Press "Enter" to skip to content

கிம் ஜாங் உன்: ”வட கொரியா அதிபரை சமீபத்தில் அமெரிக்க அதிகாரிகள் யாரும் பார்க்கவில்லை” மற்றும் பிற செய்திகள்

அமெரிக்க அதிகாரிகள் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை சமீபத்தில் பார்க்கவில்லை என்றும், அவரின் உடல்நிலை குறித்த செய்திகளை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் அமெரிக்காவின் வெளியுறவுச் செயலர் மைக் பாம்பேயோ தெரிவித்துள்ளார்.

வட கொரியாவில் கொரோனா வைரஸ் பரவல் அல்லது பஞ்சம் ஆகிய இரண்டில் ஏதாவது ஒன்று மோசமாக பரவ வாய்ப்பு உள்ளதாகவும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.

36 வயதான வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், கடைசியாக ஏப்ரல் 12ஆம் தேதி அரசு ஊடகத்தில் தோன்றினார்; இது அவரின் உடல்நிலை மோசமாக உள்ளது என யூகங்கள் பரவ வித்திட்டது.

ஆனால் அந்த தகவல்களில் உண்மையில்லை என வட கொரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

கொரோனா தொற்றிலிருந்து தப்பிக்க வடகொரிய அதிபர் கிம் கடற்கரையில் உள்ள ஓய்வு விடுதி ஒன்றில் தங்கியிருக்கலாம் என்றும் செய்திகள் வலம் வருகின்றன.

ஜனவரி மாதம் வட கொரியா தனது எல்லைகளை மூடியது.

திங்களன்று கிம்மின் உடல்நிலை குறித்து தனக்கு நல்ல எண்ணங்களே உள்ளன என்றும்,ஆனால் தன்னால் அதுகுறித்து பேச முடியாது என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார்.

மேலும், “அவர் நலமுடன் இருக்கவேண்டும் என விரும்புகிறேன்.” என்று தெரிவித்தார்.

ஏப்ரல் 15ஆம் தேதி வடகொரியாவின் நிறுவனரும், கிம்மிற்கு தாத்தாவுமான கிம் இல் சங்கின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ளவில்லை.

இது அந்த நாட்டில் ஆண்டுதோறும் நடைபெறும் ஒரு மிகப்பெரிய நிகழ்வு; கிம் ஜாங் உன்னும் அதில் தவறாமல் கலந்து கொள்வார் எனவே அங்கிருந்துதான் கிம்மின் உடல்நலம் குறித்த சந்தேகங்கள் வெளியாகின.

இர்ஃபான் கான்: யார் இவர்? உலக சினிமாவில் தன் பெயரை அழுத்தமாக பதிவு செய்தது எப்படி?

53 வயதாகும் புகழ்பெற்ற பாலிவுட் நடிகர் இர்ஃபான் கான் மும்பையில் இன்று காலமானார். சுமார் 80 திரைப்படங்களில் நடித்துள்ள அவர், ஹாலிவுட் படங்களில் நடித்துள்ள மிகச்சில இந்திய நடிகர்களில் ஒருவராவார்.

பாலிவுட்டின் பொதுவான காதல் படங்களுக்கான தோற்றம் இர்ஃபான் கானுக்கு இல்லை என்றாலும், இந்தி திரைப்பட உலகத்தில் தன் பெயரை இவர் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.

மனதில் தோன்றுவதை அப்படியே பேசுவதற்கு பெயர்போன இர்ஃபான் கானின் சில கருத்துகளால், பல சர்ச்சைகளும் எழுந்துள்ளன.

விரிவாகப் படிக்க:இளம் வயதில் நடிப்புத்துறையில் இருந்து விலக நினைத்த இர்ஃபான் கான் சாதித்தது எப்படி?

இந்திய பொருளாதாரத்தை காக்க மே 3க்கு பின் அரசு என்ன செய்ய போகிறது? #BBCExclusive

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக இந்தியா முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக பொருளாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்திய பொருளாதார சரிவை நிவர்த்தி செய்வதற்கு இந்திய அரசு என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்பது குறித்து இந்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் கே.வி சுப்பிரமணியன் பிபிசிக்கு அளித்த சிறப்பு பேட்டியில் கூறியவற்றை தொகுத்து கட்டுரை வடிவில் வழங்குகிறோம்.

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு கையில் பணப்புழக்கம் இருக்க வேண்டும் எனும் நோக்கில் பொருளாதார உதவிகளை கொண்ட தொகுப்பு ஒன்றை இந்திய அரசு உருவாக்கி வருகிறது.

விரிவாகப் படிக்க:இந்திய பொருளாதாரத்தை காக்க மே 3க்கு பின் அரசு என்ன செய்ய போகிறது? #BBCExclusive

கொரோனா தொற்று ஊரடங்கு: சேதமாகும் அபாயத்தில் புராதன ஓவியங்கள்

இலங்கையிலுள்ள தொல்பொருள் மதிப்பு மிக்க புராதன ஓவியங்கள் அழியும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாக தொல்பொருள் திணைக்களம் தெரிவிக்கின்றது.

தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் செனரத் திஸாநாயக்க பிபிசி தமிழிடம் இதனைத் தெரிவித்தார்.

இலங்கையில் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ள பின்னணியில், கடந்த மார்ச் மாதம் 20ஆம் தேதி முதல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டது.

விரிவாகப் படிக்க:கொரோனா தொற்று ஊரடங்கு: சேதமாகும் அபாயத்தில் புராதன ஓவியங்கள்

‘வேற்று கிரக வாசிகள்’ – விவரிக்க முடியாத நிகழ்வுகளின் காணொளிகளை வெளியிட்ட அமெரிக்கா

‘விவரிக்க முடியாத வானியல் நிகழ்வு” (unexplained aerial phenomena) என்று கூறும் மூன்று நிகழ்வுகளின் காணொளியை அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் வெளியிட்டுள்ளது.

இணையத்தில் பகிரப்பட்டு வரும் இந்த காணொளிகளின் உண்மைத் தன்மை குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருவதால் அந்த சந்தேகத்தை நீக்கும் வகையில் இந்த காணொளிகள் வெளியிடப்படுவதாக அமெரிக்க பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.

விரிவாகப் படிக்க:‘வேற்று கிரக வாசிகள்’ – விவரிக்க முடியாத நிகழ்வுகளின் காணொளிகளை வெளியிட்ட அமெரிக்கா

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »