Press "Enter" to skip to content

சிங்கப்பூர் பொருளாதார மந்த நிலை சிக்கலில் இருந்து விடுபடுமா?

  • சதீஷ் பார்த்திபன்
  • பிபிசி தமிழுக்காக

பட மூலாதாரம், ROSLAN RAHMAN

“கண்மூடித் திறப்பதற்குள் எல்லாம் நடந்து முடிந்துவிட்டது” என்பதை உண்மையாக்கி இருக்கிறது கொரோனா வைரஸ்.

உலகில் கால்பதித்து அரையாண்டு மட்டுமே கடந்துள்ள நிலையில், பாரபட்சமின்றி ஒட்டுமொத்த உலக நாடுகளையும், குறிப்பாக அவற்றின் பொருளாதாரத்தையும் தலைகீழாகப் புரட்டிப் போட்டிருக்கிறது கோவிட்-19 நோய் தொற்று.

உலகம் முழுவதும் சுமார் ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்டோரை காவு வாங்கியுள்ள நிலையில், சிங்கப்பூரை பெரும் பொருளாதார சரிவை நோக்கி வேகமாக அழைத்துச் சென்று கொண்டிருக்கிறது கொரோனா வைரஸ் என்கிறார்கள் அனைத்துலகப் பொருளாதார நிபுணர்கள். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை இந்தச் சரிவில் இருந்து மீள்வதற்கான வழிமுறைகள் தெரியவில்லை என்பதே இந்நிபுணர்களின் ஒருமித்த கருத்தாக உள்ளது.

வளர்ந்த நாடுகளின் பொருளாதாரம் சுமார் 8 விழுக்காடு அளவுக்கு வீழ்ச்சி காணும் என்றும், உலகப் பொருளாதாரம் 4.9 விழுக்காடு அளவுக்கு சரியும் என்றும் சர்வதேச பண நிதியம் (International Monetary Fund) கணித்துள்ளதாக தமது கட்டுரை ஒன்றில் சுட்டிக்காட்டியுள்ளார் சிங்கப்பூர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பத்திரிகையின் இணை ஆசிரியரான விக்ரம் கன்னா.

ஆசியாவின் பொருளாதார வளர்ச்சி என்பது பின்னோக்கிச் செல்லும், அதாவது பூஜ்யம் குறியீட்டிற்கும் கீழே செல்லும் எனப் பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். உலக வர்த்தகமும் மூன்றில் ஒரு பங்கு சிதைந்துவிடும் என்று உலக வர்த்தக நிறுவனம் தெரிவிக்கிறது.

இத்தகைய சூழ்நிலையில், மிகச் சிறிய தீவு நாடான சிங்கப்பூரும் பொருளாதார மந்த நிலையை எதிர்கொள்வதற்கு தயாராகி வருகிறது.

ஏற்றுமதியை பெரிதும் சார்ந்துள்ள சிங்கப்பூர்

ஏற்றுமதியை சார்ந்துள்ள உலக நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று. மேலும் மனித ஆற்றலைப் பொறுத்தவரை வெளிநாட்டு ஊழியர்களின் பங்களிப்பையும் அதிகம் சார்ந்துள்ளது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று சிங்கப்பூரில் பணியாற்றும் வெளிநாட்டு ஊழியர்கள் மத்தியில்தான் வேகமாகப் பரவியது. ஆயிரக்கணக்கான வெளிநாட்டு ஊழியர்கள் பாதிக்கப்பட்டனர்.

இதையடுத்து ஊழியர்களுக்கான தங்குவிடுதிகளில் பெரும்பாலானவை தனிமைப்படுத்தப்பட்டன. எனினும் இந்த ஊழியர்களை சிங்கப்பூர் அரசு கைவிடவில்லை.

பொருளாதார மந்த நிலை: சிக்கலில் இருந்து விடுபடுமா சிங்கப்பூர்?

பட மூலாதாரம், ROSLAN RAHMAN

அனைவருக்கும் இலவச உணவு, இணைய வசதி, மருத்துவ சிகிச்சை, விடுமுறையிலும் முழு ஊதியம் எனப் பரிவுடன் கவனித்துக் கொண்டது. அதேவேளையில் அந்நிய தொழிலாளர்களின் பங்களிப்பு தேவைப்பட்ட கட்டுமானம், தொழிற்சாலை பணிகள் உள்ளிட்ட துறைகள் இயங்காததால் நாட்டின் பொருளாதாரம் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது.

சுதந்திர சிங்கப்பூர் சந்திக்கும் மிக மோசமான பொருளியல் மந்தநிலை

ஊரடங்கு மற்றும் நடமாட்டக் கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வந்தாலும் இன்னமும் கூட சிங்கப்பூரில் ஒருவித ஊரடங்கு நிலை நிலவுவதாகவே கருதத் தோன்றுகிறது. வைரஸ் பரவலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் நீடித்து வருவதால் அங்கு சில்லறை தொழில் மற்றும் வணிக நிறுவனங்களின் செயல்பாடுகள் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை.

இதுபோன்ற பல்வேறு காரணங்களால் சிங்கப்பூரின் பொருளாதாரம் தொடர்ந்து சரிந்து வருவதாக கூறப்படும் நிலையில், நடப்பு 2020ஆம் ஆண்டின் முதலாவது காலாண்டுடன் ஒப்பிடுகையில், அடுத்த காலாண்டில் அதன் பொருளாதார வளர்ச்சி சுமார் 41 விழுக்காடு அளவிற்கு குறைந்துள்ளது.

கடந்த 1965இல் மலேசியாவில் இருந்து தனி நாடாகப் பிரிந்த பிறகு சுதந்திர சிங்கப்பூர் எதிர்கொண்டுள்ள மிக மோசமான பொருளாதார மந்தநிலை இதுவாகத்தான் இருக்கும் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவானது நடப்பு 2020இன் இரண்டாவது காலாண்டில் சுமார் 12.6 விழுக்காடு குறைந்துள்ளது.

அதேபோல், கடந்த 2019இன் முதலாம் காலாண்டுடன் ஒப்பிடுகையில், உள்நாட்டு உற்பத்தி அளவானது நடப்பு 2020இன் முதலாவது காலாண்டில் 2.2 விழுக்காடு குறைந்துள்ளது.

வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் இலக்குடன் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு, உலக பொருளாதாரத்தில் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதற்கு இந்தப் புள்ளி விவரங்கள் நல்ல எடுத்துக்காட்டு என நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

சிறப்பு பொருளாதார ஊக்குவிப்பு தொகுப்பை அறிவித்த சிங்கப்பூர் அரசு

பொருளாதார மந்த நிலை: சிக்கலில் இருந்து விடுபடுமா சிங்கப்பூர்?

பட மூலாதாரம், ROSLAN RAHMAN

தென்கிழக்கு ஆசிய நாடுகளைப் பொறுத்தவரை, சிங்கப்பூர் மட்டுமல்லாமல், மலேசியா, இந்தோனீசியா, பிலிப்பீன்ஸ், தாய்லாந்து, வியட்நாம் ஆகியவையும் பொருளாதார நெருக்கடிகளை இப்போதே உணரத் தொடங்கியுள்ளன. ஏனெனில் இந்த நாடுகளும் ஏற்றுமதியை சார்ந்துள்ளன. இவற்றின் பொருளாதாரமும் சுமார் இரண்டு விழுக்காடு அளவு வீழ்ச்சி காணும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

ஒட்டுமொத்த தென்கிழக்கு ஆசிய நாடுகளும் சமூகம், பொருளாதார நிலை என ஏதேனும் ஒருவகையில் பிரச்சனைகளை எதிர்கொண்டுள்ளன.

உலகளாவிய வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளும் மாற்றங்களும் சிங்கப்பூரின் ஏற்றுமதி சார்ந்த உற்பத்தி துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. மேலும் கட்டுமானப் பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளன. சில்லறை விற்பனையாளர்கள் தங்கள் பொருட்களின் விற்பனை அளவானது இதுவரை இல்லாத அளவிற்கு வீழ்ச்சியடைவதைக் சோகத்துடன் பார்த்து வருகிறார்கள்.

கோவிட்-19 நோயானது சுற்றுலாத்துறை, விமானப் போக்குவரத்துத் துறையின் எதிர்காலத்தைச் சந்தேகத்துக்கு உரியதாக ஆக்கிவிட்டது என்றும், அத்தியாவசியப் பொருட்கள், சேவைகளைப் பொறுத்தவரையில் உலக நாடுகள் சுயசார்புப் போக்கையே விரும்பும் அளவிற்கு நிலைமை மாறியுள்ளது என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

இத்தகைய போக்குதான் சிங்கப்பூருக்கு புது தலைவலியாக உருவெடுத்துள்ளது. ஏனெனில் சிங்கப்பூர் இதுவரை உலக வர்த்தகத்தையே பெருமளவு சார்ந்துள்ளது. இந்தக் கவலை அதன் பிரதமர் லீ சியன் லூங்கிற்கும் உள்ளது. ஒட்டுமொத்த உலக வர்த்தகமும் நிலைகுலைய வாய்ப்பில்லை என்றும் வர்த்தக அளவும் வீச்சும் குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும், அதனால் சிங்கப்பூர் பாதிக்கப்படும் என்றும் அந்நாட்டு அரசு கருதுகிறது.

இத்தகைய பொருளாதார நெருக்கடியானது அண்மைய பொதுத்தேர்தல் மூலம் மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ள மக்கள் செயல் கட்சித் தலைமைக்கு கடும் அழுத்தத்தையும் ஏற்படுத்தும் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

இதன் எதிரொலியாகவே சுமார் 93 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள பொருளாதார ஊக்குவிப்பு தொகுப்பை அறிவித்துள்ளது சிங்கப்பூர் அரசு. இது அந்நாட்டின் உள்நாட்டு உற்பத்தி அளவில் சுமார் 20 விழுக்காடு ஆகும். இதன் மூலம் குடும்பங்கள் மற்றும் வர்த்தக அமைப்புகள் பயன்பெறும் என அரசு தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரிலும், உலக அளவிலும் வைரஸ் தொற்றுப் பரவலின் அளவைப் பொறுத்தே பொருளாதார மந்த நிலையில் இருந்து சிங்கப்பூர் மீட்சி பெறுவது குறித்து எடைபோட இயலும் என்கிறார் சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் நிர்வாக இயக்குநர் ரவி மேனன்.

லீ சியன் லூங் (கோப்புப்படம்)

பட மூலாதாரம், Getty Images

மேலும் வேலையின்மையும், பெருநிறுவனங்கள் திவால் ஆவதும் அதிகரிக்கும் என்று சுட்டிக்காட்டியுள்ள அவர், இதைத் தவிர்க்க இயலாது என்றும், பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையை முடிந்தளவு குறைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

மீண்டு வருவோம்: சிங்கப்பூரர்கள் நம்பிக்கை

“கடந்த 1973இல் ஏற்பட்ட எண்ணெய் நெருக்கடி, அதனையடுத்து 1985, 1998 ஆகிய ஆண்டுகளிலும் 2001 முதல் 2003 வரையிலான காலகட்டத்திலும், பிறகு 2009ஆம் ஆண்டிலும் ஏற்பட்ட நிதி, பொருளியல் பின்னடைவு ஆகியவற்றால் ஏற்பட்ட பாதிப்புகளைவிட கோவிட்-19 பல துறைகளிலும் மிக அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருவதாக சிங்கப்பூர் தமிழ் முரசு நாளேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஒரு லட்சம் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க இருப்பதாக சிங்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது. எனினும் தற்போதைய சூழலில் இதுவும் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.

கடந்த காலங்களிலும் சிங்கப்பூர் பொருளாதார மந்த நிலையை எதிர்கொண்டு மீண்டு வந்துள்ளது. கொரோனா வைரஸ் யாரும் எதிர்பார்த்திராத அளவுக்குப் பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளதால், இம்முறை சரிவில் இருந்து மீண்டு வருவது சிங்கப்பூர் அரசுக்கும், அந்நாட்டு மக்களுக்கும் பெரும் சவாலாகவே இருக்கும்.

எனினும் முந்தைய சவால்களை சமாளித்த துணிவுடனும் நம்பிக்கையுடனும் சிங்கப்பூரர்கள் நடைபோடுகிறார்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »