நாசா & ஸ்பேஸ் எக்ஸ் அனுப்பும் முதல் ராக்கெட் – என்ன ஆனது? மற்றும் பிற செய்திகள்

நாசா & ஸ்பேஸ் எக்ஸ் அனுப்பும் முதல் ராக்கெட் – என்ன ஆனது? மற்றும் பிற செய்திகள்

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு நாசாவின் விண்வெளி வீரர்களை அனுப்பும் திட்டம் மோசமான வானிலை காரணமாக நிறுத்தப்பட்டது.

சுமார் 9 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்காவில் இருந்து புறப்படும் முதல் சுற்றுவட்ட பயணமாக இது இருந்திருக்கும்.

நாசாவின் விண்வெளி வீரர்களான டக் ஹர்லி மற்றும் பாப் பென்கென் ஆகிய இருவரும், அமெரிக்காவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து புறப்பட இருந்தனர்.

கொரோனா வைரஸ் நெருக்கடிக்கு மத்தியிலும் இந்த நிகழ்வைக்காண அதிபர் டொனால்டு டிரம்ப், அவரது மனைவி மெலனியா டிரம்ப், துணை அதிபர் மைக் பென்ஸ் ஆகியோர் வருகை தந்திருந்தனர்.

ஆனால், மோசமான வானிலை காரணமாக ராக்கெட் புறப்பட இருந்த 16 நிமிடங்களுக்கு முன்பு நிறுத்தப்பட்டது.

முதல் முறையாக தனியார் நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் உடன் சேர்ந்து நாசா செயல்படுத்தும் இத்திட்டம் வரலாற்று சிறப்புமிக்கதாக கருதப்படுகிறது. இதுவரை சொந்த விண்வெளி திட்டங்களை மட்டுமே செயல்படுத்தி வந்த நாசா, முதல் முறையாக ஸ்பேக் எக்ஸ் நிறுவனம் தயாரித்த விண்கலத்தை பயன்படுத்தி விண்வெளி வீரர்களை அனுப்ப இருந்தது.

உலகிலேயே இதுபோன்ற சேவையை வழங்கும் முதல் நிறுவனம் எலன் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ், இந்த சேவையை பயன்படுத்துவது, நாசாவிற்கு செலவை குறைப்பதாக கூறப்படுகிறது.

வரும் சனிக்கிழமை அன்று ராக்கெட் ஏவப்படுவதற்கான அடுத்த வாய்ப்பு அமையும். அதுவும் இல்லையென்றால் ஞாயிற்றுக்கிழமை அதற்கான வாய்ப்பு இருப்பதாக நாசா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் தெரிவித்துள்ளது.

ஆபாசப்பட விவகாரம்: காசி காவல்துறை விசாரணையில் என்ன சொன்னார்?

பல பெண்களை ஏமாற்றிய வழக்கில் கைது செய்யப்பட்ட காசி ஆறு நாள் போலிஸ் காவல் முடிந்து சிறையில் அடைக்கப்பட்டார்.

காசியின் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது என குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

விரிவாக படிக்க:‘நானாக சென்று யாரையும் ஏமாற்றவில்லை’ – போலீசிடம் கூறிய காசி

‘ஜெயலலிதா இல்லத்தை ஏன் முதல்வர் இல்லமாக்கக் கூடாது?’ – சென்னை உயர் நீதிமன்றம்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் இல்லத்தை தமிழக முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லமாக ஏன் மாற்றக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது. ஜெயலலிதாவின் அண்ணன் குழந்தைகளை அவரது அதிகாரப்பூர்வ வாரிசுகளாகவும் நீதிமன்றம் அங்கீரித்துள்ளது.

ஜெயலலிதாவின் அதிகாரப்பூர்வ வாரிசுகளாக தங்களை அறிவிக்க வேண்டுமெனக் கோரி, அவரது அண்ணன் ஜெயகுமார் மகன் தீபக் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தனர்.

அதில் தனது சகோதரி தீபாவையும் இணைத்திருந்தார்.

விரிவாக படிக்க:‘ஜெயலலிதா இல்லத்தை ஏன் முதல்வர் இல்லமாக்கக் கூடாது?’: உயர் நீதிமன்றம்

தமிழ்நாட்டில் ஆன்-லைன் வகுப்புகள் நடத்தலாமா, கூடாதா? அமைச்சர் செங்கோட்டையன் பேச்சால் குழப்பம்

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டிருக்கும் நிலையில், மாணவர்களுக்கு ஆன் -லைன் வகுப்புகளை சில பள்ளிகள் நடத்திவருகின்றன.

இப்படி ஆன் – லைன் வகுப்புகளை நடத்தக்கூடாது என முதலில் தெரிவித்த பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், பிறகு அதனை மாற்றிக்கொண்டிருக்கிறார்.

தமிழ்நாட்டில் ஆசிரியர்களையும் மாணவர்களையும் இணைக்க ‘வகுப்பறையை நோக்கி’ என்ற ஆப் இன்று வெளியிடப்பட்டது. இதை வெளியிட்ட பிறகு செய்தியாளர்களிடம் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசினார்.

விரிவாக படிக்க:தமிழ்நாட்டில் ஆன்-லைன் வகுப்புகள் நடத்தலாமா, கூடாதா?: அமைச்சரின் பேச்சால் குழப்பம்

ஆப்ரிக்காவில் அசத்தும் மதுரைக்காரர் – வியக்க வைக்கும் கதை

மதுரை அலங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஓர் இளைஞர் ஆப்ரிக்க நாடான எத்தியோப்பியாவில் நீர் மேலாண்மையில் அசத்திக் கொண்டிருக்கிறார். எத்தியோப்பியாவின் காடுகள் மலைகளுக்கு நடுவே உள்ளடங்கி இருக்கும் கிராமங்களின் முகத்தை மாற்றிக் கொண்டிருக்கிறார்.

தினம் தினம் கொரோனா குறித்த செய்திகள்தான் நம் உள்டப்பிகளையும், மனதையும் ஆக்கிரமிக்கிறது. எதிர்காலம் குறித்த அச்சம் திசையெங்கும் படர்ந்து கொண்டிருக்கும் தருணத்தில் நம் அனைவருக்கும் ஊக்கம் தரும் உற்சாகம் தரும் செய்திகள் தேவைப்படுகின்றன. அப்படியான செய்தி இது.

விரிவாக படிக்க:43 சிறுபாலங்கள், 28 நீர் சுத்திகரிப்பு கட்டமைப்புகள், 1 சிறு அணை- ஆப்ரிக்காவில் அசத்தும் மதுரைக்காரர்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

Author Image
Nila Raghuraman