வட கொரியா v/s தென் கொரியா: மீண்டும் மோதல் தொடங்குகிறதா? மற்றும் பிற செய்திகள்

வட கொரியா v/s தென் கொரியா: மீண்டும் மோதல் தொடங்குகிறதா? மற்றும் பிற செய்திகள்

வட கொரியா மற்றும் தென் கொரியா தலைவர்கள் இடையினான ஹாட்லைன் வசதி உட்பட தென் கொரியாவுடனான அனைத்து தொடர்புகளையும் நிறுத்துவதாக வட கொரியா அறிவித்துள்ளது.

தென் கொரியாவை எதிரி என வர்ணித்துள்ள வட கொரியா இது அந்த நாட்டுக்கு ஏதிரான தொடர் நடவடிக்கையின் தொடக்கம் இது என தெரிவித்துள்ளது.

வட கொரிய எல்லை நகரான கேசிங்கிற்கு தென் கொரியாவில் இருந்து செய்யப்படும் வழக்கமான தினசரி அழைப்புகளை இன்று முதல் வட கொரிய அரசு நிறுத்தியுள்ளது.

வட கொரியாவில் இருந்து தப்பித்து சென்றவர்கள் தென் கொரியாவில் இருந்து துண்டு பிரசுரங்கள் அனுப்புவதை அந்நாட்டு அரசு தடுக்கவில்லை என்றால்,அனைத்து தொடர்புகளும் நிறுத்தப்படும் என வட கொரிய தலைவர் கிம் ஜோங்-உன்னின் சகோதரி கிம் யோ-ஜோங் கடந்த வாரம் கூறியிருந்தார்

தெலங்கானாவில் 10-ம் வகுப்புத் தேர்வு ரத்து: எல்லா மாணவர்களும் பாஸ்

கொரோனா தொற்று பரவிவரும் நிலையில் தேர்வு நடத்துவது சாத்தியமில்லை என்று கூறி 10-ம் வகுப்பு தேர்வை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார் தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ்.

அத்துடன், 10-ம் வகுப்பு படித்த அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, அவர்கள் அடுத்த வகுப்புக்கு உயர்த்தப்பட்டுள்ளனர் என்கிறது ஏ.என்.ஐ. செய்தி முகமை.

அகநிலை மதிப்பீட்டின் அடிப்படையில் மாணவர்களுக்கு தரநிலை அளிக்கப்படும் என்றும் முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.

விரிவாக படிக்க:தெலங்கானாவில் 10-ம் வகுப்புத் தேர்வு ரத்து: எல்லா மாணவர்களும் பாஸ்

“சிங்கப்பூர் துவண்டுவிடாது; மேம்பட்ட நாடாக மீண்டெழும்”: பிரதமர் லீ சியன் லூங் நம்பிக்கை

சிங்கப்பூரில் புதிதாக 386 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 38 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

இந்நிலையில் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் இன்று தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களிடையே உரையாற்றினார்.

அப்போது கொரோனா வைரஸ் கடுமையான சவால்களைத் தந்தாலும் அவற்றில் இருந்து மீண்டு வலுவான, மேம்பட்ட நாடாக சிங்கப்பூர் மீண்டும் எழும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

விரிவாக படிக்க:“சிங்கப்பூர் துவண்டுவிடாது; மேம்பட்ட நாடாக மீண்டெழும்”: பிரதமர் லீ சியன் லூங் நம்பிக்கை

முழுமையாக தளர்த்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு: நடனமாடி கொண்டாடிய பிரதமர்

நியூசிலாந்தில் கொரோனா தொற்று இருப்பவர்கள் எண்ணிக்கை பூஜ்ஜியத்தை அடைந்த நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக அமல்படுத்தப்பட்ட அத்தனை கட்டுப்பாடுகளும் இன்னும் சில மணி நேரங்களில் தளர்த்தப்படவுள்ளன.

சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்பது போன்ற கட்டுப்பாடுகளும் தளர்த்தப்படவுள்ளன. பொது இடங்களில் கூட்டம் கூடுவதற்கும் தடை இல்லை. ஆனால் மற்ற நாடுகளுடனான நியூசிலாந்தின் எல்லைகள் மூடப்பட்டிருக்கும்.

இரண்டு வாரங்களாக நியூசிலாந்தில் யாரும் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

விரிவாக படிக்க: முழுமையாக தளர்த்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு: நடனமாடி கொண்டாடிய பிரதமர்

“மருத்துவமனைகளில் இடங்கள் இல்லை என சொல்பவர்கள் மீது நடவடிக்கை”

மருத்துவமனைகளில் இடங்கள் இல்லை என வரும் தகவல்கள் பொய் என்றும் அப்படி தகவல்களைப் பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருக்கிறார்.

சென்னையில் கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில், நகரில் உள்ள 15 மண்டலங்களும் பிரிக்கப்பட்டு, அவற்றுக்குப் பொறுப்பாக ஐந்து அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த அமைச்சர்கள், மண்டல அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் கலந்துகொண்ட கூட்டம் இன்று சென்னை மாநகராட்சியில் நடைபெற்றது.

இந்தக் கூட்டம் முடிந்த பிறகு முதலில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார்.

விரிவாக படிக்க:“மருத்துவமனைகளில் இடங்கள் இல்லை என சொல்பவர்கள் மீது நடவடிக்கை”

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

Author Image
Nila Raghuraman