சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் கொரோனா 2-ம் அலை: ஒரே நாளில் 36 பேருக்கு தொற்று

சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் கொரோனா 2-ம் அலை: ஒரே நாளில் 36 பேருக்கு தொற்று

சீன தலைநகர் பெய்ஜிங்கில் கொரோனா தொற்று இரண்டாம் அலை பரவுகிறது என்ற அச்சத்துக்கு இடையே, கடந்த இரண்டு நாட்களில் தலா 36 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்த தொற்று வெளியூரில் இருந்து பரவவில்லை. உள்ளூரில் இருந்தே பரவியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

50 நாட்களுக்கு மேலாக பெய்ஜிங்கில் புதிய கொரோனா நோயாளிகள் யாரும் கண்டறியப்படாமல் இருந்த நிலையில் இப்போது புதிய தொற்றுகள் கண்டறியப்படுகின்றன.

இந்த பரவல் அந்த நகரின் மிகப் பெரிய மொத்த விற்பனை சந்தையான ஷின்ஃபடி சந்தையுடன் தொடர்புடையது என க்ளோபல் டைம்ஸ் கூறியுள்ளது. 79 பேருக்கு இங்கிருந்துதான் தொற்று பரவியது என க்ளோபல் டைம்ஸ் கூறியுள்ளது.

லியோனிங், ஹெபெய் மற்றும் சிசுன் ஆகிய மூன்று மாகாணங்களில் தொற்று கண்டறியப்பட்ட, தொற்று இருக்குமோ என சந்தேகிக்கப்படும் நேர்வுகள் அனைத்தும் பெய்ஜிங்குடன் தொடர்புடையவையே.

உள்ளூர் செய்திப்படி, இறக்குமதி செய்யப்பட்ட சால்மோன் மீன்களை வெட்டுவதற்கு மீன் கடையில் வைத்திருந்த கட்டையில் கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அந்த பெரிய சந்தையிலிருந்துதான் பெய்ஜிங்கில் இருக்கும் முக்கிய சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு மீன் சென்றடைகிறது.

சீனாவின் துணை பிரதமர் சுன் ச்சுலன், பரவல் மேலும் அதிகரிக்காமல் தடுக்க சில தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கும்படி அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.

36 புதிய கொரோனா நோயாளிகள் கண்டறியப்பட்டதால் தற்போது ஷின்ஃபடி சந்தை முடக்கப்பட்டது. மேலும் அருகில் உள்ள 11 பகுதிகளுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

திங்களன்று மேலும் 10 இடங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது என அரசு ஊடகமான சிஜிடிஎன் கூறுகிறது. அந்த பகுதியில் வசிப்பவர்களைத் தவிர யாருக்கும் உள்ளே வந்து செல்ல அனுமதி இல்லை. அதேபோல் எந்த பொருளும் அங்கிருந்து வெளியே செல்ல அனுமதி கிடையாது.

சந்தைக்கு அருகில் இருக்கும் பள்ளிகள் திறப்பது தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மேலும் சந்தையில் வேலை செய்யும் 10,000 பேருக்கு சோதனை செய்யப்படும்.

புதிதாக அறிமுகப்படுத்தப்படும் விமான சேவை

பெய்ஜிங்கில் தொற்று பரவி வரும் நிலையில், உலகெங்கும் விமானப் பயணிகள் எண்ணிக்கை குறைந்துள்ள நிலையில் சீனா புதிய விமான போக்குவரத்து நிறுவனத்தை அறிமுகப்படுத்தவுள்ளது.

சீனா ஈஸ்டர்ன் நிறுவனம் தொடர்புடைய பல நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் செய்துகொண்டு ஹைனான் தீவிற்கு புதிய விமான சேவை தொடங்கவுள்ளது. இந்த கூட்டணியில் சீன வலைத்தள பயண முகமையான டிரிப்.காம் என்ற நிறுவனமும் ஒன்று.

ஏற்கெனவே உள்ள விமான நிறுவனங்களே போராடும் இந்த வேளையில் புதிய விமான சேவை தொடங்குவது சரியா என சிலர் கேள்வி எழுப்புகின்றனர்.

சான்யா சர்வதேச விமான சேவை என அழைக்கப்படும் இந்த புதிய விமான சேவை நிறுவனத்தில் சீன அரசின் ஆதரவைப் பெற்ற சைனா ஈஸ்டர்ன் நிறுவனம் 51 சதவீத பங்கைக் கொண்டிருக்கும்.

ஹாங்காங் பங்குச் சந்தையில் ஞாயிறன்று அறிவித்தபடி, ஷாங்காயை சேர்ந்த ஜுனேயோ விமான சேவை மற்றும் டிரிப்.காம் நிறுவனத்தின் ஒரு பகுதி ஆகியவை சான்யா சர்வதேச விமான சேவை நிறுவனத்தின் பிற பங்குதாரர்கள் ஆகும்.

புதிய விமான சேவை தொடங்க பல்வேறு ஒப்புதல்கள் தேவைப்படுவதால் இது எப்போது தொடங்கும் என்பதற்கு குறிப்பிட்ட நேரம் ஏதும் அறிவிக்கப்படவில்லை.

சீனாவில் ஹைனான் தீவின் முக்கியத்துவத்தை அதிகரிக்க ஹைனானில் முதலீடு செய்யலாம் பலரும் நம்புகின்றனர். மேலும் ஹைனான் தீவு ஹாங்காங்கைவிட 30 மடங்கு பெரியது. சீனர்களின் பிரபல சுற்றுலா தலத்தில் ஒன்று. சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் ஹைனானை நாட்டின் மிகப்பெரிய கட்டற்ற வணிக தளமாக மாற்ற எண்ணுகிறார்.

மேலும் சீன அரசு, ஹைனானில் குறிப்பிட்ட தனிநபர் மற்றும் நிறுவனங்களுக்கு 15 சதவீதம் வரை வருமான வரியைக் குறைக்கவும் திட்டமிடுகிறது. மேலும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் வர்த்தகப் பயணிகளுக்கான விசாவுக்கு விதிகளையும் தளர்த்தியுள்ளது.

கோவிட்-19 காரணமாக அனைத்து விமானங்களும் இயக்கப்படாமல் உள்ள இந்த நேரத்தில் புதிய விமான சேவை தொடங்கப்படவுள்ள திட்டம் வெளிவந்துள்ளது.

இந்த ஆண்டு விமான சேவை நிறுவனங்கள் இன்னும் 84 பில்லியன் டாலர்கள் இழப்பை சந்திக்கும் என சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கம் கடந்த வாரம் எச்சரித்துள்ளது.

ஆனால் இது ஹைனானை மையப்படுத்தி புதிய விமான சேவையைத் தொடங்க நல்ல தருணம் என சீன சந்தை ஆராய்ச்சி குழுவின் நிறுவனர் ஷௌன் ரைன் கூறியுள்ளார்.

”கோவிட் பிரச்சனைக்கு முன் உள்நாட்டு சுற்றுலாவை அதிகரிக்க சீனா விரும்பியது. சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் நடக்கும் வர்த்தகப் போரால் சீன மக்கள் தங்களுடைய நாட்டையும் கலாசாரத்தையும் அடுத்த தலைமுறைக்கு காட்ட வேண்டும் என்ற நாட்டுப் பற்று கொண்டுள்ளனர்” என அவர் கூறுகிறார்.

மேலும் ஹாங்காங்கில் நடக்கும் போராட்டம் காரணமாக சீன சுற்றுலாப் பயணிகள் ஹாங்காங் சுற்றுலா செல்ல விரும்புவதில்லை.

மேலும், ”சீன அரசு வரி செலுத்தாமல் பொருட்கள் வாங்க அனுமதிப்பதால் ஹைனான் தற்போது சிறந்த இடமாக உள்ளது. மேலும் ஹைனானில் தனிமைப்படுத்துதல் மற்றும் பயணக்கட்டுபாடுகள் ஆகியவை இல்லை” என்கிறார் ஷௌன் ரைன்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

Author Image
Nila Raghuraman