Press "Enter" to skip to content

தென் சீன கடல் சர்ச்சை: அமெரிக்கா – சீனா இடையே மேலும் மோதலை உருவாக்குகிறதா?

பட மூலாதாரம், Getty Images

தென் சீன கடலோரப் பகுதியில் உள்ள வளங்களைக் கைப்பற்றுவதற்கு சீனா நாட்டம் காட்டுவது “முழுக்க சட்ட விரோதமானது” என்று அண்மையில் அமெரிக்க வெளியுறவுச் செயலர் மைக் பாம்பியோ தெரிவித்தார்.

எரிசக்தி வளம் மிகுந்திருக்கும் வாய்ப்புள்ள சர்ச்சைக்குரிய நீர் எல்லைப் பகுதியை “கட்டுப்படுத்துவதற்கு அடாவடித்தனமான செயல்களில் ஈடுபடும்” சீனாவின் செயல்பாடுகளுக்கு அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

செயற்கையாக உருவாக்கப்பட்ட தீவுகள் பகுதியில் பல ஆண்டுகளாக சீனா ராணுவ தளங்களை உருவாக்கி வருவது “உண்மைகள் மற்றும் சர்வதேச சட்டத்தை வெளிப்படையாக சிதைக்கும் முயற்சி” என்று அவர் கூறியுள்ளார்.

சீனாவின் இந்த முயற்சிகளை நீண்ட காலமாகவே அமெரிக்கா எதிர்த்து வந்திருக்கிறது என்றாலும், இதுவரையில் அதை சட்டவிரோதம் என்று கூறியது கிடையாது.

சீனாவுக்கும் வேறு பல நாடுகளுக்கும் இடையில் உறவுகள் மோசமடைந்து வரும் நிலையில் பாம்பியோவின் கருத்துகள் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த விஷயத்தில் ஏதும் நடவடிக்கை எடுப்பதாக இருந்தால், தன்னுடைய நிலைப்பாட்டை உறுதிப்படுத்துவதற்கு அமெரிக்கா எந்த மாதிரியான புதிய நடவடிக்கைகளை எடுக்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

தெற்கு சீன கடல் பகுதியில் ஏறத்தாழ முழுமையுமே தங்களுக்குச் சொந்தமானது என்று சீனா உரிமை கோருவதை புருனே, மலேசியா, பிலிப்பின்ஸ், தாய்வான், வியட்நாம் ஆகிய நாடுகள் எதிர்த்து வருகின்றன. பல தசாப்த காலமாக அந்த எல்லைகள் குறித்த பிரச்சினை, இந்த நாடுகளுக்கு இருந்து வருகிறது. சமீப ஆண்டுகளாக அங்கு தொடர்ந்து பதற்றம் அதிகரித்து வருகிறது.

அந்தப் பகுதியை “நைன்-டேஷ் லைன்” என்று சீனா குறிப்பிடுகிறது. தீவு உருவாக்கம், கண்காணிப்பு ரோந்து மூலம் அதில் உரிமையை நிலைநாட்ட சீனா முயற்சிக்கிறது. அங்கே ராணுவத்தை அதிகரித்தும் வருகிறது. இருந்தபோதிலும், அமைதிக்கான எண்ணங்களுடன் தான் இப்படி செய்வதாக சீனா கூறுகிறது.

சர்ச்சைக்குரிய தென் சீனக் கடல்

பட மூலாதாரம், Reuters

அங்கே மக்கள் யாரும் வசிக்கவில்லை என்றாலும், அந்தப் பகுதியில் உள்ள இரண்டு தீவுக் குழுக்களைச் சுற்றிய பகுதிகளிலும் இயற்கை வள ஆதாரங்கள் இருப்பதாகக் கருதப்படுகிறது. கடல்வழிப் பயணத்துக்கான வழித்தடமாகவும் அந்தக் கடல் பகுதி உள்ளது. முக்கியமான மீன்பிடி பகுதியாகவும் இருக்கிறது.

சீன விமானப் படையின் செயல்பாடுகள் கவலைக்குரியவையாக உள்ளதாக தனது வருடாந்திர ராணுவ ஆய்வு அறிக்கையில் ஜப்பான் கூறியுள்ளது. கிழக்கு மற்றும் தெற்கு சீன கடல் பகுதிகளில் தற்போதைய நிலைமையை மாற்றுவதற்கு சீனா முயற்சிப்பதாக ஜப்பான் குற்றஞ்சாட்டியுள்ளது.

பாம்பியோ கூறியது என்ன?

திங்கள்கிழமை வெளியிட்ட ஓர் அறிக்கையில், தெற்கு சீன கடலில் சர்ச்சைக்குரிய ஸ்பிராட்லி தீவுகளின் மீது சீனா உரிமை கோருவதை திரு. பாம்பியோ கண்டித்துள்ளார். “அந்தப் பகுதியில் தன்னிச்சையாக தனது விருப்பத்தைத் திணிப்பதற்கு சீனாவுக்கு சட்டபூர்வமான முகாந்திரம் எதுவும் கிடையாது” என்று அவர் கூறியுள்ளார்.

சர்வதேச சர்ச்சைகளில் எந்தத் தரப்புக்கு ஆதரவாகவும் முன்பு அமெரிக்கா செயல்பட்டதில்லை என்று கூறியுள்ள அவர், வியட்நாம், மலேசியா மற்றும் இந்தோனேசியா நீர் எல்லைப் பகுதிகளை சீனா உரிமை கோருவதை நிராகரித்தார்.

“இந்த நீர் எல்லைப் பகுதியில் மற்ற அரசுகளின் மீன்பிடி அல்லது ஹைட்ரோகார்பன் உற்பத்தி – அல்லது அதுபோன்ற செயல்களை தன்னிச்சையாக செய்வதற்கு எந்த (சீன மக்கள் குடியரசு) முயற்சி நடந்தாலும் – அது சட்ட விரோதமானது” என்று அவர் கூறியுள்ளார்.

“தெற்கு சீன கடல் பகுதியை தங்கள் கடல்வாழ் உயிரின சக்கரவர்த்தியாக சீனா கருதிக் கொள்வதை உலகம் அனுமதிக்காது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சீனாவின் பதில் என்ன?

“கடல் குறித்த சட்டம் பற்றிய ஐக்கிய நாடுகள் சபை மாநாட்டின் தீர்மானம் உள்ளிட்ட சர்வதேச சட்டம் மற்றும் உண்மைகளை வேண்டுமென்றே சிதைக்கும்” செயலில் அமெரிக்க வெளியுறவுத் துறை ஈடுபட்டிருக்கிறது என்று வாஷிங்டன் டி.சி.யில் உள்ள சீன தூதரகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

கோப்புப்படம்

பட மூலாதாரம், Getty Images

“அந்தப் பிராந்தியத்தில் உள்ள நிலைமையை அமெரிக்கா பெரிதுபடுத்துகிறது என்றும், சீனா மற்றும் கடலோரப் பகுதியில் உள்ள நாடுகளுக்கு இடையில் வெறுப்பை விதைக்க முயற்சிக்கிறது” என்றும் சீனா கூறியுள்ளது.

“குற்றச்சாட்டு முழுமையாக நியாயமற்றது. சீன தரப்பு இதை உறுதியாக எதிர்க்கிறது” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜாஹொயின் ஃபெங் , பிபிசி சீன மொழிப்பிரிவு , வாஷிங்டன் டிசி

இதுவரையில் தெற்கு சீன கடல் பகுதி எல்லை சர்ச்சைகளில் அமெரிக்கா எந்தத் தரப்பிற்கும் ஆதரவு தெரிவித்தது கிடையாது.

அந்தப் பிராந்தியத்தில் சீனா உரிமை கோருவதற்கு சட்டபூர்வ ஆதாரம் எதுவும் இல்லை என்று நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஹேக் நகரில் நடைபெற்ற சர்வதேச டிரிபியூனலில் தீர்ப்பு கூறிய பிறகு, முதன்முறையாக அதிகாரப்பூர்வமாக தனது நிலைப்பாட்டை அமெரிக்கா தெளிவுபடுத்தியுள்ளது. ஆனால் இப்போது ஏன் அமெரிக்கா கருத்து கூறியுள்ளது?

கோப்புப்படம்

பட மூலாதாரம், Getty Images

கடந்த வாரம் அந்தப் பகுதியில் சீனாவும், அமெரிக்காவும் ஒரே சமயத்தில் கடற்படை ஒத்திகைகளை நடத்தின. இது அபூர்வமாக நடைபெறும் நிகழ்ச்சி. பதற்றம் அதிகரித்து வருவதன் அடையாளமாக அது கருதப்படுகிறது.

சீனாவுடனான 40 ஆண்டு கால கொள்கை தோல்வி அடைந்துவிட்டதாகக் கூறி, அதை மாற்றப் போவதாக அதிபர் டிரம்ப் தலைமையிலான அரசு அறிவித்துள்ளது, முக்கியமானதாகக் கருதப்படுகிறது. கொரோனா வைரஸ் நோய்த் தொற்று கையாளப்பட்ட விதம், ஜின்ஜியாங்கில் முஸ்லிம் சிறுபான்மையினருக்கு எதிரான மனித உரிமைகள் மீறல், ஹாங்காங்கில் ஜனநாயக ஆதரவு போராட்டங்களை ஒடுக்கிய விதம் போன்ற விஷயங்களில் சீனாவின் செயல்பாடுகளை அமெரிக்கா சமீப காலத்தில் குற்றஞ்சாட்டியுள்ளது.

தெற்கு சீன கடல் பகுதியில் நிலப்பரப்பை உருவாக்க சீனா மேற்கொண்டுள்ள முயற்சி, அந்த நாட்டின் சர்வதேச லட்சியங்கள் குறித்து உலக நாடுகள் மறு ஆய்வு செய்ய வேண்டியதன் அவசியத்தை உணர்த்துவதாக அமைந்தது.

அந்தப் பிராந்தியத்துக்கு உரிமை கோருவது மிகவும் அதிக அளவானதாக உள்ளது. சிறப்பு முக்கியத்துவம் இல்லாத இந்தத் தீவுக் குழுக்கள் மற்றும் சிப்பி வளங்கள் நிறைந்த பகுதிகளில் ஏற்படும் மோதல், உலகின் இரண்டு மிகப் பெரிய வல்லாதிக்க நாடுகளுக்கு இடையில் ராணுவ ரீதியிலான மோதலை உருவாக்குவதற்கான ஆபத்து ஏற்பட்டுள்ளது.

“எங்களுடைய தென் கிழக்கு ஆசிய தோழமை நாடுகளுடன் துணை நிற்கிறோம். கடலோரப் பகுதி வளங்களில் இறையாண்மையுடன் கூடிய அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க உதவுகிறோம்” என்று திரு. பாம்பியோ கூறியுள்ளார். “சர்வதேசச் சட்டத்தின் கீழான உரிமைகள் மற்றும் கடமைகளின்படி” இந்த நிலைப்பாட்டை அமெரிக்கா எடுத்துள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தென் சீன கடல் சர்ச்சையின் பின்னணியில் இருப்பது என்ன?

மக்கள் வசிக்காத தீவுக் கூட்டங்களில், பாரசெல்ஸ் மற்றும் ஸ்பிராட்லி என்ற இரண்டு தீவுகளின் மீது உரிமை கோருவதில் சீனாவுக்கும், மற்ற நாடுகளுக்கும் இடையில் சமீப காலமாக பதற்றங்கள் அதிகரித்து வருகின்றன.

அந்த எல்லையில் பெரும் பகுதி தங்களுச் சொந்தம் என்று சீனா உரிமை கோருகிறது. பல நூறாண்டுகளாக தங்களுக்கு அந்த உரிமை இருப்பதாக சீனா கூறுகிறது.

கோப்புப்படம்

பட மூலாதாரம், Reuters

அந்தப் பகுதியில் சீனாவின் ராணுவம் அதிகரிக்கப்படுவதை நீண்ட காலமாகவே அமெரிக்கா குற்றம் கூறி வந்துள்ளது. “கடற்பயண சுதந்திரத்தின்” நோக்கம் பற்றிய கருத்துகளால் சீனா தொடர்ந்து கோபம் அடைந்து வருகிறது.

2018 ஆகஸ்ட் மாதத்தில், சர்ச்சைக்கு உரிய தெற்கு சீன கடல் தீவுகளுக்கு அமெரிக்க ராணுவ விமானத்தில் பிபிசியின் ஒரு குழு சென்றது. “எந்த தவறான புரிதலும் ஏற்படாமல் தவிர்க்க” வேண்டுமானால், அந்தப் பகுதியில் இருந்து “உடனடியாக” வெளியேற வேண்டும் என்று பைலட்களுக்கு ரேடியோ தொடர்பு மூலம் அப்போது எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

சில மாதங்களுக்கு முன்பு, அந்தத் தீவுகள் மற்றும் சிப்பி வளம் மிகுந்த பகுதிகளில் போர் ஒத்திகைக்காக சர்ச்சைக்குரிய எல்லையில் வெடிகுண்டு சாதனங்களை சீனா இறக்கியது.

பிராந்திய விவகாரங்களில் அமெரிக்க கடற்படை தலையிடுவதாகவும், தூண்டுதல் வேலைகளில் ஈடுபடுவதாகவும் முன்னர் சீனா குற்றஞ்சாட்டியுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »