Press "Enter" to skip to content

கொரோனா தடுப்பு மருந்து: யாருக்கு என்ன உரிமை? எவ்வாறு அளிக்கப்படும்?

  • நிதின் ஸ்ரீவத்ஸவ்,
  • பிபிசி செய்தியாளர்

பட மூலாதாரம், Getty Images

இரண்டாம் உலகப் போரின் போது, மக்களின் மனதில் எழுந்த ஒரே கவலை, அது எப்போது முடிவுக்கு வரும் என்பதுதான். 75 ஆண்டுகளுக்குப் பிறகு அதே மனநிலை தற்போது உருவாகியுள்ளது.

உலகம் முழுவதிலும் ஒன்றரை கோடிக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆறு லட்சம் பேர் இதற்கு பலியாகி உள்ளனர்.

இந்தியாவில் 12 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் இதற்கான தடுப்பு மருந்தை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. அனைவரின் எதிர்பார்ப்பும் தடுப்பு மருந்து எப்போது பயன்பாட்டிற்கு வரும் என்பது தான்.

பத்துக்கும் மேற்பட்ட ஆய்வுகள் பரிசோதனை நிலையில் உள்ளன. சில நாடுகள் இந்தப் பரிசோதனைகளின் அடுத்த கட்டத்துக்கும் சென்றுள்ளன.

இந்த ஆண்டின் இறுதிக்குள் ஒரு தடுப்பு மருந்து தயாராகிவிடும் என்பது பலரின் நம்பிக்கையாக உள்ளது. அப்படித் தயாராகிவிட்டாலும் அதை உலகில் அனைத்துப்பகுதிகளுக்கும் எவ்வாறு கொண்டு சேர்க்க முடியும் என்ற கேள்வியும் எழுகிறது.

கொரொனா வைரஸின் பிடி, ஏழை-பணக்காரர், பலமுள்ளவர்- பலவீனமானவர், அனைவரின் மனதிலும் ஒரு பீதியை ஏற்படுத்தியுள்ளது. தடுப்பு மருந்து விஷயத்தில் காட்டப்படும் தேசிய உணர்வு, `வேக்ஸின் நேஷனலிஸம்` இந்த அச்சத்தை மேலும் அதிகரிக்கிறது.

வேக்ஸின் நேஷ்னலிஸம் என்றால் என்ன?

கோவிட்-19 ஒரு பெருந்தொற்றாக உருவாகும் போதே உலகின் பல நாடுகள் இதற்கான தடுப்பு மருந்து குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளத் தொடங்கின. தன் நாட்டில் தடுப்பு மருந்து தயாரிக்கப்பட்டால், தன் நாட்டு மக்களுக்குதான் முன்னுரிமை வழங்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் இரண்டு முறை கூறிவிட்டார்.

Banner image reading 'more about coronavirus'
Banner

ரஷ்யாவும் மறைமுகமாக இதையே தெரிவித்துள்ளது. தன் நாட்டுக்கு முன்னுரிமை வழங்கும் இந்தப் போக்குதான் `வேக்சின் நேஷனலிஸம்` என்று அழைக்கப்படுகிறது. இதற்கு முன்னுதாரனங்களும் உள்ளன.

H1N1 விவகாரத்தில் 2009-ல் ஆஸ்திரேலியாவின் பயோடெக் நிறுவனமான சிஎஸ்எல், உள்ளூர்த் தேவைகள் பூர்த்தியான பிறகே அமெரிக்காவுக்கு மருந்தை ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்பட்டது. இது ஏழை மற்றும் வளர்ச்சி அடையாத நாடுகளுக்கு மட்டுமல்ல, பல தடுப்பு மருந்துப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் நாடுகளுக்கும் கவலையளிக்கும் ஒரு விஷயமாகும்.

உலக வரைப்படம்

பட மூலாதாரம், Getty Images

“இது குறித்து இந்தியாவும் கவலைப்படாமல் இருக்க முடியாது,” என்கிறார், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் முன்னாள் இயக்குநர் பேராசிரியர் என்.கே.கங்குலி.

“நம் நாட்டில் தயாரிக்கப்படும் தடுப்பு மருந்து மிகத் தரம் வாய்ந்ததாக இல்லாமல் போகலாம். மொத்த விற்பனைக்கான தடுப்புமருந்து பரிசோதனை இப்போது இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நமக்குப் பல விஷயங்கள் தெரிவதில்லை. இந்த மருந்து மிகச் சிறந்ததாக இல்லாமல் போனால், நாம் பிற நாடுகளிடமிருந்து வாங்க வேண்டிய நிலை ஏற்படலாம். ஆனால், அதைத் தயாரிக்கும் நாடுகள் பிற நாடுகளுக்கு வழங்க மறுத்தால், நாம் அதை எதிர்கொள்ளவும் தயாராக இருக்க வேண்டும்.” என்று அவர் எச்சரிக்கிறார்.

உலக சுகாதார அமைப்பின் தலைவர் டாக்டர் டெட்ரோஸும் இதே கவலையை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

“மக்கள் சமூகத்திற்காக தடுப்பு மருந்து தயாரிப்பது மிகச் சிறந்த சேவை. இது குறித்த முயற்சிகள் பல இடங்களில் தொடர்வது மகிழ்ச்சியான விஷயம். ஆனால், சில நாடுகள் பின்னடைவு நிலையில் உள்ளன. இது கவலைக்குரிய விஷயம். தடுப்பு மருந்து குறித்த ஒருமித்த கருத்து அல்லது ஒப்பந்தம் ஏற்படவில்லையென்றால், வலிமையற்ற, ஏழை நாடுகள் மிகவும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது,” என்று அவர் கவலை தெரிவிக்கிறார்.

மருந்தைக் கண்டுபிடிக்கும் நாட்டுக்கு எவ்வளவு உரிமைகள் உண்டு?

தடுப்பூசி தயாரிக்கும் நாட்டிடம் எந்த அளவுக்கு கட்டுப்பாடு இருக்கும் என்பதும் ஒரு கேள்வி. உலகளாவிய அறிவுசார் சொத்துரிமை சட்டத்தின் கீழ், தடுப்பூசி தயாரிக்கும் நாட்டிற்கு 14 ஆண்டுகள் வடிவமைப்பு உரிமை மற்றும் 20 ஆண்டு காப்புரிமை கிடைக்கிறது.

ஆனால் இந்த நெருக்கடியான காலக்கட்டத்தில் மூன்றாம் தரப்பினரும் இந்த மருந்தை தயாரிக்கும் சூழல் ஏற்படும் விதமாக “கட்டாய அனுமதி பெறுதல்” என்ற முறையை நாடுகள் பின்பற்றுகின்றன. எனவே கொரோனாவை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கும் ஒரு நாடு, தனது நாட்டில் ஒரு மருந்து தயாரிக்கும் நிறுவனத்திடம் அந்த மருந்தை தயாரிக்கும் அனுமதியை வழங்கலாம்.

காப்புரிமை உரிமம் வழங்கும் ஒரு வங்கியை உருவாக்கி அனைத்து நாடுகளுக்கும் தடுப்பு மருந்து கிடைக்க வகை செய்யவும் உலக சுகாதார அமைப்பும் ஐரோப்பிய ஒன்றியமும் வழிகளை ஆராய்ந்து வருகின்றன. இது குறித்த ஒருமித்த கருத்து எட்டப்படும் சாத்தியக்கூறுகள் எதுவும் இதுவரை தென்படவில்லை என்றாலும் இது எதிர்காலத்தில் மிகப்பெரிய சவாலாக உருவாகலாம்.

உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசியாவின் பிராந்திய இயக்குனர் டாக்டர் பூனம் கேதர்பால் சிங், “ஒரு தரமான கோவிட் தடுப்பு மருந்து உருவாக்கப்பட்டால், 2021 ஆம் ஆண்டின் இறுதிக்குள் இரண்டு பில்லியன் மக்கள் அதனால் பயனடைய முடியும். அதன்மூலம், 50%, குறைந்த மற்றும் நடுத்தர வருமான பிரிவில் வரும் நாடுகளுக்கு வழங்கப்படும். ஆனால் இதற்காக, நாடுகள் தங்கள் ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்ய வேண்டும். மக்களுக்கு மருந்துகளை வழங்குவதற்கான பயனுள்ள வழிகள் முன்கூட்டியே தயாரிக்கப்பட வேண்டும்.”என்கிறார் அவர்.

தடுப்பு மருந்துக்காகக் காத்திருக்கும் அதே நேரத்தில், இந்த மருந்து தயாரிக்கப்பட்டு விட்டால், மக்கள் ஒரே இரவில் பிரச்சினைகளிலிருந்து விடுபட்டு விடுவார்கள் என்று பொருளில்லை. இது சாமானிய மக்களைச் சென்றடைவது என்பது நீண்ட மற்றும் சிக்கலான செயலாகும்.

ஒருபுறம், மருந்து நிறுவனங்கள் மற்றும் அரசாங்கங்கள் ஒரு தரமான கோவிட் தடுப்பு மருந்து தயாரிக்கப் போராடி வருகின்றன, மறுபுறம், இதன் பயன் முதலில் யாரைச் சென்றடையும், யாரை சென்று சேராது என்பது குறித்த விவாதமும் பரவியுள்ளது.

உலகம் முழுவதும் உறுதி செய்யப்பட்ட தொற்றுகள்

காண்பி


<?xml version=”1.0″ encoding=”UTF-8″????>Group 4

முழுமையாக பார்க்க பிரௌசரை அப்டேட் செய்யுங்கள்

ஒவ்வொரு நாட்டிலும் கொரோனா வைரஸ் உள்ளவர்கள் எத்தனை பேர் உள்ளனர் என்பதை காட்டும் வட்டம்

ஆதாரம்: ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம், தேசிய பொது சுகாதார முகமைகள்

கடைசியாக பதிவு செய்யப்பட்டது

24 ஜூலை, 2020, பிற்பகல் 1:21 IST

நோயாளிகளுக்குப் பிறகு முதல் உரிமை, சுகாதாரப் பணியாளர்கள், குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு இருக்கும் என்பதில் மாற்று கருத்தில்லை.

வளர்ந்து வரும் நாடுகளில் பொதுவான மருந்துகள் மற்றும் தடுப்பூசி வழங்கல் குறித்து நீண்டகாலமாக பணியாற்றும் லினா மேங்கானி, எல்லைகளைக் கடந்த மருத்துவம் (MSF access campaign) என்ற அமைப்பின் தெற்காசியத் தலைவராக உள்ளார், மேலும் “ஒரு நாட்டின் சுகாதார அமைப்பு எவ்வளவு வலுவாக அல்லது பலவீனமாக உள்ளது என்பது அந்நாட்டின் தடுப்பு மருந்து வழங்கல் மூலம் பிரதிபலிக்கும்,” என்று நம்புகிறார் அவர்.

“உதாரணமாக, நிமோனியா தடுப்பூசியை எடுத்துக் கொண்டால், இந்தியாவில் இன்னமும் 20% குழந்தைகள் மட்டுமே இதன்பயனை அடைகிறார்கள். அதற்கு முக்கிய காரணம் அதன் விலை. அதாவது, ஒரு குழந்தைக்கு சுமார் பத்து அமெரிக்க டாலர் என்ற அளவில், இந்திய அரசு இந்த தடுப்பூசியை, உலக தடுப்பு மருந்து கூட்டணியிடமிருந்து வாங்குகிறது. எனவே, திடமான சுகாதார முறை ஒரு புறம் இருக்க, தடுப்பு மருந்தின் விலை என்ன என்பது எதிர்காலத்தில் முக்கியமான ஒரு விஷயமாக இருக்கும்,” என்கிறார் லீனா மேங்கானி.

கோவிட் -19 தொற்றுநோயின் தொடக்கத்தில், உலகின் எல்லா நாடுகளும் இதை எதிர்த்துப் போராட ஒன்றுபட்டன. ஆனால் தடுப்பூசி ஆராய்ச்சியின் செயல்முறை முன்னேற முன்னேற, வேறுபாடுகளும் அதிகரித்தன. அரசாங்கங்களுக்கிடையிலான வேறுபாடுகள் சர்வதேச மட்டத்தில் தீர்க்கப்பட வேண்டியிருக்கும், ஆனால் ஒன்றரை பில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட இந்தியா போன்ற ஒரு நாட்டில் மேலும் ஒரு சவால் உள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.

“இன்று என்னிடம் ஒரு தடுப்பூசி இருந்தால், நான் மிகவும் பயப்படுவேன், என் இரவுகள் தூக்கமின்றிக் கழியும். இந்தியாவில், அனைவருக்கும் தடுப்பூசி என்ற நிலையை எட்டுவது எப்போதும் கடினமாகவே இருந்துள்ளது. நாம் ஒரு கூட்டாட்சி அமைப்பில் உள்ளோம். இதில் அனைத்து மாநிலங்களுக்கும் தேவை இருக்கும். இந்த நிலையில், உடனடியாகத் தடுப்பூசி பெறாத மாநிலங்களுக்கும் மக்களுக்கும் சமுதாயத்தில் முரண்பாடுகள் உருவாக இது காரணமாகலாம்” இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் முன்னாள் இயக்குநர் பேராசிரியர் என்.கே.கங்குலி.

இந்திய அரசாங்கத்தின் நிதி ஆயோக் உறுப்பினாரான வி.கே.பால், இந்த வாரம் தடுப்பூசி குறித்து பேசுகையில், ” தேவைப்படுபவர்களுக்கு கோவிட் தடுப்பூசியை எவ்வாறு வழங்குவது என்பது குறித்து விவாதங்கள் துவங்கியுள்ளன,” என்று கூறியுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »