Press "Enter" to skip to content

உம்பான்: கோரத் தாண்டவம் ஆடி கரையைக் கடந்த அதிதீவிரப் புயல் மற்றும் பிற செய்திகள்

அதிதீவிரப் புயலான உம்பான் இந்தியாவின் மேற்குவங்க மாநிலத்துக்கும் வங்கதேச நாட்டுக்கும் இடையே பயங்கர சேதத்தை விளைவித்தவாறு கரையை கடந்தது. குறிப்பாக, கடலோர பகுதிகளில் வீசிய கடும் காற்று மற்றும் மழையினால் இதுவரை குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

சுமார் 185 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய காற்றினால் மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவிலும், வங்கதேசத்திலும் பல மரங்கள் வேரோடு சாய்ந்தன.

இந்த அதிதீவிர புயல் கரையை கடப்பதற்கு முன்னதாகவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் முப்பது லட்சம் மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இருந்தபோதிலும், புயல் கரையை கடந்த இருநாட்டு பகுதிகளிலும் கொரோனா வைரஸ் காரணமாக அமலில் உள்ள பல்வேறு விதிமுறைகள் மீட்பு பணிகளை மேற்கொள்வதில் சுணக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், கோவிட்-19 பரவல் மற்றும் சமூக விலகல் உள்ளிட்டவற்றின் காரணமாக லட்சக்கணக்கான மக்களை இடப்பெயர்வு செய்வதிலும், முகாம்களில் உள்ள முழு கொள்ளளவை பயன்படுத்துவதிலும் அதிகாரிகள் கடும் சிரமத்தை எதிர்கொண்டனர்

1999ஆம் ஆண்டுக்கு பிறகு வங்காள விரிகுடாவில் உருவான முதல் அதிதீவிர புயலான உம்பான் கரையை கடந்துவிட்டாலும் கூட, அது இன்னமும் அதிதீவிர புயலாகவே நீடிக்கிறது.

“எங்கள் மதிப்பீட்டின்படி, கடலோரத்தில் இருந்து சுமார் 10-15 கிலோமீட்டர் தூரத்தில் சில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கக்கூடும்” என்று கூறுகிறார் இந்தியாவின் வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் மிருத்யுஞ்சய் மொஹாபத்ரா.

மேற்கு வங்கத்தின் திகாவுக்கும் வங்கதேசத்தின் ஹட்டியா தீவுகளுக்கும் இடையே, சுந்தரவனக் காட்டுக்கு அருகே நேற்று பிற்பகல் 2:30 மணியளவில் கரையைக் கடக்க தொடங்கிய இந்த புயல், பிறகு கொல்கத்தா நகரையும் பதம்பார்த்தது.

சுமார் 185 கிலோமீட்டர் வேகத்தில் காற்றை வீசியவாறு கரையை கடந்த உம்பான், இன்று மேலும் வங்கதேசத்தை நோக்கி நகர்ந்து, பிறகு பூட்டானை நோக்கி செல்லும் என்று கருதப்படுகிறது.

இன்னும் 300 மி.மீ வரை மழை பொழியக்கூடும் என்றும் இதனால் வெள்ளம் மற்றும் மண் சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

மதுவைத் தள்ளிவைத்து வளர்ந்த தலித் கிராமத்தில் டாஸ்மாக்

மதுவைத் தள்ளிவைத்து பண்பாட்டுப் புரட்சி நடத்திக்கொண்ட ஒரு தலித் கிராமம் மூன்று நான்கு பத்தாண்டுகளில் வியக்கத்தக்க வளர்ச்சி கண்டது. ஆனால், அரசே மதுக்கடைகளை ஏற்று நடத்த தொடங்கிய பிறகு அந்த ஊரின் சுய ஒழுங்கில் விரிசல் ஏற்பட்டு, போதை பாய்வதை முந்தைய தலைமுறையால் முழுவதும் தடுத்து நிறுத்த முடியவில்லை.

மதுவிலக்கு தொடர்பான அரசின் கொள்கை என்னவாக இருந்தாலும், வெள்ளூர்-1 கிராமத்தின் கொள்கை மதுவைத் தவிர்ப்பதுதான்.

விரிவாக படிக்க: மதுவைத் தள்ளிவைத்து வளர்ந்த தலித் கிராமத்தில் டாஸ்மாக்கால் எட்டிப்பார்க்கும் போதை

மலேசியாவில் படப்பிடிப்பு நடத்த அனுமதி – சிங்கப்பூரில் நிலவரம் என்ன?

ஜூன் 1ஆம் தேதி முதல் மலேசியாவுக்கு வருகை தரும் ஒவ்வொருவரும் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவர் என்றும், இதற்குரிய செலவை மலேசிய அரசு ஏற்காது என்றும் மூத்த அலைச்சர் இஸ்மாயில் சப்ரி தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தப்படும் மலேசியர் அல்லாத ஒரு நபர், நாள் ஒன்றுக்கு 150 மலேசிய ரிங்கிட் (ஒரு ரிங்கிட் = 17.5 இந்திய ரூபாய்) செலுத்த வேண்டும் என்றும், மலேசியர்கள் இதில் 50 விழுக்காடு செலுத்தினால் போதும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

விரிவாக படிக்க: மலேசியாவில் படப்பிடிப்பு நடத்த அனுமதி – சிங்கப்பூரில் நிலவரம் என்ன?

உத்தர பிரதேச தொழிலாளர்களுக்கு காங்கிரஸ் பேருந்து

உத்தரப்பிரதேசத்தில் வெளிமாநில தொழிலாளர்களுக்காக ஆயிரம் பேருந்துகளை காங்கிரஸ் சார்பில் தருவதாக பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கூறி இருந்தார். இதனை அடுத்து காங்கிரஸ் கட்சியும், பா.ஜ.கவும் பரஸ்பரம் குற்றஞ்சாட்டிக் கொண்டன.

ஒரு கட்டத்தில் கோபமான பிரியங்கா காந்தி, “நாங்கள் அனுப்பும் பேருந்துகளில் உங்கள் கட்சியின் கொடியை வேண்டுமானாலும் ஒட்டிக் கொள்ளுங்கள். ஆனால், பேருந்துகளை அனுமதியுங்கள்” என கூறி இருந்தார்.

பின்னர், உத்தர பிரதேச அரசு காங்கிரஸின் உதவியை ஏற்றுக் கொண்டது. சரி. இந்த விவகாரத்தில் என்னதான் நடந்தது? பிபிசி இருதரப்பிலும் பேசியது.

விரிவாக படிக்க: உத்தர பிரதேச தொழிலாளர்களுக்கு காங்கிரஸ் பேருந்து அனுப்பும் விவகாரத்தில் என்ன நடக்கிறது?

வெளிமாநிலத் தொழிலாளர் பிரச்சனைக்கு சீர்திருத்தங்கள் தீர்வாகுமா?

கொரோனா நோய்த் தொற்றின் காரணமாக இந்தியப் பொருளாதாரம் பெரும் சவாலைச் சந்தித்திருக்கும் நிலையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் அறிவிக்கப்பட்ட நிதிச் சலுகைகள் எத்தகையவை, தற்போதைய பிரச்சனைகளுக்கு அவை தீர்வாகுமா என்பதெல்லாம் குறித்து சென்னைப் பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறைத் தலைவர் ஜோதி சிவஞானத்திடம் பிபிசி தமிழ் பேசியது.

விரிவாக படிக்க: வெளிமாநிலத் தொழிலாளர் பிரச்சனைக்கு சீர்திருத்தங்கள் தீர்வாகுமா?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »