கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி மீண்டும் அதிகரிக்கும் கோவிட் 19 – என்ன நடக்கிறது அங்கே? மற்றும் பிற செய்திகள்

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி மீண்டும் அதிகரிக்கும் கோவிட் 19 – என்ன நடக்கிறது அங்கே? மற்றும் பிற செய்திகள்

பட மூலாதாரம், Getty Images

ஸ்பெயினில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று

ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டதால் மீண்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஸ்பெயினில் அதிகரித்து வருகிறது. அந்நாட்டின் ஒரு சில பகுதிகளில் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு அதிக எண்ணிக்கையில் கூடும் இளம் வயதினருக்கே அங்கு தொற்று பரவி வருகிறது. ஊரடங்கு தளர்த்தப்பட்டு மீண்டும் வர்த்தகம் தொடங்கியுள்ள ஃபிரான்ஸ் மற்றும் ஜெர்மனியிலும் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

ஞாயிற்றுக் கிழமை அன்று ஸ்பெயினிலிருந்து வரும் பயணிகளையும் சுற்றுலாவாசிகளையும் 14 நாட்கள் கண்டிப்பாகத் தனிமைப்படுத்த வேண்டும் என்ற அறிவிப்பைப் பிரிட்டன் அரசு அமல்படுத்தியது. இதற்கு அடுத்த சில மணி நேரத்தில் தாங்கள் கொரோனா வைரஸை கட்டுக்குள் வைத்திருப்பதாக ஸ்பெயின் அறிவிப்பை வெளியிட்டது. ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகளின் படி ஸ்பெயினில் 28,400 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 900 ஆக அதிகரித்துள்ளது.

Presentational grey line

கார்கில் போர்: “இந்தியாவின் முதுகில் குத்தியது பாகிஸ்தான்” – நரேந்திர மோதி பேச்சு

"இந்தியாவின் கொரோனா மீட்பு விகிதம் மற்ற நாடுகளைவிட சிறப்பாக உள்ளது" - நரேந்திர மோதி

பட மூலாதாரம், Getty Images

நாடு முழுவதும் கொரோனா மீட்பு விகிதம் மற்ற நாடுகளைவிட சிறப்பாக உள்ளது. லட்சக்கணக்கான மக்களின் உயிரைக் காப்பாற்ற முடிந்திருக்கிறது. ஆனால், அதே நேரம் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் இன்னும் முடிவுக்கு வரவில்லை என இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.

மோதி ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சியில் இன்று உரையாற்றினார்.

அவர், “கொரோனா வைரஸ் தொடக்க நிலையில் இருந்ததைப்போலவே தற்போதும் ஆபத்தானதாகவே உள்ளது.” என கூறியுள்ளார்.

“தற்போது கொரோனா ஆரம்ப நிலையில் இருந்ததைப்போலவே தற்போதும் உள்ளது என்பதை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்,” என மோதி குறிப்பிட்டார்.

Presentational grey line

ரோசாலிண்ட் ஃபிராங்க்ளின்: மரபணுவின் ரகசியங்களைக் கண்டுபிடித்த இந்த பெண் குறித்து தெரியுமா?

மரபணுவின் ரகசியங்களைக் கண்டுபிடித்த இந்த பெண் குறித்து தெரியுமா?

பட மூலாதாரம், Franklin Family

பிறந்து 100 ஆண்டுகளுக்குப் பிறகும் தான் நினைவுகூரப்படுகிறோம் என்பதை விஞ்ஞானி ரோசாலிண்ட் ஃபிராங்க்ளின் அறிந்தால் நிச்சயம் ஆச்சரியப்படுவார் என்கிறார் அவரது சகோதரி.

பிரிட்டனைச் சேர்ந்த ரோசலிண்ட் ஃபிராங்க்ளின் என்ற அறிவியலாளர் மரபணு குறித்த ஆராய்ச்சியை முதலில் தொடங்கியவர். மரபணு மூலக்கூறு வடிவத்தை முதலில் படம் பிடித்தவர் என்ற பெருமை இவர் பெற்றார்.

பின்னர் இவரது ஆய்வை பின்பற்றி, வாட்சன், கிரிக் ஆகிய அறிவியலாளர் மரபணு குறித்த பல முக்கிய விஷயங்களையும், ரகசியங்களையும் கண்டறிந்தனர்.

ஃபிராங்க்ளின் பதிவு செய்திருந்த மரபணுவின் எக்ஸ்ரே படமே, டி.என்.ஏவின் இரட்டை ஹெலிக்ஸ் வடிவத்திற்குப் புரிந்துகொள்ள வாட்சன் மற்றும் கிரிக் ஆகியோருக்கு உதவியது.

Presentational grey line

சுறா இனம் அழிவின் விளிம்பில் இருக்கிறதா? ஆண்டுதோறும் கொல்லப்படும் 10 கோடி சுறாக்கள் – அதிர வைக்கும் தகவல்

சுறா மீன்கள் இனம் முழுமையாக அழிந்து விடுமா ?

பட மூலாதாரம், Getty Images

சமீபத்தில் நடந்த ஆய்வின்படி, உலகளவில் சுறா மீன்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது என கணிக்கப்படுகிறது.

சுறா மீன்களின் எண்ணிக்கை குறைய மீன் பிடி தொழிலே காரணமாக உள்ளது என சைன்ஸ் ஜர்னல் நேச்சர் சஞ்சிகையில் ஆய்வு ஒன்று வெளிவந்துள்ளது.

ஆழ்கடலில் கேமரா பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் ஆழ்கடலிலிருந்த 20% சுறா மீன்கள் அழிந்து விட்டன என்று இந்த ஆராய்ச்சி கூறுகிறது.

Presentational grey line

ஏ.ஆர்.ரஹ்மான் புறக்கணிக்கப்படுவதற்கு ஆஸ்கர் விருது காரணமா? என்ன சொல்கிறார் அவர்?

மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடித்து சில தினங்களுக்கு முன்பு வெளியான தில் பெச்சாரா படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்

பட மூலாதாரம், Getty Images

பாலிவுட்டில் ஏ.ஆர்.ரஹ்மான் புறக்கணிக்கப்படுவதற்கு அவர் வாங்கிய ஆஸ்கர் விருதுதான் காரணம். பாலிவுட் கையாளமுடியாத அளவுக்கு அவர் அதிக திறமைசாலி என்று பொருள்படும்படி இந்தி திரைப்பட இயக்குநர் சேகர் கபூர் ட்வீட் செய்திருந்தார்.

அவருக்கு ட்விட்டரில், “இழந்த பணம் திரும்பி வரும், இழந்த புகழும் திரும்பி வரும். ஆனால், நம் வாழ்வின் முக்கியமான தருணத்தில் இழந்த காலம் திரும்பி வராது. அமைதி கொள்ளுங்கள். நாம் பெரிய வேலைகள் செய்யவேண்டியிருக்கிறது” என்று பதில் சொல்லியிருந்தார் ரஹ்மான்.

Presentational grey line

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

Author Image
Nila Raghuraman