Press "Enter" to skip to content

வீகர் முஸ்லிம்களுக்கு எதிரான துன்புறுத்தல்: சீன அதிகாரிகளுக்கு எதிராக அமெரிக்கா தடையுத்தரவு மற்றும் பிற செய்திகள்

சீனாவில் உள்ள ஷின்ஜியாங் மாகாணத்தில் முஸ்லிம் சிறுபான்மையினருக்கு எதிரான மனித உரிமை மீறல்களுக்கு காரணமானவர்கள் என்று அமெரிக்கா குற்றம்சாட்டும் சீன அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு எதிராக சில தடையுத்தரவுகளை அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.

வீகர் முஸ்லிம்கள் மற்றும் பிற அமைப்பினருக்கு எதிராக பெரும் அளவிலான தடுப்புக்காவல்கள், மத ரீதியிலான துன்புறுத்தல் மற்றும் கட்டாய கருத்தடை ஆகியவை நடத்தப்பட்டதாக சீனா மீது குற்றம்சாட்டப்படுகிறது.

அமெரிக்காவை மையமாக கொண்டு நிதி முதலீடு செய்யப்பட்டுள்ள சீன கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பிராந்திய தலைவரான சென் குவாங்வோ மற்றும் மூன்று அதிகாரிகளுக்கு சொந்தமான சொத்துக்களை அமெரிக்கா அறிவித்துள்ள தடையுத்தரவு இலக்கு வைத்துள்ளது.

அதேவேளையில், ஷின்ஜியாங் மாகாணத்தில் முஸ்லிம்கள் தவறாக நடத்தப்படவில்லை என சீனா மறுத்து வருகிறது.

எந்தவொரு மதமோ இனவாத குழுவோ இலக்கு வைக்கப்படுவதாக கூறப்படுவதையும் சீனா மறுத்தது.

அண்மை காலமாக மறுகல்வி முகாம்களில் பல லட்சம் மக்களை சீன அதிகாரிகள் தடுப்புக்காவலில் வைத்துள்ளதாக நம்பப்படுகிறது.

தீவிரவாதம் மற்றும் பிரிவினைவாதத்தை தடுக்க அவர்களுக்கு தொழில்முறை பயிற்சி தேவைப்படுவதாக அதிகாரிகள் கூறினர்.

இந்நிலையில், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பலம்பொருந்திய பொலிட்பிரோவை சேர்ந்த சென் தான், அமெரிக்கா அறிவித்துள்ள தடையுத்தரவுகளால் மிகவும் கடுமையாக பாதிக்கப்படவுள்ள மிக உயரிய சீன அதிகாரி ஆவார்.

சிறுபான்மையினருக்கு எதிரான சீனாவின் கொள்கைகளுக்கு பின்னால் உள்ள முக்கியப் புள்ளியாக இவர் பார்க்கப்படுகிறார்.

ஷின்ஜியாங் மாகாணத்தின் பொதுமக்கள் பாதுகாப்பு அலுவலகத்தின் இயக்குநரான வாங் மிங்சான், ஷின்ஜியாங் பிராந்தியத்தை சேர்ந்த மூத்த கட்சி உறுப்பினரான ஜூ ஹாய்லூன் மற்றும் பாதுகாப்புதுறையின் முன்னாள் அதிகாரியான ஹுவோ ஆகியோரும் இந்த புதிய தடையுத்தரவுகளுக்கு இலக்காகியுள்ளனர்.

இவர்களுடன் அமெரிக்காவில் நிதி பரிவர்த்தனை செய்வது இனி அங்கு குற்றமாகும். மேலும் இவர்களுக்கு அமெரிக்காவை மையமாக கொண்ட முதலீடுகள், சொத்துக்கள் அனைத்தும் இனி முடக்கப்படும்.

ஷின்ஜியாங் மாகாணத்தின் பொதுமக்கள் பாதுகாப்பு அலுவலகத்தின் மீதும் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஷின்ஜியாங் மாகாணத்தில் நடந்த கொடூரமான உரிமை மீறல்களுக்கு எதிராக அமெரிக்கா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக அமெரிக்க வெளியுறவுதுறை செயலர் மைக் பாம்பேயோ ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.

”மனிதாபிமானமற்ற இவ்வாறான செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க உலக நாடுகள் அமெரிக்காவுடன் இணைந்து நிற்கவேண்டும்” என்றும் மைக் பாம்பேயோ முன்னதாக தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று பரவல் தொடர்பாகவும், ஹாங்காங்கில் அண்மையில் சீனா அறிவித்துள்ள புதிய பாதுகாப்பு சட்டம் தொடர்பாகவும் ஏற்கனவே அமெரிக்கா மற்றும் சீனா இடையே பதற்றம் இருந்து வருகிறது.

சீனாவில் நடப்பது என்ன?

முன்னதாக சீனாவில் கட்டுப்பாடு நிறைந்த முகாம்களில் நூற்றுக்கணக்கான முஸ்லிம்களை கையாள கடைப்பிடிக்கப்படும் கொள்கைகள் தொடர்பான ஆவணங்களை பிபிசி பார்வையிட்டுள்ளது.

அதில், முக்காடு அணிவது, நீளமாக தாடி வைப்பது போன்ற காரணங்களுக்காக, வீகர் இனக்குழுவினரை தடுத்து வைக்க பரிசீலிக்கப்பட்டது தெரிய வந்துள்ளது.

அங்குள்ள ஷின்ஜியாங் மாகாணத்தை சேர்ந்த மக்கள் எவ்வாறு ஒடுக்கப்படுகிறார்கள் என்பதை, அந்த ஆதாரங்கள் தெளிவாக வெளிப்படுத்துவதாக விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

மேற்கு சீனாவில் செயல்படும் கட்டாய முகாம்கள் குறித்து இரண்டு ஆண்டுகளாக பிபிசி செய்தி வெளியிட்டு வருகிறது. அங்கு சுமார் பத்து லட்சம் வீகர் இனக்குழுவினரும், பிற முஸ்லிம் சிறுபான்மையினரும் விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

தீவிரவாதத்தையும் பயங்கரவாதத்தையும் எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சியின் ஓர் அங்கமாக, இங்கு சீன மொழியையும், ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்பாட்டையும் வீகர்கள் கற்கிறார்கள் என்று சீனா கூறுகிறது.

ஆனால் பிபிசி பார்க்க நேர்ந்த கசிந்த ஓர் ஆவணம், மத நடைமுறைகள் மீதான விரிவான ஒடுக்குமுறை இந்த முகாம்களில் நடைபெறுவதை காண்பித்தன.

விரிவாக தொகுக்கப்பட்ட 137 பக்கங்களில், சின்ஜியாங் மாகாணத்தில் ஒரே பகுதியை சேர்ந்த 300க்கும் அதிகமான வீகர் இனக்குழுவினர், ஏன் தடுத்து வைக்கப்பட பரிசீலிக்கப்பட்டார்கள் என்பது விளக்கப்பட்டுள்ளது.

இந்தியா – சீனா எல்லை பதற்றம்: லடாக்கில் படைகள் விலகியதற்கு காரணம் என்ன?

கிழக்கு லடாக் எல்லையில் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே தற்போது பதற்றம் குறைந்து வருகிறது. பதட்டத்தை குறைக்க இரு நாடுகளும் ஒரு உடன்பாட்டை எட்டியுள்ளதாக இந்தியாவும் சீனாவும் கூறுகின்றன.

இதுதொடர்பாக பல கேள்விகள் எழுகின்றன. முதல் முக்கியமான கேள்வி, இந்திய ராணுவம் இந்திய எல்லைக்குள் தான் இருந்தது என்றால், அது பின் வாங்க வேண்டிய காரணம் என்ன?

விரிவாக படிக்க: லடாக் எல்லையில் இந்திய, சீனப் படைகள் விலகியதற்கு காரணம் என்ன?

தமிழ்நாட்டில் பழங்குடி இருளர் ஊராட்சித் தலைவர்களுக்கு மரியாதை இல்லை, உரிமையும் இல்லை

2011 உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகு நடந்த வன்முறையில் இருளர்களின் 11 குடிசைகள் கொளுத்தப்பட்டு, இடித்துத் தரைமட்டமாக்கப்படுகிறது. அதற்கடுத்து நடந்த சமீபத்திய உள்ளாட்சித் தேர்தலில் அந்த ஊராட்சி பழங்குடியினருக்கு ஒதுக்கப்படுகிறது. முருகேசன் என்ற பழங்குடி இருளர் வெற்றி பெறுகிறார்.

விரிவாக படிக்க: மரியாதை இல்லை, உரிமையும் இல்லை: முள் மகுடத்துடன் இருளர் ஊராட்சித் தலைவர்கள்

தமிழகத்தில் மூழ்கிய தீவுகள் குறித்து நீங்கள் அறிவீர்களா?

தமிழகத்தில் உள்ள மன்னார் வளைகுடாவில் இரண்டு தீவுகள் முன்னரே மூழ்கிவிட்ட சூழலில், மேலும் ஒரு தீவு வேகமாக மூழ்கி வருவதாகக் கூறுகிறார்கள் ஆய்வாளர்கள்.

தீவுகள் மூழ்குவது, வர இருக்கும் ஒரு பேராபத்துக்கான சமிக்ஞை என எச்சரிக்கிறார்கள் ஆய்வாளர்கள்

விரிவாக படிக்க: தமிழகத்தில் மூழ்கும் தீவுகள் – சூழும் மற்றுமோர் ஆபத்து: ஓர் எச்சரிக்கை

“இந்தியாவில் ஒரு நாளைக்கு 2.87 லட்சம் பேருக்கு கொரோனா ஏற்படலாம்”

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து கண்டறியப்படாத பட்சத்தில் இந்தியாவில் இதே நிலை நீடித்தால் வரும் 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாத இறுதியிலிருந்து ஒரு நாளைக்கு 2.87 லட்சம் பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி எனும் பிரபல பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் கணிக்கப்பட்டுள்ளது.

விரிவாக படிக்க: “இந்தியாவில் ஒரு நாளைக்கு 2.87 லட்சம் பேருக்கு கொரோனா ஏற்படலாம்” – எச்சரிக்கும் ஆய்வு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »