Press "Enter" to skip to content

சர்ச்சிலின் ஆட்சி நிர்வாகம்: கதாநாயக பிம்பம் குறித்து கேள்வி எழுப்பும் இந்தியர்கள்

  • யோகித்தா லிமாயே
  • பிபிசி

பட மூலாதாரம், EPA

நான் குழந்தையாக இருந்தபோது முதலில் வின்ஸ்டன் சர்ச்சில் பற்றி அறிந்து கொண்டேன். எனிட் பிளைட்டன் எழுதிய புத்தகம் ஒன்றில் வரும் ஒரு பெண் கதாபாத்திரம் விளக்கின் பிரேமில் இவருடைய படத்தை வைத்திருப்பார். `அந்த அளவுக்கு இந்த தேர்ந்த நிர்வாகியின் மீது அவருக்கு பற்றுதல்’ இருப்பதால் அப்படி வைத்திருப்பார்.

நான் வளர்ந்தபோது, இந்தியாவில் கடந்த கால காலனியாதிக்கம் பற்றி நிறைய உரையாடி இருக்கிறேன். போர்க்கால பிரிட்டிஷ் பிரதமரைப் பற்றி, முற்றிலும் மாறுபட்ட கருத்து என் நாட்டில் பெரும்பாலான மக்களிடம் இருப்பதை நான் அறிந்து கொண்டேன்.

காலனி ஆட்சிக் காலம் பற்றியும் மாறுபட்ட கருத்துகள் உள்ளன.

ரயில் வசதி உருவாக்கியது, தபால் சேவைகள் உருவாக்கியது போன்ற பல நல்ல விஷயங்களை இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் உருவாக்கியதாக சிலர் கூறுவார்கள். “தங்களின் சொந்த தேவைகளுக்காக அவற்றை எல்லாம் அவர்கள் செய்தார்கள். அவர்கள் இந்தியாவை ஏழையாக்கிவிட்டனர். இந்தியாவைக் கொள்ளையடித்து விட்டனர்” என்பது மற்றொரு தரப்பாரின் கருத்தாக உள்ளது. “கொடுமைக்கார பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு” எதிராக போராட்டங்களில் பங்கேற்றதைப் பற்றி எனது பாட்டி எப்போதும் பெருமையுடன் சொல்லிக் கொண்டிருப்பார்.

இவ்வளவு கோபம் இருந்தாலும், மேற்கத்திய விஷயம் எதுவாக இருந்தாலும், வெள்ளைத் தோல் உள்ளவர்கள் எதைச் செய்தாலும் அல்லது சொன்னாலும் அவை இந்தியாவில் மேன்மையானவையாகக் கருதப்படுகின்றன என்பதை நான் வளரும் போது கவனித்தேன். பல தசாப்த காலங்கள் பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தில் இருந்த போது, இந்திய மக்களின் தன்னம்பிக்கை செல்லரித்துப் போய்விட்டது.

சுதந்திரம் பெற்று 73 ஆண்டுகளில் பல மாற்றங்கள் நடந்துவிட்டன. புதிய ஒரு தலைமுறை உருவாகிவிட்டது. உலகில் நமக்கான இடத்தை உறுதிப்படுத்தக் கூடியவர்களாக அவர்கள் உள்ளனர். 1943ல் ஏற்பட்ட வங்காளத்தின் பஞ்சம், பட்டினி போன்ற, காலனி ஆதிக்கத்தின் கருப்பு அத்தியாயங்கள் பற்றி ஏன் பரவலாக பேசப்படவில்லை, ஏன் கண்டனங்கள் எழவில்லை என இந்தத் தலைமுறையினர் கேள்வி எழுப்புகின்றனர்.

குறைந்தது 3 மில்லியன் பேர் பஞ்சம், பட்டினியால் மாண்டு போனார்கள். இரண்டாம் உலகப் போரில் பிரிட்டிஷ் ராணுவத்தில் ஏற்பட்ட மரணங்களைவிட இது ஆறு மடங்கு அதிகம். ஆனால், போரின் வெற்றி மற்றும் தோல்விகள் ஆண்டுதோறும் நினைவுக் கூறப்படும் நிலையில், பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்த வங்காளத்தில் அதே காலத்தில் ஏற்பட்ட பட்டினி ஏறத்தாழ மறக்கடிக்கப் பட்டுவிட்டது.

Banner image reading 'more about coronavirus'
Banner

இறந்தவர்களுக்கு இறுதிச் சடங்கு செய்யும் சக்தி பலருக்கு இல்லாமல் போனதால், வயல்வெளிகளிலும், ஆறுகளின் அருகிலும் கிடந்த சடலங்களை நாய்களும், பினந்திண்ணி கழுகுகளும் சாப்பிட்டதை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

கிராமங்களில் மரணத்தில் இருந்து தப்பியவர்கள், உணவுக்காக நகரங்கள், பெரு நகரங்களுக்குச் சென்றனர்.

பஞ்சம், பட்டினி காலத்தின் நினைவுகள் இன்னும் தம்மை உறுத்திக் கொண்டிருப்பதாக வங்காள நடிகர் சௌமித்ரா சாட்டர்ஜி கூறியுள்ளார்.

“எலும்புக் கூடு மீது தோல் போர்த்தியது போல, எல்லோருமே எலும்பும் தோலுமாகத்தான் இருந்தார்கள்” என்று பழம்பெரும் வங்காள நடிகர் சௌமித்ரா சாட்டர்ஜி தெரிவித்துள்ளார். அந்த பஞ்ச காலம் வந்தபோது அவருக்கு எட்டு வயது.

“மக்கள் பரிதாபமாக சாப்பாடு வடித்த கஞ்சி கேட்டு அழுவார்கள். ஏனென்றால் யாரும் அரிசியை தர மாட்டார்கள் என அவர்களுக்குத் தெரியும். அந்த அழுகுரலைக் கேட்ட யாரும், தங்கள் வாழ்நாளில் அதை ஒருபோதும் மறந்துவிட முடியாது. அதுபற்றி இப்போது நான் பேசினால் கண்களில் நீர் வடிகிறது. என் உணர்வுகளை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை” என்று அவர் என்னிடம் கூறினார்.

சர்ச்சிலின் ஆட்சி

பட மூலாதாரம், Getty Images

வங்காளத்தில் 1942ல் சூறாவளி தாக்குதல் மற்றும் வெள்ளம் காரணமாக பஞ்சமும், பட்டினியும் தலைவிரித்தாடியது. ஆனால் சர் வின்ஸ்டன் சர்ச்சில் மற்றும் அவருடைய அமைச்சரவையின் கொள்கைகளால் நிலைமை மிக மோசமாக மாறியது என்று குற்றஞ்சாட்டப் படுகிறது.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வரலாற்று அறிஞரான யாஸ்மின் கான், பர்மாவில் ஜப்பான் ஆக்கிரமிப்பு செய்யும் என்ற அச்சத்தில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் `மறுப்புக் கொள்கையை’ கடைபிடித்தனர் என்று தெரிவித்துள்ளார்.

“பயிர்கள் உள்பட எல்லாவற்றையும் தரைமட்டமாக்குவது என்பதுடன் அவர்களின் எண்ணம் நின்றுவிடவில்லை. தானியங்களை எடுத்துச் செல்ல உதவும் படகுகளும் கூட சிதைக்கப்பட்டன. ஜப்பானியர்கள் வந்தால், தொடர்ந்து முன்னேற வாய்ப்பில்லாமல் வளங்களை அழித்துவிட வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. மறுப்புக் கொள்கை காரணமாக பஞ்சம் தீவிரமானது என்பது அப்பட்டமாகத் தெரிந்தது” என்று யாஸ்மிக் கான் கூறுகிறார்.

உலகம் முழுவதும் உறுதி செய்யப்பட்ட தொற்றுகள்

காண்பி


<?xml version=”1.0″ encoding=”UTF-8″????>Group 4

முழுமையாக பார்க்க பிரௌசரை அப்டேட் செய்யுங்கள்

ஒவ்வொரு நாட்டிலும் கொரோனா வைரஸ் உள்ளவர்கள் எத்தனை பேர் உள்ளனர் என்பதை காட்டும் வட்டம்

ஆதாரம்: ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம், தேசிய பொது சுகாதார முகமைகள்

கடைசியாக பதிவு செய்யப்பட்டது

26 ஜூலை, 2020, பிற்பகல் 3:12 IST

இந்தியாவுக்கு உணவை அனுப்ப வேண்டும் என்ற அவசர கோரிக்கைகளை சர்ச்சில் அரசு மறுத்துவிட்டது பற்றி, இந்தியாவின் நிர்வாகத்தைக் கவனித்து வந்த பிரிட்டிஷ் அதிகாரிகளின் டைரி பதிவுகள் தெரிவிக்கின்றன. இந்தியாவுக்கு உணவு அனுப்பினால் பிரிட்டனில் கையிருப்பு குறைந்துவிடும் என்றும், கப்பல்களை போர்முனையில் இருந்து இதற்காகப் பயன்படுத்த வேண்டியிருக்கும் என்றும் அப்போது கருதப்பட்டிருக்கிறது. பட்டினியால் வாடும் மக்களுக்கு அந்தப் பகுதி அரசியல்வாதிகள் உதவி செய்வார்கள் என்று சர்ச்சில் கருதியிருக்கிறார்.

இந்தியாவைப் பற்றி பிரிட்டன் பிரதமரின் போக்கு பற்றியும் அதிகாரிகளின் டைரி குறிப்புகள் தெரிவிக்கின்றன. பஞ்ச நிவாரணம் பற்றி அரசின் ஆலோசனை நடைபெற்ற போது, “இந்தியர்கள் முயல்களைப் போல இனப்பெருக்கம் செய்யக் கூடியவர்கள்” என்பதால் எவ்வளவு உதவிகளை அனுப்பினாலும் அது போதுமானதாக இருக்காது என்று சர்ச்சில் கூறியதாக, இந்தியாவுக்கான அரசு செயலாளர் லியோபோல்டு அமெரி என்பவர் பதிவு செய்து வைத்திருக்கிறார்.

“பஞ்சத்தை உருவாக்கியதாக அவர் மீது நாம் குற்றம் சொல்லிவிட முடியாது” என்று கான் தெரிவித்தார். “பஞ்சத்தை அவரால் போக்கியிருக்க முடியும் என்ற வாய்ப்பு இருந்தும், அவர் அதைச் செய்யவில்லை என்று நாம் கூறலாம். தெற்கு ஆசியர்களின் உயிர்களைவிட, வெள்ளையர்கள் மற்றும் ஐரோப்பியர்களின் உயிர்களை முதன்மையாக மதித்தார் என்று நாம் குறை கூறலாம். அந்த சமயத்தில் இரண்டாம் உலகப் போரில் மில்லியன் கணக்கிலான இந்திய வீரர்கள் போரிட்டுக் கொண்டிருந்த நிலையில், சர்ச்சில் இப்படி செய்தது உண்மையில் ஏற்புடையதல்ல” என்று அவர் கூறினார்.

சர்ச்சிலின் ஆட்சி

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவைப் பற்றி விரும்பத்தகாத சில கருத்துகளை சர்ச்சில் கூறியுள்ளார் என்றபோதிலும் அவர் உதவி செய்யவே விரும்பினார் என்றும், போரின் சூழ்நிலைகள் காரணமாக அவற்றில் தாமதங்கள் ஏற்பட்டன என்றும் பிரிட்டனில் சிலர் கூறுகின்றனர்.

ஆனால் அவர் காலத்தில் மில்லியன் கணக்கானவர்கள் மாண்டு போனார்கள். மிகவும் அடிப்படையான உணவு கிடைக்காமல் அவர்கள் இறந்தார்கள்.

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் மக்களுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய பேரழிவாக வங்காள பஞ்சம், பட்டினி நிகழ்வுகள் இருந்தன என்று அந்த சமயத்தில் இந்தியாவுக்கான வைசிராயாக இருந்த ஆர்ச்சிபால்டு வேவல் எழுதி வைத்திருக்கிறார். பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்கு இதனால் ஏற்பட்ட அவப்பெயரை மதிப்பிட முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அப்போது உயிர் பிழைத்தவர்கள், தங்களின் கோபத்தை வெளிப்படுத்துகின்றனர். “அந்த சமயத்தில் இந்தியா குறித்து எடுத்த அந்த நடவடிக்கைகளுக்காக பிரிட்டிஷ் அரசு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று உள்ளுக்குள் ஓர் எதிர்பார்ப்பு இருக்கிறது” என்கிறார் சாட்டர்ஜி.

காலனி ஆதிக்கம் குறித்தும், அதன் தலைவர்கள் குறித்தும் பிரிட்டனில் உள்ள சிலர் கேள்வி எழுப்புகின்றனர்.

கடந்த மாதம், கருப்பினத்தவர் உயிர்கள் பாதுகாப்பு இயக்கத்தின் ஒரு பகுதியாக போராட்டங்கள் நடைபெற்றபோது, மத்திய லண்டனில் சர்ச்சிலின் சிலை சேதம் செய்யப்பட்டது.

“சிலைகளை இடிப்பது அல்லது அவற்றிற்கு அவமரியாதை செய்வதை நான் ஆதரிக்கவில்லை” என்று இந்திய வரலாற்றாளர் ருத்ரன்ஷூ முகர்ஜி கூறுகிறார்.

“ஆனால் அந்த சிலைகளின் கீழே உள்ள கற்பலகைகளில், முழு வரலாறும் பதிவு செய்யப்பட வேண்டும். இரண்டாம் உலகப் போரின் கதாநாயகராக சர்ச்சில் இருந்தார். ஆனால் அவரே தான் 1943ல் வங்காளத்தில் பல மில்லியன் பேர் மரணத்திற்கும் காரணமாக இருந்தார் என எழுத வேண்டும். இந்தியர்களுக்காக அதைச் செய்ய வேண்டிய கடமை பிரிட்டனுக்கு உள்ளது என்று நான் நினைக்கிறேன்” என்றார் அவர்.

கடந்த கால நிகழ்வுகளை, இந்தக் காலத்தின் பார்வையில் வைத்துப் பார்த்தால், உலகில் கதாநாயகர் என யாருமே இருக்க முடியாது.

அவர்களுடைய வாழ்வின் முழு உண்மைகளையும் ஏற்காமல், முன்னேற்றம் காண்பது கடினமானது.

எனது குழந்தைப் பருவத்து அடையாளமாக விளங்கிய எனித் பிளைட்டனின் படைப்புகள் இனவாதம் மற்றும் பாலினப் பாகுபாடு சார்ந்தவை என்ற விமர்சனங்களை சந்தித்தன. வளர்ந்த நிலையில், கவனித்தபோது அந்தப் புகார்களில் உண்மை இருப்பதை அறிந்து கொண்டேன்.

அவை அனைத்தையும் நான் தூக்கி வீசிவிட வேண்டுமா?

கிடையாது. அவை உருவாக்கிய மகிழ்வான தருணங்கள், இன்றைக்கு நான் அறிந்துள்ள விஷயங்களின் கறை படியாதவையாக உள்ளன.

ஆனால் என் குடும்பத்தில் குழந்தைகளுக்கு அவற்றைத் தந்துவிட மாட்டேன். சமகாலத்தைய உலகில் உள்ள கதைகளை படிக்கப் பிறந்தவர்கள் அவர்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »