இந்தியா – மலேசியா உறவு திடீரென மேம்பட்டது எப்படி?

இந்தியா – மலேசியா உறவு திடீரென மேம்பட்டது எப்படி?

இந்தியாவுடன் தனது இராஜீய மற்றும் வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவது குறித்து மலேசியா பேசியுள்ளது.

இந்தியா – மலேசியா இடையில் அண்மையில் ஏற்பட்ட சமையல் எண்ணெய் ஒப்பந்தத்தை அடுத்து, தனது சமையல் எண்ணெயை அதிகம் வாங்கும் இந்தியா தொடர்பான இந்த அறிக்கையை மலேசியா வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

சுமார் நான்கு மாத இடைவெளிக்குப் பிறகு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் இரண்டு லட்சம் டன் மலேசிய பாமாயிலை வாங்க இந்திய வாடிக்கையாளர்கள் ஒப்பந்தம் செய்துள்ளனர். இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜீய உறவுகளின் கீழ் இந்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியாவுக்கும் மலேசியாவிற்கும் இடையிலான வர்த்தக நிலவரம் பற்றி தோட்ட மேம்பாடு மற்றும் உற்பத்தித் துறையின் அமைச்சர் முகமது கைருதீன் பின் அமன் ரசாலி வியாழக்கிழமையன்று பேசினார். ஜனவரி முதல் ஏப்ரல் வரை மலேசியாவிலிருந்து இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பாமாயிலின் அளவு 96,145 டன் குறைந்த்தாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார், இது 2019 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 94% குறைவு என்று மலேசிய அரசாங்கம் கூறுகிறது.

சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் இறக்குமதியை தடை செய்ய வேண்டாம் என்ற இந்திய அரசாங்கத்தின் முடிவினால், இந்தியாவிற்கான மலேசியாவின் எண்ணெய் ஏற்றுமதி அதிகரித்துள்ளது.

உலக அளவில் பாமாயில் உற்பத்தியில் மலேசியா இரண்டாவது இடத்தில் உள்ளது. ஜூன் மாதத்தில், மலேசியா பாமாயில் மீதான ஏற்றுமதி வரியை நீக்கியது. இதன் பின்னர், பாமாயில் எண்ணெய் உற்பத்தியில் மலேசியாவின் போட்டி நாடான இந்தோனேசியாவின் பாமாயில் விலையை விட மலேசியாவின் விலை மலிவானது.

முந்தைய வாரத்துடன் ஒப்பிடும்போது புதன்கிழமை மலேசியாவில் பாமாயில் வர்த்தகம் 47% அதிகரித்துள்ளதாக முகமது கைருதீன் அமன் ரசாலி கூறுகிறார். கடந்த வாரம் புதன்கிழமை, 45,200 பீப்பாய் (லாட்)என்ற அளவிற்கு விற்ற எண்ணெயின் அளவு, இந்த வாரம் 66,427 பீப்பாயாக (லாட்டாக) அதிகரித்துவிட்டது.

“இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக இழப்பை ஈடுசெய்ய மலேசியா தயாராக உள்ளது, எனவே இந்தியா அதிகமாக வாங்குகிறது” என்று மலேசிய அமைச்சர் முகமது கைருதீன் பின் அமன் ரசாலி தெரிவித்தார்.

அதே நேரத்தில், ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் இந்தியாவில் இருந்து 100,000 டன் அரிசி இறக்குமதி செய்ய மலேசியா முடிவு செய்துள்ளது.

இந்தியா மலேசியாவிடம் இருந்து பாமாயில் கொள்முதல் செய்தபிறகு, சமையல் எண்ணெய் சந்தையில் பாமாயில் விலையை மலேசிய அரசாங்கம் வலுப்படுத்தும் என்றும், இது, மலேசியாவின் தொழில்களுக்கு, குறிப்பாக சிறு வணிகர்கள் மற்றும் விவசாயிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்றும் முகமத் கைருதீன் பின் அமன் ரசாலி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்தோனேசியா மற்றும் மலேசியாவில், சிறு உற்பத்தியாளர்களில் 85 சதவிகிதத்தினர் பாமாயில் உற்பத்தி செய்கின்றனர். அடுத்த ஆண்டு உற்பத்தியை மட்டுப்படுத்துவதற்காக பனை தோட்டங்களில் அதிகளவிலான உரங்களை போடவில்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

பாமாயில் தொடர்பாக சர்ச்சை ஏற்பட்டது ஏன்?

சமையல் எண்ணெயைப் பொறுத்தவரை, இந்தியாவின் இறக்குமதியில் மூன்றில் இரண்டு பங்கு பாமாயில் என்பது குறிப்பிடத்தக்கது. ஆண்டுதோறும் சுமார் 90 லட்சம் டன் பாமாயிலை இறக்குமதி செய்கிறது இந்தியா.

ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்த மலேசியாவின் அப்போதைய பிரதமர் மகாதீர் முகமதுவின் கருத்துக்களால் இந்தியா சீற்றமடைந்தது.

கடந்த ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையிலும் மகாதீர் முகமது இந்த விஷயத்தை எழுப்பினார்.

அதுமட்டுமல்ல, அவர் என்.ஆர்.சி மற்றும் சி.ஏ.ஏ தொடர்பாகவும் இந்தியாவை கடுமையாக விமர்சித்தார். “மதச்சார்பற்ற நாடு என்று கூறிக் கொள்ளும் இந்தியா, சில முஸ்லிம்களுக்கு குடியுரிமையை மறுத்து வருவதைக் கண்டு நான் மிகவும் வருந்துகிறேன். மக்கள் ஏற்கனவே இறந்து கொண்டிருக்கிறார்கள், இந்தச் சட்டத்தின் காரணமாக அது இன்னும் அதிகரித்துவிடும். ஏறக்குறைய 70 ஆண்டுகளாக எல்லோரும் ஒன்றாக வாழ்ந்து கொண்டிருக்கும்போது, இப்போது புதிய சட்டத்தை அமல்படுத்த வேண்டிய அவசியம் என்ன?” என்று மலேசியாவின் அன்றையப் பிரதமர் மகாதீர் முகமது கருத்து தெரிவித்திருந்தார்.

இதன் பின்னர், மகாதீரின் கருத்து ‘உண்மைகளின் அடிப்படையில் தவறானது’ என்று விவரித்த இந்தியா, அவர் இந்தியாவின் உள் விவகாரங்கள் குறித்து பேசுவதைத் தவிர்க்கும்படி கேட்டுக் கொண்டது. அதன்பிறகு மலேசியாவிலிருந்து இந்தியாவில் பாமாயில் இறக்குமதி செய்யப்படுவது கிட்டத்தட்ட தடைசெய்யப்பட்டது என்றே கூறலாம்.

இந்த ஆண்டு ஜனவரி தொடக்கத்தில், இந்தியா தனது விதிகளை மாற்றி, சுத்திகரிக்கப்பட்ட பாமாயிலை ‘தடையற்ற’ என்ற பிரிவில் இருந்து ‘வரையறுக்கப்பட்ட’ பிரிவிற்கு மாற்றியது.

இதனிடையில் இந்த ஆண்டு பிப்ரவரியில், மலேசியப் பிரதமர் மகாதீர் முகமது தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன்பிறகு, மலேசியாவின் முன்னாள் உள்துறை அமைச்சர் மொஹியுதீன் யாசின் பிரதமராக பதவியேற்றார்

இதன் பின்னர், மார்ச் மாதம், மலேசியாவிற்கான இந்திய தூதர் மிருதுல் குமார், புதிய பிரதமரை சந்தித்து மீண்டும் தொடர் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கினார். அதன் பின்னர் இரு நாடுகளுக்கும் இடையில் சிக்கலான உறவு, மேம்படத் தொடங்கியது.

2019 ஆம் ஆண்டில் மலேசியாவின் பாமாயிலை அதிக அளவில் வாங்கிய வாடிக்கையாளர் இந்தியா. 2019 ஆம் ஆண்டில் மலேசியாவிலிருந்து 40.4 லட்சம் டன் பாமாயிலை இந்தியா வாங்கியது.

பதற்றமான நாட்களில், இந்தியாவின் இந்த நிலைப்பாடு மலேசியாவிற்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தும் என்று மலேசிய அதிகாரிகள் தெரிவித்தனர். பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், மியான்மர், வியட்நாம், எத்தியோப்பியா, செளதி அரேபியா, எகிப்து, அல்ஜீரியா, ஜோர்டான் ஆகிய நாடுகளுடன் வர்த்தகம் செய்து இந்தியா மூலம் ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்ய மலேசியா முயன்றது.

ஆனால் பிரதான வாடிக்கையாளரை கைநழுவ விட்ட பிறகு, அந்த வர்த்தக இழப்பை மலேசியாவால் ஈடுசெய்ய முடியவில்லை. இத்தகைய சூழ்நிலையில், பனைத் தொழிலாளர்களையும் உள்ளடக்கிய மலேசிய தொழிற்சங்க காங்கிரஸ், இந்த விவகாரம் தொடர்பாக இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு நல்ல தீர்வை எட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தது.

“தனியார் மற்றும் இராஜீய முக்கியத்துவத்தை ஒதுக்கி வைத்து தீர்வு காண வேண்டும் என இரு அரசாங்கங்களையும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்” என்று மலேசிய தொழிற்சங்க காங்கிரஸ் தனது அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொண்டது.

இந்த விவகாரத்தை தீர்க்க இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சின் கீழ் செயல்படும் மலேசியாவின் பிரதான தொழில் அமைச்சகம் தெரிவித்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

Author Image
Nila Raghuraman