Press "Enter" to skip to content

இந்தியா – சீனா எல்லை மோதல் ஏன்? 3 முக்கிய காரணங்கள்

நிதின் ஸ்ரீவஸ்தவா
பிபிசி நிருபர்

இந்திய – சீன எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டுப் படையினருக்கும் இடையே ஏற்பட்ட வன்முறை மோதல்களில் 20 இந்திய ராணுவத்தினர் கொல்லப்பட்டனர் என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்த மோதலில் இரு நாட்டிற்கும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லையில் பதற்றம் அதிகரித்து பரபரப்பு ஏற்பட்டது. இதற்கான காரணங்களை தெளிவாக தெரிந்து கொள்வோம்.

சீனாவின் பண்டைய ராணுவ தளபதி சுன் ஜூ, இயேசு பிறப்பதற்கு 500 ஆண்டுகளுக்கு முன்னதாகவே, ‘The Art of War’ என்ற புத்தகத்தில் இவ்வாறு எழுதியுள்ளார், “எதிரிகளிடம் சண்டையிடாமல் தோற்கடிப்பதே போரின் சிறந்த கலையாகும்.”

நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகும், இந்தியாவில் சாணக்கியரின் கொள்கைகள் முன்னோடியாக கருதப்படுவது போலவே, இந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கருத்துகளை சீனர்கள் இன்றும் பின்பற்றுகின்றனர்.

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் தற்போது நடந்து வரும் எல்லை பதற்றத்தைப் புரிந்து கொள்ள, ‘சிறந்த போர் கலை’ என்ற இந்த உத்தியையும் மனதில் கொள்வது அவசியமாகும்.

1999ஆம் ஆண்டில் எல்லைப்பகுதியில் கார்கிலில் பாகிஸ்தான் படையினர் பெருமளவில் கூடிய பிறகு, தற்போதுதான், இந்தியாவின் எல்லைப் பகுதி ஒன்றில் அண்டை நாட்டினரின் படையினர் மிகப்பெரிய அளவில் அணிதிரண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான எல்லை, மெய்யான கட்டுப்பாட்டு கோடு அல்லது எல்.ஓ.சி என்று அழைக்கப்படுகிறது, அதாவது 1962 போருக்குப் பிறகு ஏற்பட்ட மெய்யான எல்லை கட்டுப்பாட்டு கோடு அது.

ஏப்ரல் மாதத்தின் மூன்றாவது வாரத்தில் லடாக் எல்லையில் மெய்யான கட்டுப்பாட்டு கோட்டில், சீனத் துருப்புக்கள் மற்றும் கனரக லாரிகளின் எண்ணிக்கை அதிகரித்தபோது பதற்றம் தொடங்கியதாக பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்கள் கூறுகின்றன.

எல்லையில் தொடங்கிய சீன துருப்புக்களின் நகர்வுகள் மே மாதம் வரை தொடர்ந்தது. அதோடு, லடாக்கின் எல்லையை நிர்ணயிக்கும் ஏரியில் சீன வீரர்கள் ரோந்து செல்வதாகவும் செய்திகள் வந்தன.

நிலைமையை நேரில் ஆய்வு செய்வதற்காக இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் நராவ்ணே சில நாட்களுக்கு முன்பு, அந்தப் பகுதிக்கு சென்றதில் இருந்து விஷயத்தின் தீவிரத்தை அறிய முடியும்.

ஜூன் 16ஆம் தேதி, சீன அதிபர் ஷி ஜின்பிங் எந்த நாடு என்று குறிப்பிடாமல், ‘ராணுவம் தயாராக இருக்க வேண்டும்’ என்று அறிவுறுத்தினார். அது தற்போதைய பதற்றத்திற்கு வித்திட்டது.

இந்த காலகட்டத்தில், இந்திய முப்படைத் தளபதிகளின் கலந்தாலோசனைக் கூட்டங்கள் டெல்லியில் நடந்து கொண்டிருந்தன. அவர்கள், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரைத் தவிர, பிரதமர் நரேந்திர மோதியையும் சந்தித்து பேசினார்கள்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முதல் முறையாக இந்திய – சீன எல்லைப் பிரச்சனையில் மத்தியஸ்தம் செய்ய முன்வந்ததால், இந்த விவகாரம் சர்வதேச அளவிலும் முக்கியத்துவம் பெற்றது.

முதல் காரணம் – மூலோபாய வலிமை

2017ஆம் ஆண்டில், டோக்லாம் பகுதியில் இந்திய மற்றும் சீன வீரர்களிடையே கைகலப்பு மற்றும் மோதல்கள் தொடர்பான வீடியோக்கள் வைரலாகியது. அப்போது இருதரப்பினருக்கும் இடையிலான, மோதல் பல நாட்களுக்கு பின்னர் முடிவடைந்தது.

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான எல்லைப் பிரச்சனையின் வரலாறு பல தசாப்தங்கள் பழமையானது என்றாலும், சமீபத்திய பதற்றத்திற்கு மூன்று முக்கிய காரணங்கள் உள்ளன.

வெளிப்படையான முதல் காரணம் மூலோபாயமாகும். எண்ணிக்கை அடிப்படையில் உலகிலேயே ராணுவ பலத்தில் முதல் மற்றும் இரண்டாம் இடத்தை பிடிக்கும் அண்டை நாடுகள் சீனாவும், இந்தியாவும் எனக் கூறப்படுகிறது. இரு நாடுகளிடையே நீண்ட காலமாக மோதல்கள் நடைபெற்றது என்பதற்கு சரித்திரமே சாட்சியமளிக்கிறது.

தற்போது மீண்டும் பிரச்சனைகள் சூடுபிடித்துள்ளன. 1962ஆம் ஆண்டில் இரு நாடுகளுக்கும் இடையே நடந்த போரில் சீனாவுக்கு சாதகமான சூழ்நிலை ஏற்பட்டது.

இந்திய எல்லைப் பகுதிகளில் கட்டுமானப் பணிகள் துரிதமடைவது கடந்த சில ஆண்டுகளாக இந்திய எல்லைகளில் ஏற்படும் அழுத்தத்திற்கு முக்கிய காரணமாக இருக்கலாம். ‘சாலைகள் அமைப்பதே மிகப்பெரிய காரணம்’ என்று பாதுகாப்பு நிபுணர் அஜய் சுக்லா விளக்குகிறார்.

“இயல்பாகவே அமைதி நிலவிய கல்வான் பள்ளத்தாக்கு இப்போது ஒரு பிரச்சனையின் மையப்புள்ளியாக மாறியுள்ளது, ஏனெனில் இதுதான் மெய்யான கட்டுப்பாட்டுக் கோடு என்பதோடு, ஷியோக் ஆற்றில் இருந்து தெளலத் பேக் ஓல்டி (டி.பி.ஓ) வரை இந்தியா சாலை ஒன்றை நிர்மாணித்துள்ளது. முழு லடாக் பகுதியிலும் உள்ள இந்த எல்.ஏ.சி பகுதி. இந்தியாவின் மிகவும் அணுக முடியாத பகுதியாக இருந்தது.”

சீனாவின் எல்லைப் பகுதிகளில் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு எப்போதுமே அதிகமாகவும், சிறப்பாகவும் இருந்தது என்பதை கிட்டத்தட்ட அனைத்து நிபுணர்களும் ஒப்புக்கொள்கின்றனர். எல்லைப் பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தியதிலும் சீனா இந்தியாவை விட முன்னிலையில் உள்ளது.

இந்திய ராணுவத்துக்கு தலைமை வகித்த முன்னாள் இந்தியத் தளபதி வி.பி.மாலிக் இவ்வாறு கூறுகிறார்: “சீனாவின் அசெளகரியம் அதிகரித்ததற்கு மற்றொரு காரணம் இருக்கிறது. அந்தப் பகுதியில் தான் மட்டுமே முன்னேற வேண்டும், தனது ஆதிக்கத்தை அதிகரிக்க வேண்டும் என்று நினைக்கிறது. ஆனால் சீனாவின் விருப்பத்தை நிராசையாக்கும் வகையில் இப்போது இந்திய எல்லைகளை மேம்படுத்தப்படுவதும், எல்லை பகுதிகளைச் சென்றடைவதற்கான உள்கட்டமைப்பை அதிகரித்து வருவதும் சீனாவிற்கு அதிருப்தியை ஏற்படுத்துகிறது. “

இந்துஸ்தான் டைம்ஸில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பத்திரிகையாளர் ராகுல் சிங்கும் இந்த கருத்தை ஒப்புக் கொள்கிறார். “கடந்த ஐந்து ஆண்டுகளாக, எல்லைகளை மேம்படுத்துவதில் இந்தியா அதிக கவனம் செலுத்துகிறது” என்று ராகுல் சிங் கூறுகிறார்.

“கடந்த காலத்தில் எல்லையில் இரு தரப்பு வீரர்களிடையே சிறிய அளவிலான மோதல்கள் ஏற்பட்டன. டோக்லாமுக்கு முன்பே, 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் ’சுமார்’ பகுதியில் இதுபோன்ற சம்பவங்கள் பதிவாகியுள்ளன. ஆனால் தற்போதைய நடவடிக்கைகளின் நோக்கம் பரந்துபட்டதாக இருக்கிறது” என்று ராகுல் சிங் கூறுகிறார்.

முன்னாள் மேஜர் ஜெனரல் அசோக் மேத்தாவும் தனது கருத்தை பதிவு செய்கிறார். “பாலங்கள் மற்றும் விமான ஓடுபாதைகள்” போன்ற கட்டுமானங்களை மெய்யான கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் நிர்மாணிக்கும் சீனாவின் நடவடிக்கைகள் அதிகரித்து வருவதே, இந்தியா, தனது ரோந்துகளை அதிகரிக்க வழிவகுத்தது”

இது குறித்து மேலும் கருத்து தெரிவிக்கும் அசோக் மேத்தா, “இது சாதாரணமாக கருதக்கூடிய விஷயம் அல்ல. இதுபோன்ற கட்டுமானங்களை சீனா தொடர்ந்து மேற்கொண்டுள்ளது. சிக்கிமில் நடைபெற்றது, கால்வன் பள்ளத்தாக்கில் நடைபெற்ற சம்பவங்களுடன் தொடர்புடையதல்ல என இந்திய ராணுவத் தலைவர் ஆரம்பத்தில் கூறியிருந்தார். ஆனால் என்னைப் பொறுத்தவரை அனைத்து விவகாரங்களும் ஒன்றுடன் மற்றொன்று பரஸ்பரம் இணைத்து பார்க்க வேண்டியவையே. ஜம்மு-காஷ்மீருக்கு இருந்த சிறப்பு அந்தஸ்தை இந்தியா முடிவுக்குக் கொண்டு வந்து, இரண்டு புதிய யூனியன் பிரதேசங்களாக மாற்றி புதிய வரைபடங்களை வெளியிட்டது. புதிய வரைபடத்தில் இந்திய பிரதேசமான லடாக்கில் அக்சய் சீன் இருப்பதாக இந்தியா குறிப்பிட்டிருந்தது சீனாவிற்கு அதிருப்தியை ஏற்படுத்தியது என்பதை மறந்துவிடக் கூடாது. “

பொருளாதார வளர்ச்சி – இரண்டாவது காரணம்

கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்ட கடந்த ஐந்து மாதங்களாக உலக பொருளாதாரங்கள் அனைத்தும் கொடிய வைரஸை எதிர்த்துப் போராடி வருகின்றன.

சீனா, அமெரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு, இந்தியா மற்றும் தெற்காசியா போன்ற நாடுகளின் வளர்ச்சி விகிதங்கள் எதிர்பாராத விதமாக வீழ்ச்சியடைந்துள்ளன. அது மட்டுமல்லாமல், அதிகரித்து வரும் வேலையின்மை மற்றும் ஸ்தம்பித்து போய் நிலைகுலைந்திருக்கும் வணிகங்களை மீண்டும் இயல்பு பாதையில் கொண்டு வர அரசாங்கங்கள் கணக்கற்ற பில்லியன் அளவிலான தொகையை செலவழிக்க வேண்டும்.

பெரும்பாலான மக்கள், தற்போதைய நிலையை 1930 இன் ‘பெரும் மந்தநிலையுடன்’ ஒப்பிடுகின்றனர். இதற்கெல்லாம் இடையே, ஏப்ரல் 17ஆம் தேதியன்று இந்திய அரசு அதிர்ச்சியூட்டும் முடிவை எடுத்தது.

இந்தியாவுடன் எல்லைகளை பகிர்ந்துக் கொள்ளும் நாடுகள், இந்தியாவில் செய்யும் முதலீட்டிற்கு, அதாவது எஃப்.டி.ஐ எனப்படும் அந்நிய நேரடி முதலீட்டுக்கான விதிகளை மேலும் கடுமையாக்கியுள்ளது.

புதிய விதியின் கீழ், எந்தவொரு இந்திய நிறுவனத்திலும் பங்கேற்பதற்கு முன்பு, அரசாங்க அனுமதியைப் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் அண்டை நாடுகளிலேயே சீனாவுடன் தான் பெருமளவிலான வர்த்தகம் நடைபெறுவதால் இந்த மாற்றம் வணிகத்தில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும்.

முன்னதாக, இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியான எச்.டி.எஃப்.சியின் 1.75 கோடி பங்குகளை சீனாவின் மத்திய வங்கி பீப்பிள்ஸ் வங்கி வாங்கியது. அதுமட்டுமல்ல, சீனா இந்திய நிறுவனங்களில் பொறுப்பற்ற முறையில் முதலீடு செய்து வந்ததும் இந்த முடிவுக்கு ஒரு முக்கிய காரணம் என்று கூறலாம்.

இது பற்றி தனது கருத்தை பதிவு செய்கிறார் சர்வதேச பொருளாதார நிபுணரும், ஜாமியா மில்லியா இஸ்லாமியாவின் முன்னாள் பேராசிரியருமான எம்.எம் கான். “ராணுவம் மற்றும் பொருளாதாரம் ஆகிய முக்கியத் துறைகளில் சீனா தனது உலகளாவிய ஆதிக்கத்தை நிலைநாட்ட அவ்வப்போது தனது வெளியுறவுக் கொள்கையை மாற்றுகிறது.”

“கொரோனாவுக்குப் பிறகு, உலக பங்குச் சந்தைகளில் குழப்பம் நிலவுகிறது, சீனா பெரிய நாடுகளில் உள்ள நிறுவனங்களில் முதலீடு செய்கிறது. தெற்காசியாவில் இலங்கை, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷில் உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான முக்கிய நிறுவனங்களுக்கு சீனா கடன் கொடுக்கிறது, அல்லது முதலீடு செய்கிறது” என்று தனது கருத்தின் சாரத்தை பதிவிடுகிறார் எம்.எம் கான்.

இப்போது இந்தியா திடீரென தனது அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கையில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருப்பதும் சீனாவின் வெளியுறவுக் கொள்கையில் சற்று அசெளகரியத்தை ஏற்படுத்தியிருக்கலாம்.

மூன்றாவது காரணம் – கொரோனா வைரசால் சீனாவின் பின்னடைவு

சமீபத்தில், 194 உறுப்பு நாடுகளை உள்ளடக்கிய உலக சுகாதார அமைப்பில் ஒரு தீர்மானம் முன்வைக்கப்பட்டது. அதன்படி, உலகிற்கே தீங்கை விளைவிக்கும் கொரோனா வைரஸ் எங்கிருந்து தொடங்கியது என்ற ஆணிவேரை விசாரிக்க வேண்டும். இந்த சட்டமன்றம் உலக சுகாதார அமைப்பின் (WHO) முக்கிய கொள்கை உருவாக்கும் அமைப்பாகும்.

பிற நாடுகளைப் போலவே, இந்தியாவும் இந்த முன்மொழிவுக்கு ஆதரவு தெரிவித்தது.

சீனாவின் நிலைப்பாட்டை பாதுகாக்கும் வகையில் பேசிய சீன அதிபர் ஜி ஜின்பிங், இந்த முழு விஷயத்திலும் சீனா வெளிப்படைத்தன்மையுடனும் பொறுப்புடனும் செயல்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

“நாங்கள் அனைத்து தகவல்களையும் உலக சுகாதார அமைப்பு மற்றும் சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு வழங்கினோம். கொரோனா கட்டுப்படுத்தப்பட்டவுடன் சீனா எந்தவொரு விசாரணையையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறது” என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் தங்களது நிலைப்பாட்டை முன்வைத்தார்.

கொரோனா வைரஸின் பிறப்பிடம் சீனா என்பதும், வைரஸ் உருவான ஆரம்ப காலகட்டத்தில் தவறான நடவடிக்கைகளை எடுத்ததால் சீனா தற்போது பல்வேறு விமர்சனங்களை எதிர்கொள்கிறது என்பதும் உண்மைதான். ஆனால், அனைத்து விமர்சனங்களையும் சீனா கடுமையாக எதிர்க்கிறது.

கொரோனாவினால் ஒரு லட்சத்திற்கும் அதிகமான உயிரிழப்பை சந்தித்திருக்கும் அமெரிக்கா, சீனாவிற்கு கடுமையான கண்டனங்களை தெரிவிக்கிறது. அமெரிக்க பொருளாதார அபிவிருத்தி, எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் விவகார அமைச்சர் கீத் க்ரைச் இவ்வாறு கூறுகிறார்: “கோவிட் -19 குறித்து மெளனமாக இருப்பதற்காக சீனாவை தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையை டிரம்ப் நிர்வாகம் பரிசீலித்து வருகிறது”.

இந்துஸ்தான் டைம்ஸில் பாதுகாப்பு தொடர்பான விஷயங்களை கையாளும் மூத்த பத்திரிகையாளர் ராகுல் சிங், “வுஹானில் கொரோனா உருவானது தொடர்பாக உலகளாவிய கண்டனங்கள் தொடரும் நிலையில், அதை திசை திருப்பும் ஒரு விஷயமாக இந்தியா-சீனா எல்லைப் பிரச்சனை ஏற்படுத்தப்பட்டிருக்கலாம்” என்ற கருத்தை ஒப்புக் கொள்கிறார்.

அமெரிக்காவில் சீனாவுக்கு எதிராக பலத்த எதிர்ப்பு அதிகரித்து வருவதை கடந்த பல மாதங்களாக வாஷிங்டனில் இருந்து பிபிசி நிருபர் வினீத் கரே நேரடியாக தெரிவித்து வருகிறார்.

இப்போது இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான மெய்யான கட்டுப்பாட்டுக் கோடு பற்றிய செய்திகளும் அமெரிக்க ஊடகங்களில் மற்றொரு கோணத்தில் வெளிப்படுவதாக அவர் கூறினார்.

உதாரணமாக, சி.என்.என் இணையதளத்தில் சீனா பற்றிய ஒரு கட்டுரையை குறிப்பிடலாம். “தென் சீனக் கடலில் தனது அதிகாரத்தை பெய்ஜிங் நிரூபிப்பது இது முதல் தடவை அல்ல. அதேபோல் இந்தியாவுடனான எல்லைப் பிரச்சனையும் இன்றோ நேற்றோ உருவானதும் அல்ல. ஆனால் கொரோனா வைரஸ் தொடர்பான உள் விவகாரங்கள் காரணமாக வாஷிங்டன் மற்றும் புதுடெல்லியில் உள்ள அரசியல் தலைவர்கள் கவனத்தைத் திசைதிருப்புவதற்கான முயற்சி என்று இதை சொல்லலாம். மறுபுறம், இந்திய எல்லைப் பகுதி மற்றும் தென்சீனக் கடல் பகுதியில் தனது ஆதிக்கத்தை தற்போது நிலைநாட்டி, அதை கொரோனாவிற்கு பிறகும் நீட்டிக்கும் உத்திரீயிலான திட்டமாகவும் சீனாவின் இந்த செயல்பாடுகள் இருக்கலாம்.”

இதைத் தவிர, தெற்காசியாவின் அமெரிக்காவின் தலைமை ராஜதந்திரி ஆலிஸ் வெல்ஸ் நேஹால் சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்வில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். “சீனாவின் ஆக்கிரமிப்பு குறித்து யாருக்காவது சந்தேகம் ஏற்பட்டால், அவர்கள் இந்தியாவுடன் பேசவேண்டும். ஒவ்வொரு வாரமும், மாதமும் சீன ராணுவத்தால் இந்தியா தொடர்ந்து துன்புறுத்தப்படுத்தப்படுகிறது.”

இந்த மூன்றுக் காரணங்களைத் தவிர, இந்திய-சீன எல்லையில் ராணுவ நடவடிக்கைகள் அதிகரிப்பதற்கான வேறு பல காரணங்களும் இருக்கலாம். இது தொடர்பான விவாதங்களும், சர்ச்சைகளும் தொடரும்.

தற்போது, வெளியுறவு அமைச்சகம் மற்றும் சீனாவின் தூதர் இருவரும் தங்கள் நிலைப்பாட்டில் சற்று நெகிழ்வான அணுகுமுறையை வெளிப்படுத்தியுள்ளனர். “இந்தியாவும் சீனாவும் ஒருவருக்கொருவர் வாய்ப்புகள், அச்சுறுத்தல் அல்ல” என்று தூதர் சன் விடோங் கூறியுள்ளார்.

இதுபற்றி பேசும் இந்திய ராணுவத்தின் முன்னாள் தளபதி வி.பி.மாலிக், “இதுபோன்ற மோதல்களுக்கு தீர்வு ராஜதந்திர ரீதியாகவோ அல்லது அரசியல் ரீதியில் மட்டுமே இருக்க முடியும்” என்று ஒப்புக்கொள்கிறார்.

ஆனால், “தற்போதைய பிரச்சனையில், ராணுவ ரீதியிலான தீர்வு தோல்வியடைந்தது. தற்போது பரஸ்பர சர்ச்சை தொடரும் இடங்களில் அது மேலும் நீண்ட காலம் நீடிக்கக்கூடும்” என்று இந்திய ராணுவத்தின் முன்னாள் தளபதி வி.பி.மாலிக் தெளிவாகக் கூறுகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »