Press "Enter" to skip to content

காதல்,காமம், ஓரினச் சேர்க்கை, பாலியல் அத்துமீறல்: ஒரு செக்ஸ் சிகிச்சைஸ்டின் அனுபவம்

பீட்டர் சேடிங்டன் மற்ற செக்ஸ் தெரபிஸ்ட்களைப் போல, தன் வாடிக்கையாளர்களிடம் பேசும் விஷயங்களை ரகசியமாக வைத்துக் கொள்ளக் கூடியவர், அவர்களைப் பற்றி வெளியில் பேசி நம்பகத்தன்மையை கெடுத்துக் கொள்ளாதவர். ஒரு தெரபிஸ்ட்டாக பல ஆண்டுகளாக இள வயதினருக்கு அவர் அளித்த சிகிச்சைகள் அடிப்படையில் அவருடைய வாடிக்கையாளர் பற்றிய கதைகள் உள்ளன.

மிகவும் அந்தரங்கமான ரகசியங்கள் பற்றி அவர்களுடன் நான் பேசுவேன். ஆனால், என்னைப் பற்றி அவர்களுக்கு எதுவும் தெரியாது. அப்படி தான் இருக்க வேண்டும்.

நான் ஒரு செக்ஸ் தெரபிஸ்ட். ஆண்களின் விரைப்புத்தன்மை குறைபாடு, உடலுறவின் போது பெண்ணுறுப்பு இறுக்கமாகிக் கொள்ளக் கூடிய வலி மிகுந்த பெண்ணுறுப்புக் கோளாறு போன்ற விஷயங்களுக்காக உதவிநாடி என்னிடம் வருவார்கள். `உங்களுக்குத் திருமணம் ஆகிவிட்டதா’ என்று ஒரு வாடிக்கையாளர் கேட்டால், ஆமாம் ஆகிவிட்டது என்று கூறுவேன். அதற்கு மேல் எதுவும் சொல்ல மாட்டேன். தொழில் சார்ந்து மட்டும் பேசுவோம். இவர்களிடம் ஒரு தெரபிஸ்ட் ஆக நான் பேசுவேன், நண்பராக அல்ல. அதனால் சில வாடிக்கையாளர்களுடன் ஒரு பிணைப்பு ஏற்படும். இத்தகைய பிரச்சினைகளில் இருந்து விடுபடுவதற்கு உதவும் செயல்பாடுகள் காரணமாக அப்படி ஏற்படும்.

நான் பணியாற்றும் கிளினிக்கில், தெரபி அளிக்கப்படும் அறைகள் வீட்டின் ஹால் போல இருக்கும் – யாரும் இல்லாத ஹால் போல இருக்கும். செளகரியமான மூன்று இருக்கைகள் இருக்கும் – ஒன்று எனக்கு, வாடிக்கையாளர்களுக்கு இரண்டு. குடும்ப புகைப்படங்களோ, தனிப்பட்ட பொருட்களோ அங்கு வைத்திருக்க மாட்டேன். அதனால் ஒரு இடைவெளியை கடைபிடிக்க உதவியாக இருக்கும்.

ஜோடிகளையும் பார்ப்பேன், தனியாக வருபவர்களையும் பார்ப்பேன். தனியாக வரக் கூடியவர் அல்லது துணைவர் இருந்து, தனியாக ஆலோசனை பெற வருபவராக இருக்கலாம். சில ஆண்டுகளுக்கு முன்பு, ராப் என்ற 29 வயது ஆண் என்னை சந்திக்க வந்தார். தன்னுடைய புதிய பெண் தோழி, ஏற்கெனவே அதிக அனுபவம் உள்ள அந்தத் தோழியுடன் தன்னுடைய செயல்பாடு குறித்து அவருக்கு அதிக கவலை இருந்ததால் என்னிடம் வந்தார். அந்தப் பெண்ணையும் தெரபிக்கு உள்ளாக்க அவர் விரும்பவில்லை. ஏனெனில் அவ்வாறு செய்வது சங்கடத்தை உருவாக்கும் என்று நினைத்தார்.

அனுபவம் குறைவாக இருப்பதால் கெல்லியை வேறு மாதிரியாக பார்ப்பீர்களா என்று பேச்சின் இடையே நான் கேட்டேன். இந்த நிலை அவருடைய தோழிக்கு இருந்தால் எப்படி இருக்கும் என கேட்டேன். இது எந்த அளவுக்கு முக்கியமற்றது என்பதை அவர் விரைவாக உணரத் தொடங்கினார். தன்னுடன் வருமாறு தோழியை அவர் கேட்டுக் கொண்டார். கெல்லியும் வரத் தொடங்கியதும், ராப்-க்கு நம்பிக்கை திரும்பிவிட்டது. தனக்கு தெரிந்தவற்றைவிட, நிறைய தெரிந்தவனைப் போல காட்டிக் கொள்ளாமல், தன்னுடைய கவலைகளை நேர்மையாக வெளிப்படுத்தியதால் மாற்றம் ஏற்பட்டது.

20 வயதுகளின் முடிவில் இருப்பவர்கள் தொடங்கி 40 வயதுகளின் ஆரம்பத்தில் இருப்பவர்கள் வரை என் வாடிக்கையாளராக வருகிறார்கள். ஆனால், நீங்கள் நினைப்பதைப் போல, இள வயதினர் செக்ஸ் தெரபியை நாடுவதற்கு அச்சப்படுவது கிடையாது. உண்மையில், கடந்த 15 ஆண்டுகளில் என்னை நாடி வரும் இளவயதினரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதிக வயதானவர்களும், வாழ்வின் பிற்பகுதயில் புதிய உறவுகள் கிடைத்த நிலையில் தெரபிக்கு வருகிறார்கள்.

பாலியல் குறைபாடுகள்

பாலியல் குறைபாடுகள் என்பது இப்போது பெரிய சங்கடங்களை ஏற்படுத்துவதாக இல்லை. ஆபாச வீடியோக்கள், செக்ஸ் குறித்த மாறிவரும் எதிர்பார்ப்புகள் இதற்குக் காரணமாக உள்ளன. மக்கள் பல வகையான பிரச்சினைகளை இளவயதில் எதிர்கொள்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன். ஆறாவது பாரம் படிக்கும் வயதில் உள்ளவர்கள் முதல் என்னிடம் வருகிறார்கள். விரைப்புத்தன்மை இல்லை என்பது முதல், செக்ஸ் குறித்த குழப்பங்கள் வரையிலான கேள்விகளுடன் அவர்கள் வருகிறார்கள். 2018 ஆம் ஆண்டில் ஒரு செக்ஸ் தெரபி மையத்தில் ஆலோசனைக்கு வந்தவர்களில் 42 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள், 35 வயதுக்கும் கீழானவர்களாக இருந்தனர் என்று நான் பணியாற்றும், ரிலேட் (Relate) அமைப்பு தெரிவித்துள்ளது.

அதேசமயத்தில், என்னுடைய வாடிக்கையாளர்களில் முதியவருக்கு வயது 89. ஓரிரு ஆண்டுகளாக புதியவருடன் அவர் உறவில் இருந்து வருகிறார். துரதிருஷ்டவசமாக, அவரும், புதிய துணையும் பாலியல் உறவு வைத்துக் கொள்ள முடியாமல் சிரமப்படுகின்றனர். அவர்கள் பொது மருத்துவரிடம் சென்றிருக்கிறார்கள். அந்த வயதிலும் அவர்கள் பாலியல் உறவு வைத்துக் கொள்கிறார்கள் என்பதை அறிந்து டாக்டர் அதிர்ச்சி அடைந்ததைப் போல அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். அதனால் அவர்கள் என்னிடம் வந்திருந்தனர்.

செக்ஸ் தெரபிக்கு வருபவர்களில் பலர் ஏற்கெனவே வேறு டாக்டரிடம் சென்றிருப்பார்கள். தங்களுடைய பிரச்சினை பற்றி யாராவது ஒருவரிடம் விரிவாகப் பேசுவதற்கான வாய்ப்பு அவர்களுக்குத் தேவைப்படுகிறது. பலரும் பதற்றமாக இருப்பார்கள் – அறைக்குள் எனக்கு எதிரே செக்ஸ் பிரச்சினைகளை செய்முறையில் காட்ட வேண்டி இருக்குமோ என்று நினைப்பார்கள். அப்படி நடப்பது கிடையாது!

விரைப்புத்தன்மைக் குறைபாடு

என்னுடைய மிக இளவயது வாடிக்கையாளர், 17 வயது பையன். அவனுக்கு விரைப்புத்தன்மைக் குறைபாடு இருந்தது. அவனுடன் உடலுறவு வைத்துக் கொள்ள அவனுடைய தோழி முயற்சி செய்திருக்கிறார். அவனால் முடியவில்லை. அதனால் இருவரும் பிரிந்துவிட்டனர். தனது விரைப்புத்தன்மை கோளாறு தான் இதற்குக் காரணம் என்றான் அந்தப் பையன். பிறகு விலை மாதர்களிடம் முயற்சி செய்து பார்த்திருக்கிறான். மது அருந்தி பிரச்சினையை மறந்திருக்கிறான். ஆனால் எதுவுமே அவனுக்கு கை கொடுக்கவில்லை. என்ன செய்வது என்று அவனுக்குத் தெரியவில்லை. இப்போது அவனுடைய வகுப்பில் அவன்பால் ஈர்ப்பு கொண்ட ஒரு மாணவி இருக்கிறாள். அவனை அவள் விரும்புவது போலவும் தெரிகிறது. ஆனால் அந்த நட்பைத் தொடருவதற்கு அவன் பயப்படுகிறான்.

ஆலோசனை கேட்டு பொது மருத்துவரை நாடியிருக்கிறான். இப்போது சிறிய வயதுதான் என்பதால், தானாக பிரச்சினை சரியாகிவிடும் என்று அந்த மருத்துவர் கூறியிருக்கிறார். அங்கே இருந்தபோது செக்ஸ் தெரபி பற்றிய ஒரு பிரசுரத்தை பார்த்திருக்கிறான். அதனால் இதை முயற்சித்துப் பார்க்கலாம் என வந்திருக்கிறான். முதலில் அவன் வந்தபோது பதற்றமாக இருந்தான். நாங்கள் பேசிய நேரம் முழுக்க முகம் முழுவதும் சிவந்து இருந்தது.

ஒவ்வொரு செக்ஸ் தெரபி ஆலோசனை நேரமும் வித்தியாசமாக இருக்கும். பெரும்பாலும் நாங்கள் அளிப்பது செக்ஸ் கல்வி தான். உடல் பாகங்களின் வரைபடங்களைப் பார்த்து பேசுவோம். உங்களுக்கு எப்படி இருந்தது, விரைப்பு எப்படி இருந்தது என்பது பற்றி படங்களைக் காட்டி பேசுவோம். அவனைப் பொருத்த வரையில் ஆர்வம் தான் பிரச்சினையாக உள்ளது என்று புரிய வைத்தேன்.

வீட்டில் விரைப்புத்தன்மை பெறுவதற்கும், தொடர்ந்து மூன்று முறை அதைக் குறைப்பதற்கும் நான் பயிற்சி கொடுத்தேன். தனக்கு மீண்டும் விரைப்புத்தன்மை ஏற்படும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்த இவ்வாறு செய்தேன். படிப்படியாக, அவனுக்கு அதிக நம்பிக்கையாக உணர்ந்தான். ஏழு சந்திப்புகளில் அவனுடைய பிரச்சினை தீர்ந்து போனது. தெரபி முடிந்து ஒரு மாதம் கழித்து, மையத்துக்கு வந்த அவன் ஒரு குறிப்பை கொடுத்துவிட்டு சென்றான். தன் வகுப்பில் உள்ள அந்த மாணவியுடன் வெளியில் செல்வதாகவும், விரைவில் தாங்கள் உறவு கொள்ள வாய்ப்புள்ளதாக நினைப்பதாகவும் அதில் எழுதியிருந்தான்.

தெரபிஸ்ட் பணியைத் தொடங்குவதற்கு முன்பு, இருப்பிடப் பள்ளிக்கூடம் ஒன்றில் சிறப்புக் கல்வி தேவைகளுக்கான ஆலோசகராக இருந்தேன். பள்ளிக்கூடத்தில் பணி செய்வது எவ்வளவு கஷ்டமானது, மாணவர்களால் தம்பதியினரின் உறவுகளை சரியாக பராமரிப்பது எவ்வளவு கஷ்டமானது என்பதை அறிந்து கொண்டேன். அவர்களுக்கு உதவியாக நிறைய செய்ய வேண்டும் என்று விரும்பினேன். என் வேலைகளுடன் சேர்த்து, தம்பதியினரின் ஆலோசகராக இரண்டு ஆண்டுகள் பயிற்சி பெற்றேன். பிறகு முழுநேர பணிக்கு மாறினேன்.

உறவுகள் குறித்த பிரச்சினை தொடர்பாக தம்பதியினருக்கு நான் உதவி செய்யும்போது, அவர்களுடைய பிரச்சினைகள் பாலியல் சார்ந்ததாகவும், உணர்வுகள் சார்ந்ததாகவும் இருப்பதை அறிந்தேன். எனவே அனைத்து நிலைகளிலும் அவர்களுக்கு உதவிட, செக்ஸ் தெரபி பயிற்சி அளிப்பது என்று நான் முடிவு செய்தேன்.

ஓரினச் சேர்க்கையாளர்கள்

செக்ஸ் தெரபிஸ்ட் ஆக நான் தகுதி பெற்றதும் நான் பார்த்த ஒரு ஜோடியினர், உணர்வு ரீதியாக பலமான பிணைப்பு கொண்டிருந்தனர். ஆனால் 20கள் மற்றும் 30கள் என்ற வயதில் இருந்த மேட் மற்றும் அலெக்ஸ் என்ற அவர்கள் செக்ஸ் வாழ்வில் உதவி தேவைப்படும் நிலையில் இருந்தனர்.

முதலாவது அமர்வில் நாங்கள் பேசியபோது, இருவருமே வெட்கப்பட்டனர். இருக்கையில் முழுதாக அமரவில்லை, என் கேள்விகளுக்குப் பதில் அளிப்பதைத் தவிர்த்தனர். பின்புறம் வழியாக உறவு கொள்தல் போன்ற, வெளிப்படையான செக்ஸ் விஷயங்கள் பற்றி என்னிடம் பேச அவர்கள் தயங்கினர். நான் அவற்றை ஏற்றுக் கொள்ள மாட்டேனோ என்று தயங்கியதைப் போல தெரிந்தது. ஏனெனில் அவர்கள் ஆண் ஓரினச் சேர்க்கையாளர்கள். விரைப்புத் தன்மை தான் பிரச்சினையாக இருக்கும் என்று யூகித்தேன். எனவே வெளிப்படையாக நேர்மையாக செக்ஸ் பற்றி பேச தயாரா என்ற கேள்வியை எழுப்பினேன்.

விரைப்புத்தன்மை கோளாறுகள், விந்து முந்துதல் ஆகியவைதான் நிறைய ஆண்கள் என்னைப் பார்க்க வருவதற்கான காரணங்களாக உள்ளன. ஆண் ஓரினச் சேர்க்கை உறவுகளில், இருவருக்கும் விரைப்புத்தன்மை எதிர்பார்க்கப்படும் நிலையில், செயல்படுதலில் அதிக மன அழுத்தம் இருக்கும். இருபால் உறவு தம்பதிகளைப் பொருத்த வரையில், குறைந்தபட்சம் அந்தத் தருணத்தில் ஆணுக்கு ஒப்பீடு எதுவும் இருக்காது.

அந்தரங்கத் தொடுதலில் மன அழுத்தத்தை நீக்குவதற்கு மேட் மற்றும் அலெக்ஸ்-க்கு தொடுதலுக்கான பயிற்சிகளை அளித்தேன். ஒருவர் இன்னொருவரை அரை மணி நேரத்துக்கு தொட வேண்டும் – அவருடைய உடலின் பாகங்களை தொட்டு ஆனந்தம் அளிக்க வேண்டும். அவர்கள் நிர்வாணமாக இருந்தார்கள். ஆனால், அடுத்தவரின் பிறப்புறுப்பைத் தொடுவதற்கு இருவருக்குமே அனுமதி கிடையாது. இது உறவுக்கு முந்தைய விளையாட்டு அல்ல. ஆனால் உணர்வுகளில் கவனம் செலுத்தும் விஷயம்.

இறுதியாக, அவர்கள் உடல் முழுக்க தொட்டுக் கொண்டனர். உறவில் இறங்குவதற்கு முன், அடுத்தவரின் உணர்ச்சியை எப்படி தூண்டுவது என புரிந்து கொண்டனர். அவர்கள் நிறைய முயற்சிகள் எடுத்துக் கொண்டனர். இந்த ஆலோசனை நேரங்களை, உறவுக்கான இரவுகளைப் போல கருதிக் கொண்டனர். மெழுகுவர்த்திகள் வைத்து, உணர்ச்சியைத் தூண்டும் இசையை கேட்டனர். மேட்டின் நம்பிக்கை சீக்கிரமாக அதிகரித்துவிட்டது என்பது மகிழ்ச்சியான செய்தி.

15 வார கால தெரபிக்குப் பிறகு, இருவருமே உறவு கொள்ளும் நிலைக்கு வந்துவிட்டனர். பிறகு சில வாரங்களில், எல்லா நேரங்களிலும் உறவு கொள்ள முடிவதாக அவர்கள் என்னிடம் கூறினர். தெரபி முடிந்து 3 மாதங்கள் கழித்து, தொடர் ஆலோசனைக்காக அவர்கள் என்னிடம் வந்தனர். அவர்கள் ஒருவர் மீது ஒருவர் அதிக காதலாக இருந்தனர். தாங்கள் திருமணம் செய்து கொள்ளப் போவதாக அவர்கள் கூறினர்! அவர்கள் மகிழ்வாக இருக்கிறார்கள், நன்றாக இருக்கிறார்கள் என அறிந்ததில் மகிழ்ச்சியாக இருந்தது.

என்னுடைய வேலை கிளர்ச்சி தருவதாக இருக்கிறது என என் நண்பர்கள் கூறுகிறார்கள். நீங்கள் ஓர் ஆலோசகர் என்று கூறும்போது மற்றவர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால் நீங்கள் செக்ஸ் தெரபிஸ்ட் என்று கூறினால் பார்வை முற்றிலுமாக மாறிப் போகிறது. சிலர் செக்ஸ் பற்றி எதுவும் பேச மாட்டார்கள். அதைப் பேசினால் கொஞ்சம் அசவுகரியமாக உணர்வார்கள். இருந்தாலும் மற்றவர்கள் தங்கள் செக்ஸ் பிரச்சினைகளை மகிழ்ச்சியுடன் என்னிடம் கூறுகிறார்கள்.

சிலர் தொழில் ரீதியாக என்னை அணுகலாமா என கேட்பார்கள், தெரிந்த ஒருவருடன் பேசுவது அதிக நம்பிக்கை தருவதாக இருக்கிறது என்பார்கள். ஆனால் நான் மறுக்க வேண்டியிருக்கும். என் வேலை சார்ந்த விஷயங்களை நான் வீட்டுக்கு எடுத்துச் செல்வதில்லை. நண்பர் அல்லது குடும்ப உறுப்பினருடன் சிகிச்சைக்கான உறவு முறையை நீங்கள் கொண்டிருக்க முடியாது.

பாலியல் அத்துமீறல் அல்லது பாலியல் தாக்குதல் போன்ற கடந்த கால அதிர்ச்சிகள் தான் செக்ஸ் பிரச்சினைகளுக்கு பெரும்பாலும் காரணமாக இருக்கும். ஒரு பெண் வாடிக்கையாளர், அவருக்கு உறவு நேரத்தில் பெண் உறுப்பு இறுக்கமாகிக் கொள்ளும். தனது தம்பி பிறந்த போது, தாயார் சாவைத் தொட்டுவிட்டு வந்தார் என்று சொன்னதை அவர் கேட்டிருக்கிறார்.

நாங்கள் இரண்டாவது சந்திப்பில் பேசியபோது, வாடிக்கையாளரின் குழந்தைப் பருவம், குடும்பப் பின்னணி மற்றும் ஆரம்ப கால பாலியல் அனுபவங்கள் பற்றி பேசினோம். சிறு வயதாக இருந்தபோது, தன் தாயாரின் அலறைக் கேட்டதாகவும், தன்னால் அப்படி தாங்க முடியாது என மற்றவர்கள் பேசியதைக் கேட்டதாகவும் தெரிவித்தார்.

உறவு குறித்த அவருடைய கவலைகளை தீர்ப்பதற்கு, சி.பி.டி. என்ற பழக்கப்படுத்தும் தெரபி முறையை செய்தோம். நிகழ்வுகளுக்கு தானாகவே விளைவுகளை வெளிப்படுத்துவதற்குப் பழகுதல் பற்றியது அது. இடுப்புப் பகுதியில் வயிற்றில் உள்ள பெல்விக் புளோர் தசைகளை தளர்வாக வைத்துக் கொள்ள நான் கற்றுக் கொடுத்தேன். செயற்கையாக பெண்ணுறுப்பில் நுழைப்பது போல பயிற்சி செய்ய ஊக்கம் கொடுத்தேன். முனையில் உருண்டையாக இருக்கும் குச்சி போன்ற ஒரு பொருளை அதற்குப் பயன்படுத்துவோம். அது வெவ்வேறு அளவுகளில் இருக்கும். அவர்களின் பெண்ணுறுப்பில் யாராவது உள்ளே நுழைத்து உதவி செய்வார்கள்.

சிகிச்சைகளைப் பிரித்துக் கொள்ளும் முறைகளை நான் கற்றுக் கொள்ளாமல் போயிருந்தால், இந்த வேலையில் நீடித்திருக்க முடியாது. சில கஷ்டமான, துயரமான கதைகளையும் நான் கேட்டிருக்கிறேன். அவற்றையெல்லாம் நான் ஒருபக்கமாக தள்ளி வைத்துவிட வேண்டும். இல்லாவிட்டால் நான் வெற்றிகரமாக இருக்க முடியாது. நோயாளிக்காக வருத்தப்படுவது பயன்தராது.

ஆனால் சோகமான ஒரு நேரம் இருந்தால், மகிழ்ச்சியான நேரமும் இருக்கும். சிலநேரங்களில், தெரபி முடிந்த நிலையில் தம்பதியினரிடம் இருந்து எனக்கு மெசேஜ்கள், கார்டுகள் வரும். “உங்கள் உதவிக்கு நன்றி, இப்போது கர்ப்பமாக இருக்கிறோம்!” என அவை வரும். உண்மையில், ஒரு தம்பதியினரிடம் இருந்து, 12 ஆண்டுகளுக்குப் பிறகும் கார்டுகள் வருகின்றன. இப்போது எப்படி இருக்கிறோம் என்பதை அதில் கூறியிருப்பார்கள். அவர்களுடைய ஒரு குழந்தைக்கு என்னுடைய பெயரை வைத்து, என்னை பெருமைப்படுத்தி இருக்கிறார்கள்!

இந்த வேலையை செய்வதால் நீங்கள் அதிகம் பணம் சம்பாதிக்கவில்லை என்பதால், இதைச் செய்வதற்கு வேறு காரணம் இருக்க வேண்டும். உங்களுடைய ஆலோசனையைக் கேட்டு தங்கள் வாழ்க்கையில் மக்கள் மாற்றம் பெறுவதைப் பார்ப்பது அற்புதமான உணர்வைத் தரும்.

பிபிசி 3-க்காக நடாஷா பிரெஸ்கியிடம் கூறியது…

பிற செய்திகள்

சமூகஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »