Press "Enter" to skip to content

கொரோனா தொற்று: மருத்துவப் பணியாளர்கள் அதிகம் பாதிக்கப்படுவது எப்படி?

கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் மிகப்பெரிய விலையை தந்து கொண்டிருப்பவர்கள் சுகாதாரப் பணியாளர்கள்தான்.

பல்லாயிரக்கணக்கான சுகாதாரப் பணியாளர்கள் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகி இருக்கின்றனர். இந்த நோயால் மருத்துவப் பணியாளர்கள் இறந்ததாக மேலும் மேலும் செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன.

பாதுகாப்பு உடை மற்றும் முக கவசம் அணிந்திருந்தாலும், மற்ற சாதாரண மக்களைக் காட்டிலும் அதிக அளவில் மருத்துவர்களும் செவிலியர்களும் மற்ற சுகாதாரப் பணியாளர்களும் இந்த நோய் தொற்றும் வாய்ப்பு அதிகம் உள்ளவர்களாக இருக்கிறார்கள்.

அது மட்டுமல்ல இந்த நோய் பாதிப்பு தீவிரமடையும் வாய்ப்பு உள்ளவர்களாகவும் இவர்கள் இருக்கிறார்கள்.

அவர்களுக்கு இந்த அளவுக்கு தீவிர பாதிப்பு ஏற்படுவது எதனால்?

வைரல் லோடு

அவர்கள் அதிகமான வைரஸை எதிர்கொள்வதே இதற்கான முக்கிய காரணம் என்கிறார்கள் வல்லுநர்கள்.

வைரஸ் உடலுக்குள் நுழைந்த பிறகு அது உயிரணுக்களுக்குள் படை எடுத்துச் செல்கிறது. அங்கு சென்றபின் ஒவ்வொரு வைரசும் தன்னைப் போலவே பல படிகளை உருவாக்குகிறது. இப்படி படியாக்கம் செய்யப்பட்ட வைரஸ்களின் எண்ணிக்கை அடுத்தடுத்த நாட்களில் மிக அதிக அளவை எட்டுகிறது.

இப்படி ஏற்படும் வைரஸ் அடர்த்தியின் அளவை ‘வைரல் சுமை’ (viral load) என்று குறிப்பிடுகிறார்கள். ஒருவர் உடலில் வைரல் சுமை அதிகமாக இருந்தால் அவருக்கு உடலில் நோயின் தீவிரம் மோசமாக இருக்க வாய்ப்பிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் வைரல் சுமை அதிகமாக உள்ள நோயாளி அதிக அளவில் கிருமியைப் பரப்பு கூடியவராகவும் இருக்க வாய்ப்பிருக்கிறது.

இது குறித்து பிபிசி நியூஸ் நைட் நிகழ்ச்சியில் பேசிய லண்டன் இம்பீரியல் கல்லூரியின் தொற்று நோயியல் துறைப் பேராசிரியர் வெண்டி பார்க்லே “ஒருவர் உடலில் உள்ள வைரஸ்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் அவற்றை அவர் அடுத்தவருக்கு பரப்புகிற வாய்ப்பும் அதிகமாகவே இருக்கும்” என்று கூறினார்.

மோசமாக நோய் தொற்றிய, ஏராளமான வைரஸை உடலில் சுமந்து கொண்டிருக்கிற நபர்களோடு டாக்டர்களும் செவிலியர்களும் நெருக்கமான தொடர்பில் இருக்கிறார்கள். இதனால் மருத்துவர்களும், செவிலியர்களும் அதிக அளவிலான பாதிப்பை எதிர்கொள்கிறார்கள்.

சீனாவில் வுஹான் நகரில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட ஒரு நோயாளி தமக்கு காய்ச்சல் ஏற்படுவதற்கு முன்பே 14 மருத்துவ பணியாளர்களுக்கு கொரோனா கிருமியைப் பரப்பினார் என்கிறது உலக சுகாதார நிறுவனம்.

“நீங்கள் ஆரோக்கியமான ஆளாக இருந்தால் கூட உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு இவ்வளவு வைரஸையும் எதிர்த்துப் போராடுவது மிகவும் கடினமான செயல். வைரசுக்கும் உடலின் நோய் எதிர்ப்பு பு அமைப்புக்கும் இடையே நடக்கிற போராட்டத்தில் யாருடைய கை ஓங்கி இருக்கும் என்பதை உடலில் நுழைந்த வைரஸின் அளவே தீர்மானிக்கும் என்பது கிட்டத்தட்ட நிச்சயம்” என்கிறார் வெண்டி பெர்க்லே.

சோதனைக் கூட விலங்குகள் உடல்களில் வெவ்வேறு அளவில் வைரஸ் தொற்ற வைத்து ஆய்வு செய்ததில், மிக அதிக அளவிலான வைரஸ் தொற்றுக்கு ஆளான விலங்குகளுக்கு நோயின் தீவிரம் மோசமாக இருந்தது என்கிறார் அவர்.

கோவிட்-19 உடலில் எப்படி நுழைகிறது?

‘சார்ஸ் கோவ்-2’ மற்றும் ‘கோவிட்-19’ ஆகிய பெயர்களால் அறியப்படும் நாவல் கொரோனா வைரஸ் ஒருவர் உடலில் இருக்கிறது எனில்

இருமல் அல்லது சுவாசத்தின் மூலம் பரவுவதற்குத் தயாராக அது அவரது சுவாசப் பாதையின் மேற்பகுதியில் அமர்ந்திருக்க வாய்ப்பு உள்ளது.

“ஒவ்வொரு முறை நாம் சுவாசிக்கும்போதும் பேசும்போதும், நம் மூக்கிலும் தொண்டையிலும் இருந்து நுண் துளிகளை காற்றில் சிதற விடுகிறோம்” என்று நியூஸ் நைட் நிகழ்ச்சியில் தெரிவித்தார் பேராசிரியர் பார்க்லே.

அந்த துளிகளில் சில கீழே விழுந்து தரையை மாசுபடுத்துகின்றன. அதனால்தான் நாம் மற்றவர்களிடம் இருந்து தள்ளி நிற்க வேண்டும் என்றும் அடிக்கடி கையை கழுவ வேண்டும் என்றும் கூறுகிறோம்.

எத்தனை துளிகள் உள்ளே சென்றால் ஒருவர் நோயாளி ஆவார் என்பது குறித்து தெளிவான கணக்கு இல்லை.

“நமக்கு மிகவும் பரிச்சயமான இன்ஃப்ளூயன்சா வைரசை பொருத்தவரை ஒருவர் உடலில் மூன்று துளிகள் சென்றாலே அது நோயை உண்டாக்கிவிடும். சார்ஸ் கோவ்-2 வைரஸ் ஒருவரின் உடலில் சென்று நோயை பரப்புவதற்கு எத்தனை நுண் துளிகள் தேவை என்பது இன்னும் நமக்கு தெரியாது. ஆனால் அது மிகக் குறைவான அளவாகவே இருக்க வாய்ப்புள்ளது” என்கிறார் பார்க்லே.

இந்த வைரசுக்கு எதிரான போராட்டத்தில் முன் களத்தில் இருக்கிற சுகாதாரப் பணியாளர்கள் மீண்டும் மீண்டும் வைரஸை எதிர்கொள்ள நேரும் போது அவர்கள் நோய்வாய்ப்பட எவ்வளவு மோசமான வாய்ப்புகள் உள்ளன என்பது குறித்து நமக்கு மிகச் சரியான புள்ளிவிவரங்கள் இல்லை.

ஆனால் 2002-2003 ஆண்டுகளில் சார்ஸ் நோய் தொற்றியவர்களில் 21 சதவீதம் பேர் மருத்துவ சேவை அளித்தவர்களே என்கிறது உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளி விவரம்.

இதே பாணியிலேயே கோவிட் 19 வைரஸ் பரவலின்போதும் மருத்துவப் பணியாளர்கள் பாதிக்கப்படுவது பல நாடுகளில் நடக்கிறது.

இத்தாலியில் கோவிட்-19 வைரஸ் தொற்றியோரில் 6,200 பேர் சுகாதார சேவை பணியாளர்களே. ஸ்பெயினில் இந்த எண்ணிக்கை 6,500. இது அந்த நாட்டில் நோய்த் தொற்றியோரின் மொத்த எண்ணிக்கையில் 12 சதவீதமாகும்.

மார்ச் மாத தொடக்கத்தில் சீனாவில் 3,300 சுகாதார சேவை பணியாளர்களுக்கு நோய்த் தொற்று ஏற்பட்டிருந்ததாக கணக்கிடப்பட்டது. அதாவது நோய்த்தொற்று ஏற்பட்டோரில் 4 முதல்12 சதவீதம் பேர் மருத்துவப் பணியாளர்களே.

பிரிட்டனில் சில பகுதிகளில் மருத்துவமனை பணியாளர்களில் 50 சதவீதம் பேர் வரை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக பிரிட்டன் சுகாதார சேவை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தொற்று கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தோல்வியடைந்தால் மருத்துவமனைகள் வைரஸ் பரப்பும் மையங்களாக மாறிவிடும் ஆபத்து இருக்கிறது. கோவிட்-19 அல்லாத நோயாளிகளுக்கு இந்நோய் தொற்று ஏற்படுவதைத் தடுக்கும் விதமாக அவர்களை நிரந்தரமாக வீட்டுக்கு அனுப்பியதாக டாக்டர்கள் பிபிசியிடம் தெரிவித்துள்ளனர்.

பலவீனமான பாதுகாப்பு

வைரஸை எதிர்கொள்கிற வாய்ப்பு அதிகமாக இருப்பதால்தான் பல நாடுகளில் சுகாதார சேவை பணியாளர்கள் தங்களுக்கு தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் சரிவர தரப்படவில்லை என்று கூறி கோபத்தில் இருக்கின்றனர்.

முகக் கவசங்களை அரசு போதிய அளவில் உற்பத்தி செய்யவில்லை என்றும் அதனால் தங்களுக்கு நோய்த் தொற்றும் இடர்ப்பாடு அதிகமாக இருப்பதாகவும் கூறி பிரான்ஸ் நாட்டில் டாக்டர்கள் அரசு மீது சட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ஜிம்பாப்வேயில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் முயற்சியாக மூன்று வாரகால முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், போதுமான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை என்று கூறி மருத்துவர்களும் செவிலியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பிரிட்டனில் போதுமான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை என்பது மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் மன உறுதியை குலைத்துள்ளதாக சுகாதார சேவை பணியாளர்கள் அமைப்பின் தலைமை செயல் அதிகாரி நீல் டிக்சன் கூறியுள்ளார்.

ராணுவத்தை பயன்படுத்தி பல லட்சக்கணக்கான முக கவசங்களை மருத்துவ பணியாளர்களுக்கு விநியோகிக்கும் பணியை பிரிட்டன் அரசு மேற்கொண்டு இருந்தாலும் இழந்த மன உறுதியை மீட்பதற்கு இன்னும் சிறிது காலம் பிடிக்கும் என்று நீல் டிக்சன் கூறுகிறார்.

இன்னொரு பிரச்சனை, இது போன்ற பாதுகாப்பு உபகரணங்களை தயாரிப்பது சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகளே. எனவே நீண்ட கால அடிப்படையில் இந்த பாதுகாப்பு உபகரணங்களை சீனா தயாரித்து அனுப்புவதை உறுதி செய்வது மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்றும் அவர் கூறுகிறார்.

நியூஸ் நைட் சுகாதாரபிரிவு செய்தியாளர் தெபோரா கோஹன் அளித்த செய்தியும் இதில் உள்ளடங்கும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »