இந்திய- சீன எல்லை மோதல்: ரஷ்யா யார் பக்கம் நிற்கும்?

இந்திய- சீன எல்லை மோதல்: ரஷ்யா யார் பக்கம் நிற்கும்?

பிரஷாந்த் சஹால்
பிபிசி செய்தியாளர்

இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனியின் நாஜி படையினரை, ரஷ்ய சோவியத் படையினர் வென்று 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.

இந்த 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை அனுசரிக்கும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் ராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சியில் இந்தியப் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொள்ளவுள்ளார். மேலும் ரஷ்யாவின் உயர் ராணுவ அதிகாரிகளுடன் கலந்துரையாடலிலும் ஈடுபடப் போகிறார்.

கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட பிறகு சர்வதேச விமான பயணங்களுக்குத் தடை விதித்து 4 மாதங்கள் ஆகிறது. அதன் பிறகு இந்தியாவிலிருந்து முதல் முறையாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

லடாக்கில் இந்தியா, சீனா மோதல் நிலவும் இந்த நேரத்தில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ரஷ்யாவிற்குப் பயணம் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ரஷ்யத் தலைநகர் மாஸ்கோ செல்லும் முன்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், ”மூன்று நாள் பயணமாக மாஸ்கோ செல்கிறேன். இந்த பயணத்தின் மூலம் இந்தியா மற்றும் ரஷ்யா இடையேயான பாதுகாப்பு பலப்படுத்தப்படுவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெறும்” என பதிவிட்டுள்ளார்.

பல தசாப்தங்களாக ரஷ்யா மற்றும் இந்தியா இடையே ராணுவ உறவு வலிமை பெற்றுவருகிறது. நாடுகளுக்கு இடையிலான ராணுவ ஒத்துழைப்பை அதிகரிக்கப் பல பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட உள்ளன.

இதனால்தான் இந்திய-சீன எல்லையில் நிலவும் பதற்றத்தையும் பொருட்படுத்தாமல் பாதுகாப்புத்துறை அமைச்சர் ரஷ்ய பயணம் மேற்கொண்டிருக்கிறார் என இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

பாதுகாப்பு அமைச்சரின் இந்த பயணம் இந்திய ராணுவப்படையின் திறனை அதிகரிக்கும் முயற்சியாக இருக்கலாம் என சில இந்திய ஊடகங்கள் கருதுகின்றன.

லடாக்கின் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டில் நடைபெறும் இந்திய-சீன மோதலுக்கு மத்தியில் ”இந்திய ராணுவப்படையின் செயல்திறனை அதிகரித்து, சீனா மீது தாக்குதல் நடத்த இந்திய ராணுவத்தினரைத் தயார்படுத்தவே பாதுகாப்புத் துறை அமைச்சர் ரஷ்யா பயணம் மேற்கொண்டுள்ளார்” என நாளிதழ்களில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளன.

பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆயுதங்கள் இறக்குமதி குறித்து ரஷ்யாவுடன் ஒப்பந்தம் மேற்கொண்டாலும், கொரோனா வைரஸ் தொற்று பரவிவருவதால் ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஆயுதங்கள் சரியான நேரத்தில் இந்தியாவை வந்து சேராது என நிபுணர்கள் நம்புகின்றனர்.

மாஸ்கோவில் உள்ள மூத்த பத்திரிக்கையாளர் வினய் சுக்லா பிபிசியிடம் பேசுகையில், ”நீண்ட காலமாகப் பாதுகாப்பு சார்ந்த பல முக்கியமான ஒப்பந்தங்களை மேற்கொள்ள இந்தியா தயக்கம் காட்டிவந்தது. சில சமயங்களில் பணம் இல்லை என்றும், வேறு பல காரணங்களையும் குறிப்பிட்டு, ஒப்பந்தங்கள் மேற்கொள்ளத் தயங்கியது. எடுத்துக்காட்டாக 2014ம் ஆண்டு ரஷ்யாவுடன் இணைத்து ஹெலிகாப்டர் தயாரிக்கும் ஒப்பந்தம் குறித்து விவாதிக்கப்பட்டது. ஆனால் இதுவரை இந்தியா எந்த முடிவும் மேற்கொள்ளவில்லை” என்கிறார்.

வினய் சுக்லாவை பொறுத்தவரை, ”இந்தியாவிடம் பலதரப்பட்ட பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்ட ஹெலிகாப்டர் இருந்திருந்தால், இந்திய-சீன எல்லையில் மோதல் ஏற்பட்டபோது கல்வான் பள்ளத்தாக்கில் காயம் அடைந்து, உயிருக்குப் போராடிய ராணுவத்தினரைக் காப்பாற்றி இருக்கலாம்” என கூறுகிறார்.

மேலும், ”ஹெலிகாப்டர் வாங்குவதற்கான ராணுவ ஒப்பந்தம் மட்டுமல்ல,ரஷ்யாவுடன் துப்பாக்கிகள் தயாரிப்பதற்கான ஒப்பந்தமும் நிறைவேற்றப்பட்டு, உத்தர பிரதேச மாநிலத்தில் அமேதிக்கு அருகில் ஓர் தொழிற்சாலை அமைக்க பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் இந்த திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. சுக்ஹோய்(Sukhoi) மற்றும் மிக் (Mig) விமானங்கள் இந்திய விமானப்படையின் முதுகெலும்பு போல. ஆனால் இந்த வகை விமானங்களையும் வாங்குவது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. ” என்கிறார் அவர்

எனவே இந்த ஒப்பந்தங்களுக்காக தயாராக இருந்த முதலீட்டாளர்கள் தற்போதைய இந்திய மற்றும் ரஷ்ய அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை இழந்து, மேற்கொண்டு நிச்சயம் ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்படுமா என கேள்வி எழுப்புகின்றனர். இந்த தாமதத்திற்கு இந்திய அரசுதான் காரணம் என்கிறார் பத்திரிக்கையாளர் வினய்.

ரஷ்யாவின் எஸ்-400 ஏவுகணை

அமைச்சர் ராஜ்நாத்சிங் ரஷ்யாவிற்குப் பயணம் மேற்கொண்டதிலிருந்து எஸ்-400 ரக ஏவுகணை குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.

ரஷ்யாவில் உருவாக்கப்பட்ட எஸ்-400 ரக ஏவுகணை வானிலிருந்து நிலத்தை நோக்கிப் பாய்ந்து தாக்கும் திறன் கொண்டது. உலகிலேயே மிக சிறந்த வான் தாக்குதல் நடத்தும் ஏவுகணையாக எஸ்-400 கருதப்படுகிறது. ஒரே நேரத்தில் 36 இடங்களில் இந்த ஏவுகணையால் தாக்குதல் நடத்த முடியும்.

சீனா ஏற்கனவே இதே ஏவுகணையை ரஷ்யாவிடம் இருந்து வாங்கி வைத்துள்ளது.

பிறகு ஏன் எஸ்-400 ரக ஏவுகணை இந்தியா வந்தடைய இவ்வளவு தாமதம் ?

இது குறித்து வினய் சுக்லா கூறுகையில் ”ரஷ்யாவிடம் இருந்து இந்த ஏவுகணையை இந்தியா வாங்கினால், இந்தியா மீது அமெரிக்கப் பொருளாதாரத் தடை விதிக்கும் என்ற அச்சம் நிலவியது. இந்த விவகாரத்தில் அமெரிக்காவும் இந்தியாவை அச்சுறுத்தியது” என்கிறார்.

இதனால் இந்தியாவில் உள்ள வங்கிகள் அச்சமடைந்தன. குறிப்பாக எந்தெந்த வங்கிகளின் பணம் அமெரிக்க வர்த்தகத்தில் புழக்கத்திலிருந்ததோ, அந்த வங்கிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டன. மேலும், எஸ்- 400 ரக ஏவுகணை வாங்குவதற்காகச் செலுத்தப்பட வேண்டிய முன்பணத்தை இந்தியா தாமதப்படுத்தியது. இருப்பினும் ரஷ்யா, எஸ்-400 ரக ஏவுகணையை விரைவில் இந்தியாவிற்கு அனுப்புவதாக அறிவித்துள்ளது.

”எஸ்-400 ரக ஏவுகணையைச் சீனாவிற்கு வழங்கும் முன்பே, ரஷ்யா இந்த ஏவுகணை குறித்து இந்தியாவிற்குத் தெரியப்படுத்தியது. ஆனால் சீனா வாங்கினால் மட்டுமே தாங்களும் இந்த ஏவுகணையை வாங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை இந்தியா அரசாங்கம் கொண்டிருந்தது” என வினய் கூறுகிறார்.

ஆயுதங்களைப் பொறுத்தவரைச் சீனா, ரஷ்யாவைச் சார்ந்தே உள்ளது. ரஷ்யாவைப் போலவே ஏவுகணை தயாரிக்கவேண்டும் என சீனா தீவிர முயற்சி மேற்கொண்டது. ஆனால் சீனா தயாரித்த ஏவுகணை ரஷ்யத் தயாரிப்பைப் போல இல்லை.

எனவே சீனா ரஷ்யர்களைப் போல, தாக்குதல் விமானம் தயாரிக்கத் தேவையான உரிமத்தைப் பெற்றது. இதன் மூலம் ரஷ்யா, சீனா தயாரிக்கும் தாக்குதல் விமானங்களைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.

”ரஷ்யா சீனாவிடம் கொடுத்த எஸ்-400 ரக ஏவுகணை, சீனாவை அமெரிக்காவிடம் இருந்து பாதுகாக்க உருவாக்கப்பட்டது. ஏவுகணை பாயும் அளவு குறைவு. ஆனால் இந்தியாவிற்கு வழங்கப்படும் எஸ்- 400, ரக ஏவுகணை பல மைல் தூரங்களைக் கடந்தும் தாக்குதல் நடத்தும். சீனாவிற்கு கொடுக்கப்பட்ட ஏவுகணையை விட இந்தியாவிற்கு அனுப்படவுள்ள ஏவுகணை வலிமையானது” என்கிறார்.

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கின் பேச்சுவார்த்தை நடத்தியபிறகு, எஸ்-400 ரக ஏவுகணை எப்போது இந்தியாவை வந்தடையும் ? என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா ரஷ்யா இடையேயான உறவு – எப்படிப்பட்டது?

கடந்த காலங்களில் கூட இந்தியாவிற்கு எந்த நாட்டுடன் பகை அதிகரிக்கிறதோ, இந்த நாட்டுடன் ரஷ்யாவும் சுமுக உறவை மேற்கொள்ளாது.

சர்வதேச விவகாரங்களின் நிபுணர் பேராசிரியர் ஹர்ஷ பாண்ட் கூறுகையில், ”இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்பதை ரஷ்யா நன்கு புரிந்துகொண்டது. சீனாவைப் போல அல்ல. சீனாவில் ஒருவிதமான சர்வாதிகாரம் உண்டு. எனவேதான் ரஷ்யா, இந்தியாவுடனான உறவை, பழைய நெருங்கிய நட்பு என்ற அடிப்படையில் வளர்க்க விரும்புகிறது. ஆனால் கடந்த தசாப்தத்தில் ரஷ்யா – சீனா இடையேயான உறவு வலிமை பெற்றுள்ளது” என்கிறார்

மேலும், ரஷ்யாவிற்குப் பல சவால்கள் உள்ளன என்று பேராசிரியர் ஹர்ஷ குறிப்பிடுகிறார்.

ரஷ்யா பாகிஸ்தானை விட குறைந்த மக்கள் தொகையைக் கொண்ட நாடு. அமெரிக்கா உலகம் முழுவதும் படைத் தளங்களை அமைத்து வருகிறது. அது ரஷ்யாவுக்குச் சவாலாக உள்ளது. தனது மிகப்பெரிய பரப்பளவைத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ரஷ்யா காக்க வேண்டியுள்ளது. தனது எல்லையைச் சுற்றி பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதை ரஷ்யா விரும்பாது.

ரஷ்யாவின் கிழக்கே உள்ள சீனாவுடன், ரஷ்யா எந்த பகையையும் மோதலையும் விரும்பவில்லை. ரஷ்யாவின் இந்த நோக்கம் சீனாவிற்குச் சாதகமாக அமைந்துள்ளது என ஹர்ஷ் கூறுகிறார்.

தற்போது சீனா மற்றும் ரஷ்யா இடையேயான உறவு மேம்பட்டிருக்கும் இந்த சூழலில், இந்தியா ரஷ்யாவுடன் கைகோர்ப்பது மிகவும் அவசியம் என கருதப்படுகிறது.

இந்திய-சீன எல்லையில் பதற்றம் அதிகரித்தால் அமைதிக்கான தீர்வை காண ரஷ்யா அனைத்து முயற்சிகளிலும் ஈடுபடும் என மாஸ்கோவில் உள்ள இந்தியத் தூதரகத்தில் ரஷ்ய அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.

சீனா மற்றும் ரஷ்யா இடையேயான உறவு

வலிமை மிக்க பல நாடுகள் தலைமையில் பிற நாடுகளின் அணிகள் உருவாக வேண்டும் எனும் எண்ணத்தை ரஷ்யா கொண்டுள்ளது. ரஷ்யாவின் இந்த பழைய எண்ணத்தை சீனா விரும்பவில்லை.

மேலும் இந்தியாவுடன் ரஷ்யா மிக நெருக்கமான உறவு கொண்டுள்ளது என சீனா கருதுகிறது. அதே சமயம் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் மோதல் அதிகரித்தால் சர்வதேச அளவில் அது ரஷ்யாவிற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை ரஷ்யா உணர்ந்துள்ளது.

”இன்று ரஷ்யா சீனா இடையில் பல வர்த்தகங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சீனாவின் இரண்டாவது வர்த்தக துணையாக ரஷ்யா இருந்தாலும், ரஷ்யா இந்த இடத்தில் மகிழ்ச்சியுடன் நிற்கிறது. மேலும் ரஷ்யாவிற்கு அமெரிக்கா மிகப் பெரிய பிரச்சனையாக உள்ள நிலையில் சீனாவின் துணை ரஷ்யாவிற்குத் தேவைப்படுகிறது. ” என்கிறார் ஹர்ஷ.

”ரஷ்யா மற்றும் இந்தியா இரண்டு நாட்டின் பாதுகாப்பிற்கும் ஆபத்து ஏற்பட்டால், இரு நாடுகளும் ஒன்றோடு ஒன்று கலந்தாலோசித்துப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இதற்கான முயற்சியை மேற்கொள்ளவே ரஷ்ய அதிகாரிகளிடம் கலந்து பேச ராஜ்நாத்சிங் பயணம் மேற்கொண்டுள்ளார் என வினய் குறிப்பிடுகிறார்.

சீனாவிற்கு ரஷ்யா அழுத்தம் கொடுக்குமா ?

இந்தியா சீனா எல்லை பிரச்சனையில் ரஷ்யாவால் சீனாவிற்கு அழுத்தம் கொடுக்க முடியும் என சில சமூக ஊடக கருத்துகள் தெரிவிக்கின்றன.

ஆனால் பேராசிரியர் ஹர்ஷ் இதை மறுக்கிறார். ரஷ்யாவின் பொருளாதார நிலைமை மோசமாக உள்ளதால், அந்நாட்டிற்குச் சீனாவின் உதவி தேவை.

எனவே இந்திய-சீன மோதல் விவகாரத்தில் மற்ற நாடுகளைப் போல ரஷ்யா நடுநிலையாக செயல்பட வாய்ப்புள்ளது என்பதே பல நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

Author Image
Nila Raghuraman