Press "Enter" to skip to content

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): முடக்க நிலையிலும் செழிப்பாக வளரும் ஐந்து நிறுவனங்கள்

ராபர்ட் ப்ளம்மர்
வணிக செய்தியாளர், பிபிசி

பல தொழில்களுக்கு, கொரோனா வைரஸ் முடக்கநிலை காலம், இதுவரையில் சந்தித்திராத கடுமையான சூழல்களை உருவாக்கியுள்ளது.

வாடிக்கையாளர்கள் முடக்கநிலையில் சிக்கியிருப்பதாலும், கடைகள் மூடி இருப்பதாலும், கையிருப்பு பணம் கரைந்து வருவதாலும், ஊழியர்கள் வருவதை தற்காலிகமாக நிறுத்திக் கொண்டதாலும், தொழில் நிறுவனங்கள் செயல்பாட்டைத் தொடர என்ன செய்வது என்று திகைத்து நிற்கின்றன.

ஆனால் இந்த அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், சில நிறுவனங்கள் அதிக வேகமாக முன்னேறுவதற்கான வழிமுறைகளைக் கண்டறிந்துள்ளன.

பின்வரும் பெரிய மற்றும் சிறிய நிறுவனங்கள் புதிய வணிக வாய்ப்புகளை சாதகமாக்கிக் கொண்டுள்ளன.

ஸ்டிச் & ஸ்டோரி (Stitch & Story)

“சமையல் மேடை ஸ்டார்ட்-அப்” என்ற அளவில் தொடங்கப்பட்ட ஒரு நிறுவனம் கொரோனா வைரஸ் நோய்த் தொற்று காலத்தில் செழிப்பாக வளரும் தொழிலாக மாறியுள்ளது.

ஸ்டிச் & ஸ்டோரி என்ற இந்த ஆன்லைன் கைவினைக் கலை நிறுவனம் வெறும் 11 முழுநேர அலுவலர்களை மட்டும் கொண்டு இயங்குகிறது. துணி மற்றும் கம்பிகளைப் பயன்படுத்தும் பின்னல் வேலைகளால் உருவாக்கப்பட்ட பொருட்களை இந்த ஆன்லைன் நிறுவனம் விற்கிறது. விருப்பம் உள்ளவர்களுக்குப் பயிற்சியும் தருகிறது.

கடந்த சில வாரங்களில் இந்த நிறுவனம் பெரிய வளர்ச்சியைக் கண்டுள்ளது.

பின்னலாடை தயாரிப்பு மற்றும் கம்பிகளையும் சேர்த்த பின்னல் பொருள் தயாரிப்புத் திறன்களை சொல்லித் தரும் நோக்கத்துடன் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு, தனது பங்காளர் ஜென் ஹோவாங் உடன் சேர்ந்து இந்த நிறுவனத்தைத் தொடங்கியதாக இணை நிறுவனர் ஜெனிபர் லாம் பிபிசியிடம் தெரிவித்தார்.

“நாங்கள் தொடங்கிய காலத்தில் கைவினைக் கலை என்பது பழைய காலத்து பேஷனாகக் கருதப்பட்டது. இதை எப்படி செய்வது என்று மக்களுக்குப் புரியவில்லை” என்றார் அவர்.

ஆனால் இப்போது, குறிப்பாக முடக்கநிலை அமலில் இருக்கும் நிறைய பேரிடம் இதன் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது.

“விற்பனை வேகமாக உயர்கிறது. மார்ச் மாதத்தில் மட்டும், முந்தைய ஆண்டு மார்ச் மாதத்தைவிட 800 சதவீதம் அதிக விற்பனை நடந்துள்ளது” என்று அவர் தெரிவித்தார்.

“இந்த சூழ்நிலைக்கு இது மிகவும் பொருத்தமானதாக உள்ளது. திரைகளையே பார்த்துக் கொண்டிருப்பதிலும், நாள் முழுக்க செல்போன்களிலேயே செலவிடுவதிலும் பலருக்கும் போரடித்துவிட்டது. அதில் இருந்து மாறுபட்ட விஷயமாக கைவினைக் கலை அமைந்துள்ளது.

“ஆரம்பத்தில் இருந்து ஒரு பொருளைப் புதிதாக உருவாக்குவது என்பது, தங்கள் முயற்சிக்குக் கிடைக்கும் பரிசாக அவர்களுக்கு அமைந்துள்ளது” என்று அவர் கூறினார்.

ட்டோன் & ஸ்கல்ப்ட் (Tone & Sculpt)

உடல் கட்டமைப்பு பயிற்சி அளிக்கும் கிரிஸ்ஸி செலா, செல்போன் ஆப் மூலம் பயிற்சி அளித்தல் மற்றும் சத்துணவு வழிகாட்டுதல்களை சந்தா செலுத்தும் அடிப்படையிலான சேவையாக 2019 ஜனவரியில் தொடங்கினார். உடல் தோற்றத்தைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டும் என்ற “ஒருமித்த கருத்துள்ள பெண்கள் உலகளவில்” பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் அவர் இதைத் தொடங்கியுள்ளார்.

“ஆரம்பத்தில் பெண்களுக்கு மிகுந்த தயக்கம் இருந்தது. ஏனென்றால் உடற்பயிற்சிக் கூடத்திற்குச் சென்று, பயிற்சியாளரின் வழிகாட்டுதலில் பயிற்சி செய்வது தான் வழக்கமாக இருந்து வந்தது. இருந்தாலும் அதற்கு அதிக செலவு பிடிப்பதாக இருந்தது” என்கிறார் கிரிஸ்ஸி.

இப்போது உடற்பயிற்சி மையத்துக்குச் செல்வது என்ற கேள்விக்கே இடமில்லை. எனவே அவருடைய Tone & Sculpt ஆப் வெகுவேகமாக பிரபலம் அடைந்து வருகிறது.

“கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 88 சதவீத வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டைவிட மூன்று மடங்கு வருமானம் அதிகரித்துள்ளது” என்று அவர் தெரிவித்தார்.

“நிறைய பேர் மனதளவில் நேர்மறையாக இருப்பதற்கே சிரமப்பட வேண்டிய சூழ்நிலையில், உடலையும் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள” உதவும் வகையில் தன்னுடைய வீட்டிலேயே செய்யும் உடற்பயிற்சி முறைகள் இருப்பதாக செலா தெரிவித்தார்.

வாய்மொழி வார்த்தை மூலமாகவும் சமூக ஊடகங்கள் மூலமாகவும் இந்த ஆப் பிரபலமாகி வருகிறது. மக்களுக்கு ஆர்வம் அதிகரிப்பதால் செலாவும் அவருடன் பணியாற்றும் 17 அலுவலர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

“நல்ல தோற்றத்தை உருவாக்குவதற்கு, அழகான, ஆடம்பரமான சாதனங்கள் எதுவும் தேவையில்லை என்பதை இது காட்டும். நம் வீடுகளில் இருந்தபடியே, வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டு இவற்றைச் செய்தால் போதும்” என்கிறார் அவர்.

லாயித்வெயிட்டின் ஒயின்

முடக்கநிலை காலத்திலும், மக்கள் குதூகலமாக இருப்பதற்கான வழிகளைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். குடும்பத்தினரால் நடத்தப்படும் ஒயின் வழங்கல் தொழிலாக லாயிட்வெயிட்டின் ஒயின் தொழில் இதற்கு பெரிதும் உதவும் வகையில் உள்ளது.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டு 117 சதவீதம் விற்பனை அதிகரித்திருப்பதாக அந்த நிறுவனம் தெரிவிக்கிறது. சிறிய அரை பாட்டில் மற்றும் குவார்ட்டர் பாட்டில் அளவுகளுக்கு தான் அதிக கிராக்கி உள்ளதாகவும் தெரிவிக்கிறது.

“நண்பர்களுடன் டம்ளர்களைக் கையில் ஏந்தியபடி Zoom மூலம் அவர்கள் தொடர்பில் இருக்கிறார்கள். சிறிய அளவிலான சமூகக் கூடலாக அது உள்ளது” என்று அந்த நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஆண்ட்ரூ ஸ்டெட் பிபிசியிடம் தெரிவித்தார்.

“மக்களை ஒன்றாக வைத்திருப்பது ஒயினின் வேலையாக இருக்கிறது. தொலைதூரத்தில் இருந்தாலும், அவர்கள் ஒன்று கூடுவதாக இருந்தால், அதற்கான வாய்ப்பைத் தருவதாக இருக்கிறது” என்கிறார் அவர்.

கடந்த மார்ச் முதல் ஏப்ரல் வரையில் இந்த நிறுவனத்துக்கு 300 சதவீத வளர்ச்சி கிடைத்திருக்கிறது.

“மக்கள் சூப்பர் மார்க்கெட்களைத் தவிர்க்கிறார்கள். நாங்கள் இரண்டு அல்லது மூன்று நாட்களில் வீடுகளுக்கே சென்று டெலிவரி செய்கிறோம்” என்று திரு. ஸ்டெட் கூறினார்.

“கிறிஸ்துமஸ் சமயத்தில் சாதாரணமாக விற்பனை அதிகரிப்பதை நாங்கள் பார்த்திருக்கிறோம். இப்போது எங்களுடைய எதிர்பார்ப்பைவிட இரண்டு மடங்கு அதிக வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது” என்றும் அவர் தெரிவித்தார்.

வாடிக்கையாளர்களிடம் இருந்து ஊக்கம் தரும் வகையிலான கருத்துகள் வருகின்றன. தங்களுடைய தொழில் நன்றாக நடக்க உதவுவதாக ஒயின் விற்பனை நிலையங்களும் எங்களுக்கு நன்றி தெரிவிக்கின்றன.

“எல்லோரும் வீட்டிலேயே இருக்கும்படி செய்வதில், எங்களால் ஆன சிறிய சேவையை நாங்கள் செய்வதாகக் கருதுகிறோம்” என்றார் ஸ்டெட்.

நெட்பிலிக்ஸ் (Netflix)

முடக்கநிலை காலத்தில் புதிதாக எதையும் கற்றுக் கொள்ள விரும்பாத, மூளைக்கு வேலை தர விரும்பாதவர்கள், வீடுகளில் ஷோபாவில் படுத்துக் கொண்டு தொலைக்காட்சி சேனல்களைப் பார்ப்பது தான் வேலையாக இருக்கிறது.

இந்த விஷயத்தில் நெட்பிலிக்ஸ் ஊடக நிறுவனம் வெற்றி பெற்றுள்ளது. இந்த ஆண்டு இதன் சந்தாதாரர்களின் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்துள்ளது.

ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் ஏறத்தாழ 16 மில்லியன் பேர் புதிதாகப் பதிவு செய்து கொண்டிருப்பதாக நெட்பிலிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

2019ன் இறுதி மாதங்களில் இருந்ததைவிட இது இரண்டு மடங்கு அதிகம்.

இருந்தபோதிலும், மக்கள் பார்க்க விரும்பக் கூடிய தொலைக்காட்சித் தொடர்கள் மற்றும் திரைப்படங்களை பிரத்யேகமாக அளிப்பதைப் பொருத்துதான் அதற்கான வரவேற்பும் லாபமும் அதிகரிக்கும்.

தயாரிப்பு நிறுவனங்கள் மூடப்பட்டுவிட்ட நிலையில், உலகம் முழுக்க திரைப்படத் தயாரிப்பு “ஏறத்தாழ நின்றுவிட்ட” நிலையில், புதிய நிகழ்ச்சிகளைச் சேர்ப்பது மிகவும் சிரமமான விஷயமாக உள்ளது.

இருந்தபோதிலும், இப்போது அது ஒரு பெரிய பிரச்சினை இல்லை என்று பொழுதுபோக்கு நிறுவன நிபுணர்கள் கூறுகின்றனர்.

“கோவிட்-19 நோய்த் தாக்குதல் காரணமாக மிகக் குறைந்த அளவே பாதிப்புக்கு உள்ளாகும் நிறுவனமாக நெட்பிலிக்ஸ் இருக்கிறது, இதேநிலை தொடரும்” என்று மின்னணு தொழில் வாய்ப்பு குறித்த நிபுணர் எரிக் ஹாக்ஸ்ட்ரோம் கூறுகிறார். “திடீரென வீடுகளில் முடங்கும் நிலைக்கு ஆளாகும் மக்களை ஈர்க்கும் வகையில் மிகவும் பொருத்தமான தொழிலாக இது உள்ளது” என்று அவர் கூறுகிறார்.

பூஹூ (Boohoo)

கொரோனா வைரஸ் நோய்த் தாக்குதல் சூழ்நிலையில் பின்னடைவு அடைந்த தொழில்களில் ஒன்றாக பேஷன் தொழிலும் உள்ளது.

மகிழ்வான தருணங்களில் உலக அளவில் அவற்றின் சங்கிலித் தொடர் நிறுவன வாய்ப்புகள் பெரிய சொத்தாக இருந்தன. மலிவான விலையில், வேகமாக பேஷன் ஆடைகள் கிடைத்தன.

ஆனால் இப்போது ஆர்டர்கள் வராத காரணத்தால், வாடிக்கையாளர்களைப் பிடிக்க முடியாமல் பேஷன் துறை திணறி வருகிறது.

பூஹூ நிறுவனம் புதியதொரு வழிமுறையைக் கண்டறிந்துள்ளது. வீடுகளில் இருந்து மக்கள் வெளியே வர முடியாத நிலையில், அவர்களுக்கு என்ன துணிகள் தேவைப்படும்?

“வெளியில் செல்லும் போது பயன்படுத்துவதற்கான துணிகளை அவர்கள் வாங்கவில்லை. வீடுகளில் இருக்கும்போது அணியக் கூடியவற்றை வாங்குகிறார்கள்” என்று பூஹூ நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் பிபிசியிடம் தெரிவித்தார்.

“குறிப்பாக மேலாடைகளின் விற்பனை அதிகரித்துள்ளது. Zoom கால்களில் நல்ல தோற்றத்தைக் காட்டுவதற்கு அனைவரும் விரும்புகிறர்கள்” என்று அவர் கூறினார்.

மற்ற பேஷன் நிறுவனங்கள் சரிவைச் சந்தித்துள்ள நிலையில், இந்த நிறுவனம் கடந்த ஆண்டைக் காட்டிலும் வளர்ச்சியை எட்டியுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »