கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்புக்கு பிறகு உலகப் பொருளாதாரம் எப்படி மீளும்? – 4 வாய்ப்புகள்

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்புக்கு பிறகு உலகப் பொருளாதாரம் எப்படி மீளும்? – 4 வாய்ப்புகள்

ஸ்டெஃபானியா கோசர்
பிபிசி முண்டோ

பல நாடுகளில் பொருளாதாரம் பாதிக்கப்படுவதால், பொது முடக்கத்தை தளர்த்தி வருகின்றனர்.

இந்த ஆண்டு உலகப் பொருளாதாரம் 3 சதவிகிதம் சுருங்கும் என சர்வதேச செலாவணி நிதியம் கணித்துள்ளது. 3 சதவீத வளர்ச்சி இருக்கும் என்ற அதன் முந்தைய கணிப்புக்கு இது நேர் எதிராக உள்ளது.

1930களில் ஏற்பட்ட பெரு மந்தம் உலகப் பொருளாதாரத்தையே உலுக்கியது. அதன் பிறகும் பல பொருளாதார மந்த நிலைகள் தோன்றியுள்ளன. ஆனால், அவற்றில் மிகவும் செங்குத்தான மந்த நிலையை நோக்கி தற்போது செல்கிறது உலகப் பொருளாதாரம்.

இந்த நிலையில் இருந்து மீண்டு வர எவ்வளவு காலம் ஆகும்? அதன் பிறகு உலகில் எவ்வாறான மாற்றங்கள் ஏற்படும்?

பொருளாதார மந்தநிலை

பொருளாதார மந்தநிலை என்பதற்கான வரைவிலக்கணம் என்ன? தொடர்ந்த இரண்டு காலாண்டுகளாக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏற்படும் சரிவே பொருளாதார மந்தநிலை என்பதே பல நாடுகள் ஏற்றுக்கொண்ட இலக்கணம்.

சில மாதங்களுக்கு மேலாக, பொருளாதார அமைப்பு முழுவதிலும் பரவலாக காணப்படும் பொருளாதார நடவடிக்கைகளின் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி; மெய்யான மொத்த உள்நாட்டு உற்பத்தி, மெய்யான வருவாய், வேலைவாய்ப்பு, தொழில் உற்பத்தி, மொத்த மற்றும் சில்லரை வணிகம் ஆகியவற்றில் இந்த வீழ்ச்சி காணப்படும் என்று வரையறுக்கிறது அமெரிக்காவின் தேசிய பொருளாதார ஆராய்ச்சி அமைவனம்.

(மெய்யான மொத்த உற்பத்தி, மெய்யான வருவாய் என்பவை பணத்தினால் மதிப்பிடப்படும் உற்பத்தி மற்றும் வருவாய்க்கு மாறானவை. உற்பத்தி செய்யப்படும்/ வருவாயைக் கொண்டு வாங்க முடியும் மொத்தப் பண்டங்கள் மற்றும் பணிகளின் அளவைக் குறிப்பது இது.

எடுத்துக்காட்டாக, 1000 ரூபாய் ஊதியம் என்பது பண வருவாய். அந்த 1,000 ரூபாயைக் கொண்டு குறிப்பிட்ட காலத்தில் எவ்வளவு பொருள்கள், சேவைகளை வாங்க முடியுமோ அதைக் குறிப்பது மெய்யான வருவாய்.)

கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்படும் மிகவும் மோசமான பொருளாதார பாதிப்புகளை 2020ம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில், தற்போது, நாம் உணர்ந்து வருகிறோம் என்கிறது சர்வதேச செலாவணி நிதியம் (IMF).

ஆனால் 2020ம் ஆண்டின் இரண்டாம் அரையாண்டில் வணிகம் மெதுவாகத் தொடங்கும்போது இந்த பொருளாதாரப் பாதிப்பு மங்கி மறையும் என்ற நம்பிக்கைகளும் இருக்கின்றன.

2020ம் ஆண்டின் பின் பாதியிலும் பொது முடக்க நிலை நீடிக்குமானால் பல வணிக நிறுவனங்கள் இல்லாது ஒழியும். பலருக்கும் வேலை பறிபோகும். இருமடங்கு ஆழமான மந்தநிலையில் நாம் தள்ளப்படுவோம். மந்த நிலையில் இருந்து மீண்டு வருவதும் மிக மெதுவாகவே நடக்கும்.

பொருளாதார மந்தநிலை மற்றும் மீட்சியின் தன்மையை விவரிக்க பொருளாதார வல்லுநர்கள் அங்கிலத்தில் நான்கு எழுத்துகளின் தோற்றத்தைப் பயன்படுத்துகின்றனர்.

V, U, W, L என்ற அந்த நான்கு எழுத்துகளின் வடிவங்கள், மந்தநிலைக் காலத்தில் வரைபடத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் போக்கை சுட்டுவதாக இருக்கின்றன என்று பிபிசியிடம் தெரிவித்தார் சிலி கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்தில் உள்ள பொருளாதார வல்லுநர் ஜோஸ் டெசாடா.

V வடிவ மந்த நிலை: விரும்பத்தக்க வடிவம்

V வடிவத்தில் தோன்றி மீளும் மந்த நிலையே மிகவும் சிறந்த மந்த நிலை. இதில் சரிவு மிகவேகமாக இருக்கும். அதைப் போலவே அடிமட்டத்துக்கு சென்ற பிறகு மீட்சியும் அதே அளவுக்கு வேகமாக இருக்கும்.

மந்த நிலை தொடங்குவதற்கு முன்பிருந்த நிலைக்கே கடைசியில் பொருளாதாரம் திரும்பி வரும். மந்த நிலை சில காலாண்டுகளுக்கு நீடிக்கக்கூடும் என்றாலும் அது ஒப்பீட்டளவில் குறைந்த காலமே நீடிக்கும் என்கிறார் பேராசிரியர் டெசாடா.

”நம்மால் இந்த உலகத் தொற்றைக் கட்டுப்படுத்த முடிந்தால் இந்த V வடிவ மந்த நிலையே நமக்கு ஏற்படும். கட்டுப்பாடுகளைத் தளர்த்தி பொருளாதார வளர்ச்சி விகிதத்தை பழைய நிலைக்கே கொண்டுவர முடியும்” என்கிறார் அவர்.

நியூயார்க்கில் உள்ள எஸ்&பி குளோபல் ரேட்டிங்ஸ் என்ற நிறுவனத்தின் மூத்த பொருளாதார நிபுணர் பால் குருயென்வால்ட் பிபிசியிடம் பேசுகையில், ”சமூக இடைவெளி நடைமுறைகள் தளர்த்தப்பட்டு, கொரோனா வைரஸ் சிகிச்சையோ, தடுப்பு மருந்தோ கண்டுபிடிக்கப்பட்டால், நாம் மீண்டும் தொடக்கத்தில் இருந்த பொருளாதார வளர்ச்சிப் பாதைக்கே திரும்ப முடியும்” என்கிறார் அவர்.

2020ம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 9 சதவீத பொருளாதார வீழ்ச்சி இருக்கும் என்று கணிக்கிறது எஸ்&பி. இந்நிலையில், பொருளாதார மீட்சி விரைவாக இருக்கும் என்ற நம்பிக்கை அவருக்கு இல்லை.

U வடிவ மந்த நிலை: இந்த நிலைக்கே வாய்ப்பு அதிகம்

2020ம் ஆண்டு உலக பொருளாதாரம் 2.4% சரியும் என எஸ் & பி நிறுவனம் கூறுகிறது. 2021ல் 5.9% வளர்ச்சி இருக்கும் என்றும் அது குறிப்பிடுகிறது.

“தற்போது நாம் பார்ப்பது U வடிவ அல்லது அகன்ற U வடிவ மந்த நிலை போலவே தெரிகிறது. இந்த வகை மந்த நிலையில், நாம் எதிர்கொள்ளும் அதிர்ச்சிகளில் இருந்து முழுவதும் மீள்வோம். ஆனால் மீட்சி மெதுவாகவே நடக்கும்” என்கிறார் குருயென்வால்ட்.

நியூயார்க்கில் இருந்து செயல்படும் மூடிஸ் முதலீட்டாளர் சேவை நிறுவனத்தின் இணை மேலாண் இயக்குநர் எலீனா டுக்கார் இதை ஒப்புக்கொள்கிறார். 2021ம் ஆண்டிலும் கொரோனா வைரஸ் உலகத் தொற்றின் பாதிப்பு பொருளாதாரத்தில் இருக்கும் என்கிறது மூடிஸ் நிறுவனத்தின் சமீபத்திய கணிப்பு.

2020ம் ஆண்டின் முதல் பாதியில் நாம் இழந்த உற்பத்தியை இரண்டாம் பாதியில் முழுமையாக மீட்டு எடுக்க முடியாது என அவர் பிபிசி முண்டோ சேவையிடம் தெரிவித்தார்.

ஆனால் சீனாவில் இருந்து நல்ல செய்தி வந்துகொண்டிருக்கிறது. வீழ்ச்சியும், மீட்சியும் உலகின் பிற பகுதிகளைவிட மூன்று மாதம் முன்னதாகவே நடக்கிறது என்கிறார் எலீனா.

சீனாவில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டு ஆலைகள் மீண்டும் இயங்கத் தொடங்கிவிட்டன. மேலும் எந்த தொழில் என்பதைப் பொறுத்து 45% முதல் 70% திறனோடு தொழிற்சாலைகள் இயங்குகின்றன.

மற்றொரு பக்கம், அரசாங்கங்கள் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவான நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளன.

எனவே முழுமையாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, உற்பத்தி பணிகள் தொடங்கிவிட்டால், இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் பொருளாதார மீட்சியைக் காண முடியும் என நம்புவதாக எலீனா கூறுகிறார்.

W வடிவ மந்த நிலை: ஏற்ற இறக்கங்கள்

இதுவரை கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தடுப்பு மருந்து அல்லது சிகிச்சை என எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை, இதனால் இன்னும் பல சவால்களை சந்திக்க நாம் தயாராக வேண்டும் என குருயென்வால்ட் தெரிவிக்கிறார்.

அரசுகள் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிக்கலாம். ஆனால், கொரோனா தொற்றில் இரண்டாவது அலை உருவாகுமானால், மீண்டும் இறுக்கமான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.

இதனால், பொருளாதாரத்துக்கு மீண்டும் ஒரு பாதிப்பு ஏற்படும். அந்த நிலையில், பொருளாதாரம் இரண்டு முறை வீழ்ச்சியை சந்திக்கும். “இதனையே W வடிவ மந்த நிலை என்கிறோம்” என்கிறார் பேராசிரியர் டெசாடா.

இந்த நிலையில் முதலில் மீட்சி நடக்கும். அந்த மீட்சியைத் தக்கவைக்க முடியாது. மீண்டும் பொருளாதாரம் வீழ்ச்சியை சந்திக்கும். அதன் பிறகே இறுதி மீட்சி நடக்கும். சமூக விலகல் நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துவதும், தளர்த்துவதுமாக இருந்தால், சகஜ நிலை திரும்ப நீண்ட காலம் பிடிக்கும்” என்கிறார் குரூயென்வால்ட்.

L வடிவ மந்த நிலை: புதிய இயல்பு நிலை

கொரோனா பாதிப்புக்கு பிறகு உலக பொருளாதாரம் பழைய நிலைக்குத் திரும்பாது. அதற்குப் பதில் ஒரு புதிய இயல்பு நிலை உருவாகும் என பலர் கருதுகின்றனர். இந்த L வடிவ மந்த நிலையில் பொருளாதாரத்தில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டு ஓரளவு மீட்சி ஏற்படும். ஆனால், பொருளாதார நடவடிக்கைகள் பழைய நிலைக்குத் திரும்பாது. அதற்குப் பதிலாக குறைவான நிலையில் இருந்து தொடரும்.

“மந்தநிலையைவிட தீவிரமான இந்த வீழ்ச்சி பொருளாதார வளர்ச்சியில் ஒரு நிரந்தர மாற்றத்தை ஏற்படுத்திவிடும்” என்கிறார் டெசாடா.

பொருளாதார வளர்ச்சிக்கு தடுமாற்றத்தோடு திரும்புவது, அதிலும் குறிப்பாக கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்காத நிலையில் இப்படித் திரும்புவது, நீண்ட கால இழப்புகளை ஏற்படுத்திவிடும் என்கிறது எஸ் & பி.

இந்த நிலையில் இயல்பு நிலைக்கு திரும்புவது என்பது சாத்தியமில்லாமல் போய்விடும்.

V வடிவமா? U வடிவமா என்ற கேள்வியைவிட முன்பிருந்த நிலைக்கு திரும்பிச் செல்ல முடியுமா என்ற கேள்வியும் அப்படித் திரும்பிச் செல்வதென்றால் அதற்கு எவ்வளவு காலம் ஆகும் என்றும் என்ற கேள்வியும் முக்கியம் என்கிறார் குருயென்வால்ட்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

Author Image
Nila Raghuraman