Press "Enter" to skip to content

Reliance Jio: 5ஜி தொழில்நுட்பத்தில் ஹுவாவேவுடன் போட்டிக்கு தயாராகிறதா ஜியோ?

  • சாய்ராம் ஜெயராமன்
  • பிபிசி தமிழ்

பட மூலாதாரம், SOPA Images

வெறும் 12 வாரங்களில் உலகின் முன்னணி நிறுவனங்களான ஃபேஸ்புக், கூகுள், இன்டெல், குவால்காம் என மொத்தம் 14 நிறுவனங்கள் போட்டிப் போட்டு கொண்டு ரிலையன்ஸின் துணை நிறுவனமான ஜியோவில் முதலீடு செய்துள்ளது உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அதாவது, 84 நாட்களில் ஜியோவின் 32.82 சதவீத பங்குகளை 14 நிறுவனங்களுக்கு விற்றதன் மூலம், 1.51 லட்சம் கோடி ரூபாய் திரட்டியுள்ளது ரிலையன்ஸ் நிறுவனம்.

2016ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஜியோ நிறுவனம் பல்வேறு தரப்பினரையும் அதிசயிக்க வைப்பது இது முதல் முறையல்ல. இந்த நிலையில், ரிலையன்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஜியோ பிளாட்பார்ம்சின் அதிவேக வளர்ச்சிக்கான காரணம், 5ஜி உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களில் கால்பதிப்பதன் மூலம் பிராந்திய, சர்வதேச அளவில் தொலைத்தொடர்புத் துறையில் அது ஏற்படுத்தப்போகும் தாக்கம், ஜியோவின் வளர்ச்சி மற்ற நிறுவனங்களுக்கு அளிக்கும் அழுத்தம் உள்ளிட்ட விடயங்களை அலசுகிறது இந்த கட்டுரை.

தொடக்கம் முதலே சலுகைகள்

2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், இந்திய தொலைத்தொடர்பு சந்தையில் முன்னெப்போதுமில்லாத வகையில் பல்வேறு சலுகைகளுடன் தனது வணிகரீதியிலான பயணத்தை ஆரம்பித்தது ஜியோ.

இணைய பயன்பாட்டுக்கு மட்டும் குறைந்த கட்டணம், குரல்வழி அலைபேசி அழைப்பு முற்றிலும் இலவசம் என்ற வசீகர திட்டத்தின் மூலம் கால்பதித்த ஜியோ, அடுத்த சில ஆண்டுகளிலேயே வருவாய் அடிப்படையிலும், சந்தாதாரர்களின் எண்ணிக்கை அடிப்படையிலும் இந்தியாவின் மிகப் பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாக விளங்குகிறது.

அம்பானி

பட மூலாதாரம், Getty Images

டிராய் அமைப்பின் சமீபத்திய தரவின்படி, 38 கோடிக்கும் அதிகமான சந்தாதாரர்களுடன் ஏறுமுகத்தில் சென்றுக்கொண்டிருக்கும் ஜியோவின் அடிப்படை கட்டமைப்பே சற்று வித்தியாசமானது என்கிறார் நிதி ஆலோசகரும், நிதிசார் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றின் நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியுமான கார்த்திகேயன்.

“ஜியோ ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனமாகவே தொடங்கப்பட்டது. ஆனால், அது வழக்கமான முறையில் நிதியை திரட்டாமல் தொடக்கத்தில் முதலீடு செய்த சுமார் பத்தாயிரம் கோடியில் பெரும் பங்கை வங்கிகளிருந்து கடனாக பெற்றது. நாட்டின் கடைக்கோடியிலுள்ள பகுதிவரை தொலைத்தொடர்பு சேவை வழங்குவதை நோக்கமாக கொண்டு தொடங்கப்பட்ட ஜியோவின் வியக்கத்தக்க வளர்ச்சியால் அது இப்போது தனது தாய் நிறுவனமான ரிலையன்ஸுக்கு உதவும் நிலையை எட்டியுள்ளது” என்று கூறுகிறார் கார்த்திகேயன்.

முதலீடுகளை ஈர்ப்பதற்கான அவசியமென்ன?

இலவச குரல்வழி அழைப்பு, குறைந்த விலை திறன்பேசிகள், கண்ணாடி இழை தொழில்நுட்பத்தை கொண்டு செயல்படும் அதிவேக இணைய சேவை, தொலைக்காட்சி மற்றும் காணொளி காட்சி சேவை உள்ளிட்ட சேவைகளை வழங்கி வரும் ஜியோ, கொரோனா வைரஸ் பரவலால் அதிகரித்துள்ள இணைய வழி கூட்டத்திற்கென தனி செயலி, வீட்டிலிருந்தே பாடம் கற்பதை எளிமைக்கும் ஜியோ கிளாஸ் உள்ளிட்ட காலத்திற்கேற்ற தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துகிறது.

இந்த நிலையில், பெரும் எண்ணிக்கையான வாடிக்கையாளர்களை கொண்டுள்ள ஜியோ தற்போது குறுகிய காலத்தில் இத்தனை முதலீடுகளை கவர்வதற்காக அவசியம் என்னவென்று கார்த்திகேயனிடம் கேட்டபோது, “பெரும் அளவிலான கடன்களை வங்கிகளின் வாயிலாக பெற்றே ஜியோ நிறுவனம் தொடங்கப்பட்டது. அந்த வகையில், ஜியோ உள்ளிட்ட ரிலையன்ஸின் பல்வேறு நிறுவனங்களுக்காக பெறப்பட்ட கடன்களின் அளவு வட்டியுடன் சேர்த்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக ரிலையன்ஸின் வருவாவில் முக்கிய பங்கு வகிக்கும் எண்ணெய் தொழிலும் மோசமான இழப்பை சந்திக்க, திட்டமிட்டதை விட அதிக முதலீட்டை ஈர்க்க வேண்டிய கட்டாயத்துக்கு ரிலையன்ஸ் தள்ளப்பட்டது” என்கிறார் அவர்.

கார்த்திகேயன்.

ஜியோவில் குவிந்துள்ள முதலீடுகளை இரண்டு வகைகளாக பிரிக்கலாம். அதாவது, கடன் சுமைகளிலிருந்து மீள்வதற்கு பயன்படும் நிதி மற்றும் புதிய தொழில்நுட்பங்களில் கால்பதிக்க உதவும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வகையிலான முதலீடு.

இந்த முதலீடுகளிலிருந்து கிடைத்துள்ள பணத்தின் மூலம் கடனில்லா நிறுவனமாக உருவெடுத்துள்ள ரிலையன்ஸ் தனது வருங்கால திட்டங்களை இன்னும் அதிக நம்பிக்கையுடனும், துணிவுடனும் மேற்கொள்ள முடியும் என்று கூறுகிறார் கார்த்திகேயன்.

அதே வேளையில், கூகுளுடன் சேர்ந்து ஜியோ உருவாக்கப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ள ஆண்ட்ராய்டை அடிப்படையாக கொண்ட இயங்குதளம் உள்ளிட்டவை இரண்டாம் வகை முதலீட்டில் வருகிறது.

5ஜி தொழில்நுட்பத்தில் ஜியோ ஏற்படுத்தப்போகும் தாக்கம் என்ன?

கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் அந்த நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வெளியிட்ட ஜியோவின் 5ஜி தொழில்நுட்பம் தொடர்பான அறிவிப்பு தொலைத்தொடர்புத் துறையில் பெரிதும் கவனம் பெற்றுள்ளது.

“ஜியோ 5ஜி தொழில்நுட்பத்துக்கான முழு கட்டமைப்பையும் முற்றிலும் உள்நாட்டிலேயே உருவாக்கியுள்ளது. 5ஜிக்கான அலைவரிசை ஒதுக்கப்பட்ட உடனேயே இது பரிசோதனைக்கு தயாராக இருக்கும். மேலும், இதை அடுத்த ஆண்டு பயன்பாட்டுக்கு கொண்டுவர முடியும்” என்ற முகேஷ் அம்பானியின் அறிவிப்பை பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனர்.

ஹுவாவேவின் இடத்தை பிடிக்குமா ஜியோ?

பட மூலாதாரம், alexsl

இதுமட்டுமின்றி, இந்திய அளவில் ஜியோவின் 5ஜி தொழில்நுட்பம் நடைமுறைக்கு வந்ததும் அதை உலகின் பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய திட்டமிட்டிருப்பதாக முகேஷ் அம்பானி கூறியுள்ளார்.

இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய இந்தியப் பிரதமரின் கீழ் செயல்படும் தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழுவின் (National Security Advisory Board) உறுப்பினரும் சென்னையிலுள்ள இந்திய தொழில்நுட்ப கழகத்தின் பேராசிரியருமான காமகோடி, “இந்திய தொலைத்தொடர்புத்துறையில் பெரும் பாய்ச்சலை ஏற்படுத்தப்போகும் அறிவிப்பை ஜியோ வெளியிட்டுள்ளதை வரவேற்கிறேன். மற்ற தலைமுறைகளுக்கான தொழில்நுட்பத்தை விட மிகுந்த வித்தியாசம் மிக்க 5ஜி தொழில்நுட்பத்தை இந்தியாவை சேர்ந்த நிறுவனம் உள்நாட்டிலேயே தயாரிப்பது என்பது மிகவும் முக்கியமான விடயம்” என்று கூறினார்.

3ஜி, 4ஜி உள்ளிட்டவற்றை விட 5ஜி தொழில்நுட்பம் அதிக கவனத்தை பெறுவதற்கான காரணம் என்னவென்று அவரிடம் கேட்டபோது, “2ஜி, 3ஜி, 4ஜி உள்ளிட்டவை குரல்வழி அழைப்பு மற்றும் இணைய வேகம் உள்ளிட்டவற்றில் ஒன்றைவிட ஒன்று மேம்பட்ட தொழில்நுட்பங்கள். ஆனால், 5ஜி தொழில்நுட்பத்தை வெறும் இணைய வேகத்தை மட்டும் கொண்டு ஒப்பிட முடியாது. ஏனெனில், 5ஜி தொழில்நுட்பமானது விவசாயம், கல்வி, மருத்துவம், நகர கட்டமைப்பு, ராணுவம் என எண்ணற்ற துறைகளில் பெரும் புரட்சியை ஏற்படுத்தப்போகும் தொழில்நுட்பம், இது இந்தியாவின் பொருளாதாரத்தை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்லும். எனவே, இதுபோன்ற மிக முக்கியமான தொழில்நுட்பத்தை கட்டமைப்பதில் வெளிநாட்டை சேர்ந்த நிறுவனங்களை அனுமதிப்பது நாட்டின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தலை ஏற்படுத்தலாம்” என்று அவர் கூறுகிறார்.

ஹுவாவேவின் இடத்தை பிடிக்குமா ஜியோ?

5ஜி தொழில்நுட்பத்தில் உலகின் முன்னணி நிறுவனமாக விளங்கும் சீனாவை சேர்ந்த ஹுவாவே நிறுவனம், அந்த நாட்டு அரசுக்கு தங்களது நாட்டின் தரவுகளை பகிரக் கூடும் என அமெரிக்கா கூறுகிறது.

அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் தங்களது 5ஜி கட்டமைப்பு திட்டத்திலிருந்து அந்த நிறுவனத்தை விலக்கவுள்ளதாக அடுத்தடுத்து அறிவித்துள்ளன.

ஹுவாவேவின் இடத்தை பிடிக்குமா ஜியோ?

பட மூலாதாரம், Getty Images

இந்த விவகாரம், அமெரிக்கா மற்றும் பிரிட்டன் உடனான சீனாவின் உறவில் மென்மேலும் விரிசலை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஜியோவின் 5ஜி தொழில்நுட்பம் குறித்த அறிவிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்கிறார் பேராசிரியர் காமகோடி.

“சர்வதேச அளவில் இந்தியா மீதான நம்பகத்தன்மை அதிகமாக உள்ளதாக கருதப்படுகிறது. குறிப்பாக, எண்ணற்ற இந்திய நிறுவனங்கள் வெளிநாடுகளின் தகவல் தொழில்நுட்ப தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றன. இந்த நிலையில், உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்த 5ஜி தொழில்நுட்பத்தை இந்தியாவை சேர்ந்த நிறுவனமொன்று வழங்கினால் அதை எவ்வித யோசனையும் இன்றி வெளிநாடுகள் ஏற்றுக்கொள்ளும்” என்று உறுதிபட கூறுகிறார்.

உலக நாடுகளின் கவலைகளும், கெடுபிடிகளும் ஒருபுறம் இருக்க, 5ஜி தொழில்நுட்ப உருவாக்கத்தில் முன்னணி நிறுவனமாக ஹுவாவே விளங்குவதை யாரும் மறுக்கவில்லை. 2009ஆம் ஆண்டு முதலே தாங்கள் 5ஜி தொழில்நுட்ப ஆராய்ச்சியை தொடங்கிவிட்டதாக ஹுவாவே கூறுகிறது. இந்த நிலையில், நிறுவனத்தை தொடங்கிய நான்கே ஆண்டுகளில் திடீரென 5ஜி தொழில்நுட்பத்தை உருவாக்கிவிட்டதாக ஜியோ கூறுவது நடைமுறையில் சாத்தியமாகுமா என்ற கேள்வி பரவலாக எழுப்பப்படுகிறது.

இந்த நிலையில், குறுகிய காலத்திலேயே 5ஜி தொழில்நுட்பத்தை உருவாக்குவது சாத்தியமே என்று கூறும் பேராசிரியர் காமகோடி, “2ஜி, 3ஜி, 4ஜியை போன்று 5ஜி தொழில்நுட்பத்தில் புதிய வன்பொருட்களின் உருவாக்கம் பெரிய அளவில் தேவை இல்லை. 5ஜி தொழில்நுட்பத்தில் 95 சதவீதம் மென்பொருட்களின் தேவையே உள்ளது. உலகின் தலைசிறந்த மென்பொருள் நிறுவனங்களை கொண்ட இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பத்துக்கான மென்பொருளை உருவாக்குவது என்பது பெரிய விடயமல்ல” என்கிறார் அவர்.

இந்தியாவில் கால்பதிக்க துடிக்கும் ஃபேஸ்க்கின் கனவு நனவாகுமா?

இந்தியாவில் அலைபேசி வழி பணப்பரிமாற்ற சந்தையில் கோலோச்சி வரும் பேடிஎம், கூகுள் பே உள்ளிட்டவற்றிற்கு போட்டியாக ‘வாட்சாப் பே’ சேவையை அறிமுகப்படுத்த கடந்த இரண்டு ஆண்டுகளாக முயன்று வரும் ஃபேஸ்க்கின் முயற்சி இதுவரை பலனளிக்கவில்லை.

பேராசிரியர் காமகோடி

பட மூலாதாரம், IIT-M

அதே போன்று, கூகுள் உள்ளிட்ட மற்ற தொழில்நுட்ப நிறுவனங்களும் இந்தியாவில் தங்களது விரிவாக்க திட்டத்தை மேற்கொள்வதில் சில சட்டரீதியிலான பிரச்சனைகள் நீடித்து வருகின்றன. இந்த நிலையில், ஜியோவில் முதலீடு செய்ததன் மூலம், ஃபேஸ்புக், கூகுள் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களது திட்டங்களை இந்தியாவில் எளிதாக நடைமுறைப்படுத்த முடியும் என்று கருதப்படுகிறது.

இதுகுறித்து கருத்துத் தெரிவித்த பேராசிரியர் காமகோடி, “கூகுள், ஃபேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்களின் சேவைகளை இந்திய மக்கள் நம்பிக்கையுடனே பயன்படுத்தி வருகிறார்கள். எனினும், இந்திய மக்களின் தனிப்பட்ட தரவுகளை வெளிநாட்டு நிறுவனங்கள் தவறாக பயன்படுத்துவதை கட்டுப்படுத்தும் தேவையான சட்ட மாற்றங்களை அரசு விரைவில் மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கலாம்” என்கிறார்.

மேலும், தொலைத்தொடர்புத்துறையை போன்று நாட்டின் உற்பத்தித்துறைக்கு தேவையான இயந்திரங்கள் மற்றும் அவற்றிற்கான அனைத்து உதிரிப் பாகங்களையும் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்தால் அது இந்தியாவின் பொருளாதாரத்தில் வியத்தகு மாற்றத்தை ஏற்படுத்தும் என்கிறார் அவர்.

ஜியோவின் எதிர்காலமும், போட்டி நிறுவனங்களின் நிலையும்

ஜியோ பிளாட்பார்ம்ஸ் என்ற பெயரில் தொடங்கப்பட்ட ஜியோ இதுவரை ரிலையன்ஸின் துணை நிறுவனமாகவே நீடித்து வருகிறது. இந்த நிலையில், ஜியோ நிறுவனத்தை பங்குச்சந்தையில் பட்டியலிடும் திட்டம் இருப்பதாக முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

ஜியோவின் எதிர்காலமும், போட்டி நிறுவனங்களின் நிலையும்

பட மூலாதாரம், NurPhoto

ஜியோவை பங்குச்சந்தையில் பட்டியலிட்டு அதன் மூலம் பணம் ஈட்டுவது மட்டும் ரிலையன்ஸின் திட்டமாக இருக்காது என்று கூறுகிறார் தனியார் நிறுவனத்தை சேர்ந்த நிதி ஆலோசகரான கார்த்திகேயன். “பங்குச்சந்தையில் ஒரு நிறுவனத்தை பட்டியலிடுவதன் மூலம், பணம் மட்டுமின்றி அந்த நிறுவனத்தின் சட்டப் பாதுகாப்பும் உறுதிசெய்யப்படுகிறது. இதை ஃபேஸ்புக் உள்ளிட்ட பங்குதாரர்கள் தொடர்ந்து வலியுறுத்தும் பட்சத்தில் அடுத்த ஆண்டிலேயே ஜியோவின் ஆரம்ப பொது விடுப்புகளை (IPO) இந்திய சந்தைகளில் வாங்க முடியும். இதன் மூலம், ஜியோ நிறுவனம் பன்மடங்கு நிதியை திரட்டுவதற்கான வாய்ப்பும் உள்ளது” என்கிறார் அவர்.

ஜியோவின் வருகைக்கு பின்னர் ஏற்பட்ட கடும் போட்டியின் காரணமாக நாட்டிலுள்ள முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களின் எண்ணிக்கை நான்காக குறைந்துள்ளது. அதாவது, 33.6 சதவீத சந்தாதாரர்களுடன் ஜியோ முதலிடத்திலும், ஏர்டெல், வோடஃபோன்-ஐடியா, பிஎஸ்என்எல் உள்ளிட்ட நிறுவனங்கள் முறையே 28.4%, 27.6%, 10.4 சதவீத சந்தாதாரர்களுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

இந்த நிலையில், இதே வேகத்தில் சென்றால் அடுத்த சில ஆண்டுகளில் ஜியோவின் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 50 சதவீதத்தை தொடும் வாய்ப்புள்ளதாக கூறும் கார்த்திகேயனிடம் ஜியோவின் வளர்ச்சியால் மற்ற நிறுவனங்களின் நிலை என்னவாகும் என்று கேட்டபோது, “ஜியோவுக்கு அடுத்த நிலையில் உள்ள ஏர்டெல் நிறுவனமும் வெளிநாட்டை சேர்ந்த நிறுவனங்களிடமிருந்து முதலீடுகளை ஈர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

அதேபோன்று, வோடஃபோன்-ஐடியா நிறுவனத்தை பொறுத்தவரை பிரிட்டனை சேர்ந்த அவர்களின் தாய் நிறுவனத்திடமிருந்து தேவை என்றால் அளிக்கும் அளவுக்கு நிதி வசதி உள்ளது. எனவே, ஜியோ வளர்ச்சி பாதையை நோக்கி சென்றுக்கொண்டிருந்தாலும், அதற்கு மற்ற நிறுவனங்களும் விடாது போட்டியளிக்கும் என்று நம்பலாம்” என்று அவர் கூறுகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »