Press "Enter" to skip to content

கொரோனா நச்சுநுண்மி (வைரஸ்): உலக தலைவர்களின் சர்ச்சை கருத்தும், வேடிக்கை பிரசாரங்களும்

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் நோய் தொற்று ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களை பாதித்துள்ளது. இந்த நோயை முற்றிலும் ஒழிக்க உலகம் முழுவதும் சுகாதாரப் பணியாளர்கள் போராடி வருகின்றனர்.

ஆனால் இதே காலகட்டத்தில் கோவிட்-19 வைரஸ் தொற்று குறித்துப் பேசும் உலகத் தலைவர்கள் சிலர் சில நேரங்களில் பொருத்தமற்ற கருத்துகளைப் பேசுகின்றனர், பொருத்தமற்ற நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.

மேலும் வைரஸ் குறித்து சில தவறான தகவல்களையும் அவர்கள் கூறுகின்றனர்.

கடந்த சில வாரங்களில் சில தலைவர்கள் இந்த உலகளாவிய தொற்றை அணுகும் முறை மாறியுள்ளது. எடுத்துக்காட்டாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மேற்கொள்ளும் அணுகுமுறையைக் கூறலாம். ஆனால் இன்னும் சிலர் தங்கள் எதிர்மறையான, ஆபத்தான நிலைப்பாடுகளை மாற்றிக்கொள்ளவே இல்லை.

இப்படி உலகத் தலைவர்கள் சிலர் கொரோனா பற்றிப் பேசிய சர்ச்சையான மற்றும் தவறான கருத்துகளின் தொகுப்பு இது.

”நாங்கள் வைரசை கட்டுக்குள் வைத்துள்ளோம்”

அமெரிக்காவில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதை உறுதி செய்து இரண்டு நாட்களுக்கு பிறகு ஜனவரி 22ம் தேதி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கொரோனா வைரஸ் தொற்று குறித்து சி.என்.பி.சி செய்திக்கு அளித்த நேர்காணலில் இவ்வாறு கூறினார்.

இரண்டு மாதங்களுக்குப் பிறகு, இப்போது உலகிலேயே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ள நாடாக அமெரிக்கா இருக்கிறது. ஏப்ரல் 7ம் தேதி நிலவரப்படி அமெரிக்காவில் மட்டும் 3,68,376 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவிக்கிறது.

இதுவரை இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளுடன் ஒப்பிடுகையில் அமெரிக்காவில் மருத்துவ உபகரணங்களும் போதிய எண்ணிக்கையில் இல்லை. அங்கு மருத்துவ உபகரணங்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. மேலும் கொரோனாவால் அமெரிக்காவில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 2,50,000ஆக அதிகரிக்க வாய்ப்புள்ளது என அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

”இது சாதாரண பறவைக்காய்ச்சல் போன்றது”

பிரேசில் பிரதமர் சயிர் போல்சனாரூ பல சர்ச்சைக்குரிய கருத்துகளை முன்வைத்துள்ளார். சமீபத்தில் அவர் அளித்த தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் இந்த தொற்று குறித்து அவர் கூறிய கருத்துகளால் பலர் சாலைகளுக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தனது உரையின்போது கொரோனா வைரசின் அபாயங்களை குறைத்துமதிப்பிட்டதோடு, சமூக இடைவெளி குறித்து அவர் கருத்துகளை மிகவும் தைரியமாக முன்வைப்பதுபோல காட்டிக்கொண்டார்.

பிரேசிலில் உள்ள மாகாண ஆளுநர்கள் தங்கள் மாகாணத்தை முடக்க முயற்சித்து வெளியிடும் அறிக்கைகளுக்கு எதிராகவும் இவர் அழுத்தம் கொடுக்கிறார். பிரேசில் சுகாதாரத்துறை அளித்த தகவலின் படி கடந்த வாரம் நான்கே நாட்களின் அந்த நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7000ஐக் கடந்துள்ளது.

”உங்களுக்கு தொல்லை கொடுப்பதற்கு பதிலாக உங்களை புதைத்து விடுகிறேன்”

ஃபிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடெர்டோ தனது நாட்டு மக்களிடம் இந்த மிரட்டலை விடுத்தார். கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து நாட்டை காப்பாற்றத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் ரோட்ரிகோ டுடெர்டே மேற்கொண்டார். நாட்டை முடக்குதல், சமூக இடைவெளி குறித்த விழிப்புணர்வு என பல கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. ஆனால்உணவுப் பற்றாக்குறையால் அங்கு போராட்டம் நடைபெற்றது.

விதியை மீறி போராட்டத்தில் ஈடுபடுபவர்களை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்துவர் என்று அதிபர் அப்போது எச்சரித்தார்.

”அரசாங்கத்தை மிரட்ட வேண்டாம். அரசாங்கத்திற்கு சவால் விடாதீர்கள். நீங்கள் தோற்று விடுவீர்கள்,” என்று ஏப்ரல் 2ம் தேதி பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றில் தெரிவித்தார் அவர்.

பிலிப்பைன்ஸில் 2,300 க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

”இங்குவைரஸ்பறப்பதைநீங்கள்பார்த்தீர்களா? இங்குவைரஸ்எதுவும்இல்லை”

பெலாரஸ் அதிபர் அலெக்ஸாண்டர் லூக்காஷென்கோ மற்றவர்கள் புருவத்தை உயர்த்தும் அளவிற்கு கொரோனா பாதிப்பை வேடிக்கையாக கையாண்டார்.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க முயற்சிக்க வேண்டும் என்ற ஆலோசனையை கேட்டு சிரித்தபடியே ”வைரஸ் இங்கு சுற்றி திரிவதை என்னால் பார்க்க முடியவில்லை” என்றுகூறினார். உள்ளரங்கில் நடைபெற்ற ஹாக்கி போட்டியை கண்டவாறு தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், இந்த அரங்கில் உள்ள மக்கள் அனைவரும் குளுமையில் இருப்பதால் அவர்கள் நலமுடன் இருக்கிறார்கள், அவர்களை வைரஸ் தாக்காது என்று கூறினார்.

வைரஸ் குறித்த அச்சங்களைப் பற்றி குறிப்பிட்ட அவர், இது “ஒரு மனநோயைத் தவிர வேறொன்றுமில்லை” என்று விவரித்தார். ஓட்கா உள்ளிட்ட சில மதுபானங்கள் நம்மை வைரஸ் பாதிப்பில் இருந்து காப்பாற்றும் எனவும் அவர் கூறினார். பிறகு அவரே இந்த கருத்துகள் கேலியானவை என்று கூறி பின்வாங்கினார்.

ஐரோப்பாவில் ஒரு கோடி மக்கள் தொகை கொண்ட நாடு பெலாரஸ். இங்கு 150க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

‘உங்கள் குடும்பதினரை சாப்பிட வெளியே அழைத்துச் செல்லுங்கள்’

மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரஸ் மானுவேல், கோவிட்-19 வைரஸ் பரவுவது குறித்து பொது சுகாதார துறை அதிகாரிகளின் ஆலோசனைகளுடன் தொடர்ந்து முரண்பட்டார்.

மேலும் பரவிவரும் வைரஸ் பாதிப்பை பொருட்படுத்தாமல் நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டு, அவர் சந்தித்த சில குழந்தைகளுக்கு முத்தமும் தந்தார்.

அமெரிக்கா போல மெக்சிகோவில் இது வரை பாதிப்பு ஏற்படவில்லை என்றாலும் மெக்சிகோவில் 7,00,000 பேர் வைரசால் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் நிலவுகிறது. மார்ச் 30ம்தேதி மெக்சிகோவில் சுகாதார அவரச நிலை அறிவிக்கப்பட்டாலும், 50 பேர் வரை கூடும் பொதுக்கூட்டங்கள் இன்னும் நடைபெற்றுதான் வருகின்றன.

”தடைகள் விதித்த நாடுகளை தண்டிக்க இறைவன் கொரோனா வைரசை படைத்துள்ளார்”

ஜிம்பாப்வே அதிபர் எமர்சன் முனங்காக்வா சர்ச்சையான கருத்து எதையும் கூறவில்லை. ஆனால் தமது அமைச்சர் ஒருவர் கூறிய கருத்தை அவர் சமாளிக்க வேண்டிய தேவை ஏற்பட்டது.

தங்கள் நாட்டின் மீது பொருளாதாரத் தடைகள் விதித்த மேற்கத்திய நாடுகளை கடவுள் கொரோனா வைரஸ் மூலம் பழிவாங்குவதாக ஜிம்பாப்வே பாதுகாப்பு அமைச்சர் ஒப்பா முச்சின்குரி கூறிய கருத்தை மறுத்து முனங்காக்வா கருத்துத் தெரிவித்தார்.

“இந்த மாதிரியான வைரஸ் தொற்றுக்கு விஞ்ஞான விளக்கங்கள் உள்ளன, வைரசுக்கு எல்லைகள் இல்லை, மற்ற இயற்கை நிகழ்வுகளைப் போல இதற்காகவும் யாரையும் குறை சொல்ல முடியாது” என்று எமர்சன் முனங்காக்வா கூறினார்.

போதிய மருத்தவ வசதிகள் இல்லாத வறுமை மிக்க நாடு இது என்பதால், கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்தால் இங்கே அதிகம் பாதிப்பு இருக்கும் என்று அச்சம் நிலவுகிறது.

”அமெரிக்காவிற்கு எதிரானவர்களையே இந்த வைரஸ் அதிகம் பாதித்துள்ளது”

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் எதிரிகளிடையே கொரோனா வைரஸை பரப்பியதாக செல்வாக்குமிக்க இராக்கின் ஷியா பிரிவு மதகுரு முக்தாதா அல் சதர் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தவிர இன்னும் நிறைய சர்ச்சைகளுக்கு முக்தாதா அல் சதர் காரணமாகிவிட்டார்.

சமீபத்தில் வாரங்களில், இராக் அதிகாரிகள் வைரஸைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளை விட்டுவிட்டு, தொடர்ந்து பெரிய அளவில் பிரார்த்தனை கூட்டங்களை நடத்தும் படி இவர் அறிவுறுத்தினார்.

இது தவிர ஒரு பாலினத்தவர்கள் திருமணம் செய்யும் சட்டத்தை நடைமுறைப்படுத்த விரும்பிய நாடுகளே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன என்றும் இவர் கூறினார். எடுத்துக்காட்டாக சீனா மற்றும் இத்தாலியை இவர் சுட்டிக்காட்டினார். எனவே இந்த சட்டத்தை நிராகரிக்க அனைவரும் முன்வரவேண்டும் என்றும் ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டிருந்தார்.

உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கைப்படி இராக்கில் கொரோனா வைரசால் நிறைய உயிரிழப்புகள் ஏற்படும் என்று கருதப்படுகிறது.

நாட்டில் கோவிட் -19 பாதிப்புகள் குறித்த தகவல்களை வேண்டுமென்றே தடுத்து நிறுத்தியதாக இந்தோனீசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோ, ஒப்புக்கொள்கிறார். மக்கள் பீதி அடைந்து உணவுப்பொருட்கள் மற்றும் தேவையான பொருட்களை வாங்க அதிகம் நடமாட ஆரம்பிப்பார்கள் என்பதால் அமைதி காத்ததாக கூறுகிறார்.

”வைரஸ் குறித்த சில தகவல்களை பொதுமக்களிடம் கூறி, அச்சத்தை அதிகரிக்க விரும்பவில்லை”

இந்தோனீசியாவில் மார்ச் 2ம் தேதி ஒருவர் கூட கோவிட் 19 வைரசால் பாதிக்கப்படவில்லை. ஆனால் தற்போது 1500ருக்கும் அதிகமானோருக்கு அங்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மார்ச் 31ம் தேதி அங்கு தேசிய அவசர நிலையும் அறிவிக்கப்பட்டது.

சில மூலிகை பானங்கள் இந்தோனீசிய மக்களுக்கு கொரோனா வைரசை எதிர்கொள்ளும் சக்தியை கொடுத்துள்ளது என அந்நாட்டு தேசியப் பேரிடர் அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

”நோயாளிகளுக்கு நான் கை கொடுத்தேன்” – பிரிட்டன் பிரதமர்

மார்ச் 3ம் தேதி பிரிட்டனில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில், ”நேற்று இரவு மருத்துவமனையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு, நான் கைகொடுத்தேன், கை குலுக்குவதால் தொற்று பரவும் என்ற கருத்தை பொருட்படுத்த வேண்டாம்” என்றார். ஆனால் உண்மையில் மருத்துவமனையில் இருந்த ஊழியர்கள் மற்றும் மருத்துவர்களிடம் மட்டுமே போரிஸ் ஜான்சன் கை குலுக்கியது தெரிய வந்தது.

மார்ச் 27ம் தேதி போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »