Press "Enter" to skip to content

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று பெண்கள் ஆளும் நாடுகளில் கட்டுபாட்டில் இருப்பது எப்படி?

நியூசிலாந்து முதல் ஜெர்மனி வரை, தைவான் நார்வே போன்ற பெண்களால் ஆட்சி செய்யப்படும் சில நாடுகளில் கோவிட்-19ஆல் ஏற்படும் உயிரிழப்புகள் குறைவாக உள்ளது.

மேலும் அந்நாடுகளில் இருக்கக்கூடிய அரசியல் தலைவர்கள் இந்த தொற்று பரவாமல் இருக்க எடுத்த நடவடிக்கைகளை ஊடகங்களும் பாராட்டியுள்ளன. இவர்கள் தலைமைத்துவத்துக்கு ஒரு உதாரணமாக பார்க்கப்படுகின்றனர் என ஃபோர்ப்ஸில் வெளியான ஒரு செய்தி கூறுகிறது.

இந்த பதட்டமான சூழ்நிலையை எப்படி கையாள வேண்டுமென உலகிற்கு எடுத்துகாட்டும் விதமாக இந்த பெண் தலைவர்கள் உள்ளனர் என ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கோவிட்-19 தொற்று சூழலை மிக சிறப்பாக கடந்து வரும் தலைவர்களாக இந்தப் பெண்கள் உள்ளனர். ஆனால் பெண்களால் உலகில் உள்ள ஏழு நாடுகள் மட்டுமே ஆட்சி செய்யப்படுகிறது என்ற விமர்சனங்களும் இருக்கிறது. சரி. பெண் தலைவர்களை வெற்றி பெறச் செய்வது எது?

முன்கூட்டியே எடுக்கப்பட்ட நடவடிக்கை

நாட்டில் உள்ள அனைவருக்கும் பரிசோதனை நடத்த உத்தரவிட்டார் ஐஸ்லாந்து நாட்டின் பிரதமர் கேத்ரின் ஜேக்கோப்ஸ்டோடிர். ஐஸ்லாந்தின் மக்கள் தொகை 3,60,000 என்றாலும் கூட முதல் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர் கண்டுபிடிக்கப்படும் முன்பே 20 பேருக்கு மேற்பட்டோர் கூட அந்நாடு தடை விதித்தது. இந்த முடிவு ஜனவரி மாத இறுதியில் எடுக்கப்பட்டது.

ஏப்ரல் 20 வரை, அங்கு ஒன்பது பேர் மட்டுமே கோவிட்-19ஆல் உயிரிழந்துள்ளனர்.

எல்லை, போக்குவரத்து, வர்த்தம் என அனைத்து வகையிலும் சீனாவுடன் நெருங்கிய தொடர்பை கொண்டிருக்கும் நாடு தைவான். கொரோனாவை கட்டுப்படுத்த முன்கூட்டியே திட்டமிட்ட தைவானின் அதிபர் சை இங்வென் உடனடியாக தொற்றைக் கட்டுக்குள் கொண்டுவரும் மையம் ஒன்றை அமைத்து வைரஸ் இருப்பவர்களை கண்டறிய உத்தரவிட்டார்.

பின்னர் பாதுகாப்பு உடை மற்றும் கருவிகளை தயாரிக்க தொடங்கியது அந்நாடு. 2 கோடியே 40 லட்ச மக்கள் தொகை கொண்ட அந்நாட்டில் இதுவரை அங்கு கொரோனா தொற்றால் ஆறு பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டென் கோவிட்-19ஐ எதிர்கொள்ள ஒரு கடினமான முடிவை எடுத்தார். வைரஸ் தொற்றை கட்டுப்பத்தினால் போதாது, அதனை வராமல் தடுக்க வேண்டும் என்ற கொள்கையோடு இருந்தார். கொரோனா வைரஸ் காரணமாக அங்கு 6 பேர் உயிரிழந்தபோதே நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார். ஏப்ரல் 20ஆம் வரை அங்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 12 மட்டுமே.

இந்த நாடுகள் அனைத்தும் பெண்களால் ஆட்சி செய்யப்படுகிறது என்பதை தாண்டி இந்த நாடுகளிடையே மற்றுமொரு ஒற்றுமை இருக்கிறது. இந்த அனைத்து நாடுகளும் பொருளாதரத்தில் வளர்ந்த நாடுகள். நலத்திட்டங்கள் அதிகம் இருக்கக்கூடிய சமூக வளர்ச்சிக்கு அடையாளமாக இருக்கக்கூடிய நாடுகள்.

இந்த நாடுகளில் மருத்துவத்துறை மிகவும் வலிமைமிக்கதாகவும் இது போன்ற ஆபத்தை எதிர்கொள்ள திறன் இருக்கும் விதமாகவும் அமைந்திருக்கிறது என்பதையும் கவனிக்க வேண்டும்.

தலைமை பண்பு

தலைமை செய்யும் விதத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் பெரிய வேறுபாடு இருக்காது. ஆனால் முடிவு என்ற ஒன்று எடுக்கப்படும்போது அந்த அதில் பல்வேறு விஷயங்கள் மாறுபடும் என்கிறார் ஐக்கிய நாடுகளின் அமைப்பின் பெண்கள் மற்றும் வயதானோர்களுக்கான 3D நிகழ்ச்சியின் செயல்பாட்டு இயக்குநர் கீதா ராவ் குப்தா.

பெண்களிடம் ஆண்களின் கருத்தும் இருக்கும் என்பதனால் அவர்களால் நல்ல முடிவுகளை எடுக்க முடியும் என்று பிபிசியிடம் கூறினார் கீதா.

ஆனால் அப்படியில்லை எனவும் அரசியலில் ஆண்களே வலிமை மிக்கவர்கள் எனவும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முதல் பிரேசிலின் போல்சனாரூ வரை கூறியிருக்கிறார்கள்.

தலைமை பண்புக்கு பெண்கள், ஆண்கள் என்ற பாலின வேறுபாடு கிடையாது. ஆனால் எந்த கருத்து அல்லது முடிவு சமுதாயத்தோடு எந்தளவிற்கு ஒத்துப்போகிறதோ அந்தளவிற்கு ஏற்றுக்கொள்ளப்படும். அப்படி பார்க்கும்போது பெண்களின் முடிவுகளில் பச்சாதாபம் மற்றும் ஒருங்கிணைத்த கருத்துகள் இருக்கும் என்கிறார் லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரியில் பெண்கள் தலைமைத்துவத்துக்கான சர்வதேச அமைப்பின் இயக்குனர் ரோசி கேம்பெல்.

சில சமயம் ஆண்களின் தலைமைப்பண்பு மோசமாக அமையக் காரணம், அவர்கள் ஜனரஞ்சகவாதிக அரசியல்முறை என்கிறார் கேம்பெல்.

ஜனரஞ்சகவாதி என்பவர்கள் சமுதாயத்தின் மேல்தட்டு மக்களைக் கருத்தில் கொண்டு செய்லபடுவர்களை போல சாதாரண மக்களுக்கு தோற்றம் அளிப்பவர்கள்.

அரசியலின் சிக்கல்கள்

ஜனரஞ்சகவாதி தலைவர்கள், பெரிய விஷயங்களில் கூட எளிமையான தகவலை நம்புவார்கள் என அவர் கூறுகிறார். மேலும் இந்தத் தொற்றை சமாளிப்பதில் அதன் விளைவு தெரிகிறது என்கிறார் கேம்பெல்

“அமெரிக்கா, பிரேசில், இஸ்ரேல் மற்றும் ஹங்கேரி ஆகிய நாடுகளில் தங்கள் குறையை மறைக்க பழியை பிறர் மேல் தூக்கிப் போட்டார்கள். அதாவது தொற்று பரவியதற்கு வெளி நாட்டவர்களே காரணம் என கூறினார்கள்.”

அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் பிரேசில் தலைவர் போல்சனாரூ இருவருமே ஒரு விதமான கோவத்துடனே இத்தொற்றை அனுகினார்கள். இது அவர்கள் தேர்வு செய்ததே தவிற, அவர்கள் இப்படி இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்கிறார் கேம்பெல்.

பெரும்பாலும் பெண்கள் ஜனரஞ்சகவாதிகளாக இருக்க மாட்டர்கள் என்று கூறும் அவர், ஒரு சிலர் இதில் விதிவிலக்காக இருந்துள்ளனர் என்பதையும் சுட்டிக்காட்டுகிறார்.

ஆனால் மொத்தத்தில் இது அவர்கள் தனித்தன்மையைப் பொருத்தது என்கிறார் கேம்பெல். கோவிட்-19 தொற்றை கட்டுப்படுத்துவதில் அந்தந்த நாட்டின் சமூக பொருளாதார சூழல் உள்ளது. மேலும் அந்தந்த நாடுகளில் இருக்கும் வளங்களை சார்ந்தே முடிவு செய்ய முடியும். இதில் பாலினத்துக்கு எந்த சம்பந்தமும் இல்லை.

எனினும், சில ஆண் தலைவர்கள் ஆளும் நாடுகள் கூட குறைந்த உயிரிழப்புகளை சந்தித்துள்ளன.

தென் கொரியாவில் மூன் ஜெ இன் இந்தத் தொற்று விஷயத்தை கையாண்ட விதமே கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி அன்று பாராளுமன்ற தேர்தலில் அவர் கட்சி வெற்றி கொண்டதற்கு காரணமாக அமைந்தது.

மேலும் க்ரீஸ் பிரதமர் கிரியகோஸ் மிட்சோடகீஸ் இந்த விஷயத்தை கையாண்ட விதம் பெரிதும் புகழப்பட்டது. அங்கு இறப்பு விகிதமும் குறைவாகவே உள்ளது. 1 கோடியே 10 லட்சம் மக்கள் தொகை கொண்ட அந்நாட்டில் ஏப்ரல் 20ஆம் தேதி வரை 114 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர்.

60 மில்லியன் மக்கள் தொகை கொண்ட இத்தாலியில் 22,000 பேர் இறந்துள்ளதைப் பார்க்கும்போது , கிரீஸ் நன்றாக செயல்பட்டுள்ளது. அங்கு முதல் மரணம் பதிவாகும் முன்பே சமூக விலகலுக்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதே சமயம் பெண்களால் ஆட்சி செய்யப்படும் வேறு சில நாடுகளில் தொற்று கடுமையாக மற்றும் வேகமாக பரவி வருகிறது.

உதாரணமாக வங்கதேசம். மக்கள் தொகை அதிகமாக இருக்கும் நாட்டில் கொரோன தொற்றை கட்டுப்படுத்த முயற்சி செய்து வருகிறார் அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசினா. போதிய பாதுகாப்பு உடைகள் இல்லாத காரணத்தினால் அங்கு மருத்துவ பணியாளர்கள் கூட ஆபத்தில் இருக்கிறார்கள்.

கடினமான முடிவுகள்

கோவிட்-19 ஐ சமாளிக்க ஊரடங்கு உத்தரவு போன்ற பொருளாதாரத்தை முடக்கும் முடிவுகள் தொடக்கக்காலத்தில் எடுக்கப்பட வேண்டும். ஆனால் இது ஜனரஞ்சகவாதி தலைவர்களின் கொள்கைக்கு எதிரான ஒரு முடிவாகும் என்கிறார் கேம்பெல்.

ஆனால் பெண் தலைவர்கள் மக்களிடையே இது குறித்து வெளிப்படையாக பேசி மக்களின் கருத்துகளை வென்றுள்ளனர்.

உதாரணமாக ஜெர்மனியின் சேன்சலர் ஏஞ்கலா மெர்கெல் கோவிட்-19 நோய் தொற்றை தீவிரப்பிரச்சனையாக அறிவித்தார்

எண்ணிக்கையின் படிபார்க்கும்போது ஐரோப்பிய நாடுகளில் ஜெர்மனியில்தான் பரிசோதனைகள் அதிகம் செய்யப்பட்டு, தொற்று இருப்பவர்கள் கண்டறியப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டனர். 83 மில்லியன் மக்கள் தொகை இருக்கும் நாட்டில் 4,600 பேர் இறந்துள்ளனர்.

நார்வே மற்றும் டென்மார்க்கில் இருக்கும் பெண் தலைவர்கள் பல ஆண் தலைவர்களுக்கு ஒரு உதாரணமாக இருக்கின்றனர்.

இந்த இருநாட்டுத் தலைவர்களும், குழந்தைகளுடன் சந்திப்பு நடத்தினார்கள்.

ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டம் நடத்தினால், அது முடக்க உத்தரவை மீறுவது போல் ஆகும் என குழந்தைகளுக்கு புரிய வைக்க முயற்சித்தார் நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டென்.

இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என கேட்டக் கொண்ட அவர், ஈஸ்டர் முயல் (Easter bunnies) மூலம் அவரவர் வீட்டுக்கு நேரடியாக சாக்லெட்டுகளும் முட்டைகளும் கொண்டு சேர்க்கப்படும் என்றார்.

ஈஸ்டர் முயலைப் பற்றி பேசுவது என்பது தேவையில்லாத செயல் என முன்னர் நினைக்கப்பட்டது. ஆனால் பெண்கள் அரசியலில் இருப்பதனால் இந்த வைரஸ் தொற்று குழந்தைகளை எவ்வாறு பாதிக்கின்றது என்பதை யோசிக்க வைத்தது.

நேரடியாக குழந்தைகளின் நலன் மேல் அக்கறை எடுத்து கொள்வதன் மூலம், இத்தொற்றால் எப்படி அனைத்து வயதை சேர்ந்தவர்களும் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள் என்பது தெரிய வருகிறது என்கிறார் கேம்பெல்.

நல்ல முடிவுகள்

சர்வதேச அளவில் 70 சதவீத மருத்துவப் பணியாளர்கள் பெண்கள்தான். ஆனால் 2018ல் 153 தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களில் 10 பேர் மட்டுமே பெண்கள். உலகில் அனைத்து நாடாளுமன்றத்திலும் கால் பங்கு மட்டுமே பெண்கள் உள்ளனர்.

மருத்துவத் துறையில் பெண்களின் தலைமைப் பண்பு அதிகமாக்கப்பட வேண்டும் என விமன்லிஃப்ட் அறிவுரை கழகத்தின் தலைவரான டாக்டர் குப்தா கூறியுள்ளார்.

இது அவர்களின் முடிவு எடுக்கும் தன்மையை வளர்க்கும். சமுதாயத்தின் ஒரு பகுதியைப்பற்றி மட்டும் யோசிக்காமல் அனைத்து மக்களுக்காகவும் எடுக்கும் முடிவாக இருக்கும்.

கோவிட்-19ஆல் வீட்டில் நடக்கும் துன்புறுத்தல் அதிகமாகியுள்ளது, ஏழ்மை அதிகமாகியுள்ளது. ஆனால் ஆண் பெண் என்ற பாலின வேற்றுமை குறைந்துள்ளது. நாம் பின்னோக்கி செல்கிறோம். தொற்றுக்கு பதிலளிப்பதில் மற்ற பிரச்சனைகள் அனைத்து மிகவும் மோசமாகி கொண்டிருக்கிறது என்கிறார் குப்தா.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »