Press "Enter" to skip to content

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): சூழ்நிலையை தனக்கு சாதகமாக்கிக் கொள்கிறாரா மலேசிய பிரதமர்?

ஏப்ரல் 14 செவ்வாய்க்கிழமை இந்திய / இலங்கை நேரப்படி மாலை நேரப்படி சுமார் 5 மணி அளவில் மலேசியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 4,987 ஆக உள்ளது.

இவர்களில் கிட்டத்தட்ட சரிபாதி பேர் அதாவது 2,478 பேர் வைரஸ் தொற்றிலிருந்து முழுவதுமாக குணமடைந்துள்ளனர்.

மலேசியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பலியானோர் எண்ணிக்கை 82 ஆக உள்ளது. தினந்தோறும் புதிதாகக் கண்டறியப்படும் நோய்த் தொற்றியோர் எண்ணிக்கையைவிட சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

மலேசிய அரசு கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக எத்தகைய சிகிச்சை அளிக்கிறது என்பது குறித்து விரிவான விவரங்கள் ஏதும் வெளியாகவில்லை. வேறு எந்த நாட்டிடமேனும் மலேசிய அரசு ஆலோசனை பெற்றதா என்றும் தெரியவில்லை. எனினும் மலேசிய அரசின் இந்தக் கச்சிதமான செயல்பாடு நாட்டு மக்களின் பாராட்டுதல்களைப் பெற்றுள்ளது.

‘சூழ்நிலையை தமக்கு சாதகமாகப் பயன்படுத்துகிறார் பிரதமர்’

கொரோனா வைரஸ் தொற்று விவகாரத்தைப் பிரதமர் மொகிதின் யாசின் தனக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார் என மலேசிய மூத்த செய்தியாளர் காதிர் ஜாசின் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் தனது அரசுக்குள்ள பெரும்பான்மையை பிரதமர் மொகிதின் நிரூபிக்க வேண்டி இருக்கும் பட்சத்தில் தமக்கான பெரும்பான்மையை திரட்ட கொரோனா வைரஸ் விவகாரம் அவருக்குப் போதுமான அவகாசத்தை வழங்கியுள்ளதாகக் கருதவேண்டி உள்ளது என காதிர் ஜாசின் வலைத்தளப் பதிவு ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

இவர் மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீரின் ஊடக ஆலோசகராகச் செயல்பட்டவர்.

“கொரலோனா வைரஸ் தொற்று பாதிப்பு மற்றும் நாட்டின் பொருளாதார நிலைமையை பிரதமர் மொகிதின் முற்றிலும் தமக்குச் சாதகமாக மாற்றிக் கொண்டுள்ளார். பிரதமராகத் தனது இருப்பை அவர் மேலும் ஸ்திரப்படுத்திக்கொள்ள முனைகிறார். கொரோனா வைரஸ் விவகாரத்தை ஒரு காரணமாக முன்வைத்து மார்ச் 9ஆம் தேதி கூடவேண்டிய நாடாளுமன்றத்தை மே 18ஆம் தேதிக்கு அவர் ஒத்தி வைத்துள்ளார். தனக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டால் அதற்குரிய ஆதரவைத் திரட்ட இந்த நடவடிக்கையானது அவருக்குப் பயன்படும்,” என காதிர் ஜாசின் தெரிவித்துள்ளார்.

தன்னை மிக முக்கியமானவராகவும் எதிர்க்க முடியாதவராகவும் கட்டமைத்துக்கொள்ள பிரதமர் மொகிதின் யாசின் மிக புத்திசாலித்தனமாக செயல்பட்டுள்ளார் என்றும், அதனால்தான் துணைப் பிரதமர் என்று யாரையும் மொகிதின் நியமிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மூத்த அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள நான்கு பேரும் மொகிதீன் யாசினுக்கு சவால் விடுக்க வாய்ப்பில்லை என்றும் காதிர் ஜாசின் கூறியுள்ளார்.

“பிரதமர் மொகிதின் யாசினின் செயல்பாடுகள், அவர் தனது பெர்சாத்து கட்சியை அம்னோ கட்சியுடன் இணைத்து பிரதமராக பதவியில் நீடித்து அந்தக் கூட்டணியை வழிநடத்தக்கூடும் எனும் யூகங்களுக்கு வழிவகுக்கிறது,” என்றும் காதிர் ஜாசின் மேலும் தெரிவித்துள்ளார்.

தவிக்கும் அந்நியத் தொழிலாளர்கள், அகதிகள்

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையால் அந்நியத் தொழிலாளர்கள் மலேசியாவில் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இவர்களைப் போலவே ரோஹிஞ்சாக்கள் உள்ளிட்ட அகதிகளும் வருமானமின்றி தவித்து வருகின்றனர்.

வேலை பார்க்க வந்த இடத்தில் வருமானம் இல்லை, உணவு இல்லை என்ற நிலையில் அனைவரும் செய்வதறியாது திகைத்து நிற்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அண்மையில் கோலாலம்பூரில் உள்ள இரண்டு மேன்சன்கள் தனிமைப்படுத்தப்பட்டன. இந்த இரண்டு குடியிருப்புகளிலும் வசிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் குறைந்த வருமானம் பெற்றுவரும் அந்நியத் தொழிலாளர்கள் ஆவர்.

இவர்கள் இந்தியா, நேப்பாளம், பாகிஸ்தான், இந்தோனீசியா, வங்காளதேசம் போன்ற நாடுகளில் இருந்து பிழைப்புத் தேடி மலேசியா வந்தவர்கள். இவர்களுடன், கணிசமான எண்ணி்க்கையிலான மலேசியர்களும் அங்கு வசிக்கின்றனர்.

சிறிய வீட்டில் இருபது முதல் முப்பது பேர் தொழிலாளர்கள் வசிப்பதாகவும், அவர்களில் பலர் வருமானமின்றி தவிப்பதாகவும் மலேசிய ஊடகம் தெரிவிக்கின்றது.

அந்நியத் தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாப்பது அந்தந்த தூதரகங்களின் கடமை என மலேசிய அரசு சுட்டிக்காட்டியுள்ளது. இவர்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களைப் பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கைகளை தூதரகங்கள் மேற்கொள்ள வேண்டும் என மலேசிய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

இதையடுத்து, மலேசிய அதிகாரிகளுடன் இணைந்து தங்களது அதிகாரிகளும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள இருப்பதாக கோலாலம்பூரில் உள்ள இந்திய தூதரகம் இரு தினங்களுக்கு முன்பு அறிவித்தது.

எனினும் இதுவரை தூதரக ரீதியிலான உதவிகள் ஏதும் கிடைக்கவில்லை என்றும், மலேசிய அதிகாரிகள் மூலமாகவே தங்களுக்கான அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதாகவும் இந்தியத் தொழிலாளர்கள் கூறியதாக மலேசியத் தமிழ் ஊடகம் தெரிவிக்கின்றது.

இவ்வாறு நாடு முழுவதும் உள்ள அந்நியத் தொழிலாளர்கள் அதிக ஆதரவின்றி நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை எப்போது முடிவுக்கு வரும் எனப் பசி, பட்டினியோடு காத்துக்கிடக்கிறார்கள்.

வதந்தி பரப்பினால் சிறை, அபராதம்

கொரோனா கிருமித் தொற்று குறித்தும் அரசு நடவடிக்கைகள் குறித்தும் வதந்தி பரப்பும் தவறான தகவல்களை வெளியிடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சம்பந்தப்பட்ட நபர்கள் அடையாளம் காணப்பட்டவுடன் கைது செய்யப்படுகிறார்கள். இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்கள் பின்னர் தவறை உணர்ந்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட தங்கள் பதிவுகளை நீக்கினாலும் கூட விசாரணைக்கு உட்படுத்தப்படுவர் என மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகத் துறை அமைச்சு இன்று எச்சரித்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »