கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): ஃபேஸ்புக், ட்விட்டர், நெட்ஃப்ளிக்ஸ் மற்றும் அமேசான் நிறுவனம் எடுத்துள்ள முக்கிய முடிவுகள் என்ன? மற்றும் பிற செய்திகள்

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): ஃபேஸ்புக், ட்விட்டர், நெட்ஃப்ளிக்ஸ் மற்றும் அமேசான் நிறுவனம் எடுத்துள்ள முக்கிய முடிவுகள் என்ன? மற்றும் பிற செய்திகள்

“ஃபேஸ்புக், ட்விட்டர், நெட்ஃப்ளிக்ஸ் மற்றும் அமேசான் நிறுவனத்தின் நிலை”

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அதிகம் பயன்படுத்த முடிவு செய்திருக்கிறது ஃபேஸ்புக். ஃபேஸ்புக் உள்ளடக்கத்தை, அதாவது நாம் பதிவிடும் இடுகைகள் மற்றும் காணொளிகளை மதிப்பீடு செய்ய ஏறத்தாழ 15,000 மதிப்பீட்டாளர்கள் (Content Moderator) ஃபேஸ்புக்கில் இருக்கிறார்கள். இவர்கள் ஃபேஸ்புக்கின் நேரடி ஊழியர்கள் இல்லை, ஒப்பந்த ஊழியர்கள். கொரோனா காரணமாக வீட்டிலிருந்து பணி செய்யும் இவர்கள் அளிக்கப்பட்ட பணியை முழுமையாக முடிக்கவில்லை என்றாலும் அவர்களுக்கான ஊதியம் வழங்கப்படும் என ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் நிறுவனமானது கொரோனா குறித்துப் பரப்பப்படும் ஆதாரபூர்வமற்ற தகவல்களை நீக்கப்போவதாக அறிவித்துள்ளது.

ஐரோப்பாவில் கொரோனா தொற்று அச்சம் காரணமாக அனைவரும் வீட்டிலேயே இருப்பதை அடுத்து நெட்ஃப்ளிக்ஸ் பயன்பாடானது அதிகரித்துள்ளது. இதன் காரணமாக உயர்ந்துள்ள இணையப் பயன்பாட்டை குறைக்க நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் காணொளி தரத்தை குறைத்துள்ளது. இது ஐரோப்பா மற்றும் பிரிட்டனுக்கு மட்டும் பொருந்தும். அதே சமயம் 4K தரத்தில் உள்ள படங்கள் எப்போதும் போல் நெட்ஃப்ளிக்ஸில் கிடைக்கும்.

அதிகம் தேவைப்படாத பொருட்களை தங்களது கிடங்கிலிருந்து அப்புறப்படுத்த அமேசான் நிறுவனம் முடிவு செய்துள்ளது. கொரோனா அச்சம் காரணமாக பெரும்பாலான மக்கள் இணையத்திலேயே பொருட்களை வாங்குகிறார்கள். இதனை அடுத்து அத்தியாவசிய பொருட்களை அதிகப்படுத்த முடிவு செய்துள்ள அமேசான் தேவையற்ற பொருட்களின் இருப்பை குறைக்கவுள்ளது.

கொரோனா வைரஸ்: உயிரிழப்பில் சீனாவை விஞ்சிய இத்தாலி

கொரோனா வைரஸால் இத்தாலியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நேற்று ஒரே நாளில் 427 அதிகரித்து மொத்தம் 3,405 என்ற எண்ணிக்கையை அடைந்துள்ளது. இதன் மூலம், கொரோனா வைரஸ் முதன் முதலாக கண்டறியப்பட்ட சீனாவை விட அதிகமான உயிரிழப்புகள் ஏற்பட்ட நாடாக இத்தாலி உருவெடுத்துள்ளது.

தங்களது நாட்டில் இதுவரை கோவிட்-19 நோய்த்தொற்றால் 3,245 பேர் உயிரிழந்துள்ளதாக சீனா தெரிவித்தாலும், அந்தத் தரவின் உண்மைத்தன்மை குறித்த கேள்விகள் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகின்றன.

விரிவாகப் படிக்க:கொரோனா உயிரிழப்பில் சீனாவை விஞ்சிய இத்தாலி; மத்திய கிழக்கு நாடுகள், ஆப்பிரிக்காவின் நிலை என்ன?

“கொரோனா மாதிரி கிளம்புறாய்ங்களே”: போலி டிவிட்டர் குறித்து வடிவேலு

நடிகர் வடிவேலு ட்விட்டரில் இணைந்திருப்பதாக ஒரு ட்விட்டர் கணக்கும் அவர் பேசும் வீடியோ ஒன்றும் வெளியாகியிருக்கிறது. ஆனால், “இது எவனோ வேண்டாதவன் செய்த வேலை” என்கிறார் வடிவேலு.

சிறிது நேரத்திற்கு முன்பாக, @VadiveluOffl என்ற ட்விட்டர் கணக்கு ஒன்று துவக்கப்பட்டது. சிறிது நேரத்திலேயே பத்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் அதனைப் பின்தொடர ஆரம்பித்தனர். அதில் “பல ஆண்டுகள் கடந்தாலும் என்னை மறக்காமல் இருக்கம் தமிழ் மக்களுக்கு வணக்கம். என்னுடைய பழைய ட்விட்டர் தொலைந்து போய் விட்டது. அதனால் #ரஜினி-ஐ போல் திரும்பி வந்துட்ட சொல்லு” என்று கூறப்பட்டிருந்தது.

விரிவாகப் படிக்க: “கொரோனா மாதிரி கிளம்புறாய்ங்களே”: போலி டிவிட்டர் குறித்து வடிவேலு

கொரோனா: ராணுவத்தை களமிறக்கும் அரசு

மலேசிய அரசின் பொது நடமாட்ட கட்டுப்பாடு நடவடிக்கைக்கு பொது மக்கள் சரிவர ஒத்துழைக்கவில்லை. இதையடுத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர ராணுவத்தை களமிறக்க மலேசிய அரசு முடிவு செய்துள்ளது. இத்தகவலை பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி தெரிவித்துள்ளார்.

விரிவாகப் படிக்க: மலேசியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்தது

கொரோனா வைரஸ்: இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 244ஆக உயர்வு

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 244ஆக உயர்ந்துள்ளதாக இந்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த சுகாதார அமைச்சக அதிகாரிகள், கொரோனா தொற்று இருப்பவர்களை கண்டறியும் பணிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக தெரிவித்தனர். மேலும் பிரதமர் அறிவித்த ஒருநாள் ஊரடங்கு உத்தரவுக்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிப்பது தொற்று பரவுதலை தடுக்கும் என்று குறிப்பிட்டனர்.

விரிவாகப் படிக்க:கொரோனா வைரஸ்: இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 244ஆக உயர்வு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

Author Image
Nila Raghuraman