Press "Enter" to skip to content

கோவிட் 19: “பிபிஇ ஆடை பெண்களுக்காக வடிவமைக்கப்படவில்லை” – செவிலியர்களின் கடுமையான நாட்கள்

டெல்லியில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் பணிபுரிந்து வருகிறார் 31 வயதுடைய கீர்த்தி ஷா .”இந்த மூன்று மாதம் மிகவும் கடுமையாக இருந்தது. ஆனால் எந்த நேரத்திலும் தன்நம்பிக்கையை இழக்கவில்லை,” என்கிறார் அவர். பிபிஇ பாதுகாப்பு ஆடையை அணிந்துகொள்ள 45 நிமிடங்கள் ஆகும் என குறிப்பிடுகிறார் அவர். கண்ணாடி, கை கவசம், முக கவசம், மற்றும் உடலை மறைக்கும் தனி ஆடை என அனைத்தும் பிபிஇ கிட்டில் உள்ளன. ஒரு பெண் பிபிஇ ஆடை அணிந்துகொள்ளும்போது இன்னும் பலவற்றைக் கவனத்தில் கொள்ளவேண்டும் என்கிறார் கீர்த்தி ஷா. ” கழுத்து வெளியில் தெரியாதபடி அணியவேண்டும், மூக்கில் காயம் ஏற்படாமல் இருக்கக் கண்ணாடிக்கும் மூக்கிற்கும் இடையில் பஞ்சு வைக்க வேண்டும். பிபிஇ ஆடையில் கையின் அளவு மிக நீளமாக இருக்கும், எனவே அதை அதிகம் மடக்கிவிட்டு கை கவசம் அணிய வேண்டும். கடைசியாகக் காதுகளை பிபிஇ ஆடை மறைந்துள்ளதா? என்பதைக் கவனிக்க வேண்டும். பெரிய உடல் அளவிற்கான பிபிஇ ஆடைகள் மட்டுமே தயாரிக்கப்படுகிறது” என்கிறார் கீர்த்தி ஷா. செவிலியர்கள், இந்த ஆடையை தங்கள் பணிமுடியும் ஆறு மணிநேரத்திற்கு அவிழ்க்க முடியாது. எனவே இதற்கிடையில் கழிவறையும் செல்ல முடியாது, அதனால் தண்ணீர் குடிப்பது, உணவு உண்பது எனப் பலவற்றை செவிலியர்கள் தவிர்ப்பதாகக் கீர்த்தி ஷா கூறுகிறார்.

மாதவிடாய் காலம் ”இவை அனைத்தையும் மாதவிடாய் வரும் வரை பொறுத்துக்கொள்ள முடியும். பிபிஇ அணிவதால் எப்படி வியர்வை வெளியேறுகிறதா, அதே போல ரத்தம் வெளியேறும்.” என்கிறார் கீர்த்தி.

சில சமயம் ஆடையில் ரத்தம் கசிந்துவிட்டால், தன்னுடன் பணியாற்றும் ஆண் செவிலியர் ஒருவரை அழைத்து தனது பணியையும் சேர்த்து பார்த்துக்கொள்ளுமாறு கூறிவிட்டு, பாதியிலேயே பணியை நிறுத்திக்கொள்வதாகக் கீர்த்தி ஷா கூறுகிறார்.

“பெண்களுக்கும் ஏற்றவாறு பிபிஇ கிட்டுகள் தயாரிக்கப்படாததால் ஏதாவது ஒரு முயற்சியை மேற்கொள்ள வேண்டி உள்ளது,” என கீர்த்தி கவலை தெரிவிக்கிறார்.

பிபிஇ கிட்டுகள் ஆண்களுக்காக வடிவமைக்கப்பட்டதா ? இந்த பிரச்சனைகள் உலகம் முழுவதும் உள்ளன. உலகளவில் சுமார் 70 சதவிகிதம் மருத்துவ ஊழியர்களுக்கு பிபிஇ ஆடைகள் பெரிதாகவே உள்ளதாக சமீபத்திய ஆய்வு குறிப்பிடுகிறது. மேலும் இது மிகப் பெரிய அளவு ஆடையாக இருந்தால் வைரஸ் பரவுவதைத் தடுக்கவும் உதவாது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பிபிஇ ஆடை என்பது முதன்மையாக அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஆண்களுக்காகத் தயாரிக்கப்பட்டது. மற்ற உலக நாடுகளுக்கு இந்த பாதுகாப்பு கவசம் குறித்து சமீபமாகவே தெரியவந்தது என்கிறார் பிரிட்டன் மருத்துவக் குழுவின் உறுப்பினர் ஹெலன் ஃபிட்லர்.

2017ம் ஆண்டு பிரிட்டனில் நடத்தப்பட்ட ஆய்வில், பிபிஇ ஆடைகள் தங்கள் பனியை மேற்கொள்வதற்கு இடையூறாக இருந்தது என்றே 57% பெண்கள் கூறியுள்ளனர். இரண்டு வகை முக கவசங்கள் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன.

பிரிட்டனை சேர்ந்த பெண் மருத்துவ ஊழியர்கள் மட்டுமல்ல, உலகளவில் பல பெண்கள் பிபிஇ அணிவதால் சிரமப்படுகின்றனர். இரண்டு அளவில் தான் என்95 முக கவசங்கள் கிடைக்கின்றன. இதன் மூலம் இந்த பூமியில் முகங்கள் இரண்டு வகைப்படும் என்பதை நாம் குறிக்கின்றோமா ? என நியூயார்க்கில் பணிபுரியும் மருத்துவர் அர்கவான் சல்லெஸ் கேள்வி எழுப்புகிறார். மேலும் கடைகளில் சிறிய வகை கை கவசம், கண்ணாடி என சில விற்கப்படுகின்றன. ஆனால் அதுவே பெரிதாக தான் இருக்கிறது. யாருக்கும் தங்கள் அளவிற்கு ஏற்றவாறு பொருந்துவதில்லை என்கிறார்.

சமாளித்துக்கொள்ளக் கற்றுக்கொண்டோம் பல நாடுகளில் பிபிஇ கிட்டுகளுக்கே தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் பெண்களுக்கு என சரியாக வடிவமைக்கப்பட்ட பிபிஇ கிட்டுகள் வேண்டும் என கோரிக்கை வைக்க முடியவில்லை.

”உங்களுக்கு பிபிஇ கிட்டுகள் கிடைப்பதே பெரிய சலுகை தான் என மருத்துவ அதிகாரிகள் கூறியதாக” டெல்லியில் பணிபுரியும் செவிலியர் ஒருவர் கவலை தெரிவிக்கிறார்.

அவர் பல மணிநேரம் சிறுநீர் கழிக்காமல் இருந்ததால், சிறுநீர் பாதையில் தொற்று ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடுகிறார். பிரேசிலில் உள்ள மருத்துவமனையில் பணிபுரியும் ரினாடா பெட்ரோ, ஒரு நாளைக்கு 8ல் இருந்து 10 மணிநேரம் பிபிஇ கிட்டுகள் அணிந்திருப்பதாகக் கூறுகிறார்.

பாதுகாப்பாக இருப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு சமாளித்து வருவதாக கூறுகிறார். பிரேசிலின் மற்ற பகுதிகளில் வசிக்கும் தனது நண்பர்களுக்கு முக கவசம் கூட கிடைப்பதில்லை என ரினாடா குறிப்பிடுகிறார்.

பிபிஇ கிட்டுகள் தொடர்பான பிரச்சனை மருத்துவத் துறை மட்டுமல்லாமல் பல துறைகளில் உள்ளன.

2019ம் ஆண்டு, பெண்களை மட்டுமே விண்வெளிக்கு அனுப்பத் திட்டமிட்டிருந்த நாசா,பெண்களுக்கு ஏற்றவாறு சரியான அளவில் பிபிஇ கிட்டுகள் கிடைக்காத காரணத்தால் தனது பயணத்திட்டத்தை நாசா நிறுத்தி வைத்தது. இவ்வாறு ஆடைகளுக்கே தட்டுப்பாடு ஏற்படும்போது, அடுத்த தலைமுறை பெண்கள் எவ்வாறு இந்த துறைகளைத் தேர்ந்தெடுப்பார்கள்? என உயிரியல் ஆராய்ச்சியாளர் ஜெசிக்கா கேள்வி எழுப்புகிறார்.

ஜெசிக்கா கடல் உயிரினங்களின் வளங்களையும் இனப்பெருக்கம் குறித்தும் ஆராய்ச்சி மேற்கொள்கிறார். அவர் கடலுக்குச் செல்ல பயன்படுத்தும் ஆடைகளும் ஆண்களுக்காகத் தயாரிக்கப்பட்டது என குறிப்பிடுகிறார். உலகளவில் பலருக்கு பிபிஇ ஆடைகளை முறையாக அணிந்துகொள்ளத் தெரியவில்லை என்ற குற்றச்சாட்டும் நிலவுகிறது. மேலும் இந்த கொரோனா தொற்று காரணமாக நாம் சுகாதார துறையில் எவ்வளவு நெருக்கடி நிலையில் இருக்கிறோம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும் என ஆராய்ச்சியாளர் கரோலின் கூறுகிறார். இந்த நிலை இன்னும் எவ்வளவு நாட்களுக்கு ? கீர்த்தி தன்னை நம்பிக்கையுடன் உற்சாகமாக வைத்துக்கொள்வதற்குத் தினமும் உடற்பயிற்சி மற்றும் தியானத்தில் ஈடுபடுகிறார்.

”என்னை நான் பார்த்துக்கொள்ள முடியும் என்பதாலேயே இந்த துறையை தேர்ந்தெடுத்தேன். ஆனால் இது எவ்வளவு நாட்களுக்கு சாத்தியம் என தெரியவில்லை” என்கிறார் கீர்த்தி.

(பாதுகாப்பு காரணமாக பெண்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது)

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »