போட்டி என்று கூறப்பட்ட நிலையில், மகாதீர் இவ்வாறு அறிவித்தது மலேசிய மக்கள் மத்தியில் ஆச்சரிய அலைகளை ஏற்படுத்தி உள்ளது.

எவ்வாறு இந்த திடீர் மாற்றம் ஏற்பட்டது?

பிரதமர் பதவிக்கான போட்டியில், மகாதீர் மொஹம்மத் திடீரெனக் களமிறங்குவதன் பின்னணி என்ன என்பது தெரிய வந்துள்ளது.

அதிக உறுப்பினர்களின் ஆதரவுடன் தாம் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவது உறுதி என்று நம்பிக்கையுடன் கூறி வந்தார் அன்வார் இப்ராகிம்.

இந்நிலையில் தேசிய முன்னணி உட்பட பல்வேறு தரப்பில் இருந்தும் அவரது போட்டியாளரான மொகிதின் யாசினுக்கு ஆதரவு திரண்டது. குறிப்பாக சபா மற்றும் சரவாக் மாநிலங்களைச் சேர்ந்த இரு கட்சிகளின் ஆதரவும் அவருக்கு இருப்பதாக தகவல் வெளியானது.

இவ்விரு மாநிலங்களைச் சேர்ந்த கட்சிகளுக்கு நாடாளுமன்றத்தில் கணிசமான எண்ணிக்கையிலான எம்பிக்கள் உள்ளனர். எனவே அன்வார் கடும் போட்டியை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவானது.

இதையடுத்தே பக்காத்தான் ஹராப்பான் கூட்டணித் தலைவர்கள் தங்கள் வியூகத்தை மாற்ற முடிவெடுத்தனர். அதன்படி, மகாதீரை ஆதரிப்பது என அவர்கள் தீர்மானித்தனர். தற்போதைய சூழ்நிலையில், மகாதீர் அனைவருக்கும் பொதுவானவர் எனும் தோற்றம் எழுந்துள்ளது.

நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடியான சூழ்நிலையில், மகாதீர் போன்ற பொதுவான தோற்றம் கொண்ட ஒருவரை பிரதமர் வேட்பாளராக முன்நிறுத்துவது பலன் தரும் என பக்காத்தான் ஹராப்பான் தலைமை கருதியதாகக் கூறப்படுகிறது.

அனைத்தையும் விட முக்கியமாக எதிர்க்கட்சிகளின் தலைமையிலான ஆட்சியை வர விடாமல் தடுக்க மகாதீர் தான் பொருத்தமான தேர்வாக இருக்க முடியும் என பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி முடிவுக்கு வந்ததாகவும் தெரிகிறது.

துரோகிகளும் ஊழல்வாதிகளும் ஆட்சியமைக்க முயற்சி: பக்காத்தான் குற்றச்சாட்டு

இதற்கிடையே, துரோகிகளும் ஊழல்வாதிகளும் ஆட்சியமைப்பதை அனுமதிக்க இயலாது என பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அக்கூட்டணி இன்று காலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

“கொல்லைப்புறம் வழியாக துரோகிகளும் ஊழல்வாதிகளும் ஆட்சியமைக்க முயற்சிப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம். எனவே இத்தகைய முயற்சியைத் தடுக்கும் போராட்டத்தில் எங்களைத் தற்காத்துக் கொள்ளும் பொருட்டு டாக்டர் மகாதீர் மொஹம்மத்துக்கு எங்களுடைய முழு ஆதரவை வழங்குகிறோம்,” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் மொகிதின் யாசினுக்கு ஆதரவு அளிப்பதாக கூறப்படும் பெர்சாத்து கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் சிலர் அவர் மீது அதிருப்தியில் இருப்பதாக பக்காத்தான் தரப்பு கூறுகிறது.இத்தகைய அதிருப்தியாளர்களின் ஆதரவுடன் மகாதீர் தமது பெரும்பான்மை பலத்தை நிரூபிப்பார் என்றும் பக்காத்தான் தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இதற்கேற்ப பெர்சாத்து கட்சியின் இளைஞர் பிரிவு தலைவரும், முன்னாள் இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சருமான சைட் சாதிக் சையட் தாம் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக மொகிதின் யாசினை முன்மொழியவில்லை எனக் கூறியுள்ளார்.

இது தொடர்பான சத்யபிரமாண பிரகடனம் எதிலும் தாம் கையெழுத்திடவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தி உள்ளார்.

“நான் யாருக்கும் வாக்குறுதி அளிக்கவில்லை. எந்த பிரகடனத்திலும் கையெழுத்திடவில்லை. நான் ஊழலுக்கும் ஊழல்வாதிகளுக்கும் துணை போக மாட்டேன்,” என்று சாதிக் சையட் கூறியுள்ளார்.

மலேசியாவின் அடுத்த பிரதமர் அடையாளம் காணப்படுவதற்குள் இது போன்று மேலும் சில திடீர் திருப்பங்கள் நிகழ வாய்ப்புண்டு என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »